பூக்கும் பிளம்

சீன ஓவியங்கள் மற்றும் கவிதைகளுக்கான வழிகாட்டி நூலாகக் கருதப்படுகிறது Sung Po-jen எழுதிய Guide to Capturing a Plum Blossom. இந்த நூல் கி.பி 1238 இல் வெளியிடப்பட்டது, இது உலகின் முதல் அச்சிடப்பட்ட கலைப் புத்தகமாகும்.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அச்சில் இல்லாத இந்த நூலைத் தேடிக்கண்டுபிடித்து மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார் ரெட் பைன். இவர் சீன செவ்வியல் கவிதைகள் மற்றும் ஞான நூல்களை மொழியாக்கம் செய்துவருபவர்

பழைய புத்தகங்களை விற்கும் ஹாங்ச்சோவில் உள்ள ஒரு புத்தகக் கடையில் தேடியபோது இந்த பிரதி கிடைத்திருக்கிறது. . சீனாவில் நடந்த கலாச்சாரப்புரட்சியின் போது இது போன்ற நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆகவே கைவிடப்பட்ட பிரதியாகத் தூசி படிந்து கிடந்த இந்த நூல் ரெட் பைனிற்கு கிடைத்திருக்கிறது

இதனை மொழியாக்கம் செய்வதற்கு முன்பு ஆழ்ந்து புரிந்து கொள்வதற்காக , நான்கு மாதங்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் ஓவியக் கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் சிலருடன் ஒன்று கூடி விவாதித்திருக்கிறார். அதன் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே மொழிபெயர்ப்பை முடித்திருக்கிறார்.

இந்த நூல் எப்படி காலத்தின் கரங்களை மீறி தப்பிப் பிழைத்து என்ற வரலாற்றையும் ரெட் பைன் தனது அறிமுகவுரையில் எழுதியிருக்கிறார்.

மீஹுவா என்று அழைக்கப்படும் பிளம் மலர்கள் பல நூற்றாண்டுகளாகச் சீன கலை மற்றும் கவிதைகளில் சித்தரிக்கப்படுகிறது

சீனாவில் பிளம் மரங்கள் பூக்கும்போது அதைப் பார்ப்பதற்காக மக்கள் ஒன்று கூடுகிறார்கள். அது அழகின் முழுமையாகும். தெய்வாம்சத்தின் அடையாளமாக இளஞ்சிவப்பு பிளம் மலர்கள் கருதப்படுகின்றன. பிளம் மலர்வது விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகவும், அழகு, தூய்மை மற்றும் வாழ்க்கையின் நிலையற்ற தன்மை ஆகியவற்றைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது

பேரரசர் வூவின் மகள் இளவரசி ஷோயாங் அரண்மனையின் மேற்புறத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தோட்டத்திலிருந்த ஒரு பிளம் மலர் அவளது நேர்த்தியான முகத்தில் பறந்து வந்து விழுந்தது, அது ஒரு முத்திரை போல அவளுடைய அழகை மேலும் மேம்படுத்தியது என்கிறார்கள்..

சீனர்கள் வசந்த காலத்தின் முதல் அறிகுறியாக பிளம் மரத்தைக் கருதுகிறார்கள்.வரவிருக்கும் பருவத்தைக் கணிக்க பிளம் மொட்டுகளை ஆய்வு செய்கிறார்கள். அதிலிருந்து எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள். குறிப்பாக மன்னர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகளை பிளம் மொட்டுகளைக் கொண்டே ஆராய்கிறார்கள்.

ஓவிய வழிகாட்டி நூல் என்றாலும் இதில் வரையும் நுட்பங்களோ பயிற்சிகளோ விவரிக்கப்படவில்லை. மாறாக சீனக் கவிதைகள் மற்றும் ஓவியத்தில் புகழ்பெற்றுள்ள. குறியீடுகள் எவ்வாறு உருவாகின. அதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதைப் பற்றியே எழுதியிருக்கிறார்கள்

சிறிய மொக்குகள் பெரிய மொக்குகள் என பிளம் மரத்தின் மொக்குகளை பிரித்துக் கொண்டு அதற்கு ஏற்ப பொருள் தருகிறார்கள்

சீனாவிற்கு மிளகு ஒரு வணிகமாக பண்டமாக வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டது. சீனர்கள் மூதாதையர் ஆவிகளை அழைக்க தூபமாக மிளகை பயன்படுத்தினார்கள். கைகால்களை சூடேற்ற மிளகுசாற்றை பயன்படுத்தினார்கள். ஆகவே மிளகு எவ்வாறு குறியீடாக மாறுகிறது என்பதை சுங் போ விவரிக்கிறார். இது போலவே தேநீர் தயாரிக்கும் போது ஏற்படும் சிறிய குமிழ்களை “நண்டு கண்கள்” என்று அழைக்கிறார். இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு அரிய மூலிகையாக கருதப்பட்டிருக்கிறது.

இது போல மாதுளை அறிமுகமான விதம் மற்றும் நாரைகளின் குறியீடு, மாறும் பருவ காலங்கள். மேகம் மற்றும் சூரியன் குறித்த அடையாளங்களையும் இதில் விளக்குகிறார்கள்.

0Shares
0