நூலக மனிதர்கள் 13 புதிய மனிதன்.

நூலகத்தின் நுழைவாயிலில் ஒரு வருகைப்பதிவேடு வைக்கபட்டிருக்கும். அதில் ஒரேயொரு கையெழுத்து மலையாளத்தில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். . அது வர்கீஸின் கையெழுத்து.

அவர் பஞ்சாலை ஒன்றில்  சூப்ரவைசராக வேலை செய்வதற்காகக் கேரளாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தார். விருதுநகர் போன்ற சிறுநகரில் அவர் படிப்பதற்கு மலையாள வார இதழ்களோ, நாளிதழ்களோ கிடைப்பதில்லை. ஆகவே அவர் நூலகத்தைத் தேடி வந்தார்.

நூலகத்தில் மலையாள பத்திரிக்கைகள். புத்தகங்கள் கிடையாது. ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களை எடுத்துப் போவார். ஆங்கில நாளிதழ்களை வாசிப்பார். அவருக்குத் தமிழ் பேசினால் புரியும். பாதி மலையாளம் கலந்து தமிழில் பேசுவார். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது,

பிழைப்பிற்காக வெளியூர்களில் வசிக்க நேர்பவர்களுக்குத் தங்களின் உணவு கிடைக்காதது முதற்பிரச்சனை என்றால் தங்கள் மொழியோடு தொடர்பில்லாமல் போய்விடுவது அடுத்த பிரச்சனை. சாப்பாடு விஷயத்தில்  கூட அனுசரித்துப் போய்விடுகிறார்கள். ஆனால் தங்கள் தாய்மொழியில் பேசும் ஒரு மனிதனைக் காணாமலும் அந்த மொழியின் இதழ்கள், புத்தகங்கள் கிடைக்காமலும் தவித்துப் போய் விடுகிறார்கள்.

இன்றைக்கு இணையம் வந்துவிட்டதால் அந்தக்குறை பெருமளவு விலகிப் போய்விட்டது. ஆன்லைனில் வாசித்துக் கொள்ள முடிகிறது. தொலைக்காட்சிகள் வந்த பிறகு உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தாய் மொழியில் செய்திகளைக் கேட்க முடிகிறது. சினிமா பார்க்க முடிகிறது. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த வசதியில்லையே.

ஆகவே வர்கீஸ்  மலையாள புத்தகங்கள் இன்றித் தவித்துப் போயிருந்தார். அவர் உள்ளூரில் இருந்த சில மலையாளிகளைத் தேடிக் கண்டறிந்திருந்தார். ஆனால் அவர்களுக்கு இவரைப் போலப் புத்தகம் படிக்கும் விருப்பமில்லை. ஆகவே தன்னை அவர் ஒற்றை ஆளாக உணர்ந்தார்.

நூலகத்தில் இவ்வளவு ஆயிரம் புத்தகங்கள் தமிழில் இருக்கிறது. ஆனால் தமிழ் படிக்கத் தெரியவில்லையே என்ற குறை அவருக்குள் இருந்தது. அவராகவே தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.

எவரது உதவியையும் நாடவில்லை. நூலகத்தில் தமிழ் கற்றுக் கொள்ள என்ன நூல்கள் இருக்கிறது எனத் தேடியிருக்கிறார். அப்படி எளிதாகத் தமிழ் கற்றுத்தரும் நூல்கள் குறைவே.

எனது நண்பர் அமெரிக்காவில் வாழும் தனது பேரக்குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும், சில நூல்களைப் பரிந்துரை செய்யுங்கள் என்றார். குறிப்பாக உச்சரிப்புக்கு உதவியான ஆடியோவுடன் கூடிய தமிழ் கற்றுக் கொள்ளும் நூல் இருக்கிறதா எனக்கேட்டார். தேடிப் பார்த்தபோது அப்படிப் புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை.

தமிழ் கற்றுக் கொள்ள நாலைந்து புத்தகங்கள் கிடைத்தன. ஆனால் மரபான முறையில் அவை எழுதப்பட்டிருக்கின்றன. அதை வைத்துத் தமிழ் கற்றுக் கொள்வதாக இருந்தால் பத்து வருஷமாகிவிடும்.

வர்கீஸ்  இந்தச் சிரமத்தைப் பட்டிருப்பார். ஆனால் யார் உதவியையும் அவர் கேட்கவில்லை. அவராகத் தமிழ் எழுத்துகளைக் கற்றுக் கொண்டு தமிழ் நாளிதழ்களைப் படிப்பதன் வழியே இரண்டு ஆண்டுகளில் தமிழ் வாசிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்.

அவருக்குப் பல சொற்களுக்கு அர்த்தம் புரியாது. அதிலும் வழக்குச் சொற்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் அவர் தன் முயற்சியைக் கைவிடவில்லை. அறையில் இருக்கும் நேரங்களில் எல்லாம் அவர் முயன்று தமிழ் கற்றிருக்கிறார்.

அப்போது நூலகத்திற்கு வரும் பள்ளி ஆசிரியர் பொன்னையாவோடு நட்பு உருவாகியிருக்கிறது. அவரது உதவியால் தமிழ் நூல்களை ஆழ்ந்து படிக்கக் கற்றுக் கொண்டுவிட்டார்

முதன்முறையாக அவர் வருகைப்பதிவேட்டில் தனது பெயரை தமிழில் எழுதியதோடு அதை நூலகரிடம் தெரிவித்தார். நூலகர் அவரைப் பாராட்டியதோடு தமிழ் அகராதிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பிறகு வர்கீஸ்  எப்போது நூலகத்திற்கு வந்தாலும் தமிழ் அகராதியை எடுத்து வைத்துக் கொண்டு சிறிய நோட்டில் குறிப்பு எழுதிக் கொண்டேயிருப்பார்.

நூலகத்திற்கு வரும் பள்ளி மாணவர்களில் சிலர் ஆங்கில அகராதியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் தமிழ் அகராதி அல்லது நிகண்டு யாரும் பயன்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் லட்சக்கணக்கான சொற்கள் இருக்கின்றன. பெரும்பான்மையினர் ஆயிரம் சொற்கள் தான் அறிந்திருப்பார்கள். ஆனால் புதிய சொற்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கிடையாது.

தமிழில் விதவிதமான அகராதிகள். நிகண்டுகள் இருக்கின்றன. வெள்ளைக்காரன் தமிழ் கற்றுக் கொள்ள முயன்றபோது அதன் சிரமங்களை நன்றாக உணர்ந்திருக்கிறான். வின்ஸ்லோ தமிழ் ஆங்கில அகராதியைப் பார்த்தால் தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை உருவாக்க எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

தமிழ் கற்றுக் கொண்டு கதைகள், சிறுவர் புத்தகங்களை வாசிக்க முடிந்தாலும் கவிதைகளைத் தன்னால் வாசித்துப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் வர்கீஸிடம் இருந்தது.

ஒரு மொழியின் கவிதைகளை வாசித்துப் புரிந்து கொள்ள முடிகிறது என்றால் அந்த மொழி உங்கள் வசமாகிவிட்டது என்று அர்த்தம். கவிதையே மொழியின் உச்சம். தமிழ் மொழி நீண்ட கவித்துவ மரபு கொண்டது. சங்க கவிதைகளை எளிதாக வாசித்துப் பொருள் கொண்டுவிட முடியாது. நவீன கவிதைகள் தோற்ற அளவில் எளிமையாக இருந்தாலும் அதன் உள்அர்த்தங்களைப் புரிந்து கொள்ள மொழியின் நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும்.

அப்படியான ஒரு சூழலில் தான் வர்கீஸ்  என்னுடன் அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் கேட்ட முதற்கேள்வி

“ தமிழ் கதைமொழியும் கவிதை மொழியும் ஏன் வேறு வேறாக இருக்கிறது. கதை படிக்க முடிந்த என்னால் கவிதை படிக்க முடியவில்லையே“.

“ அது உண்மை. கவிதை சொற்களுக்கு நேரடியான அர்த்தம் தருவதில்லை. ஒரு சொல்லை, குறியீடாக, உருவகமாக மாற்றிவிடுகிறது. கூண்டின் கதவுகள் திறந்தது புலியே வெளியே வா என்ற வரியை கவிதையில் வாசிக்கும் ஒருவன் அது புலியைப் பற்றிய விஷயமில்லை என்று உணர்ந்து கொள்கிறான். புலி சுதந்திரத்தின் குறியீடாக மாறிவிடுகிறது. ஆனால் அதே வரிக் கதையில் வரும்போது அது புலியைப் பற்றியதாக மட்டுமே மாறிவிடுகிறது. கதை படிப்பவன் இந்த வரியைச் சுதந்திரத்தின் குரலாக எடுத்துக் கொள்வதில்லை. “

“ அப்படியானால் குழப்பமாக இருக்கிறதே. எப்படிக் கவிதை படிப்பது“ என்று கேட்டார்

“ உங்களுக்கு மட்டுமில்லை. எனக்கும் கவிதை படிப்பது சிரமமானது தான். தமிழில் எழுதப்பட்டுள்ள எல்லாக் கவிதைகளும் புரிந்துவிடுவதில்லை. ஆனால் ஆழ்ந்து வாசித்து வந்தால் கவிதைகளைப் புரிந்து கொள்ள முடியும் “ என்றேன்

“ கவிதைகளை எப்படி வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதாவது வழிகாட்டி நூல் இருக்கிறதா“ என்று கேட்டார்

“ அப்படி எதுவும் இல்லை. தமிழில் மரபுக்கவிதை, நவீன கவிதை என இருபெரும் பிரிவுகள் இருக்கின்றன. இரண்டிலும் மிகச்சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள். நீங்கள் பாரதியைப் படியுங்கள். அவர் மகாகவி“ என்றேன்

“ நூலகரும் அப்படித்தான் சொன்னார். படித்துப் பார்க்கிறேன் “ என்றார்.

“ மலையாளத்திலிருந்து நிறைய நூல்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. ஆனால் தமிழிலிருந்து மலையாளத்தில் மிகக் குறைவான எழுத்தாளர்களின் புத்தகங்களே மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கிறது. அது ஏன்“ என்று வர்கீஸிடம் கேட்டேன்

“ அது உண்மை. அத்தனை உலக இலக்கியங்களையும் தேடித் தேடித்தேடி மலையாளத்திற்குக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தமிழிலிருந்து அதிகம் மொழிபெயர்க்க படுவதில்லை. பஷீரும் தகழியும் கேசவதேவும் எம்.டி.வாசுதேவன் நாயரும் தமிழ் படிப்பவர்களிடம் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஆனால் தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் மலையாளிகளிடம் போய்ச் சேரவில்லை“ என்று சொன்னார்

அதன்பிறகு நூலகத்தில் வர்கீஸை சந்திக்கும் போதெல்லாம் அவர் கவிதை நூல்களைக் கையில் வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அவராகவே போராடி கவிதைகளை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் கற்றிருந்தார்.

தன் சொந்த ஊரை, குடும்பத்தைப் பிரிந்த மனிதனை அவனது மொழி தான் ஆற்றுப்படுத்துகிறது. வெளிநாட்டில் அதுவும் நீண்டதூர பயணத்தில் யாரோ ஒருவர் தமிழ் பேசுவதைக் கேட்டால் எத்தனை சந்தோஷமாக இருக்கிறது. அந்தச் சந்தோஷத்தை உள்ளூரில் நாம் உணர்வதேயில்லை.

தமிழ் மொழியின் நிகரற்ற சங்கக் கவிதைகளை இன்றைய தலைமுறை வாசிக்கவில்லை. நெருக்கம் கொள்ளவில்லை. ஷேக்ஸ்பியருக்கு இன்றைய ஆங்கில ஆங்கிலத்தில் எளிய விளக்கத்துடன் No Fear Shakespeare என நூல்கள் வெளியாகின்றன. அது போலத் தமிழ்ச் சங்க கவிதைகளுக்கும் அறிமுக நூல்கள் வெளியாக வேண்டும்.

ஒரு நாள் வர்கீஸ்  நூலகத்தில் வைத்து என்னிடம் சிறிய வெள்ளைக் காகிதம் ஒன்றைக் கொடுத்தார். அது இரண்டாக மடிக்கப்பட்டிருந்தது

“ என்ன கடிதம்“ என்று கேட்டேன்

“ வீட்ல போய்ப் படிச்சி பாருங்கள்“ என்றார் வர்கீஸ்

ஆர்வம் மிகுதியாகவே நூலகத்திலே அந்தக் காகிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்.

வர்கீஸ் தமிழில் ஒரு கவிதை எழுதியிருந்தார். ஒன்றிரண்டு சொற்கள் பிழையாக எழுதப்பட்டிருந்தன. ஆனால் எட்டு வரியில் அவர் ஒரு கவிதையை எழுதியிருந்தார். அது சாலையின் நடுவில் அடிபட்டு செத்துக்கிடக்கும் பாம்பு ஒன்றைப் பற்றியது.

ஆச்சரியமாக இருந்தது. நூலகத்தின் உதவியால் தமிழ் கற்றுக் கொண்டு கவிதைகளைப் படிக்கச் சிரமப்பட்டுத் தானே முயன்று படித்த ஒருவர் தமிழில் கவிதை எழுத துவங்கியிருக்கிறார். அதுவும் நவீன கவிதைகளுக்கே உரித்தான கருப்பொருள் ஒன்றை எடுத்துக் கொண்டு கவிதை எழுதியிருக்கிறார்.

நான் வர்கீஸின் கைகளைப் பிடித்துக் கொண்டு பாராட்டினேன். அவர் நம்பமுடியாத திகைப்பில் “ நல்லா இருக்கா சார்“ என்று கேட்டார்

“ ரொம்ப நல்லா இருக்கு“ என்றேன்

நாங்கள் இருவரும் ஒன்றாக டீக்கடைக்குப் போய்த் தேநீர் குடித்தோம். வர்கீஸ்  உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னார்

“ தமிழ் கவிதைகளைப் படிக்க ஆரம்பிக்கிற வரைக்கும் தமிழ் கத்துகிடுறதுல பயமே வரலை சார். ஆனால் கவிதைகளைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு தான் பயம் வருது. கவிதைகளைப் படிக்கப் படிக்க மனசு சந்தோஷமா இருக்கு. ஒரு மொழியைப் புதுசா கத்துகிட்ட பிறகு நான் புது மனுசனா தெரியுறேன். ஒரு நாள் மில்லுக்குப் போற ரோட்டில ஒரு பாம்பு அடிபட்டு செத்துகிடக்கிறதை பார்த்தேன். மனசுல உடனே இந்த வரிகள் தோண ஆரம்பிச்சிருச்சி. நான் கவிதை எழுதுவேன்னு நினைச்சே பார்க்கலை. தமிழ் மொழியில் நானும் ஒரு கவிதை எழுதியிருக்கேங்கிறது எவ்வளவு பாக்கியம் “ என்றார்

இப்படித் தன் சொந்த முயற்சியால் தமிழைக் கற்றுக் கொண்டு எழுதத்துவங்கியர்களை எப்போதும் தாய் அன்போடு தமிழ்மொழி அரவணைத்துக் கொண்டிருக்கிறது. கொண்டாடியிருக்கிறது.

வர்கீஸ்  போலத் தன்னுடைய சுய விருப்பத்தின் பெயரால் மலையாளம் கற்றுக் கொண்டவர்களே இன்றைக்குத் தமிழில் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். சிறந்த மலையாள நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து சாகித்திய அகாதமி விருது வரை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் என்றும் நன்றிக்குரியவர்கள். அவர்களைத் தமிழகம் அடையாளம் கண்டு கௌரவப்படுத்தியிருக்கிறது. கேரள அரசு இவர்களில் எத்தனை பேரைக் கௌரவித்திருக்கிறது. கொண்டாடியிருக்கிறது என்று தெரியவில்லை.

https://www.tamildigitallibrary.in/

https://www.projectmadurai.org/

https://tamilelibrary.org/

www.noolaham.org போல இணையத்தில் நிறைய தமிழ் நூலகங்கள் செயல்படுகின்றன. அவை இன்று உலகின் எந்தப் பகுதியில் நீங்கள் வசித்தாலும் உங்களுக்குத் தேவையான புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள உதவி செய்கின்றன. ஆனால் தேடிப்படிப்பவர்கள் தான் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

கவிஞர் தேவதச்சனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது

ஒளி

கவிதை எழுதுவது

என்பது

ஒரு

குண்டு பல்பை

ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது

முழுமையானதின்

அமைதியை ஏந்தி

பல்ப்

ஒளி வீசத் தொடங்குகிறது

ஒரு மெல்லிய இழை

நிசப்தத்தில்

எவ்வளவு

நீல

நன் கணம்

••

எவ்வளவு அழகான கவிதை. வாசித்து முடிந்தவுடன் மனதில் அந்த பல்ப் ஒளிரத் துவங்கி விடுகிறது .

கவிதை தரும் வெளிச்சம் என்பது அபூர்வமானது, பெருமகிழ்ச்சி தரக்கூடியது.   அதை வர்கீஸ் போன்றவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

••

0Shares
0