ஓவியர் ஹென்றி ரூசோ தனது நாற்பதாவது வயதில் தான் ஓவியம் வரையத் துவங்கினார். முறையாக ஒவியம் பயிலாமல் சுயமான முயற்சிகளின் மூலம் ஓவியராக உருமாறினார். அவரது ஓவியங்களில் வெளிப்படும் இயற்கை விசித்திரமானது. ஒரு மாயமான சூழலினை விவரிப்பதாகவே அவரது ஓவியங்கள் உருவாக்கப்பட்டன. பிகாசோவின் நண்பராக இருந்த ரூசோ தாவரங்களை மிகுந்த உயிரோட்டத்துடன் வரைந்திருந்தார்
ரூசோ 1868 இல் பாரீஸில் குடியேறினார். அடுத்த ஆண்டு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த க்ளெமென்ஸ் போய்டார்டை மணந்தார். பாரீஸின் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராகப் பணியாற்றினார்; இந்த அரசாங்க பதவியிலிருந்தபடியே தான் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டார்.
அவரது கால்பந்து விளையாடுகிறவர்கள் என்ற ஓவியம் மிகச்சிறப்பானது. இந்த ஓவியத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதன் வசீகரம் குறைவதேயில்லை. குழந்தைகளின் கற்பனையைப் போல அசலாகவும் விந்தையாகவும் ஓவியங்கள் வரைந்தவர்.
வனச்சூழலை வரைவதில் ரூசோ நிகரற்றவர். சொந்தமாக அவரே சிறு காடு ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார் என்கிறார்கள்
1908 ஆம் ஆண்டில், முதல் சர்வதேச ரக்பி போட்டி பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையே பாரீஸில் நடைபெற்றது. ரூசோ அந்த விளையாட்டினை காணச்சென்றார். போட்டி ஏற்படுத்திய மகிழ்ச்சியிலிருந்தே இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார்.
கால்பந்து வீரர்களின் தோற்றமும் உடையும் விசித்திரமாகவுள்ளது. ஏதோ கனவில் நடப்பது போலவே ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. விளையாட்டுவீரர்களின் உடற்கட்டினையும் மீசைகளையும் பாருங்கள். விளையாட்டு நடக்குமிடம் பூங்கா ஒன்றின் உட்புறம் போலிருக்கிறது. சுற்றிலும் மரங்கள். பின்புறம் ஒரு மலைத்தொடர். சூரியனோ, நிலவோ எதுவும் வரையப்படவில்லை. ஆனால் குளிர்காலத்தின் காட்சி என்பது போலப் பின்புலம் வரையப்பட்டிருக்கிறது.
விளையாடுகிறவர்களின் முகபாவங்களைப் பாருங்கள். அது விளையாட்டோடு தொடர்பில்லாத வேறு பார்வையைக் கொண்டிருக்கிறது. சிவப்பு நிற பந்து காலத்தின் அடையாளமாக வரையப்பட்டிருக்கிறது என்கிறார்கள். வேடமிட்ட நடிகர்களைப் போலவே விளையாட்டு வீரர்கள் தோற்றம் தருகிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நான்கு ஆண்களின் உருவம் வரையப்பட்டிருக்கிறது. இந்த ஓவியம் கால்பந்து வீரர்கள் என்று தலைப்படப்பட்டிருந்தாலும் அவர்கள் உண்மையில் ரக்பி விளையாடுகிறார்கள். நிலப்பரப்பில் உள்ள மரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அதே நேரத்தில் வானத்தில் மேகங்கள் ஒரு மர்மமான வெளிப்பாட்டினைக் கொண்டிருக்கின்றன.
கால்பந்து வீரர்களின் கோடிட்ட பைஜாமாவும் அவர்கள் முகத்திலுள்ள புன்னகையும் விசித்திரமான தோற்றத்தைத் தருகின்றன.
பாரீஸைத் தாண்டி வேறு எங்கும் பயணம் சென்றிராத ரூசோ தன் வாழ்விடத்திலிருந்தபடியே உலகின் மாற்றங்களை அவதானித்திருக்கிறார். ரக்பி விளையாட்டு புகழ்பெறத் துவங்கிய காலமது என்பதால் அதை ஆவணப்படுத்தும் விதமாக இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார் என்கிறார்கள்
ரூசோவின் ஓவியத்திற்குத் தரப்படும் கலைசார்ந்த இந்த விளக்கங்கள் ஒரு புறம் என்றால் மறுபுறம் இந்த ஓவியத்தை எப்போது காணும் போது அதனுள் சொல்லப்படாத ஒரு கதை ஒளிந்திருப்பது போலத் தோன்றுகிறது. இந்த நால்வரில் யாருடைய கதையது. அவர்களுக்குள் என்ன உறவு. என மனம் எதையோ பின்னுகிறது. நான்கு காவலர்கள். அல்லது ராணுவ வீரர்கள் ஒன்றாக விளையாடுகிறார்கள். அல்லது நான்கு திருடர்கள் ஒரு ஓய்வு நாளில் பந்தாடுகிறார்கள் என மனது விசித்திர கற்பனைகளை நெய்கிறது. அது தான் ஓவியம் தரும் கிளர்ச்சி.
இலைகளை வரைவதில் ரூசோ தனித்துவமானவர். இந்த ஓவியத்திலும் மரத்தின் இலைகள் மிக நுட்பமாக வரையப்பட்டிருக்கின்றன. நடனம் போல அழகான இயக்கம் இந்த ஓவியத்திற்குத் தனியழகினை தருகிறது. மேகங்களை வரைவதில் எப்போதும் ரூசோவிற்கு நாட்டம் அதிகம். அதை மாயத்தோற்றம் போல வரைவார். இதிலும் அந்தத் தன்மையைக் காண முடிகிறது
கனவுத்தன்மை மிக்க ஓவியங்களே ரூசோவின் பாணி. இந்த ஓவியத்திலும் கனவு நிலையே அதற்குக் கூடுதல் அழகினை உருவாக்கித் தருகிறது.
***