கடிதம் எழுதும் பழக்கம் அநேகமாக என்னை விட்டுப் போய்விட்டது என்றே தோன்றுகிறது. ஈமெயிலும் செல்போனும் வந்தபிறகு கடிதம் எழுதும் தேவை மிகக் குறைவாகிவிட்டது. எவ்வளவு பக்கம் வேண்டுமானலும் கதை எழுத முடிந்த என்னால் ஒரு போஸ்கார்டில் கூட கடிதம் எழுத முடியாது.
காரணம் கடிதம் எழுதுவற்கு ஒரு மனநிலை தேவை. அது என்னிடம் இல்லை. அது போல யாருக்கு கடிதம் எழுத நினைக்கும் போதும், என்ன எழுதுவது என்று மனம் கொள்ளும் குழப்பம் தீராதது.
சில வேளைகளில் யோசித்துப் பார்ப்பதுண்டு. இதுவரை மொத்தமே நான் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் குறைவாகதானிருக்க கூடும். அதில் பெரும்பான்மை நலவிசாரிப்புகள் மற்றும் தகவல்கள் கொண்டவை. நான் அறிந்து கடந்த நாலைந்து வருசத்தில் ஒரு கடிதம் கூட எழுதியதில்லை.
பள்ளி வயதில் கிராமத்திலிருந்தோம். அப்பா அரசுப்பணியிலிருந்தார் அதனால் அவருக்கு ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அம்மாவின் பெயர் போட்டு ஒரு கடிதம் கூட வராது.
அம்மாவிற்கு தாத்தா வீட்டிலிருந்து எழுதப்படும் கடிதங்கள் கூட அப்பாவின் பெயரிட்டு தான் அனுப்பி வைக்கபடும். அம்மாவும் படித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயரிட்டு ஏன் ஒரு கடிதம் கூட வருவதில்லை என்று யோசித்திருக்கிறேன்.
கடிதங்களுக்காக காத்திருப்பது. ஒரே கடிதத்தை பலமுறை திரும்ப திரும்ப வாசிப்பது, கடிதம் வராமல் போன ஏமாற்றதை தாங்கிக் கொள்ள முடியாமலிருப்பது போன்றவை கடந்த காலத்தின் சுவடுகளாக மிஞ்சிப் போய்விட்டன.
கடிதங்களை எங்கள் வீட்டில் ஒரு கம்பியில் சொருகி வைத்திருப்பார்கள். பல வருசத்து கடிதங்கள் நிறம்வெளிறி எழுத்து மங்கி வெளவால் போலத் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். முக்கிய கடிதங்கள் ஒலைப்பெட்டி ஒன்றில் வைத்து பாதுகாத்து வைக்கபட்டிருந்தன.
கதைகள் எழுதத் துவங்கிய நாட்களில் தபால் வாங்குவதற்காக தபால் அலுவலகத்திலே போய் காலையிலே நின்றிருப்பேன். தபால் பை கொண்டுவரப்பட்டு பிரிக்கபட்டு அதிலிருந்து கதைவெளியாகி இருந்த சிற்றிதழை அவசரமாக வாங்கிக் கொண்டு தபால் அலுவலக வாசலிலே நின்று கதை இருக்கிறதா என புரட்டி பார்த்த பதட்டமும் பரவசமும் இப்போது இல்லை.
அம்புலிமாமா, ராமகிருஷ்ண விஜயம், தாமரை, செம்மலர், கணையாழி, மீட்சி, ஞானரதம், நிகழ், பரிமாணம், சுட்டி, தேன்மழை, செந்தமிழ், சர்வோதயம், இனி, சோவியத் பலகணி, Unesco courier. Russian Literature, Chinese Literature, Indian Literature, Masha, Span, GDR Review, Readers Digest, Illustrated Weekly, என பல இதழ்களுக்கு சந்தா கட்டியிருந்தேன்.
அவை தொடர்ந்து வந்தபடியே இருந்தன. அதனால் எங்கள் வீட்டிற்கு தினமும் தபால்காரன் வருவான். அவனது சைக்கிள் சப்தம் கேட்டதுமே யாராவது வாசலுக்கு வந்துவிடுவார்கள். தபால் தருவதோடு அவரது உறவு முடிந்துபோய்விடுவதில்லை. தபால்காரனுக்கு எல்லா குடும்பங்களின் கதையும் தெரியும். பெரும்பான்மை போஸ்ட்கார்டுகளை தபால்காரன் படித்திருப்பான். ஆகவே அவனால் அதைப்பற்றி சொல்வதும் உண்டு.
அது போலவே மணிஆர்டரில் வந்து சேரும் ஐம்பது ரூபாய் வெகுமதியை பெறுவது அலாதியான அனுபவம்.
கடிதம் தரும் அந்தரங்க உணர்வு இன்றில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக ஹெரால்ட் ட்ரிப்யூன் இணையதளத்தில் மும்பை தபால் நிலையத்தில் கடிதம் எழுதுகின்றவராக சேவை செய்யும் சாவந்தை பற்றிய ஒரு வீடியோவைப் பார்த்தேன்
சாவந்த் மும்பை தலைமை தபால் நிலையத்தின் முன்பாக ஒரு மேஜையைப் போட்டுக் கொண்டு இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக கடிதம் எழுதித் தரும் சேவையை செய்து கொண்டிருக்கிறார். இவரிடம் கடிதம் எழுதித்தரும்படியாக வருபவர்களில் பெரும்பான்மையினர் அடித்தட்டுமக்கள், குறிப்பாக வேசைகள், துப்பரவு தொழிலாளர்கள், ரிக்ஷா ஒட்டுபவர்கள், ரௌடிகள், அன்றாட வேலை செய்து பிழைப்பவர்கள், அவர்கள் சொல்வதைக் கடிதமாக எழுதித் தந்திருக்கிறார் சாவந்த்
மற்றவர்களுக்காக கடிதம் எழுதும் போது இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. முதலாவது கடிதத்தில் உள்ள விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியமாக காப்பாற்றுவது. இரண்டாவது தான் எழுதுவது வெறும் கடிதம் அல்ல அது முகம் அறியாத ஒரு மனிதரின் நெருக்கடியை மனமகிழ்வை பகிர்ந்து கொள்ளும் தருணம். ஒரு சேவை அதனால் இதில் அவர்களாக தரும் கட்டணத்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டையும் தான் முறையாக செய்திருக்கிறேன் என்று பெருமைப்படும் சாவந்த் இதுவரை பத்தாயிரம் கடிதங்கள் எழுதியிருக்ககூடும் என்று கூறுகிறார். இந்தியா முழுவதும் அவர் எழுதிய கடிதங்கள் சென்றிருக்கின்றன. ஒரு சிலர் அவரது நிரந்தர வாடிக்கையாளர்களாக பலவருடம் தொடர்ந்து அவரை அணுகியிருக்கிறார்கள்.
கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு வந்து வேசியாக மாறிய ஒரு பெண் ஊரில் உள்ள தன் மகளுக்கு வாரம் ஒரு முறை வந்து கடிதம் எழுதும்படியாகச் சொல்வாள். அவள் கடிதம் எழுதுவதற்காக தன் அன்றாட வாழ்வில் நடந்ததை சொல்லும்போது எனக்கே கண்ணீராக வரும். அந்த பெண்ணும் தேம்பி தேம்பி அழுவாள். நான் எழுதிய கடிதங்களில் பாதி கண்ணீர் துளி படிந்தது என்று நினைவுகூறும் சாவந்த் தான் காதல்கடிதங்கள் மட்டும் எழுதுவதில்லை. காரணம் காதல் கடிதங்கள் பிரச்சனையை உண்டு பண்ணுகின்றவை. அதன்தொடர்விளைவுகள் மிக மோசமானது என்று சொல்லிச் சிரிக்கிறார்
வீடியோவில் அவரை நேர்முகம் செய்கின்றவர் கடைசியாக எப்போது, யாருக்கு கடிதம் எழுதி தந்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு சாவந்த் என்னிடம் கடிதம் எழுதித் தரும்படியாக ஆள் தேடி வந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இன்றும் அதே இடத்தில் காத்துக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் இன்று யாருக்கும் கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை.
செல்போனும் கம்ப்யூட்டரும் எஸ்டிடி பூத்துகளும் இன்று மலிந்து போய்விட்டன. யாரும் கடிதம் எழுத முன்வருவதேயில்லை. தேவையுமில்லை என்று நினைக்கிறார்கள். ஒருவகையில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி சந்தோஷம் தருகிறது. விருப்பமானவர்களுடன் விருப்பமான நேரத்திலே பேசிக் கொண்டுவிட முடிகிறது.
ஆனால் இன்னொரு பக்கம் மனிதர்கள் தங்களது ஆதாரமான உணர்ச்சியான பிரிவு துயரை முற்றிலும் இழந்துவிட்டார்கள். இப்போது யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. பிரிவிற்காக வருந்துவதில்லை. ஏக்கம் கொள்வதில்லை. கடிதம் வரவில்லை என்று கவலைப்படுவதில்லை அது தான் பெரிய குறைபாடு என்கிறார் சாவந்த்.
உடனே நேர்முகம் செய்கின்றவர் உங்கள் மகள் வெளிநாட்டில் வேலை செய்வதாக சொன்னீர்களே அவளுக்கு நீங்கள் கடிதம் எழுதுவது உண்டா என்று கேட்கிறார். அது எதற்கு அதான் செல்போன் இருக்கிறதே என்று சொல்லி சிரிக்கிறார் சாவந்த்
பத்தாயிரம் கடிதம் எழுதிய சாவந்தும் இன்றும் கடிதம் எழுதுவதை விட்டுவிட்டார். ஒருவகையில் தொழில்நுட்பம் மனிதர்களை உலகெங்கும் இணைத்திருக்கிறது. தேவையற்ற காத்திருப்பைத் துண்டித்திருக்கிறது. இன்னொரு பக்கம் பிரிவை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா என்றும் தோன்றுகிறது.
நமக்கு விருப்பமானவர்களை பிரிந்து தனித்திருக்கும் சூழலில் தான் அவர்களைப் பற்றி அதிகம் நினைத்து கொள்ள முடியும். அது இன்றைக்கு இல்லை. எந்த நேரமும் நாம் செல்போனால் கண்காணிக்கபடுகின்றோமோ என்று கூட பலநேரம் தோன்றுகிறது.
இன்று ரயில் நிலையங்களில் யாரும் யாரையும் வழி அனுப்ப வருவதில்லை. தொலைதூரத்திற்கு போகின்றவரை நினைத்து கண்ணீர் விடுவதில்லை. உலகின் விஸ்தாரணம் சுருங்கிவிட்டது. மனிதர்கள் மிகவும் வளர்ந்துவிட்டார்கள்.
நம் தலைக்குமேல் தொலைபேசி சமிக்ஞைகள் கோடிக்கணக்கில் பறந்தபடியே உள்ளன. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள எவரது செல்போன் உரையாடல்களே நம் சுவாசகோளங்களில் சென்று வெளியேறுகின்றன. இரவும்பகலும் எண்ணிக்கையற்ற அலைகளாக தொலைதகவல்கள் மிதந்து கொண்டேயிருக்கின்றன.
மரங்கள் மறைந்து போய் அதை விட மிக உயரமாக செல்போன் டவர்கள் வளர்ந்துவிட்டன. ஆனால் மரங்களில் வந்து அமரும் பறவைகளில் ஒன்று கூட செல்போன் டவர் பக்கம் போவதில்லை. செல்போன் சிக்னல் சரியாக எடுக்காத வீடுகள், அறைகள், கிராமங்கள், பரிகாசத்திற்கு உரியதாகவிட்டன. பலர் இதற்காகவே வீடு மாறியிருக்கிறார்கள்.
இவ்வளவு நெருக்கமும் பிரிவற்ற தொடர்உறவும் கொண்ட நவீன வாழ்வில் தான் கணவன் மனைவி அப்பா பிள்ளை, காதலன் காதலி, நண்பர்கள், உறவினர்கள் என எல்லா உறவும் கசப்பும், வெறுப்பும் விரோதமும், பகைமையுமக மாறிக் கொண்டிருக்கின்றன. பிரிவை அந்தக் காலத்து மனிதர்கள் அனுமதித்தார்கள். வலியோடு காத்திருந்தார்கள். வருகையை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டார்கள். இன்று ஒரு மனிதன் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பி வருவது கூட பெரிய விஷயமில்லை.
தொழில்நுட்பம் அவசியம் தான். ஆனால் தொழில்நுட்பத்தின் பேரால் சகமனித உறவு புறக்கணிப்பும் வெறுமைக்கும் உள்ளாவதை தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஞாயிற்றுகிழமைகளில் பெரும்பான்மையானவர்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று பேசி ஒன்றாக உணவு அருந்தி குடும்பங்கள் விஷயங்கள், பொது விஷயங்கள் பகிர்ந்து கொண்டு சில நாட்களில் ஒன்றாக சினிமா பார்த்து. கடற்கரைக்கு சென்று வீடு திரும்புவார்கள்.
செல்போன் வந்தபிறகு அந்த உறவுகள் அப்படியே துண்டிக்கபட்டுவிட்டன. யாரும் யாரையும் பார்க்க விரும்புவதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு கட்டாயமான காரணம் தேவைபடுகிறது. இந்தபக்கம் வந்தேன் உங்களையும் ஒரு எட்டு பாத்துட்டு போகலாமே என்று உரிமையோடு வருகின்றவர்கள் மிக சுருங்கிவிட்டார்கள். அது ஒரு தவறான செயல் என்ற குற்றமனப்பாங்கு கூட உருவாகி விட்டது
இந்த நெருக்கடிக்கு நானும் விதிவிலக்கு அல்ல. அருகாமை வீதியில் வசிக்கும் நண்பரை காண்பதே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கிறது. ஆனால் போனில் தினமும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இதைவிடக்கொடுமை மாநகரில் ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு கணவன் மனைவி பிள்ளைகள், ஒருவருக்கொருவர் செல்போன்பேசிக் கொள்வது . ஒரு நண்பரை காண சென்றபோது அவர் மாடியில் இருந்தபடியே கிழே உள்ள மனைவியோடு போனில் பேசிக் கொண்டிருக்கிறார். டீ காபி வேண்டுமா என்ற தகவல்கள் கூட போனில் தான் கேட்கபடுகின்றன. ஒரே நபர் இரண்டு செல்போன்கள், மூன்று செல்போன்கள் கைகளில் வைத்துக் கொண்டு அலைவதும் ஒரே நேரத்தில் மூன்று போன்களில் பேசுவதையும் காணும்போது தொழில்நுட்பம் சற்றே பயமுறுத்தவே செய்கிறது.
பிரிவை, காத்திருப்பை உணர மறந்துபோனால் நாமும் இயந்திரங்களும் ஒன்றாகிவிட மாட்டோமா. கையிலிருந்து பறந்து போன பலூன் நம்மை பற்றி நினைக்காமல் காற்று போன போக்கில் பறந்து போகலாம். நம் உறவுகளும் அப்படி சுவடின்றி நம்மை விட்டு போவது சரியானது தானா? பிரிவிற்காக கண்ணீர் விட வேண்டும் என்பதில்லை. பிரிவு ஏற்படுத்தும் அந்தரங்கமான வலியும் தனிமையும் கூட ஏன் இன்று உணர்ந்து கொள்ள படுவதில்லை.
தமிழின் சங்க இலக்கியம் பெரிதும் பிரிவைப் பேசுகின்றன. காதலன் காதலியை பிரிந்து சென்றுவிடுகிறான். அவனுக்காக காத்திருப்பதும், அவன் வந்துவிடுவானா வரமாட்டானா என்ற தடுமாற்றத்தையும், அவன் வராத நாளின் துக்கத்தையும், அகதனிமையை , வெளிப்படுத்தபடா அன்பின் வலியைப் பாடுகின்றது . இதில் ஆண் பெண் என்று இருவரின் பிரிவு நிலைகளும் அடக்கம்.
இதிகாசங்களும் காப்பியங்களும் கூட பிரிவை தான் மையப்பொருளாக கொண்டிருக்கின்றன. ஆனால் இன்று பிரிவு என்பது வெறும் மனமயக்கம் மட்டுமே.
சில நாட்களுக்கு முன்பாக ரயிலில் மதுரைக்கு பயணம் செய்தேன்.என் அருகில் இருந்த ஐம்பது வயதானவர் ரயிலில் ஏறியதும் வீட்டிற்கு போன் செய்து தன் மகள் அலுவலகத்திலிருந்து வந்துவிட்டாளா என்று விசாரிக்க ஆரம்பித்தார். அதன் பத்து நிமிசங்களுக்கு ஒரு முறை அவர்கள் சாப்பிட்டார்களா, என்ன சாப்பிட்டார்கள், வாசல்கதவு மூடப்பட்டிருக்கின்றதா? பாத்ரூம் லைட் அணைக்கபட்டிருக்கிறதா? காலையில் கரண்ட் வராமல் போனால் இரவில் மோட்டார் போட்டு தண்ணீர் நிரப்பிவிடலாமா? மறுநாள் காலை கட்ட வேண்டிய தொலைபேசி கட்டணத்தை யார் போய் கட்டுவது? இரவில் தான் எந்த மாத்திரைகள் போட வேண்டும், தன் பையில் குளியல்சோப்பு எடுத்து வைக்கபட்டிருக்கிறதா என்று பேசிக் கொண்டே வந்தார்.
அநேகமாக படுக்கையில் படுத்துக் கொண்டும் அவரது பேச்சு நிற்கவேயில்லை. யோசித்து பார்த்தால் நத்தை தன் முதுகில் கூடினை சுமந்து திரிவது போல அவர் தன்வீட்டைக் கூடவே தூக்கிகொண்டு அலைகிறார் என்பது தான் நிஜம்.
இதற்கு இடையிலே அவர் திருநெல்வேலிக்கு போன் செய்து தனக்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா? அருகில் நல்ல காபி கிடைக்குமா? அறையில் ஹீட்டர் வேலை செய்கின்றதா என்று செக் பண்ணியாகி விட்டதா? டிபனுக்கு இட்லி பொடி கிடைக்குமா? கோவில் எப்போது நடை சாத்துவார்கள், அல்வா எங்கே வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே வந்தார்.
பேசி ஒய்ந்த நிமிசத்தில் செல்போனில் உள்ள பண்பலையில் ஒலிபரப்பாகும் பாட்டை போட்டு ரயில் முழுவதும் கேட்கும்படியாக வைத்து கொண்டார். இதை பயணிகள் எவரும் ஆட்சேபம் செய்யவில்லை.
காரணம் அவரைவிட பத்தோ, இருபது சதவீதமோ அங்கிருந்தவர்கள் குறைவாக போனில் பேசினார்கள் அவ்வளவே.
செல்போன் வந்தபிறகு பெருநகரவாசிகள் பகலிரவாக பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். எதற்காக என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒரு ஆள் ஒருநாளைக்கு நாற்பது முதல் ஐம்பது முறை செல்போனில் பேசுகிறான் . இரண்டிலிருந்து நாலு மணிநேரம் போன் பேச செலவு செய்கிறான். உறக்கத்தில் கூட செல்போன் ஒலி அவனுக்குள் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.
இதில் கழிப்பறைகள் கூட விதிவிலக்கல்ல. அங்கே உட்காரந்தபடியே போன் பேசுகின்றவர்களும் பெருகிவிட்டார்கள்.
தொலைபேசி கட்டணம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கட்டணம் செலுத்த வேண்டிய விபரங்கள், ரசீதுகள், விளம்பரங்கள், வணிகநிறுவனங்களின் கையேடுகள்,கல்யாண பத்திரிக்கைகள் அறிவிப்புகள் இவை தான் இன்று கடிதங்களாக அனுப்பபடுகின்றன. மற்ற யாவும் செல்போன், கூரியர் தான். மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளின் வருகை தொலைதொடர்பை முற்றிலும் மாற்றியமைத்துவிட்டது.
பிரிவுஉணர்வே இல்லாமல் போனதன் காரணமாகவோ என்னவோ சேர்ந்திருப்பதும், தொடர்ந்து சந்தித்து கொள்வதும் அலுப்பு தர ஆரம்பித்துவிட்டது. செல்போன் தினசரி செய்தி பத்திரிக்கைகள் இவை இல்லாமல் ரெண்டு நாள் நிம்மதியாக தனியாக இருக்கமுடியாதா என்ற ஏக்கம் எல்லோரிடமும் வந்துவிட்டது. ஆனால் பலரும் அதற்கு தயாராக இல்லை.
சமீபத்தில் கேரளாவில் உள்ள ஆலப்புழை அருகில் உள்ள காயலில் ஒரு படகை வாடகை எடுத்துக் கொண்டு மூன்று நாட்கள் தண்ணீரின் உள்ளாகவே இருந்தேன். கண் எட்டும் தூரம் வரை தண்ணீர் மட்டுமே. மீன்பிடிப்பதும் பறவைகளை வேடிக்கை பார்ப்பதும் காயலின் எல்லையற்ற பரப்பில் ஊர்ந்து செல்லும் வெளிச்சத்தை கண்டு கழிப்பதும் என்றிருந்தேன். செல்போன் கிடையாது. பேப்பர் கிடையாது. ஏகாந்தமான காற்று, தொலைதூரத்து தென்னைமரங்கள், கடந்து செல்லும் படகுகளின் நிழல்தோற்றம், இரவில் மீன்பிடிக்க வருகின்றவர்களின் விளக்கு வெளிச்சம். நட்சத்திரங்கள் நிரம்பிய இரவுகள்.
உலகிலிருந்து துண்டித்துக் கொண்டு ஏதோவொரு தீவில் இருந்தது போன்றிருந்தது. ஆனால் கரை வந்த நிமிசம் முதல் ரயில் ஏறி சென்னை வர பயணம் துவங்கியது வரை உலகமே மிக இரைச்சலாகவும் வேக வேகமாக இயங்குவது போன்றுமிருந்தது. சென்னை வந்ததும் செல்போன் மணி அழைக்கத் துவங்க இயந்திரத்தின் ஒரு உதிரிபாகம் போல நானும் பொருந்திக் கொண்டுவிட்டேன்.
இப்படியான சிறிய தப்பித்தல்கள் மட்டும் தான் இன்று சாத்தியம் போலும். மற்றபடி செல்போன்கள், அதன் அதிநவீன தொழில்நுட்பம் நம்மை பின்தொடர்ந்தபடியே உள்ளன. கானகத்தின் குகைவரை அவை ஊடுருவிவிட்டன. இனி அதை தவிர்க்க முடியாது. குறைந்தபட்சம் செல்போனின் பயன்பாடு குறித்த கவனத்தை, ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு வேண்டும்.
இல்லாவிட்டால் மௌனம் என்பது வெறும்சொல்லாக மட்டுமே எஞ்சி நிற்கும்.