குறுங்கதை 67 பாஷோவின் தோழி

ஜென் கவிஞர் பாஷோவின் தோழியும், சாமுராய் சுனேரியின் மனைவியும் ஆறு குழந்தைகளின் தாயுமான டென் சுடேஜோ எப்போதாவது தான் கவிதைகள் எழுதுவாள். அதுவும் சமைக்கிற நேரம் தான் அவளுக்குக் கவிதைகள் மனதில் தோன்றும். சமையலறைச் சுவரில் வரையப்பட்டிருந்த கொக்கின் அருகில் சென்று தன் மனதிலிருந்த கவிதையை அவள் மெல்லிய குரலில் பாடுவாள். ஒவியக்கொக்கு தான் அவளது கவிதையின் வாசகன். இறக்கை விரிந்து பறக்கும் வெண்ணிறமான அந்தக் கொக்கு கேட்டால் போதும் என்று டென் சுடேஜோ மகிழ்ச்சி அடைந்தாள்.

அவளும் பாஷோவும் ஒரே ஆசிரியரிடம் படித்தவர்கள். அவளது திருமணத்திற்கு முன்பு ஒரேயொரு முறை அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது டென் சுடேஜோ கவிதைகளைப் பற்றி நிறையப் பேசினாள். தனது கவிதைகள் சிலவற்றை அவரோடு பகிர்ந்து கொண்டாள். எத்தனை அழகான கவிதைகள் என்று பாஷோ வியந்து பாராட்டினார். அவர்கள் பிரியும்போது பாஷோ அவளுக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார்

“ஒரே மரத்திலிருந்தாலும்

இலைகள் இரண்டும்

உதிர்ந்தே பூமியில் ஒன்று சேருகின்றன.“

அவளும் பாஷோவிற்கு ஒரு கவிதை எழுதிக் கொடுத்தாள்

“இரண்டு நீர்த்துளிகள்

சந்தித்துக் கொண்டுவிட்டால்

பிரிக்க முடியாத ஒரே துளியாகி விடுகின்றன“

பாஷோ மிகுந்த மகிழ்ச்சியோடு அந்தக் கவிதையை ஏற்றுக் கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு டென் சுடேஜோவை அவர் சந்திக்கவேயில்லை.

தனது நீண்ட பயணத்தின் ஊடே  அவர் டென் சுடேஜோவின் ஊருக்கு வந்து சேர்ந்தார். அவளது வீடு தேடிச் சென்று தன் வருகையைப் பற்றி அவளிடம் தெரிவிக்கும் படி பணிப்பெண்ணிடம் தெரிவித்தார். அவரைப் போன்ற  அற்ப நாடோடியை வீட்டினுள் அனுமதிக்கமுடியாது என்று வெளியே துரத்தி அனுப்பினார்கள்.

பாஷோ பணிப்பெண்ணிடம் தன் சார்பாக ஒரு கவிதையைச் சொல்லி அனுப்பினார்

“மரத்திற்குத் தெரியும்

குளத்தில் ஒளிரும் நிலவு

குளத்திற்குச் சொந்தமானதில்லை“

அந்தக் கவிதைக்குப் பதிலாக டென் சுடேஜோ ஒரு கவிதையைச் சொல்லி அனுப்பினாள்

“குளிர்கால ஆகாசம்

காகிதக் கொக்கு ஆசைப்படுகிறது.

பறப்பதற்கு.“

அவளது நிலையைப் புரிந்து கொண்ட பாஷோ தனித்திருந்தாலும் நீர்த்துளியின் ஈரம் மறைவதில்லை என்றபடியே ஊரை விலக்கி நடக்கத் துவங்கினார்.

••

0Shares
0