காலைக்குறிப்புகள் -8 ஆகஸ்ட்மாத செவ்வாய்க்கிழமை

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம் சிறுகதை மிகச்சிறப்பானது. இந்தக் கதையில் வாழைத்தோட்டங்களுக்கு இடையில் கரி என்ஜின் கொண்ட ரயில் செல்லும் காட்சி வருகிறது. கொலம்பியாவின் வாழைத்தோட்டங்களுக்கு நடுவில் வளர்ந்தவர் மார்க்வெஸ். அமெரிக்காவின் வாழைப்பழத் தேவைக்காகக் கொலம்பியா, ஈக்வடார், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் யுனைடெட் புரூட் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

இந்தக் கதையில் முடிவேயில்லாத வாழைத்தோட்டங்களின் காட்சி தான் முதலில் இடம்பெறுகிறது. வாழைத்தோட்டங்களை ரயில் கடக்கும் போது காற்றில் ஈரம் பரவுகிறது. பசும் வாழைத்தார்கள் ஏற்றப்பட்ட மாட்டுவண்டிகள் தண்டவாளங்களுக்கு இணையாகச் செல்லும் குறுகிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.

‘ஜன்னலை மூடிவிடு; புகைக்கரி உன் முடியில் நிறையச் சேர்ந்துவிடும் என்று ஒரு பெண் சொல்கிறாள். கரி என்ஜின் உள்ள ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு அந்த அனுபவத்தின் உண்மை புரியும்.

ரயில் அறிமுகமான நாட்களில் நம் ஊர்களில் இந்தக் கரிப்புகை உடையில் படிந்துவிடக்கூடாதே என்று பயணத்தில் வேஷ்டி சட்டையைக் கழட்டி வைத்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கரும்புகையை எழுப்பியபடியே ரயில் தொலைவிலிருந்து வரும் காட்சி மயக்கமூட்டக்கூடியது.

ரயிலின் மூன்றாவது வகுப்புப் பெட்டியில் ஒரு தாயும் மகளும் இருக்கிறார்கள். இருவரும் துயரத்தை அடையாளப்படுத்தும் உடை அணிந்திருக்கிறார்கள். அந்தத் துயரத்தின் வெளிப்பாடு போலவே புறச்சூழல் இருக்கிறது.

மகள் கையில் செய்தித்தாளில் சுற்றப்பட்ட மலர்க்கொத்திருக்கிறது. .

பன்னிரண்டு வயதுள்ள அந்தச் சிறுமி முதல் முறையாக ரயிலில் பிரயாணம் செய்கிறாள். ஆனால் அவள் ரயில் பயணத்தினை ரசித்துக் கொண்டாடவில்லை.

சிறிய ஊர் ஒன்றின் ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பிக்கொள்வதற்காக ரயில் பத்து நிமிடங்கள் நிற்கிறது. அங்கேயும் வெளியே வாழைத்தோட்டங்களின் புதிரான அமைதியில், நிழல்கள் தெளிவாகத் தெரிகின்றன.

ரயில் தண்ணீர் பிடித்துக் கொள்வதற்கு நிற்கும் இடத்தைப் பார்த்திருக்கிறீர்களா. சாத்தூரில் எனது தாத்தாவின் பழைய வீட்டின் பின்பக்கம் ரயில் தண்ணீர் பிடிப்பதற்காக வந்து நிற்கும். அங்கே தான் பெண்கள் வீட்டிற்கான தண்ணீர் பிடித்துப் போவார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்ட அந்தக் காட்சியை இக்கதை நினைவுபடுத்துகிறது.

வெப்பமான பகலின் ஊடே ரயில் செல்கிறது. தன் கையிலுள்ள பூக்கள் வாடிவிடக்கூடாது என்பதற்காக அந்தச் சிறுமி மலர்க்கொத்தை நீரில் நனைப்பதற்காகக் கழிவறைக்குக் கொண்டு செல்கிறாள்.

எதற்காக அந்த மலர்க் கொத்து. எங்கே செல்கிறார்கள் என்று எந்த விபரத்தையும் மார்க்வெஸ் தெரிவிப்பதில்லை. அவர்களின் மௌனம் நமக்கு எதையோ உணர்த்துகிறது அவ்வளவே.

அவர்கள் இருவரும் ரயிலிலே சாப்பிடுகிறார்கள். பாலாடைக்கட்டி, பாதி மக்காச்சோள அடை, கேக் ஆகியவற்றை அவர்கள் சாப்பிடும் காட்சி நம் கண்முன்னே தெரிகிறது.

ரயில். முன் கடந்த நகரங்களைப்போலுள்ள பிறிதொரு நகரத்தைக் கடக்கிறது. அங்கே கடும் வெயிலில் ஓர் இசைக்குழு ஒர் இனிய ராகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சி சட்டென நம் மனநிலையை மாற்றிவிடுகிறது. இசையில் கரைந்து போனவர்களுக்கு வெயில் தெரியாது.. ரயில் செல்ல செல்ல வாழைத் தோட்டங்கள் மறைந்து போகின்றன. அதன் பிறகு தொடர்வதெல்லாம் பாழ்நிலம்..

அந்தச் சிறுமியின் தாய் அவளுக்கு ஒரு சீப்பைக்கொடுத்து, தலைவாரிக் கொள்ளச் செய்கிறாள். ரயில் வேகமெடுக்கிறது. அவர்கள் செல்லும் ரயில் பெரிய நகரமொன்றைக் கடந்து போகிறது. போகிற இடத்தில் நீ அழக்கூடாது என்று தாய் மகளுக்கு அறிவுரை சொல்கிறாள்.

உலர்ந்த வெப்பமான காற்று ஜன்னல் வழியாக உள்ளே வருகிறது. அவர்கள் ஒரு நகரில் இறங்குகிறார்கள். அந்த நகரம் வெம்மையில் மிதந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் பாதிரி ஒருவரின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டுகிறார்கள். மதகுரு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

அரைத்தூக்க நிலையால் அழுத்தப்பட்டு நகரமே நண்பகல் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது, கடைகள், நகர அலுவலகங்கள், அரசுப் பள்ளிக்கூடம் ஆகியவை பதினோரு மணிக்கு மூடப்பட்டு நான்கு மணி வரை திறக்கப்படுவதில்லை. அது மதிய உறக்கத்திற்கான நேரம். வெப்பமான பகலை கடந்து செல்வதற்கு உறக்கமே துணை.

சிலர் வாதுமை மர நிழலில் நாற்காலிகளைச் சுவரோரம் போட்டு அமர்ந்துகொண்டு தெருவிலேயே நண்பகல் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்

பாதிரியார் வருகிறார். அவரிடம் “கல்லறைத் தோட்டத்தின் சாவி வேண்டும் என்று கேட்கிறாள் அந்தத் தாய்.

அப்போது செய்வதறியாமல் மலர்களை மடியில் வைத்துக்கொண்டு, பெஞ்சின் அடியில் கால்களைக் குறுக்காக வைத்து சிறுமி அமர்ந்திருக்கிறாள்.

இப்போது தான் அந்தப் பெண் சென்ற வாரம் அந்த ஊரில் கொல்லப்பட்ட திருடனின் தாய் என்பது தெரியவருகிறது.

ஒரு திருடனின் தாயும் மகளும் இறந்த உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விபரத்தை நாம் அப்போது தான் அறிந்து கொள்கிறோம்.

ரெபக்கா என்னும் ஒரு விதவை தன் வீட்டிற்குள் புகுந்த ஒருவனை இருபத்தெட்டு வருடத் தனிமை உண்டாக்கிய பயத்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறாள். வீட்டின் முன்பாகக் கார்லோஸ் ஸென்டனோ’ குண்டடி பட்டு இறந்து போகிறான். அவன் வண்ணகோடுகள் போட்ட சணல் துணியிலான சட்டை அணிந்திருக்கிறான். காலணி எதையும் அணியவில்லை. நகரத்தில் யாருக்கும் அவனைத் தெரியவில்லை.

திருடனின் தாய் வந்திருப்பதை ஊர்மக்கள் அறிந்துவிடுகிறார்கள். ஏதோ ஆபத்து நடக்கப்போகிறது என்றே தோணுகிறது. அந்தத் தாய் பயப்படவில்லை. அவள் சிறுமியிடமிருந்து மலர்க்கொத்தை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நகர ஆரம்பிக்கிறாள்

* சூரியன் மறையும்வரை காத்திரு” என்று மதகுரு எச்சரிக்கை செய்கிறார். ஆனால். நன்றி. இதில் எங்களுக்கொன்றும் சிரமமில்லை” என்றபடியே அப்பெண் மகளின் கையைப் பிடித்தவண்ணம் தெருவில் இறங்கி நடக்கிறாள்

கதை முழுவதும் சிறுமி கொண்டு வந்த மலர்கள் நம் கவனத்தைக் கவர்ந்தபடியே இருக்கின்றன. அந்த மலர்களை வெயிலிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள். அந்த மலர்கள் தான் அவர்களின் நினைவுகள். கையில் மலருடன் நிற்கும் சிறுமியின் தோற்றம் மனதில் அழுத்தமாகப் பதிகிறது

கதையை மார்க்வெஸ் புறச்சூழலின் வழியாகவே கொண்டு செல்கிறார். கடந்தகால நினைவுகள் எதையும் அவர்கள் ரயிலில் பகிர்ந்து கொள்ளவில்லை.. ஆனால் கோடையின் பகல் அவர்களின் துயரமனநிலையின் சாட்சியமாக இருக்கிறது.

இந்தக் கதையில் மார்க்வெஸின் மாய யதார்த்தமில்லை. ஆனால் சூழல் மாயமாக விரிகிறது. திருடனை எதிர்கொண்ட ரெபேக்காவின் இருபத்தியெட்டு ஆண்டுகாலத் தனிமை தான் நூற்றாண்டு தனிமையாகப் பின்பு விரிவடைகிறது. தனிமையின் பயம் தான் ரெபேக்காவை சுடச்செய்கிறது.

திருடனின் தாய் குற்றவுணர்வுகள் எதுவுமற்றிருக்கிறாள். அவள் அவனது தவற்றினை உணர்ந்திருக்கிறாள். அவன் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொண்டுவிட்டாள். ஆனால் இறந்தவனுக்கு உரிய மரியாதை செய்ய விரும்புகிறாள். இதற்காக நீண்ட தூரம் பயணித்து வருகிறாள். கதையின் கடைசி வரியிலிருந்து முதல்வரியை நோக்கிப் பின்னோக்கி படித்துக் கொண்டே போனால் கதையின் தன்மை முற்றிலும் மாறிவிடுகிறது.

மார்க்வெஸின் இக்கதையைப் போலப் பகலின் சித்திரத்தை அழுத்தமாகப் பதிவு செய்த கதையை நான் வாசித்ததில்லை.

எத்தனை அழகாக எழுதியிருக்கிறார். வாழைத்தோட்டங்கள் அமெரிக்க நிறுவனங்களால் திருடப்படுகின்றன. அது பெரிய விஷயமில்லை. ஆனால் என்ன குற்றம் செய்தான் என்று தெரியாமல் கொல்லப்படும் கார்லோஸ் ஸென்டனோவின் சாவு மக்களுக்குக் குற்றமாகத் தெரிகிறது.

மார்க்வெஸின் மிகச்சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. ஆர். சிவகுமார் சிறப்பாக மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். மீட்சியில் இந்தக் கதை வெளியானது. Hemingway’s “iceberg technique பாணியில் எழுதப்பட்ட கதையிது. கதை வழியாக காட்டப்படுவது குறைவே.

**

0Shares
0