நூலக மனிதர்கள் 30 மறுக்கப்பட்ட புத்தகங்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலை இரண்டு பேர் எங்கள் கிராமத்தின் நூலகம் முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது நூலகம் திறக்கப்படவில்லை. காலை ஏழு மணியிருக்கும். இருவருக்கும் இருபதை ஒட்டிய வயது . மெலிந்த தோற்றம். பொருத்தமில்லாத மேல்சட்டை தொளதொளவெனத் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவன் அடர்ந்த தாடி வைத்திருந்தான்.

கிராம நூலகம் என்பதால் அதைத் தூய்மைப்படுத்தி வைக்கும் பொறுப்பு மாரியம்மாள் என்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டில் தான் நூலகத்தின் சாவி இருக்கும். அவர் காலையில் நூலகத்தைக் கூட்டிப் பெருக்கி துடைத்துப் போவார். சில நாட்கள் அவரே காலையில் நூலகத்தைத் திறந்து வைத்துவிடுவார்.

நூலகர் பெரும்பாலும் ஒன்பது மணியைக் கடந்து தான் வருவார். சில நாட்கள் அவர் வருவதற்குப் பத்து மணிக்கு மேலாகிவிடும். கிராம நூலகத்தில் காலை நேரம் நியூஸ் பேப்பர் படிக்க வருபவர்களைத் தவிர வேறு ஆட்களைக் காண முடியாது. அதுவும் ஒன்றிரண்டு பேரே வருவார்கள்.

ஆனால் அந்த இளைஞர்கள் காலையில் நூலக வாசலில் வந்து நிற்பதை மைதானத்திற்குச் செல்லும் போது பார்த்தேன். உள்ளூர் முகங்களாகத் தெரியவில்லை.

ஒருவேளை நூலகரிடம் ஏதாவது விண்ணப்பம் எழுதித் தரச் சொல்லிக் காத்திருப்பவர்களாக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன். பத்து மணி அளவில் நூலகர் வந்த போது அவர்கள் இருவரும் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று தயக்கத்துடன் “ஏதாவது வேலை வேண்டும்“ என்று கேட்டார்கள்

“லைப்ரரியில் என்ன வேலையிருக்கு. இங்கே வந்து வேலை கேட்குறீங்க“ எனக்கேட்டார் நூலகர்

“நாங்கள் இலங்கைத் தமிழ் அகதிகள், முகாமில் தங்கியிருக்கிறோம். வேலை ஏதாவது இருந்தால் கொடுங்கள்“ என்றார் தாடி வைத்த இளைஞர்

சில மாதங்களுக்கு முன்பு ஊரின் கிழக்கே பள்ளிக் கூடத்தைத் தாண்டி இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியிருந்த மக்களுக்கு அகதி முகாம் உருவாக்கப்பட்டிருந்தது. கோழிக்கூண்டுகள் போன்ற சிறிய வசிப்பிடம். எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. மின்சார வசதி தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடிநீருக்காக அவர்கள் ஊருக்குள் தான் வரவேண்டும்

“புத்தகங்களை அடுக்கித் தர்றோம். பைண்டிங் வேலை இருந்தாலும் செய்து தர்றோம்“ என்றார் இன்னொரு இளைஞர்

நூலகர் தன் கையிலிருந்து தான் அதற்கு ஊதியம் தர வேண்டும் என்பதால் தயக்கத்துடன் “உங்களை எப்படி நம்பி வேலை கொடுக்கிறது“ என்று கேட்டார்

“புத்தகத்தைக் கையில் தொட்டு மாதக்கணக்கு ஆகிடுச்சி. நாங்க காலேஜ்ல படிச்சிகிட்டு இருந்தோம். அங்கே லைப்ரரிக்குப் போவோம். நிறையப் புத்தகம் வாசிப்போம். ஆனால் யுத்தம் எல்லாத்தையும் அழிச்சிருச்சி“ என்றார் தாடி வைத்த இளைஞர்

“ஆளுக்கு இருபது ரூபா தர்றேன். வேலை செய்வீர்களா“ எனக்கேட்டார் நூலகர்

அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். ஒரேயொரு விண்ணப்பம் வைத்தார்கள்

“நாங்க படிக்கிறதுக்குப் புக்ஸ் எடுத்துட்டு போகலாமா“

“அது முடியாது. உள்ளூர்காரங்களுக்கு தான் புக் தர முடியும். நீங்க அகதியாச்சே. எப்படித் தர முடியும்“ எனக்கேட்டார் நூலகர்

“நாங்க இந்த ஊர்ல தானே இருக்கோம். முகாம்ல இருக்கிற என் சிஸ்டர் படிக்கப் புக் வேணும் “என்றார் இன்னொரு இளைஞர்

“அட்ரஸ் புரூப் வேணும். யாராவது உங்களை அறிமுகப்படுத்தி வைக்கணும். அதுவரைக்கும் புக் வெளியே கொடுக்க முடியாது “என்றார் நூலகர்

அவர்கள் ஏமாற்றத்துடன் நூலகரை வெறித்துப் பார்த்தார்கள்

தேசம் இழந்து, சொத்து சுகம் இழந்து, உயிர்தப்பி வந்தவர்களுக்கு நூலகத்தில் படிக்கப் புத்தகம் கூடத்தரப்படவில்லை என்பதே நிஜம்.

அவர்கள் பகல் முழுவதும் நூலக அடுக்கில் தூசி படிந்து போயிருந்த புத்தகங்களை வெளியே கொண்டு வந்து வைத்துத் துடைத்துச் சுத்தம் செய்து அடுக்கினார்கள். கிழிந்து போன புத்தகங்களைக் கோந்து ஒட்டிச் சரி செய்தார்கள். மதியம் சாப்பிட கூடச் செல்லாமல் டீக்குடித்துவிட்டு வேலை செய்தார்கள். மாலைக்குள் நூலகம் புதியதாக மாறியது.

இதற்குள் நூலகர் அந்த வேலைக்காகத் தர வேண்டிய ஊதியத்தை மில் சூப்ரவசைர் ஒருவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டிருந்தார்

அவர்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாலை திரும்பும் போது மறுபடியும் கேட்டார்கள்

“ஒரேயொரு புத்தகம் கொடுத்தால் போதும். முகாமில் யார் கிட்டயும் படிக்க ஒரு புக் கிடையாது“

நூலகர் சிறிது யோசனைக்குப் பிறகு ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவர்கள் பெரிய நாவல் ஒன்றை எடுத்துக் கொண்டார்கள். தாடி வைத்த இளைஞன் நூலகரிடம் சொன்னான்

“அடுக்கி வைத்த புத்தகங்களுக்கு ஒரு பதிவேடு செய்து தரட்டுமா சார். அதுக்கு ஊதியம் ஏதும் தர வேண்டாம்“

நூலகர் ஒத்துக் கொண்டார். அதன் பிந்திய நாட்களில் அந்த இருவரும் நூலகத்தில் அமர்ந்து பதிவேடு ஒன்றை உருவாக்கித் தந்தார்கள். அழகான கையெழுத்து. அச்சடித்தது போன்றிருந்தது.

புத்தகங்களுடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர்கள் இப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பதிவேட்டினை நூலகர் அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தார்.

இதன் சில நாட்களுக்குப் பிறகு மாலை நேரம் ரோஸ் வண்ண பாவாடை சட்டை அணிந்த ஒரு பெண் தயக்கத்துடன் நூலகத்திற்கு வந்து தன் அண்ணன் படிக்க எடுத்த வந்த புத்தகத்தை நூலகரிடம் திரும்பிக் கொடுத்துவிட்டு “தானே ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாமா“ எனக்கேட்டார்

நூலகர் அந்தப் பெண்ணை அனுமதித்தார்

அவள் ஆசை ஆசையாக ஒவ்வொரு புத்தகமாகத் தொட்டுப் புரட்டிப் பார்த்தாள். சில வரிகளை லேசாக முணுமுணுப்பதும் கேட்டது.

நீண்ட தேடுதலின் பின்பு அவள் “மணியோசை“ என்ற சிறுகதைத் தொகுப்பினை எடுத்துக் கொண்டு போனாள். இந்தப் பெண் நூலகத்திற்கு வந்து போக ஆரம்பித்த சில நாட்களில் அவளது தோழிகளும் நூலகத்திற்குப் புத்தகம் வேண்டி வர ஆரம்பித்தார்கள்

நூலகத்தின் வாசலில் நின்று அவர்கள் படித்த புத்தகங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசினார்கள். சில வேளைகளில் சப்தமாகச் சிரிப்பதும் கேட்டது.

அவர்களுக்கு உறுப்பினர் அட்டை தர இயலாது என்பதால் முகாம் பொறுப்பாளரிடமிருந்து ஒரு கடிதம் பெற்றுவந்தார்கள் அதை வாங்கிக் கொண்டு நூலகர் புத்தகம் இரவல் தரத் துவங்கினார்

அந்த இளம்பெண்கள் நூலகத்திற்கு வருகை தர ஆரம்பித்த பிறகே அவர்கள் வயதுடைய உள்ளூர் பெண்கள் நூலகத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.

அந்தப் பெண்களில் ஒருத்தி ஒரு நாள் நூலகரிடம் “பெண்கள் அமர்ந்து நியூஸ் பேப்பர் படிக்க ஒரு பெஞ்சு போடலாமே“ என்று யோசனை சொன்னாள்

“இங்கே ஏது இடம்“. என்று கேட்டார் நூலகர்

“அப்போ தினம் சாயங்காலம் படிச்சி முடிச்ச நியூஸ் பேப்பரை முகாமிற்கு எடுத்துட்டுப் போய்ப் படிச்சிட்டு மறுநாள் காலையில் கொண்டுவந்து தர்றோம்“ என்றாள் அந்தப் பெண்

நூலகர் நீண்ட யோசனைக்குப் பிறகு ஒத்துக் கொண்டார்

அதன்பிறகு அன்றாடம் அவர்கள் படித்து முடித்த செய்தித்தாள்களை முகாமிற்குக் கொண்டு போனார்கள். ஒன்று கூடி வாசித்தார்கள். மறுநாள் காலை நூலகரிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள்

படிப்பது வாழ்வின் மீதான பற்றுதலை, நம்பிக்கையை உருவாக்கும் என்பதற்கு அடையாளம் போலிருந்தது அவர்களின் செய்கை. நூலகத்தில் கிழிந்த புத்தகங்கள் என்று ஒதுக்கி வைத்த நூல்களை அவர்கள் எடுத்துக் கொண்டு போய்ப் படித்தார்கள். ஒட்டி பைண்டிங் செய்து கொண்டு வந்து கொடுத்தார்கள்

ஒவ்வொரு புத்தகத்திற்குள் ஒருவகை வெளிச்சமிருக்கிறது. அது வாசிப்பவனின் கண்களுக்கு மட்டுமே புலப்படுகிறது. சொற்களின் துணை கொண்டு அவன் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள தயாராகிறான். அது தான் முகாமில் இருந்தவர்களிடம் நடந்தது.

ஒரு நாள் முகாமிலிருந்து ஒரு கிழவர் நூலகத்திற்கு வந்து தான் தச்சு வேலைகள் செய்கிறவன் என்று சொல்லி நூலகத்தில் உள்ள மரப்பெஞ்சின் ஆடிக் கொண்டிருந்த கால்களைச் சரிசெய்து கொடுத்துப் போனார். அதற்குப் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்

இனி தங்கள் வாழ்க்கை என்னவாகும் என்று தெரியாத நிலையிலும் முகாமிலிருந்தவர்கள் நம்பிக்கையோடு பிள்ளைகளை உள்ளூர் பள்ளியில் படிக்க வைத்தார்கள். நூலகத்திற்கு வந்து விருப்பமான புத்தகங்களைப் படித்தார்கள். இந்த விருப்பமோ நம்பிக்கையோ கிராமவாசிகளில் படித்தவர்களாக இருந்த பலருக்கும் இருக்கவில்லை. அவர்கள் சந்தேகக் கண்களுடன் முகாமிலிருந்தவர்களைப் பார்த்தார்கள் நடத்தினார்கள். அவர்களுடன் நட்போடு பழகுவது போல நெருங்கி உறவாடி ஏமாற்றினார்கள்.

நூலகம் மூடப்பட்டிருந்த நாட்களில் கூட அவர்கள் நூலகத்தின் முன்பு வந்து நின்று கூடிப் பேசினார்கள். ஊரின் பொது விஷயங்களில் உதவி செய்வதற்கு முன்வந்தார்கள்.

ஒரு நாள் முகாமிலிருந்து இரண்டு பேர் தப்பிப் போய்விட்டார்கள் என்று காவலர்கள் இருவர் நூலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். தப்பிப் போனவர்களில் ஒருவர் நூலகத்திற்கு வேலை கேட்டு வந்த தாடி வைத்த இளைஞன்.

காவலர்களின் மிரட்டல் காரணமாக நூலகர் இனி அவர்களை நூலகத்திற்கு அனுமதிப்பதில்லை. புத்தகங்கள் இரவல் தருவதில்லை என்று முடிவு செய்தார். இதற்கு நாங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் நூலகர் அவர்களை நூலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.

சிறைச்சாலையில் கூடப் புத்தகம் படிக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. சிறிய நூலகங்கள் இயங்குகின்றன. ஆனால் அதை விடக் கொடுமையாக முகாமில் இருந்தவர்களுக்குப் படிக்க வசதியில்லை. பொதுநூலகங்களும் அவர்களை அனுமதிக்கவில்லை.

முகாமிலிருந்த இளம்பெண்கள் நூலகத்தைக் கடந்து போகும் போது ஏக்கத்துடன் தலை திருப்பிப் பார்த்தபடியே சென்றார்கள். உணவும் உடையும் மட்டும் வாழ்க்கையில்லை. படிப்பதும், யோசிப்பதும், செயல்பட உந்துதல் பெறுவதும் வாழ்விற்குத் தேவைதானே. அதைப் புத்தகங்கள் தருவதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பது போலிருந்தது அவர்களின் பார்வை.

அந்தக் கண்களை என்னால் மறக்கமுடியவில்லை.

பொதுநூலகத்திலிருந்த பதிவேட்டினை காணும் போதெல்லாம் முகாமிலிருந்து ஓடிப்போன இளைஞனின் முகம் நினைவிற்கு வந்து போகும். என்ன ஆகியிருப்பான். எங்கே வாழ்ந்து கொண்டிருப்பான் என யோசித்தபடியே இருப்பேன்.

யுத்தம் ஏற்படுத்திய வடுக்களை விடவும் சொந்த சகோதரர்களாக அவர்கள் நினைத்த தமிழக மக்கள் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழ் மக்களை நடத்திய விதமும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் என்றும் ஆறாதவை.

••

0Shares
0