மதராஸ் டிராம்வே

மதராஸில் ஒடிய டிராம் பற்றிய அந்தக் காலப் பதிவுகள்
••
டிராமில் அதிகக் கூட்டம்!
இப்போது ஊர் கெட்டுக்கிடக்கிற கிடையில் டிராம் காரர்கள் கொஞ்சம் இருக்கிற ஸ்திதியைக் கவனித்து நடந்தால் நலமாகும். தினந்தோறும் காலை, மாலைகளில் ஒரு   வரை யறையின்றி ஜனங்களை ஏற்றுகிறார்கள். இப்படிச் செய்வதினால் அசுத்தம் ஜாஸ்திப்படுவதுடன் தொத்து வியாதியும் விருத்தியாக இடமாகும். ஆகையால் அதிகக் கூட்டம் அடையாமல் பார்க்கவேண்டும்.
– ‘சுதேசமித்திரன்’ உபதலையங்கம்
1898 ஆகஸ்ட் 27 பக்கம் – 4.
****
டிராம்வேயில் கட்டணக் குறைவு
சென்னையிலோடும் டிராம் பாதையில் சிற்சிலவிடங்களில் தவிர மற்றயிடங்களிலெல்லாம் அரையணாவுக்குக் குறையாமலே இது பரியந்தம் கட்டணம் வாங்கி வந்தார்கள். ஆனாலும் வருகிற சூலை மாதம் 2ந்தேதி முதல் கட்டணக் குறைவேற்படுத்தியிருப்பதாய் டிராம்வே கம்பெனியார் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது காலணா கட்டணமாகக் கொடுத்து விட்டு பின்னர் குறிப்பிட்டயிடங்களுக்குச் செல்லலாம்:
எழும்பூரிலிருந்து பெரிய மேட்டுக்கு பெரியமேட்டிலிருந்து ஸெண்ட்ரல் ஸ்டேஷனுக்கு, ஸெண்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து பிரேஸர் பிரிட்ஜுக்கு ,பிராட்வேயிலிருந்து ஜெனரல் போஸ்டாபீசுக்கு தம்புசெட்டித் தெருவிலிருந்து கஸ்டம் ஹௌஸக்கு
– ‘இந்து நேசன்’ சென்னை
6 – 7 – 1906 பக்கம் – 5.
**

மதிராசு ஒற்றைக்கம்பி டிராம்வே
ராவ்சாகிப் டி. நம்பெருமாள் செட்டியார் மேற்குறித்த மோனோ ரெயில் டிராம்வேயைப் பற்றிக் கூறியதை ஆலோசிக்க முனிசிபல் ஸ்பெஷல் கமிட்டியார் கடந்த வெள்ளிக் கிழமை தினம் ஒன்று சேர்ந்தனர். மதிராசு முனிசிபல் இலாகாவுக்குள் 30 மைல் தூரம் இருப்புப் பாதை அமைப்பதாய் கமிட்டியார் கூறினர்.
1. பூந்தமல்லி முனிசிபல் சுங்கச் சாவடியண்டை வரும் ஆவடி பூந்தமல்லி லயன், அங்கிருந்து பூந்தமல்லி ரோட்டு, ரிதர்டன் ரோட்டு, வேப்பேரி ஹைரோட்டு, சைடனாம் ரோட்டு, பாரின் ரோட்டு, கூக் ரோட்டு மார்க்கமாய் கர்னாடக யந்திரசாலை வரையில்.
2. உப்பளக் கொட்டகையிலிருந்து மூலைக்கொத்தளம் வாராவதியில் எருக்கஞ்சேரி ரோட்டு வழியே புழலேரி வரையில்.
3. மூலைக்கொத்தளம் வாராவதியிலிருந்து பழைய ஜெயில் ரோட்டு வழியே ரேவுத்துறை வரையில்
4. பழைய ஜெயிலிலிருந்து லிங்க செட்டி வீதி மார்க்கமாய் கோட்டை மைதானம் பச்சையப்பன் சாலை வரையில்.
5. உப்பளக் கொட்டகையிலிருந்து ஒற்றைவாடை வழியே மணம் டிபோ வரையில்.
6. சைதாப்பேட்டை சுங்கச் சாவடியண்டை வரும் பல்லாவரம் பரங்கிமலையிலிருந்து லயன், அங்கிருந்து மவுண்டு ரோடு வழியே மெஸர்ஸ் ஸ்மித் வகைக் கம்பெனியையும் ஹாரிஸ் வாராவதியையும் தாண்டிப் போலீசு கமிஷனர் ரோட்டால் பூந்தமல்லி ரோட்டு வரையில்.
தவிர மவுண்ட் ரோட்டிலிருந்து பீட்டர் ரோட்டு, ஐஸவுஸ் ரோட்டு வழியே பக்கிங்காம் வாய்க்காலண்டை யிலுள்ள கல்லுடி போ வரையில், மதராசு முனிசிபல் எல்லைக்குள் போடப்படும் மோனோ ரயிலும் செங்கற்பட்டு வரை போட உத்தேசித்திருக்கும் லயனும் சேரு மிடத்து 50 மைலுக்கு அதிகமிருக்கும்.
– ‘ஞானபோதினி’ சென்னை.
ஏப்ரல் – 20, 1903. (Vol.VI இல.9, பக்கம் – 360)

***

ஐந்தாம் ஜார்ஜ் அவர்களுக்கு மகுடஞ்சூட்டின போது டிராம் வண்டியின் அலங்காரக் கும்மி

***

திருமகலுலவும் சென்னை யெழும்பூர்

டிராம் வண்டி சேட்டில் போர்மேனாம்

அருமையுள்ள தியாகராய ஆச்சாரி

அர்ப்புத வண்டியின் புதுமையைக் கேள்

சொல்லு மாயிரத்தி அன்னூர் விளக்குகள்

சுந்தரமாகவே செய்து மாட்டி

நல்ல எலெக்ட்ரிக் பவுர் கொடுத்தவர்

நடத்துஞ் சேதியைக் கேளுங்கடி


ஜோன்சு பவல் துரை முனிசாமி ராஜாவும்

சொகுசுள்ள டிரைவர் லேபர்ன் துரை

காண் மயிலான லேடியுடனன்று

களித்து வருவதைக் கேளுங்கடி


நட்சத்திரம் போல தீபத்தின் ஜோதிகள்

நாட்டி லெங்கும் பிரகாசிக்க

பட்சமுடனே திரு மயிலைக்கி

பண்பாய் வந்தார் பாருங்கடி

முன்புரத்தில் ஜோன்ஸ் துரையும் பின்புரத்தில் பவுல்துரையும்

முக்கியமாகவே நின்று கொண்டு

நன்னயமாக மெதுவாய் நடத்திய

நாகரீகம் பார்த்துக் கொம்மியடி


மறுநாள் சனிவாரம் மாலை யாறு மணி

மண்டலம் புகல மயன் வாழும்

திரு அல்லிக்கேணி அமட்டன் வாராவதி

தெளிவாய் விட்டார் பாருங்கடி

பகருதர்க் கரிய பத்தாந்திகதி

பட்சமா யாதிவார மதில்

சுகாரய் புரசவாக்கத்திர்க்கு விட்ட

சொகுசைச் சொல்லி கொம்மியடி

.சி. தோப்பரசாமி. 1911

***

0Shares
0