நூலகங்களில் நடைபெறும் புத்தக அறிமுகக் கூட்டங்கள் எளிமையானவை. ஐம்பது பேருக்குள் தான் வருவார்கள். ஆனால் அக்கறையுடன் பேச்சைக் கவனிப்பார்கள். கேள்வி கேட்பார்கள். மேடை அலங்காரங்கள் கிடையாது. பொன்னாடை போட மாட்டார்கள். மைக் செட் வசதி கூட இருக்காது. ஆனால் அந்த கூட்டம் தரும் நெருக்கம் பெரிய மேடைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தந்ததில்லை.
சிறுநகரங்களில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுவது மிகக் குறைவு. அதுவும் திருக்குறள், கம்பராமாயணம், தேவாரம் திருவாசகம் தவிர்த்து வேறு புத்தகங்களைப் பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறுவது அபூர்வமே.
இந்தக் குறையைப் பொதுநூலகத்தில் நடைபெற்று வந்த வாசகர் வட்ட நிகழ்ச்சிகள் போக்குவதாக அமைந்தன. அதிலும் கிராம நூலகங்களில் கூடப் புத்தக விமர்சனக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானே மல்லாங்கிணர் நூலகத்திலும் விருதுநகர் நூலகத்திலும் நிறைய முறை பேசியிருக்கிறேன். புதிதாகப் பேச வருகிறார்கள் மிகுந்த தயக்கத்துடன் ஒத்துக் கொள்வார்கள்.நிறையப் புத்தகம் படிப்பவர்களை நூலகரே பேசச் சொல்லிக் கேட்பதுண்டு.
சித்ரா என்ற கல்லூரி மாணவி ஒருமுறை ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் பற்றி மிக அழகாகப் பேசினார். தூத்துக்குடியை ஒட்டிய உப்பளங்களை நேரடியாகக் கள ஆய்வு செய்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவலது.
அந்த நாவலைப் பற்றிப் பேசத் துவங்கிய சித்ரா நெய்தல் நிலம் பற்றியும் உப்பு வணிகத்தில் ஈடுபட்ட உமணர்கள் பற்றியும் உப்பு பற்றி இலக்கியங்களில் வரும் குறிப்புகள் பற்றியும் மிக அழகாகப் பேசினார். நூலகத்திற்குள் சுவடே தெரியாமல் வந்து போகும் சித்ரா இவ்வளவு அழகாக மேடையில் பேசுகிறாரே என்று வியந்து பாராட்டினோம்.
சித்ராவைப் போல எத்தனையோ பெண்கள் சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தால் தங்கள் பேச்சுத்திறனை வெளிப்படுத்தமுடியாமல் போய்விடுகிறார்கள். படித்த புத்தகங்களைப் பேசுவது என்பது ஒரு கலை. எளிதான விஷயமில்லை. நிறைய நேரம் கோர்வையாகப் பேச முடியாமல் திக்கித் திணறி சிலர் பேச்சைப் பாதியில் முடிப்பதும் உண்டு. ஆழ்ந்து படித்து மனதில் அந்தப் புத்தகம் வேர்விட்டிருந்தால் பேச்சு எளிதாக வரும்.
நூலகர் ஒருமுறை என்னிடம் நீங்கள் நூலகத்தந்தை எஸ். ஆர். ரங்கநாதன் பற்றிப் பேச வேண்டும் என்றார். நான் அவரைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது என்றேன். நூலகரே அவரைப் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்ததோடு எஸ். ஆர். ரங்கநாதன் பற்றி விரிவாகப் பேசவும் செய்தார்
எஸ்.ஆர். ரங்கநாதனைப் பற்றிப் படிக்கப் படிக்க வியப்பாக இருந்தது. நூலகத்தில் அவரை அறிமுகம் செய்து பேசினேன். அந்த நாள் இன்றும் பசுமையாக நினைவிலிருக்கிறது.
சீர்காழி இரா. அரங்கநாதன் எனப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன் 1892 சீர்காழியில் பிறந்தவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படித்தவர். பின்னர் சைதாப்பேட்டையிலிருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.
மங்களூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்த அரசாங்கப் பள்ளிகளில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய ரங்கநாதன், பின்னர் மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்தார்.
1924 ஜனவரியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூலகராகப் பணி கிடைத்தது. அவருக்கு நூலகருக்கான கல்வித் தகுதியோ முன் அனுபவமோ இருக்கவில்லை. பல்கலைக்கழக நூலகமும் அன்று மிகவும் சீர்கெட்டிருந்தது. நூலகத்தைப் பயன்படுத்துவோரும் மிகவும் குறைவாகவே இருந்தனர்
இந்த நிலையை மாற்றுவதற்காக நூலகச் சிறப்புப் பயிற்சிக்காக லண்டனுக்கு அவரை அனுப்பி வைத்தார்கள். ஒன்பது மாதங்கள் லண்டனில் சிறப்புப் பயிற்சி பெற்று திரும்பிய ரங்கநாதன் நூலகத்தில் புதியசீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதுடன், அங்கிருந்த நூல்களை முறையாக வகைப்படுத்தி, விரிவான விபரப் பட்டியல்களையும் தயாரித்தார். லண்டனில் இருந்த நாட்களில் அங்குள்ள நூலகத்தில் பகுதி நேரப் பணியாற்றியபடியே அவர் நூலக கல்வியை பயின்றிருக்கிறார்.
அவர் உருவாக்கிய ‘கோலன் கிளாஸிஃபிகேஷன்’ எனும் நூல் பகுப்பாக்க முறையே இன்றும் பொதுநூலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை பல்கலைகழக நூலகராகப் பணியாற்றிய இருபது ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூட விடுப்பு எடுக்கவேயில்லை என்பது வியப்பானது. அவரது திருமண நாளில் கூடத் திருமணம் முடிந்தபிறகு மதியம் பணிக்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.
ரங்கநாதன் உருவாக்கிய கோலன் பகுப்பு முறையின் மூலம் நூலகத்தில் குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடி வரும் ஒருவர், மிகக் குறைந்த நேரத்தில், மிகக் குறைந்த தேடலில் அந்தப் புத்தகத்தை அடையாளம் கண்டு எடுத்துவிடலாம்.
கிராமப்புற மக்களுக்குப் புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ‘சென்னை நூலகச் சங்கம்’என்ற அமைப்பை ஏற்படுத்தி மாட்டு வண்டிகள் மூலம் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, கிராமங்களை நோக்கிச் சென்றார் ரங்கநாதன். மன்னார்குடியில் தான் முதல் நடமாடும் நூலகம் தோன்றியது. கனகசபை பிள்ளை என்ற பொறியியலாளர், வடிவமைத்துத் தந்த மாட்டுவண்டி நூலகத்தின் மூலம் அக்டோபர் 1931 இல் மன்னார்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மொபைல் நூலகம் செயல்படத்துவங்கியது
அத்தோடு நூலக அறிவியலில் மக்களுக்குப் பயிற்சியளிக்க, தனிப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் நூலகச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு ரங்கநாதனே முக்கியக் காரணமாக இருந்தார். இவரது சீரிய முயற்சியால் 1948-ல், தமிழகத்தில்தான் முதன்முதலில் நூலகச் சட்டம் இயற்றப்பட்டது. இது ஒரு முன்னோடி விஷயமாகும்.
11931-ல் ரங்கநாதன். ‘நூலக அறிவியலின் ஐந்து விதிகள்’ எனும் படைப்பை வெளியிட்டார்
இதில் முதல் விதி நூலகத்திலுள்ள புத்தகங்கள் மக்களால் எளிதாக அணுகப்பட வேண்டும். இரண்டாம் விதி, ஒவ்வொரு வாசகருக்கும் தனக்கு விருப்பமான புத்தகத்தைத் தானே தேடிப்பார்த்து எடுத்துச் செல்ல வேண்டும். மூன்றாவது விதி பயன்படாத புத்தகம் என்று எதுவுமில்லை. ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதற்கென ஒரு வாசகர் நிச்சயம் இருக்கவே செய்வார்.
நான்காம் விதி, வாசகர் நூல்களைத் தேடும் நேரத்தைக் குறைக்க முறையான நூலக பகுப்பு முறை உருவாக்கப்பட வேண்டும். ஐந்தாம் விதி நூலகம் என்பது புத்தகம் இரவல் தரும் இடமில்லை. அது ஒரு பண்பாட்டு வெளி. ஆகவே நூலகத்தின் வழியே குடிமைத்தேர்வுகளுக்கான முகாம் நடத்துவது. இலக்கியக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துவது எனப் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்த ஐந்து விதிகளைத் தான் இன்றும் பொதுநூலகங்கள் முன்னெடுக்கின்றன
பனாரஸ் பல்கலைக்கழகம் டெல்லி பல்கலைக்கழகம் என இந்தியாவின் முக்கியப் பல்கலைக்கழக நூலகங்களைச் சிறப்பாக உருமாற்றியதில் இவரது பங்கு முக்கியமானது. நூலகம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் சிறப்புப் படிப்புகள் உருவாகவும் இவரே முக்கியக் காரணம்.
நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. இவரது பிறந்த நாளை, இந்தியாவில் தேசிய நூலகத் தினமாக அறிவித்துள்ளார்கள்.
அந்தக் கூட்டத்தில் நான் பேசி முடிந்த போது பலரும் அதுவரை நூலகம் என்பது மற்ற அரசு அலுவலங்களில் ஒன்றைப் போலவே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகே நூலகரின் கல்வி தகுதி அவர் பெற்றுள்ள பயிற்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
கம்ப்யூட்டர் வருகையால் நூலகப் பகுப்பாய்வு முறையில் நிறைய மாற்றங்கள் உருவாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் நீங்கள் வீட்டிலிருந்த படியே பொதுநூலகத்தில் உள்ள புத்தகங்களைத் தேட முடியும். வீட்டிலிருந்தபடியே நூல்களை இரவல் எடுக்கவும் முடியும். அது போலவே புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்க நூலகம் வரத் தேவையில்லை. அதற்கென உள்ள பெட்டிகளில் போட்டு ரசீது பெற்றுக் கொண்டால் போதும். பொதுநூலகத்துத் தனது ஆட்களின் மூலம் அந்த நூல்களைச் சேகரித்துக் கொள்ளும்.
புதிய நூல்களை உடனுக்குடன் பகுப்புச் செய்து சேர்க்கவும். பழைய அரிய நூல்களை முறையாகப் பாதுகாக்கவும் இன்று நவீனத் தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன.
எஸ். ஆர். ரங்கநாதனைப் போன்றவர்கள் பொதுநூலகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அன்று தமிழகம் தான் பொது நூலக இயக்கத்தின் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தது. இன்றோ அதன் நிலை பரிதாபமாக உள்ளது. பொதுநூலகங்களுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கி அதை மேம்படுத்த வேண்டியது அரசின் கடமை.
எஸ்.ஆர். ரங்கநாதன் எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே நடமாடும் நூலகத்தைக் கனவு கண்டார். மாட்டுவண்டி மூலம் அதை நடைமுறைப்படுத்தியும் பார்த்தார். ஆனால் தொடர்ந்து அந்த முயற்சி செயல்படவில்லை. இன்று இந்தியாவின் சில மாநிலங்களில் தன்னார்வ அமைப்புகள் இது போன்ற மொபைல் நூலகங்களை நடத்துகின்றன. குறிப்பாகப் பாலைவனப் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு ஒட்டகங்கள் மூலம் புத்தகங்களை எடுத்துப் போகிறார்கள். படகில் மிதக்கும் நூலகம் செயல்படுகிறது.
இடுக்கி, தேவிகுளம் போன்ற தமிழர்கள் வாழும் பகுதியில் தமிழ்ப் புத்தகங்கள் படிக்கக் கிடைப்பதில்லை. அங்குள்ள நூலகத்தில் தமிழ் நூல்கள் கிடையாது. நூற்கொடைகள் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம்.
சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து இலக்கியக் கூட்டங்கள். புத்தக அறிமுகக் கூட்டங்களை நடத்தி வருவதுடன் அவற்றை முறையாக ஆவணப்படுத்தி இணையத்தில் காணொளியாகப் பகிர்ந்து தருகிறார்கள். அது பாராட்டிற்குரிய விஷயம். இதுவே தமிழகம் முழுவதுமுள்ள பொதுநூலகங்கள் செய்ய வேண்டிய அடுத்த கட்ட பணியாகும்
••