சந்தையின் இரவுக்காட்சி

பெல்ஜிய ஓவியர்  பெட்ரஸ் வான் ஷெண்டல் (Petrus van Schendel) வரைந்த சந்தையின் இரவுக்காட்சி ஓவியங்களில் எரியும் மெழுகுவர்த்திகளுக்கு நடுவே காய்கறி, மீன், மற்றும் பழங்களின் விற்பனை நடக்கிறது.

ஒளி எப்போதும் கருணையின், அன்பின் அடையாளமாகவே கருதப்படுகிறது. புனிதர்களின் கையிலிருந்து ஒளி பிறக்கும் காட்சியை ஓவியங்களில் கண்டிருக்கிறேன். ஒளி பேதமறியாதது. ஒளி ஒவ்வொன்றின் தனித்தன்மையை நமக்கு புலப்படவும் புரியவும் வைக்கிறது. ஒளிரும் பொருட்களை, ஒளி படும் விதத்தை யாவரும் விரும்புகிறார்கள். எல்லா சமயங்களும் ஒளியைப் புனிதமாகவே கருதுகின்றன.  இருள் என்பது குறைந்த ஒளி என்கிறார் பாரதி.

பகலில் ஒரு போதும் இவ்வளவு அழகுடன் சந்தையைக் காண இயலாது. சந்தை என்றதும் நம் நினைவில் பச்சை காய்கறிகளின் வாசனை, அழுகிப்போன காய்கறிகள். பழங்களின் குப்பைகள். பேரம் பேசும் குரல்கள், ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு செல்லும் மனிதர்கள் தான் வருகிறார்கள். சந்தை நடைபெறும் இடமும் நேரமும் தான் மாறுகிறதேயன்றி உலகெங்கும் சந்தையின் இயல்பு ஒன்று போலவே இருக்கிறது.

சந்தையில் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கு என்றே ஒரு முகபாவமிருக்கிறது. பலருக்கும் அலாதியான குரல். அலை சட்டென மேல் எழுந்து வருவது போலச் சந்தையின் இயக்கம் திடீரென வேகம் கொள்ளும். பின் மதியத்தில் சந்தைக்குள் சென்றால் நாம் காணுவது கிழட்டுக் குதிரையொன்று ஓய்வெடுப்பது போன்ற காட்சியே. உருளைக்கிழங்கு மூட்டையில் தலை வைத்து உறங்கும் மனிதனையும் கேரட்டுகளை உருட்டி விளையாடும் நாய்களையும், முட்டைகோஸ்களுக்குத் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கும் பெண்களையும் கண்டிருக்கிறேன்.

மின்விளக்குகளின் கண்கொள்ளாத பிரகாசம் ஜொலிக்கும் இன்றைய நகர அங்காடிகளுக்கும் இந்தக் காட்சிக்கும் இடையில் இருநூறு ஆண்டு இடைவெளியிருக்கிறது.

மதுரைக்காஞ்சி நாளங்காடி. அல்லங்காடி என இருவகை வணிகத்தைக் குறிப்பிடுகிறது. இரவில் நடக்கும் வணிகத்தைக் குறிக்கும் அல்லங்காடியில் ஷெண்டல் வரைந்துள்ளது போலத் தான் பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கக் கூடும். மதுரையின் இரவுக்காட்சியினை விரிவாக இலக்கியம் பதிவு செய்துள்ளது. ஆனால் அக்கால ஓவியம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஷெண்டலின் ஓவியத்திற்குத் தனித்துவம் தருவது அதில் வெளிப்படும் ஒளி மற்றும் துல்லியமான முகங்கள். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் விற்பனை செய்யும் பெண்ணும் வாங்குபவரும் விநோதமான அழகுடன் தோன்றுகிறார்கள்.தெரு விளக்கின் வியப்பூட்டும் அழகு. சந்தை நடக்கும் இடத்தின் பின்னுள்ள வானில் கலங்கிய நிலவு, கலைந்த மேகம் தென்படுகிறது. அந்தக் கால எடைக்கருவிகள். பேரம் பேசும் முகங்கள், மரமேஜைகள். விற்பவர், வாங்குபவர் இருவரின் உடைகள். அவர்கள் வைத்துள்ள கூடை, பின்புறத்தே தெரியும் பெரிய குடியிருப்புகள். நிழல் தோற்றங்களாகத் தெரியும் தொப்பி அணிந்த பிரபுக்கள். என நாம் காணும் காட்சி மாய உலகமாக விரிகின்றது.

இந்த இரவுக்காட்சி ஓவியங்களில் பெரும்பாலும் வீட்டுப்பணியாளர்களே சந்தைக்கு வருகை தந்து பொருட்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் மற்றும் நடுத்தர வயது பெண்கள். அவர்கள் சமையல் வேலையிலும் வீட்டு பராமரிப்பிலும் பணியாற்றுகிறவர்கள். வழக்கமான வாடிக்கையாளர்கள் என்பது அவர்கள் நிற்கும் தோரணையிலும் முகபாவனையிலும் வெளிப்படுகிறது. கடைப்பெண்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை சற்றே காது கொடுத்தால் கேட்டுவிடலாம் என்பது போல ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.

சந்தையில் காய்கறி பழங்கள் விற்பனை செய்வதும் பெண்களே. ஷெண்டல் ஹேக்கின் இரவுச் சந்தை, வெள்ளிக் கிழமை காலையில் கூடும் காஸ்மார்க் அல்க்மார் போன்றவற்றை வரைந்திருக்கிறார். காஸ்மார்க் சந்தை வெண்ணெய் விற்பனைக்குப் பெயர்போனது. அங்கே . வெண்ணெய் வர்த்தகம் 1365 இல் தொடங்கியிருக்கிறது. மிகப்பெரிய வெண்ணெய் கட்டிகளைக் கொண்டு வருவதற்கென்றே மரவண்டிகள் இருந்தன .வெண்ணெய் வாங்க விரும்புகிறவர்கள் சைகையால் தான் விலை பேசுவார்கள். அந்தக் காட்சியினையும் ஷெண்டல் சிறப்பாக வரைந்திருக்கிறார்.

இந்த ஓவியம் ஹேக்கில் உள்ள டி க்ரோட் மார்க்கின் ஒரு மூலையை சித்தரிக்கிறது. இடதுபுறத்தில் ஒரு கோழி வியாபாரி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரண்டு பெண்களிடம் விற்பனை செய்கிறான் . வலது புறத்தில் உள்ள கடையில், பழங்கள் வாங்குபவருக்கு முன்னால் மெழுகுவர்த்தி சுடர் அசைகிறது. இரண்டு ஸ்டால்களுக்கு இடையில் பெட்டிகளை ஏற்றிய  சக்கர வண்டியை தள்ளுவதற்கு ஒரு ஆள் அமர்த்தப்பட்டிருக்கிறார்  பின்னணியில், மக்கள் சந்தைக்குள்  நடந்து செல்கிறார்கள், அதே நேரத்தில் ஓவியத்தின் வலதுபக்கம்  ஒரு விளக்கு வீடுகளின் முகப்புகளையும் தெருவின் நுழைவாயிலையும் ஒளிரச் செய்கிறது.

அவரது ஓவியங்களில் விடிகாலையில் நடக்கும் சந்தையை விவரிக்கும் ஓவியமும் இருக்கிறது. ஏதோ கனவில் காண்பது போன்ற காட்சியது. உணர்ச்சிகளின் மொழியாக ஓளியை வரைந்திருக்கிறார் ஷெண்டல்.

அந்தக் காலத்தில் ஒளியின் பிரதான வடிவங்கள் மெழுகுவர்த்திகள் மற்றும் எண்ணெய் விளக்குகளே. அவற்றிலிருந்து வரும் வெளிச்சத்தின் அடர்த்தி மற்றும் பரப்பளவு குறைவானதே.

மெழுகுவர்த்தி அல்லது நிலவில் ஒளிரும் சந்தை காட்சிகள் ‘நாக்டர்ன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன இந்த வகை 17 ஆம் நூற்றாண்டில் ரெம்ப்ராண்டின் மாணவர் ஜெரார்ட் டூ (1613-1675) என்பவரால் பிரபலமடைந்தது மைக்கேலேஞ்சலோ, காரவாஜியோவின் (1573-1610) ஓவியங்களில் காணப்படும் மாயத்தன்மையான ஒளியின் பயன்பாட்டினால் இவர்கள் ஈர்க்கப்பட்டனர். அந்த மரபின் அடுத்த கண்ணியாகவே ஷெண்டல் அறியப்படுகிறார்.

பொருள்கள் மற்றும் மனிதர்கள் மீது ஒளி படும் விதம். அதன் பிரதிபலிப்பு. அதனால் ஏற்படும் உணர்வுநிலை மாற்றங்கள் இவற்றையே ஓவியங்கள் முதன்மையாகக் கொண்டிருக்கின்றன மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தின் இளம் பெண்ணின் வெதுவெதுப்பான மென்மையான மற்றும் ஒளி ஊடுருவக்கூடிய தோல் மினுமினுப்படைந்து காணப்படுகிறது.

1318ல் உலகிலே முதன்முறையாகப் பாரிஸ் நகரில் தான் தெரு விளக்குகள் அறிமுகமாகின. அப்போது தெருவிளக்கிலும் மெழுகுவர்த்தியே பயன்படுத்தப்பட்டது. 1829 இல் பாரிஸ் கேஸ் லைட் எனப்படும் எரிவிளக்குகளை நிறுவியது, இந்த விளக்குள் ஒவ்வொன்றும் பத்து மெழுகுவர்த்திகளுக்குச் சமமான ஒளியை வழங்கியது. 1870 வாக்கில், பாரிஸ் முழுவதும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கேஸ் லைட்கள் அமைக்கப்பட்டன.  ஷெண்டல் ஓவியம் ஒன்றில் சந்தையின் ஒரு பகுதியில் புனிதரின் பெயரில் யாசகம் கேட்கும் ஒருவருக்கு காணிக்கை தருகிறாள் ஒரு இளம்பெண். இரவுக்காட்சிக்குள் தான் எத்தனை மடிப்புகள்.

பணக்காரர்கள் மட்டுமே தங்கள் வீடுகளில் மெழுகுவர்த்திகள் நிறைந்த சரவிளக்குகளை வாங்கிப் பயன்படுத்தினார்கள். உலகின் பல நகரங்களில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூட, மெழுகுவர்த்திகளே வெளிப்புற நிகழ்வுகளை ஒளிரச் செய்யப் பயன்படுத்தப்பட்டன அதன் சாட்சியமாகவே ஷெண்டலின் ஓவியங்கள் உள்ளன.

ஷெண்டலின் ஓவியங்களில் வெளிப்படும் ஒளியின் அழகு நம்மை மயக்குகிறது. அவரது ஓவியத்திலுள்ள பெண்களும் அவர்களின் உடையும் வெர்மீரின் பெண்களை நினைவூட்டுகின்றன

இரவு எப்போதும் பகலை விட மர்மமானது, மேலும் எந்த நேரத்திலும் அணைந்துவிடக்கூடிய ஒளிரும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், பொருட்களின் இயல்பு மறைந்து மாயத்தன்மை கூடிவிடுகிறது. ஒளி எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதையே ஷெண்டலின் ஓவியங்கள்  புரிய வைக்கின்றன.

•••

0Shares
0