குறுங்கதை 66 கப்பல் நூலகம்

ஜே.எஸ்.பிரதானா என்ற கப்பலில் ராமபத்ரன் நூலகராகயிருந்தார்.. ஆங்கிலம், பிரெஞ்சு ஸ்பானிஷ் உள்ளிட்ட பதினாறு மொழிகளில் வெளியான புத்தகங்கள் அங்கிருந்தன. 1950களில் அந்தக் கப்பலின் கேப்டனாக இருந்த வின்சன்ட் ஸ்மித் தீவிர வாசிப்பாளர் என்பதால் அரிய புத்தகங்களை வாங்கிச் சேகரித்திருந்தார்

ராமபத்ரன் கப்பல் நூலகத்தின் பொறுப்பாளராகப் பணிக்குச் சேர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. வருஷத்தின் ஒன்பது மாதங்கள் கப்பலில் வேலை. மூன்று மாதங்கள் விடுமுறை. அப்போதும் அவர் சொந்த ஊருக்குப் போனதில்லை. துறைமுக நகரங்களில் புத்தகங்கள் வாங்குவதற்காகக் கடைகடையாகத் தேடி அலைவார். மூன்று மாத காலத்திற்குள் ஆயிரம் புத்தகங்களுக்கும் மேலாகச் சேகரித்துவிடுவார். பின்பு அவற்றைக் கப்பலுக்குக் கொண்டு சென்று வரிசையிட்டுப் பதிவு செய்வது அவரது வேலை.

பயணிகள் கப்பல் என்பதால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். ராமபத்ரனுக்குக் கப்பலில் சிறியதொரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் பெரும்பாலும் நூலகத்திலே இருப்பார். அவருக்கு உறுதுணை செய்வதற்காக இரண்டு உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்கள் பயணிகள் கேட்கும் புத்தகங்களை எடுத்துத் தருவார்கள். ஆகவே ராமபத்ரன் நிறைய வாசிப்பதற்கு நேரமிருந்தது.

நூலகத்திலே அமர்ந்து வாசிப்பதற்காக மூன்று வட்ட மேஜைகள் இருந்தன. அதில் எப்போதும் சில கிழவர் உட்கார்ந்து எதையாவது படித்துக் கொண்டிருப்பார்கள். முதற்வகுப்பு கப்பற்பயணிகள் நூல்களைத் தனது அறைக்குக் கொண்டு சென்று படிக்கலாம். மாலைநேரம் கப்பலின் மேற்தளத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து இளம் பெண்கள் புத்தகம் வாசிப்பதுண்டு.

மிதந்து செல்லும் நூலகம் என்பது விசித்திரமானது. அது கடலின் மீது சொற்களால் ஆன நிலவெளியை உருவாக்கக் கூடியது.

ராமபத்ரனுக்கு நாவல்கள் படிப்பதில் மட்டும் தான் ஆர்வம். கப்பல் நூலகத்தில் புத்தகம் கேட்டு வருபவர்கள் பெரும்பாலும் வரலாறு சார்ந்தோ, கடற்பயணம் சார்ந்தோ தான் புத்தகம் கேட்பார்கள். சிலர் கவிதை நூல்களைக் கேட்பதுண்டு. அபூர்வமாகச் சிலர் புதிய மொழிகள் கற்றுக் கொள்ளும் துணை நூல்களை வாங்கிப் போவதுண்டு.

ராமபத்ரன் நாவல்களைப் படிப்பதற்கு முக்கியக் காரணமிருந்தது. நாவலைப் புரட்டத் துவங்கியதும் நிலம் கண்முன்னே தோன்றத்துவங்கும். ஊரும் மனிதர்களும் காதலும் குடும்பச் சண்டைகளும் விரிவடையும். தான் கப்பலில் இருக்கிறோம் என்பதையும் முடிவற்ற கடலின் கொந்தளிப்பையும் அவர் மறந்துவிடுவார். நாவலின் சூரியனும் உலகின் சூரியனும் ஒன்றில்லை. நாவலில் பெய்யும் மழை உலகின் மழையை விட வேறானது. அப்படித்தான் நாவலின் மனிதர்களும்.

ராமபத்ரனுக்கு ஒரு பழக்கமிருந்தது. நாவலில் தனக்குப் பிடித்தமான கதாபாத்திரம் ஒன்றிற்குக் கடிதம் எழுதுவார். அக்கடிதம் தான் அக்கதாபாத்திரத்தை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதாகியிருக்கும். சில நேரம் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஆலோசனைகள் சொல்வதாக இருக்கும். ஒன்றிரண்டு சமயம் கதாபாத்திரத்திற்குப் பணஉதவி தேவைப்பட்டால் அனுப்பி வைப்பதாகக் கூடக் கடிதம் அமைந்திருக்கும். இந்தக் கடிதங்களை எழுதுவதன் மூலம் ராமபத்ரன் நாவலுடன் மிக நெருக்கமாவதாக உணர்ந்தார். கடிதங்களை யார் முகவரியிட்டு அனுப்புவது என்ற யோசனையில் நாவலின் பெயரையும் நாவல் வெளியான தேசத்தின் பெயரையும் எழுதிவிடுவார்.

எழுதிய கடிதங்களைத் தபால் பெட்டியில் போடுவதற்குப் பதிலாகத் தனது நூலகத்திலிருந்த சிறிய மரப்பெட்டி ஒன்றில் போட்டுவிடுவார். கதாபாத்திரங்கள் தனக்கு எழுதப்பட்ட கடிதங்களை எப்படி வாசிக்க முடியும் என அவர் யோசிப்பதேயில்லை. நூலகத்தின் மரப்பெட்டியில் அவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் இருந்தன. அன்னாகரீனினாவில் துவங்கி மேடம் பவாரி, லோலிதா, கேப்டன் அஹாப், ஜோசப் கே, வரை பலருக்கும் அவர் கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்றிரண்டு காதல் கடிதங்கள்.

எந்தத் தபால்காரனாலும் நாவலுக்குள் வாழும் கதாபாத்திரங்களிடம் தபால்களை வழங்கமுடியாது தானே. கதாபாத்திரங்களால் நம் வாழ்க்கையை மாற்றவிட முடியும். நம்மால் அதன் வாழ்க்கையை ஒரு போதும் மாற்ற முடியாது என்பது விசித்திரமே.

1979ல் ஜே.எஸ். பிரதானா தனது ஒட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்த போது ராமபத்ரன் கடலை விட்டு நிலத்தில் போய் வாழ வேண்டுமா என வருந்தப்பட்டார். அதை விடவும் நாள் முழுவதும் வசித்த நூலகம் பறிபோனதே என்பது கூடுதல் வருத்தமாக இருந்தது. கப்பல் சிங்கப்பூருக்குக் கடைசிப் பயணத்தை மேற்கொண்டது. நூலகத்திலிருந்து அவருக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம் எனக் கேப்டன் உத்தரவு கொடுத்திருந்தார். ஒரு பெட்டி நிறையத் தனக்குப் பிடித்தமான புத்தகங்களை எடுத்து அடுக்கிக் கொண்டார்

கதாபாத்திரங்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களை என்ன செய்வது என்று யோசித்தார். அவற்றைத் தன்னோடு கொண்டுபோவதில் அவருக்கு விருப்பமில்லை. ஆகவே கடலின் மேற்தளத்திற்கு மரப்பெட்டியைக் கொண்டு சென்று கடிதங்களைக் கடலில் கொட்டினார்.

ஒரு போதும் சந்தித்துக் கொள்ள முடியாத மேடம் பவாரியும், லோலிதாவும், கேப்டன் அஹாப், ஜோசப் கேவும் கடலில் ஒன்று சேர்ந்தார்கள்.

சொந்த ஊர் திரும்பிய ராமபத்ரன் பின் நாவல் எதையும் வாசிக்கவுமில்லை. எந்தக் கதாபாத்திரத்திற்கும் கடிதம் எழுதவுமில்லை

••

2.5.20

0Shares
0