துணையெழுத்து – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை

புனைவுக்கும் உண்மைக்குமான ‘இடைவெளி’, ‘தொலைவு’, ‘நெருக்கம்’ என்பன, நமக்கும் வாழ்வுக்குமான தொலைவினை ஒத்தவைதான். ‘நமக்கும் வாழ்வுக்குமான இடைவெளி’ என்பது, மிகவும் நெருங்கியிருக்கும் வெகுதொலைவுதானே!

புனைவும் உண்மையும் ஒன்றையொன்று தழுவும்போதும் நாமும் வாழ்வும் ஒன்றாகிப் போகிறோம். நாமே பெரும்புனைவுதான்!. வாழ்வே பேருண்மைதான்!. ‘நமக்கும் வாழ்க்கைக்குமான உறவு’ என்பது, புனைவும் உண்மையும் கலந்த கட்டுரைக்கு நிகராது.

தான்  பெற்ற ஆகச்சிறந்த அனுபவங்களையும் பிறரின் வாழ்க்கையின் வழியாகத் தான் கண்டுணர்ந்த ‘வாழ்வியல் சிடுக்கு’களையும் இணைத்துத் தனக்கேயுரிய புனைவின் சாயல் கொண்ட எழுத்தின் ஊடாக வெளிப்படுத்தும் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் புனைவுக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் சிறந்த சிறுகதைக்கு நிகராகவே அமைந்துவிடுகின்றது. நல்ல சிறுகதைகளில் நம் மனம் தங்கிவிடுவது இயல்புதானே?  

இவரின் பல கட்டுரைகள் புனைவுக்கட்டுரைகளாக மலர்ந்து, சிறுகதை வடிவத்துக்கும் கட்டுரை வடிவத்துக்கும் இடையில் ஊஞ்சலாடுகின்றன. அந்த ஊஞ்சலில் நம் மனம் சில நிமிடங்களாவது அமர்ந்தாடவே விழைகின்றது. அத்தகையை பல சிறுகதைக்கட்டுரைகள், கட்டுரைச் சிறுகதைகள் நிறைந்த புத்தகம்தான் ‘துணையெழுத்து’ என்ற இந்தப் புத்தகம்.  

தேர்ந்த வாசகரால்கூட எல்லாக் கட்டுரைகளையும் படித்துக் கடந்துவிட முடியாது. சில கட்டுரைகளில் அவர்களின் மனம் தங்கி, வாழ்ந்த பின்னரே கடக்கத் துணியும். 

‘ஹிரண்ய ஸ்நேகம்’ கட்டுரையில் இடம்பெறும் கூத்துக்கலைஞர் முத்து, ‘நிறமில்லாதொரு குடும்பம்’ கட்டுரையில் வீடுவீடாகச் சென்று கடன்வாங்கும் சிறுமி தேஜஸ், ‘இனி, நாம் செய்ய வேண்டியது என்ன?’ என்ற கட்டுரையில் வரும் புத்தகத் திருடர் சார்லஸ், ‘கடவுளின் சமையற்காரன்’ என்ற கட்டுரையில் மிளிரும் சமையற்காரர் திருலோகம், ‘வெப்போர்’ என்ற கட்டுரையில் அலைந்துதிரியும் ‘சேவற்கட்டு’ செல்லையா, காகிதக்கத்தி’ என்ற கட்டுரையில் எழுத்தாளருக்குச் சினத்தோடு கடிதம் எழுதும் மூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து வாழ்ந்த பின்னரே, அந்தக் கட்டுரைகளை நம்மால் கடந்துசெல்ல முடிகிறது.

காரணம், இவை வெறும் கட்டுரைகள் அல்ல; ஒருவகையில் மானுட வாழ்க்கையில் சிலருக்கு மட்டுமே வாய்த்துவிடும் பெருந்தருணங்கள். அவற்றை எழுத்தின் வழியாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர். இவர்களைப் பார்க்கும் போது, ‘நாம் இவர்களைப் போல இல்லை’ என்று நம்மை நாமே சமாதானம் செய்துகொள்ளலாம்தான். ஆனால், அவர்களைப் போல நாமும் ஆக நமக்குச் சில தருணங்களே போதும். ‘வாழ்க்கை எப்போதும் நம்மைக் குப்புறக் கவிழ்த்தவே தருணம்  பார்த்துக்கொண்டிருக்கிறது’ என்பதை நாம் புரிந்து கொள்ளாமல்தான் இருக்கிறோம். அது நம்மைக் குப்புறக்கவிழ்த்தும்போது நாமும் சூதாட்டத்தில் காணாமல் போகும் கைப்பொருளாகிவிடக்கூடும்.

“நகரம் ஒரு சூதாட்ட பலகையைப் போலச் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் எதையோ இதன் முன்வைத்து சூதாடத் துவங்குகிறார்கள். சுழலும் வேகத்தில் கைப்பொருட்கள் காணாமல் போகின்றன.”

நமது சமுதாயத்தின் ஒட்டுமொத்த மனவோட்டமே வெற்றியாளர்களைக் கொண்டாடுவதிலும் தோல்வியாளர்களைப் புறக்கணிப்பதிலும் செயல்பட்டு வருகிறது. ‘வாழ்வில்’ வெற்றி, தோல்வி என்பவைதான் என்ன?

உண்மையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஒரு கோல். ஒரு ரன்தானே! விளையாடத் தெரியாமலோ, தவறாக விளையாடியோ எவரும் தோற்பதில்லையே! வெற்றிபெற்றவரைவிடவும் தோற்றவரிடம்தான் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் போலிருக்கிறது. காரணம், வெற்றி விளையாட்டைப் பெருமை கொள்ளச் செய்கிறது. தோல்வி விளையாட்டைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. எல்லா விளையாட்டு வீரர்களும் ஒருமுறையாவது தோற்றவர்கள்தானே!

நாம் பிறரைப் பார்க்கும்போது அவர்கள் நம்மைவிட எல்லா வகையிலும் சிறந்தவர்களாக இருந்தால், நாம் நம்மையே தோற்றவர்களாகக் கருதிக் கொள்கிறோம். அவர்கள் நம்மைவிடப் பல வகையிலும் குறைந்தவர்களாக இருந்தால், நம்மை வெற்றிபெற்றவர்களாகக் கருதிக்கொள்கிறோம். இந்த ஒப்பீடே தவறுதானே? தோற்றவர், வெற்றிபெற்றவர் என்பது யாருடைய பார்வையில் நிர்ணயிக்கப்படுகிறது? ‘காலத்தின் பார்வை’ என ஒன்று உள்ளது. அதுதான் தீர்மானிக்க வேண்டும். அது கூறும்போது நாம் உயிருடன் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால், இறுதியில் காலத்தின் பார்வையே சரியான மதிப்பீடாக இருக்கும்.

உலக அளவில் நுண்நோய்சார்ந்த உயிரச்சம் பரவியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், நவீனத் தொழில்நுட்ப முறைசார்ந்த மருத்துவ முறைமைகள் எளிய மக்களின் மனங்களில் எழுப்பும் அச்ச அலைகளுக்கு அளவே இல்லை.

“உண்மையில் என்ன நடக்கிறது, நம்மைச் சுற்றி? அறியாமை தந்த பயத்தை விடவும் அதிகமாக அல்லவா இருக்கிறது நவீன மருத்துவம் தரும் பயம்! மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமாவது தனது கர்பத்தை அழித்துக்கொள்கிறதா என்ன? ஒரு கனியில் நூறு விதைகளுடன் மாதுளை வளரத்தானே செய்கிறது? உலகிலிருந்து கருணை விடைபெற்றுச் சென்று விட்டதா? உயிர் இத்தனை மலிவானதா? பயமாக இருக்கிறது.”

‘கருவாக்கம்’, ‘கருவழிப்பு’ என்பன இந்தக் காலக்கட்டத்தில்தான் மிக எளிதான கைச் செயலாகிவிட்டன. இங்குக் கருணைக்கு இடமேயில்லை.

உலக அளவில் மானுடக் கண்டுபிடிப்புகளுள் முதன்மையானவையாக இரண்டினைக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.

வாழ்வின் தராசில் யாவும் விற்பனைக்காக நிறுத்தப்படத் துவங்கிவிட்டன. நாம் இன்னமும் நம்மை மட்டும் விற்பதற்கு விலைபேசாமல் இருக்கிறோம். சந்தர்ப்பம் இல்லாமலா அல்லது விலை நிர்ணயிக்க முடியாமலா என்று மட்டும்தான் தெரியவில்லை.”

“உலகில் அன்பைவிடவும் மிருதுவான பகிர்தல் வேறு ஏதேனும் இருக்கிறதா என்ன? நன்றியும் நேசமும்தானே அன்பின் எளிய வெளிப்பாடுகள். கடற்பாசியைப் போல நன்றி எப்போதும் ஈரமிக்கதாகவும் நிசப்தமாகத் தன் இருப்பைக் காட்டிக்கொள்வதுமாகவே இருக்கிறது. மன்னிப்பும் நன்றியும்தான் மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்புகள் என்றுகூடத் தோன்றுகிறது.”

பொருத்தருள்வதும் நன்றியுடன் இருப்பதும்தான் மனிதனின் வாழ்நாள் குறிக்கோள்களாகவும் குறிப்பாக, இன்றைய உடனடித் தேவைகளாகவும் இருக்கின்றன.

பலரும் தங்களின் பள்ளிநாட்களை அசைபோட்டு எழுதியிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னரும் தன்னுடைய பள்ளிக்குச் சென்று அந்தக் காலத்தைத் தன் மனத்தளவில் அனுபவித்துத் திரும்புவோரும் உண்டு. ஆனால், நீங்கள் படித்த பள்ளியை உங்கள் தலைமுறையினருக்குக் காட்டுங்கள் என்று யாராவது கூறியிருக்கிறார்களா?.  

சுற்றுலாத்தலங்களையும் வேடிக்கை மையங்களையும் குழந்தைகளுக்கு அழைத்துப் போய்க் காட்டுவதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் தமது பிள்ளைகளை ஒரு முறையாவது தான் படித்த பள்ளிக்கு அழைத்துப் போய்க் காட்ட வேண்டும். அந்தப் பள்ளியின் மைதானத்தை, வகுப்பயிலிருந்து தெரியும் ஆகாசத்தை, பள்ளிக்கூட அணில்களை, டெஸ்க்கின் டிராயரில் சிந்திய பேனா மைக்கறையை, கைகளில் அடிவாங்கி தலைமையாசிரியரின் பிரம்பை, வகுப்பறையின் வாசனையை அவர்களும் தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.”

செயற்கையை மட்டுமே பார்த்து வளரும் தலைமுறை செயற்கையாகவே தானே இருக்கும்!

நாம் குழந்தைகளைக் கோடைக்காலத்தில் தீம் பார்க்குகளில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சிக்கும் வடிவமைக்கப்பட்ட புல் தரைகளைக் காட்டுவதற்கும் தயாராக இருக்கிறோம். நம் வாழ்விடத்துக்கு அருகில் உள்ள வனத்தை, வனச் செல்வங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்ய விருப்பம் கொண்டிருக்கவில்லை.”

இந்தப் பத்தியில் அடுத்த தலைமுறையைப் பற்றிய எழுத்தாளரின் கவலை இழையோடி இருந்தாலும் நமது பொறுப்பின்மையின் மீது அவரின் சினம் படர்ந்தும் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இவரின் எழுத்துகளில் காதலையும் காதல் சார்ந்தவற்றையும் நாம் தேடித்தான் கண்டுபிடிக்க  வேண்டும். காதலைப் பற்றி எழுதுவதைவிட இந்தச் சமுதாயத்தில் மிகப் பல விஷயங்கள் அவசியத்தேவையாக இருப்பதால்தான் இவரின் எழுத்துகளில் காதல் பின்னுக்குச் சென்றுவிடுகிறது. ஆனாலும், இவர் காதல் பற்றித் தரும் சில மன அனுபவங்கள் சிலிர்ப்பைத் தருகின்றன.

தண்ணீரில் நீந்தும்போது எந்தத் திசையில் நீந்துகிறோம் என்றோ, எவ்வளவு ஆழத்தில் நீந்துகிறாம் என்றோ, எவ்வளவு தடவை கைகளை அசைத்துக் கொண்டிருந்தோம் என்றோ கணக்கிட்டுக்கொண்டா நீந்துகிறோம்? இல்லையே! காதலில் பேச்சும் அப்படித்தான். அது நீராடல் போல முன்னும் பின்னுமாகப் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருக்கிறது. தண்ணீருக்குள்ளேயே இருக்கிறோம் என்பதுதான் அதன் சுவாரஸ்யம்.”

எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளில் பெண்களின் மீதான பரிவும் பாசமும் படிந்திருக்கும். வீட்டுப் பணிகளைத் தனித்துச் செய்யும் சமையலறைப் பெண்கள், சாப்பிடக்கூட நேரமின்றிப் பணிக்குப் பறந்து கொண்டிருக்கும் அலுவலகப் பெண்கள், காதலுக்காக வதைபடும் இளம் பெண்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய பெண்கள் என எல்லாத் தரப்புப் பெண்களுக்காகவும் அவர் தன் எழுத்தின் வழியாக இந்தச் சமுதாயத்திடம் வாதாடிக்கொண்டுதான் இருக்கிறார்.

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு முறை இந்தியாவில் வீட்டு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டு வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க 2005 ஆம் ஆண்டில், ‘வீட்டு வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம்’  இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் ஒரே வீட்டில் வசிக்கும் பெண்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாழ்வில் ஒரு முறையாவது அடிவாங்காத பெண்கள் எவரது வீட்டிலாவது இருக்கிறார்களா என்ன?”

இதற்கு முன்பாக இந்தத் தார்மீக வினாவை எந்தச் சமூக அக்கறையாளர் நம்மிடம் எழுப்பியிருக்கிறார்? அதற்காகவே, பெண்கள் இந்த எழுத்தாளரைக் கொண்டாடியே தீரவேண்டும்.

பேச்சுக்கும் மௌனத்துக்கும் ஓர் எல்லையையும் சில கட்டுப்பாடுகளையும் நமது சமுதாயம் விதித்துள்ளது. நாம் விரும்பியோ, விரும்பாமலோ அவற்றுக்குக் கட்டுப்பட்டுதான் வாழ நேர்ந்துவிடுகிறது. பேசுவதற்கு நமக்கு எத்தனை விதமான பயிற்சிகள் தேவைப்படுகிறதோ, அதைவிடக் கூடுதலான பயிற்சிகள் பேசாமல் இருப்பதற்கும் நமக்குத் தேவைப்படுகின்றன.

பாஷை மனிதரின் மகத்தான கண்டுபிடிப்பு. தண்ணீர் எப்படிப் பனியாகவும் காற்றாகவும் தண்ணீராகவும் மூன்று நிலைகளில் இருக்கிறதோ அப்படியே பேச்சும் உறைந்தும் மௌனமாகியும் சலசலத்து ஓடியும் மூன்று நிலையிலிருக்கிறது. பேச்சைக் கற்றுக்கொள்வதைப் போல மெளத்தை எளிதில்  கற்றுக்கொண்டுவிட முடியாது. பூக்கள் வாசனையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுபோல சொற்கள் இல்லாமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதுதான் மௌனம்.”

நமது ஆளுமையை நமது இருப்பின் வழியாகவும் செயலின் வழியாகவுமே நாம் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்போல. நமது வெறும் பேச்சும் நீடித்த மௌனமும் எவற்றைச் சாதிக்க உதவும்? அவற்றால், நாம் அடையும் இழப்புகள்தானே மிகுதி!  

இவரின் எழுத்துகளுள் பெரும்பான்மை அவரின் தன்னனுபவம் சார்ந்து இருப்பதால், ஒருவகையில் அவை சிதறடிக்கப்பட்ட தன்வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களை ஒத்திருக்கின்றன. அவற்றுள் அவரின் புன்னகையும் கண்ணீரும் சம அளவில் கலந்தே இருக்கின்றன.

வாழ்வில் முதன் முறையாக ஒன்றும் அவமானப்படவில்லையே! உறவினர்களால், சொந்த மனிதர்களால், நண்பர்களால், குடும்ப விழாக்களில், பண்டிகை நாட்களில் என எத்தனை முறை அவமதிக்கப்பட்டிருக்கிறேன். உடலில் ஏற்படும் வடுக்கள் கண்ணில் தெரிவதுபோல அவமதிப்பின் வடுக்கள் தெரிவதில்லை. அது ஒன்றுதான் ஆறுதல். ஒருவேளை அவமதிப்பின் வடுக்கள் உடலில் வெளிப்படையாகத் தெரியத் துவங்கினால் யாவரும் உடல் முழுவதும் வடுக்களோடுதான் இருப்பார்கள் என்று சுயசமாதானம் செய்துகொண்டேன்.”

‘இவரைவிட, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட எண்ணற்ற அவமானங்களைச் சுமந்தவர் எவராவது இருக்கிறாரா? இவரைப் போல இயற்கையால் வாழ்த்தப்பட்ட மனிதரை பார்த்திருக்கிறோமா?’ என்றுதான் எனக்குச் சிந்திக்கத் தோன்றியது. 

 ‘துணையெழுத்து’ என்ற இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் அதில் இவர் குறிப்பிட்டிருந்த பற்பல தகவல்களைப் பற்றி மனம் அசைபோடத் தொடங்கிவிட்டது. அதையும் இவரின் எழுத்துகளின் வழியாகவே சொல்வது என்றால்,

சரியாக மூடாத குழாயிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருப்பதுபோல, மனம் நிதானமாக ஒவ்வொன்றையும் யோசிக்கிறது

எனக் கூறலாம்.

‘துணையெழுத்து’ என்பது, அருகில் விழும் நிழலைப் போன்றது. இந்த உலகில் யாரும் தனித்து இல்லை. அவர்களுக்கு அவர்களின் நிழல் துணையிருக்கிறது – இந்த எழுத்தாளரின் எழுத்துகள் போலவே.

இத்தகைய எழுத்துகளைப் படித்தால், அவை படிக்கும்போது நமக்குத் தோன்றும் துணையாகவும் படித்த பின்னர்த் தோன்றாத் துணையாகவும் நம்முடனிருந்து, நம்மைச் சீர்வழியில் இயக்கும்

– – –

0Shares
0