தங்களது மேற்கின் குரல் நேற்றிரவு முடித்தேன். சிறிய நூல், அனுபவம் பெரியது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அனுபவம். அதிகமாக அடிக் கோடுகள் மற்றும் குறிப்புகள் எடுத்து கொண்ட புத்தகம் இது.
ஒரு நாள் தனிமையின் நூறு ஆண்டுகள் தொடங்கி இருந்தேன். தற்செயலாக Gabriel Garcio Marquez மற்றும் தனிமையின் நூறு ஆண்டுகள் பற்றிய கட்டுரை இந்நூலில் படித்தேன். அதில் இருந்து மேற்கின் குரல் தொடங்கியது. தனிமையின் நூறு ஆண்டுகள் முடித்து தங்களது Marquez கட்டூரை மறுபடியும் படித்தேன். தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் Marquez வாழ்க்கை முறை, வாழைப்பழத் தோட்டம், அர்க்காதியோ குடும்பம், பேரப் பிள்ளைகள் உள்ள ஒற்றுமை என்னுள் பரவசத்தை ஏற்படுத்தியது. மற்றுமொரு Marquez பற்றிய கட்டுரை இல் Marquez தன்னுடைய அறையில் மஞ்சள் பூக்களை வைத்திருப்பார் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். தனிமையின் நூறு ஆண்டுகளில் ஒரு கட்டத்தில், மஞ்சள் மலர்கள் மகந்தோ நகரத்தில் மழை போல பெய்து கொண்டிருக்கும். இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்த பொழுது மன எழுச்சிக்கு உள்ளானேன். எழுத்தாளனுடைய நம்பிக்கைகள் அவனுடைய எழுத்தின் மூலம் வடிவம் கொண்டு நூற்றாண்டு கடந்து என் போன்ற ஒரு வாசகன் மனதில் குடி கொள்கின்றன.
நெடுஞ்சாலை பற்றிய ஒரு சிறுகதையில் தாங்கள் இவ்வாறு ஒரு வரியை எழுதி உள்ளீர்கள்,” நெருக்கடி மனிதர்களை ஒன்று சேர்கிறது, இருப்பதை பகிர்ந்து கொள்ள வைக்கிறது”. எவ்வளவு உண்மை. வாழ்க்கை இந்த தருணத்திலும், 2015 சென்னை வெள்ளம் ஏற்பட்ட போதும் இதனை உணர்த்தியது. ஆனால் அந்தக் கதையில் உள்ளது போல நெருக்கடி முடிந்தவுடன் மனிதர்கள் தங்கள் பழைய நிலைக்கு திரும்புகிறார்கள்.
நூல் கொடுத்தது பேரனுபவம். உலகின் சிறந்த ஆசிரியர்களையும், அவர்தம் எழுத்துகளையும் என் போன்ற எளியவர்களுக்கு அறிமுகம் செய்யும் தங்களுக்கு நன்றிகள் மட்டுமே போதாது
– பிரசன்ன குமார்