சிறிய உண்மைகள் 6 பனிப் பறவைகள்

இயக்குநர் இங்க்மர் பெர்க்மென் தனது முன்னுரை ஒன்றில் ஒரு நிகழ்வினைக் குறிப்பிடுகிறார். அது வர்ஜின் ஸ்பிரிங் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம்.

கடுங்குளிரான மே மாதத்தில் அவர்கள் வடக்கு பிரதேசமான டலார்னாவில் இருந்தார்கள். காலை ஏழுமணி அளவில் படப்பிடிப்பிற்கான இடத்திற்கு அவரது குழுவினர் சென்று கொண்டிருந்தார்கள். அந்தப் பனிப்பாகையில் செல்வது கடினமாக இருந்த்து. மிக அதிகமான குளிர். ஆகவே விதவிதமான குளிராடைகளை அணிந்து கொண்டு பணியாளர்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார்கள். வழியெங்கும் பனிப்பொழிவு அதிகமாக இருந்த்து. படப்பிடிப்பு நடக்க இருந்த இடத்தில் கேமிராவைப் பொருத்தி நடிகர்களைத் தயார்ப்படுத்திப் படப்பிடிப்பிற்கான தயாரிப்பு நடந்து கொண்டிருந்த. . நடிகர்கள், எலக்ட்ரீஷியன்கள், மேக்-அப் மேன்கள், ஸ்கிரிப்ட் கேர்ள், சவுண்ட் க்ரூ என ஒரு பெரிய குடும்பம் போல அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

திடீரென யாரோ ஒருவர் வானைச் சுட்டிக்காட்டியபடி குரல் கொடுத்தார். அடுத்த நிமிஷம் எல்லோரும் அவரவர் வேலையைப் போட்டுவிட்டு வானை நோக்கினார்கள். வானில் கொக்குகள் பறந்து கொண்டிருந்தன.. ஒரு வட்டத்தில் கம்பீரமாக மிதப்பது போல அந்தக் கொக்குகள் பறந்து கொண்டிருந்தன. அதைக் கண்டதும் படப்பிடிப்புக் குழுவினர்கள் சந்தோஷக் கூச்சலிட்டார்கள். எல்லா வேலைகளையும் கைவிட்டு அந்தக் கொக்குகளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்று அருகிலுள்ள குன்றின் உச்சிக்கு ஓடினார்கள். .

உச்சியில் நின்று கொக்குகள் தொலைவிலுள்ள காட்டினை கடந்து மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். நீண்ட நேரம் அவர்களைக் கலைந்து போகவேயில்லை.

திடீரென ஒரு அற்புதம் கண்முன்னே நடந்தேறியது போன்ற மகிழ்ச்சி அனைவருக்கும் உண்டானது. நமது வேலைகளைக் கைவிட்டு ஒடிச்சென்று காணும் அளவிற்கு உருவான அந்தக் கொக்குகளின் பயணம் சினிமா எடுப்பதற்கு இணையானது. சினிமாவில் இப்படித்தான் திடீரென அதியசங்கள் நடைபெறுகின்றன. சாத்தியமாகின்றன.

ஸ்வீடனில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்றால் இப்படியானது தான் என இந்தக் காட்சியினைப் பெர்க்மென் குறிப்பிடுகிறார்

எதனால் அனைவரும் அந்தக் கொக்குகளைக் காணத் தனது வேலைகளைப் போட்டு ஓடினார்கள்.. நம் எல்லோருக்கும் வயதைக் கடந்த சிறுவன் அல்லது சிறுமி இருக்கிறாள். அந்தச் சிறுவன் விழித்துக் கொண்டுவிடுகிறான்.

பள்ளி வயதில் வானில் கொக்குகள் பறந்து போகும் போது கூடவே ஓடுவோம். கொக்கே கொக்கே பூப்போடு என்று சபதமிடுவோம். கொக்கு பூ போட்டால் நம் விரல் நகத்தில் வெண் புள்ளி போலத் தோன்றும். அது புத்தாடை கிடைக்கப்போவதன் அடையாளம். கொக்குகளை உலகம் முழுவதும் சந்தோஷத்தின் அடையாளமாக நினைக்கிறார்கள். ஜப்பானில் காகித கொக்குகளைச் செய்வது ஒரு கலை. ஹிரோஷிமாவில் ஆயிரக்கணக்கான காகித கொக்குகளைத் தோரணமாகக் கட்டி விட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சீனக்கவிதைகளில் கொக்குகள் தூய அன்பின் வெளிப்பாடாக, நித்தியத்தின் அடையாளமாக, ஆசையின் தூதுவனாகச் சித்தரிக்கப்படுகின்றன. கொக்கின் நடனம் அளவில்லாத சந்தோஷத்தை அடையாளப்படுத்துகிறது.

மௌனமாகச் செல்லும்

கொக்குகளைப் போல என் நினைவுகள்

உன்னை நோக்கிச் செல்கின்றன என்கிறது குய் ஹாவின் கவிதை வரி.

கடினமான பணிக்கு நடுவில் திடீரெனச் சூடான தேநீர் அமிர்தமாகிவிடுவது போல, எதிர்பாராத நேரத்தில் வானவில் தோன்றுவதைப் போல, மழை பெய்வதைப் போல, இந்தக் கொக்குகளின் வருகையும் அதிசயமான நிகழ்வாகிவிடுகிறது. படப்பிடிப்பின் நடுவே குழந்தைகளைப் போல அதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

அந்தக் கொக்குகள் திடீரெனச் சந்தோஷத்தின் அடையாளமாக, நம்பிக்கையின் குறியீடாக மாறிவிடுகின்றன. மனித மனம் இது போல எதிர்பாராத அதிசயத்திற்கு ஏங்கிக் கொண்டேயிருக்கிறது.

அதிசயம் என்றால் நடக்கவே நடக்காத விஷயமில்லை. எதிர்பாராமல் நடக்கும் விஷயம்.

கொக்குகள் பறந்து போவது புதிய விஷயமில்லை. ஆனால் அந்தப் பனிப்பொழிவின் ஊடே. யாருமற்ற பிரதேசத்தில் கடினமான பயணத்தின் நடுவே கொக்குகள் வட்டமிடுவதைக் காணுவது பரவசமாகிறது. அது தான் மனிதர்கள் வேண்டும் மாயத்தருணம்.

ஒரு கலைஞன் இந்தத் தருணத்திலிருந்து ஒரு உண்மையை அறிந்து கொள்கிறான். திட்டமிடப்படாத விஷயங்கள் நிகழும் போது தான் அதிசயங்கள் சாத்தியமாகின்றன. சினிமா எவ்வளவு தான் திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும் அதில் இப்படித் திட்டமிடப்படாத நடிப்பு. காட்சியாக்கம் உருவாகும் போது படம் அதிசயமாகிவிடுகிறது.

சினிமாவில் இது போன்று திட்டமின்றி உருவாக்கப்பட்ட அபூர்வ தருணங்கள் நிறைய இருக்கின்றன. அது நடிகர் அல்லது நடிகையின் வழியே ஒளிப்பதிவு அல்லது இசை மற்றும் படத்தொகுப்பின் வழியே சாத்தியமாகிவிடும்.

டேவிட் லீன் அப்படி ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். படப்பிடிப்பிற்காக நாங்கள் கடற்கரையில் காத்திருந்த போது நாங்கள் விரும்பிய கருமேகங்கள் வரவில்லை. படப்பிடிப்பு முடியும் தருணம் தற்செயலாக எங்களுக்காக வந்த்து போலக் கருமேகங்கள் வந்தன. அவை நகரவில்லை. நாங்கள் படமாக்கி முடியும் வரை காத்திருந்தன. பின்பு சட்டென மழையாக மாறின. இந்த அதிசயம் அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்தது. இயற்கையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த காரணத்தால் தான் அந்தக் காட்சி அழகாகப் படமாக்கப்பட்டது என்கிறார்

அது உண்மை. இயற்கை உங்களை அனுமதிக்க வேண்டும். ஒத்துழைக்க வேண்டும். இயற்கையில் அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவை எப்போது எப்படி வெளிப்படும் என்று யாராலும் கண்டறிந்து சொல்ல முடியாது. மின்னல் வெட்டு போல அதிசயம் சட்டென நடந்து முடிந்துவிடும். அதிர்ஷ்டமிருப்பவர்கள் அதைக் காணுவார்கள், அறிந்து கொள்வார்கள்.

மனிதர்கள் காலம் காலமாக அதிசயங்களுக்காக ஏங்கிக் கொண்டேயிருக்கிறார்கள் அது நடக்கும் போது தவறவிட்டவர்களும் இருக்கிறார்கள். பின்பு அதை நினைத்து நினைத்து ஏங்குவார்கள்.. நரபலி கொடுக்கும் மனிதர்களிடம் சிக்கிக் கொண்ட ஓவியர் ஒருவர் நான் கைகாட்டினால் வானில் சூரியன் மறைந்துவிடும் என்று அவர்களை எச்சரிக்கிறார். அது போலவே வானை நோக்கி கையைக் காட்டுகிறார். சூரியன் இருளத் துவங்குகிறது. அன்று சூரிய கிரகணம் என்று அவர் முன்பே அறிந்து வைத்திருந்தார். இந்தத் தற்செயலைத் தனது தப்பித்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் கண்முன்னே சூரியன் இருண்டு மறையும் அதிசயத்தைக் கண்ட அந்த நரபலி கொடுப்பவர்கள் பயந்து அந்த ஓவியரை வணங்கி விடுதலை செய்தார்கள். ஓவியர் ஒரு அதிசயத்தால் உயிர் தப்பினார். இது ஒரு உண்மை நிகழ்வு. அதில் மனிதர்களின் மீட்சிக்கான வழியாக அதிசயமுள்ளது

அதிசயம் எப்போதும் விண்ணிலிருந்தே உருவாகும் என மக்கள் நம்புகிறார்கள். உண்மையில் மண்ணில் தான் அதிகமான அதிசயங்கள் உருவாகின்றன. நடந்தேறுகின்றன.

முதுமையில் பெர்க்மென் பறவைகள் கூட்டமாகப் பறப்பதைப் பற்றியே கனவுகள் கண்டு கொண்டிருந்தார். அதைப்பற்றித் தனது நாட்குறிப்பிலும் எழுதியிருக்கிறார். போர்ஹெஸின் பறவைகள் கதைகளில் ஒருவன் கண்களை மூடியபோது ஒரு பறவை கூட்டத்தைக் காணுகிறான். ஒரு விநாடி அல்லது அதற்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி இருந்தது. எத்தனை பறவைகளைப் பார்த்தான் எனத் தெரியவில்லை. அந்த எண்ணிக்கை அறுதியானதா? அறுதியற்றதா?

இந்தச் சிக்கலை போர்ஹெஸ் கடவுள் உள்ளாரா? இல்லையா என்பதோடு தொடர்புடையது. என்கிறார்

கடவுள் இருந்தால் இந்த எண்ணிக்கை அறுதியானது. ஏனெனில் நான் எவ்வளவு பறவைகளைப் பார்த்திருப்பேன் என்பது கடவுளுக்கும் தெரியும்

கடவுள் இல்லை என்றால் பறவைகளின் எண்ணிக்கையும் அறுதியற்றது. ஏனெனில், எத்தனை பறவைகள் பறந்து போயின என்று யாராலும் சொல்ல முடியாது. என்கிறார்

தோற்றமும் மறைவும் எளிய விஷயங்களில்லை. அதுவும் கண்ணுக்குள் பறந்த பறவைகளைத் துல்லியமாக ஒருவன் கணக்கிடுவது என்பது கனவில் காசுகளை எண்ணியது போன்றதே. இதைக் கடவுளின் இருப்போடு ஒப்பிட்டது தான் போர்ஹெஸின் சாதனை.

இதே புள்ளியில் தான் பெர்க்மெனும் இணைகிறார். பறவைகளைக் கண்ட அனுபவத்தை எளிய நிகழ்வாக மட்டும் அவர் கருதவில்லை. அது நீண்டகாலம் அவரது நினைவில் சிறகடித்துக் கொண்டேயிருந்து திரைக்கதை நூலின் முன்னுரையாக மாறுகிறது. பின்னாளில் கனவுகளில் பறக்க ஆரம்பிக்கிறது

கலையின் புதிர் தன்மை என்பது இது போன்றது தான். அவற்றைக் காரணங்களால் விளக்கிவிட முடியாது

••

0Shares
0