பெயரற்ற மேகம் -2 ரியோக்கன் எனும் பட்டம்

Who calls my poems poems?

My poems are not poems.

Only when you know my poems are not poems

can we together speak about poems

– Ryokan

Sky above Great Wind என்ற ஜென் மாஸ்டர் ரியோக்கனைப் பற்றிய நூலை வாசித்தேன்.

ஜப்பானியக் கவிஞர்களில் தனிமையைப் பற்றி மிகச்சிறப்பாக எழுதியவர் ரியோக்கன். ஜென் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இவர் துறவியாகத் தேசம் முழுவதும் சுற்றியலைந்து வாழ்ந்திருக்கிறார். யாசகம் கேட்டு உண்ணுவதே அவரது வழக்கம். அவரது கவிதைகள் எதையும் அவர் தொகுத்து நூலாக்கவில்லை. அவரது சீடர்கள் அவற்றை மக்கள் மனதிலிருந்து சேகரித்துத் தொகுத்திருக்கிறார்கள்.

பிச்சைக்காரனைப் போலத் தோற்றம் கொண்டிருந்த ரியோக்கன் நடந்தே அலைந்தார். ஒருமுறை அவர் ஒரு கிராமத்தில் யாசகம் கேட்டுப் போன போது அவரைத் திருடன் என நினைத்து அடித்துக் கட்டி வைத்துவிட்டார்கள். நல்லவேளை அவரது நண்பர் ஒருவர் அங்கே வந்து அவரை விடுவித்தார். ஏன் நீங்கள் தவறு செய்யாதவர் என்று முறையிடவில்லை என்ற நண்பர் கேட்டதற்கு ரியோக்கன் ஊரே கூடி என்னைச் சந்தேகப்படுகிறது. நான் மறுத்திருந்தால் அதை நம்பியிருக்க மாட்டார்கள். அதற்கு மௌனமாக இருப்பதே மேலானது. அது தான் ரியோகானின் தனித்துவம்

ஜப்பானிய கவிஞர்கள் இயற்கையை ஆராதிப்பதில்லை. மாறாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இயற்கையை ஒரு போதும் புதிராக கருதுவதில்லை. மாறாக அரவணைப்பாகவும், உந்துசக்தியாகவும் தனிமையின் தோழனாகவும் கருதுகிறார்கள். இயற்கையை வியக்கும் அவர்கள் மனிதவாழ்க்கையை இயற்கையின் சிறுதுளியாக உருமாற்றுகிறார்கள்.

ரியோக்கன் கவிதையை தனது மொழியாக கொண்டிருக்கிறார். வாழ்வின் அனுபவங்களை பிறருக்கு எடுத்துச் சொல்ல கவிதையே அவருக்கு துணை செய்கிறது. தினசரி வாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல் அதற்குள்ளாக இருந்தபடியே இயற்கையின் சலனங்களை ரசித்தபடியே தன்னைச் சுற்றிய உலகில் கரைந்து போக முயற்சிக்கிறார் ரியோக்கன்.

தனது பயணத்தில் ரியோக்கன் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது ஏற்பட்ட அனுபவத்தை அந்த நண்பர் பதிவு செய்திருக்கிறார். ரியோக்கன் என் வீட்டிற்கு வருகை தந்தார். எந்தப் போதனையும் செய்யவில்லை. அறநூல்கள் எதைப் பற்றியும் பேசவில்லை. கணப்பு அடுப்பு எரிய விறகுகளைக் கொண்டு வந்து போட்டார். மௌனமாக எங்களுடன் குளிர் காய்ந்தார். அவரது இருப்பு தான் பெரும்போதனை என்பதை உணர்ந்தேன். தனது மௌனத்தின் வழியே கற்றுத் தருபவரே உண்மையான ஜென் மாஸ்டர் என்கிறார் நண்பர்.

திருடன்

விட்டுச் சென்றிருக்கிறான் –

ஜன்னலிலுள்ள

நிலவை

என்ற அவரது புகழ்பெற்ற கவிதை வரி அற்புதமானது. எவராலும் திருட முடியாத இயற்கையே பெருஞ்செல்வம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

தனக்கென வீடு இல்லாமல் தனது சீடர்களுடன் சில காலம் தங்கி வேறிடம் போவதுமாக வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். அதில் சில சீடர்கள் அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்பியபோது அதை ரியோக்கன் அனுமதிக்கவில்லை. ஒரு பட்டம் இன்னொரு பட்டத்தை உடன் அழைத்துக் கொண்டு போக முடியாது என்று பதில் சொல்லியிருக்கிறார்.

தனது தந்தையின் நினைவைப் பற்றிய கவிதையில் அந்த நினைவு ஒரு சிடார் மரத்திலிருந்து உதிரும் மழைத்துளியைப் போலிருப்பதாகவும், அதைத் தான் ஒரு பழைய ஆலயம் ஒன்றிலிருந்து கேட்பது போலவும் எழுதியிருக்கிறார். சிடார் மரத்திலிருந்து உதிரும் மழைத்துளி என்பது அற்புதமான உவமை.

தான் ஒரு முட்டாள். முட்டாளிடம் செலவு செய்வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. அறிவாளிகள் நேரம் போதவில்லை என்கிறார்கள். நேரத்தைப் பணமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் முட்டாள் நேரத்தைச் சூதாடியைப் போலச் செலவு செய்கிறான் என ரியோக்கனின் குறிப்பு ஒன்று கூறுகிறது.

கவிஞராக மட்டுமின்றிச் சித்திர எழுத்துக்கலையிலும் ரியோக்கன் தேர்ந்தவராக இருந்திருக்கிறார். ஒருமுறை பணக்காரர் ஒருவர் அவரைக் கட்டாயப்படுத்திச் சித்திர எழுத்து எழுதித் தரும்படி கேட்டதற்கு நான் எழுத மாட்டேன் என்று மிகப்பெரியதாக எழுதிக் கொடுத்திருக்கிறார் ரியோக்கன்.

ஒரு முறை அவர் பட்டம் செய்வதற்காகக் காகிதம் ஒன்றில் சித்திர எழுத்து எழுதித் தரும்படி கேட்டுக் கொண்ட போது எழுதியதே Sky above Great Wind என்ற வாசகம்.

தூரிகை கோடுகள்

ஒரு அன்பான நண்பருக்கு எழுதிய கடிதத்தில்

அழகாக மாறிவிட்டது.

ஒரு கணம்

மகிழ்ச்சி

என்றொரு கவிதையை ரியோக்கன் எழுதியிருக்கிறார். இப்படிச் சின்னஞ்சிறு சந்தோஷத்தைக் கூட முழுமையாக அனுபவிப்பதாலே தான் அவர் ஜென் மாஸ்டராகக் கொண்டாடப்படுகிறார்.

1758 ஆம் ஆண்டில் ரியோகன் எடிகோ மாகாணத்தில் இசுமோசாகி என்ற துறைமுகக் கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் ஈசோ. அவரது தந்தை கிராம நிர்வாகியாகவும் உள்ளூர் பௌத்த ஆலயத்தின் குருவாக இருந்தவர். தந்தையும் கவிதைகள் எழுதக்கூடியவர். தனியார் பள்ளியின் வழியே இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார் ரியோக்கன்

ஜென் துறவியாக மேகம் போல அலைந்து திரிந்தவர் ரியோக்கன். பாஷோவின் கவிதைகள் மீது அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரைப் புகழ்ந்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

பாஷோவுக்கு முன்பு பாஷோ இல்லை.

பாஷோவுக்குப் பிறகு பாஷோ கிடையாது

ஆ, பாஷோ, பாஷோ!

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்து

இன்னும் போற்றப்படுகிறீர்கள்

தனது வாழ்வின் கடைசி நாட்கள் வரை பௌத்த ஆலயங்களைத் தேடி பயணம் செய்து கொண்டேயிருந்தார் ரியோக்கன்.

உலகை விட்டுத் தான் ஒதுங்கியிருக்கவில்லை. மாறாகத் தனியே உலகோடு விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று ரியோகன் தன்னைப் பற்றிய சுயகுறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் அவரது வாழ்வின் பல்வேறு நிலைகள் அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

••

0Shares
0