மாயநகரின் வாசல்

மங்கை செல்வம்

ஏழுதலை நகரம் பற்றிய விமர்சனம்.

கதவுகளில் செதுக்கப்பட்டிருக்கும் மீன்கள் நீந்துவதும் அதே கதவுகளில் உள்ள எழுத்துகள் இடம் மாறுவதும் நடக்குமா என்ன? யாருமே உள்ளே செல்ல முடியாத கண்ணாடிக்காரத் தெருவில் இவை எல்லாம் நடக்கும். உலகிலேயே வயதான பருத்த ஆமை எப்படி இருக்கும்? எலிகளுக்கு பள்ளிக்கூடம் உண்டா? அங்கே என்ன பாடம் கற்பிக்கப்படும்? கடவுள்களில் பெரிய கடவுள் என்றும் சிறிய கடவுள் என்றும் உண்டா?


மதரா என்ற மாய நகரமும், அதன் மேலே ஓடும் மாய நதியும், அதில் ஒரு பகுதியான கண்ணாடிக்காரத் தெருவும், காடன் கொண்டு வந்து தந்த மானீ என்ற பறவையும் ஞலி எலியும் உயிருடன் கண் முன்னே நிற்கின்றன. இது ஒரு மாய உலகம்; அதில் உலவும் உயிர்கள் இவை என்ற நினைவே எழவில்லை

சிறாருக்கு எழுதுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் விழி விரியும் கற்பனையும் காட்சிப்படுத்தும் மொழியும் எஸ் ராமகிருஷ்ணனுக்கு வசப்பட்டிருக்கிறது. கதையை படிக்கும் பிள்ளைகள், அசிதன் உலவும் மாய நகரத்தில் தாங்களும் சேர்ந்து உலவுவார்கள். அதைத் தவிர வேறு எந்த உள்ளுறை பொருளையும் தேடப் போவதில்லை.

அதே சமயம் நிறைய கதைகள் படித்துப் பழகிய பிள்ளைகள், சிறகுகளுடன் தோன்றும் சிறுவன் பிகாவைக் காணும் தருணம் பரிணாமத்தின் புதிர் பற்றியும், காடனுக்கே மானீயைப் பற்றி அதிகம் தெரியும் என்று அசிதன் சொல்லும் போது அதன் தொனிப்பொருள் என்ன என்றும் யோசிக்கவும் செய்யலாம்.


ஏழு நாட்களும் ஏழு நிறங்களில் தோற்றமளிக்கும் நகரமும், வான் குள்ளர்களும் பெருங்கரடியுமாகத் தோன்றும் விண்மீன்கள் கொஞ்சம் அறிவியலையும், வீட்டில் வசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப கதவுகளில் மாறிக் கொண்டே இருக்கும் எழுத்துகள் மனித உளவியலையும் துணைக்கழைத்துக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது. கதை முழுவதும் இதுபோன்ற கேலிகளும் கேள்விகளும், கதைசொல்லிகளின், அவர்கள் காலங்காலமாகக் கையளித்துச் செல்லும் கதைகளின் அழியாத்தன்மையும் அவற்றிலிருந்து கசியும் வெளிச்சமும் வெகு இயல்பாக விரவியிருக்கின்றன.


பெரியவர்கள் குழந்தைகளுக்கான கதையை எழுதினாலும் வாழ்வின் அனுபவங்களால் கிளைக்கும் கேள்விகளையும் பார்வைகளையும் தவிர்க்க இயலாதுதான். மில்னேயின் Winne the Pooh -வும் கென்னத் கிரகாமின் Wind in the Willows -ம் சிறாருக்காக மட்டுமே எழுதப்பட்டவையா என்ன

ஆனால், கதையின் வெவ்வேறு சம்பவங்களை இணைக்கும் மையச்சரடு பலவீனமாகத்தான் இருக்கிறது. அசிதனும், ஓரளவு மியோவும் மானீயும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வருவது மட்டுமே கதையின் சம்பவங்களை இணைக்கப் போதுமானதாக இல்லை. இன்னொன்று, அசிதனை இன்னும் உற்சாகமான ஒருவனாகப் படைத்திருக்கலாமோ என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க இயலவில்லை. கொஞ்சம் சிடுசிடுப்புடன் இருக்கும் ஒருவனாகவே பல சமயங்களில் இருக்கின்றான்.

வாசிக்கையில் இன்னொன்றும் புலப்பட்டது. ஆங்கிலம் கலக்காமல் எழுதியிருக்கும் மொழி நடை சரளமாகப் படிப்பதற்கு ஏதுவாக இருந்தது.

ஏழுதலை நகரம், எஸ் ராமகிருஷ்ணன்
ஓவியங்கள் மணிவண்ணன்
சிறார் நாவல், தேசாந்திரி பதிப்பகம்
விலை 200

0Shares
0