ஷேக்ஸ்பியரின் முன்னால்

டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது ஸ்ட்ராட்போர்ட்,  பிரிட்டீஷ்காரர்கள் அதிகம் வசிக்கும் அழகிய சிறிய நகரம், இங்கே ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதற்காக ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே பிரத்யேகமான குளோப் தியேட்டர் எனும் விஷேச அரங்கினை உருவாக்கியிருக்கிறார்கள், இந்தக் கோளவடிவ அரங்கில் ஒரு நேரத்தில் 1800 பேர் உட்கார்ந்து நாடகம் பார்க்க முடியும்

இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகப்பிரதிகள் நவீனகால ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் மூலவடிவத்திலே நிகழ்த்தப்படுகின்றன, ஒரு நாடகம் மூன்று மணி நேரம் நடைபெறக்கூடியது, ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மரபான தயாரிப்பில் காண்பது ஒரு தனித்துவமான அனுபவம்,

ஸ்ட்ராட்போர்ட்டில் ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியரின் பல்வேறு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த போதும் நாடகத்திற்கான டிக்கெட் கிடைப்பது எளிதானதில்லை, குறைந்த பட்ச டிக்கெட்டின் விலை 50 டாலர், இதற்கு ஒரு மாதகாலத்திற்கு முன்பாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்,

அப்படி எனது கனடா பயணம் உறுதியானதும் எழுத்தாளர் முத்துலிங்கம் ஷேக்ஸ்பியரின் Henry V  பார்ப்பதற்காக சட்டத்தரணி யேசுதாசன் உதவியால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார், மூவருமாக நாடகம் பார்க்க காரில் பயணம் செய்தோம்,

டொரன்டோவில் இருந்து ஸ்ட்ராட்போர்ட்  செல்லும் சாலை மிகவும் அழகானது, வழி முழுவதும் நிலத்தில் ஆங்காங்கே பெரிய வைக்கோல் பிரிகள் சுற்றி வைக்கபட்டிருப்பதைக் காணமுடிந்தது, இங்கிலாந்தின் பண்ணை வீடுகள் போல சிறிய குளம் ஒன்றுடன் கூடிய அழகிய மாளிகைகள், அதன் முகப்பில் விளையாடும் வளர்ப்பு நாய்கள், மற்றும் வாத்துகள், வீட்டின் முன்னால் தொங்கும் மரத்தாலான தபால்பெட்டி, அடர்த்தியாக பழமரங்கள் அடர்ந்த பண்ணை,  முன்பு குதிரைகள் நின்றிருந்த இடத்தில் தற்போது நவீன ரகக் கார், மற்றபடி இங்கிலாந்தின் கிராமப்புறத்தின் ஊடே பயணம் செய்வது போலவே இருந்தது

பிரிட்டீஷ்காலனியாக இருந்த நாடுகள் எல்லாவற்றிலும் பிரிட்டனைச் சேர்ந்த ஊர்பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன, குறிப்பாக அமெரிக்காவிலும் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பிரிட்டீஷ் பெயர் கொண்ட நகரங்கள் நிறைய இருக்கின்றன,

அமெரிக்கா பிரிட்டீஷ் காலனிய எதிர்ப்பை வெளிப்படுத்துவது போல சாலைவிதிகள், ஆங்கிலச்சொற்கள், பேச்சுமுறை  என பல விஷயங்களிலும் பிரிட்டீஷ் நடைமுறைக்கு எதிராகத் தன்னை மாற்றிக் கொண்டிருந்த போதும் பெரும்பான்மை அமெரிக்க நகரங்களின் பெயர்கள் பிரிட்டீஷ் பெயர்களே,

ஸ்ட்ராட்போர்ட், ஷேக்ஸ்பியர் பிறந்த ஊர், இது இங்கிலாந்தில் உள்ளது, ஆனால் பிரிட்டீஷ்காரர்கள் தாங்கள் குடியேறிய நாடுகள் எல்லாவற்றிலும் ஒரு ஸ்ட்ராட்போர்டை உருவாக்கியிருக்கிறார்கள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அமெரிக்கா என பல தேசங்களிலும் இதே பெயரில் ஊர்களிருக்கின்றன

கனடாவின் ஸ்டராட்போர்ட் பசுமை படர்ந்த குளுமையான ஊர், சாலைகளில் ஈரம் ததும்புகிறது, சிறியதும் பெரியதுமான புத்தகக் கடைகள், காபிஷாப், வீடியோ சென்டர், கலைப்பொருள் விற்பனையகம் என ஊரில் எங்கு பார்த்தாலும் ஷேக்ஸ்பியர் தான்,  எழுத்தாளனைக் கொண்டாடுவதற்காகவே உருவாக்கபட்ட ஊராக இருப்பது மனமகிழ்ச்சி தந்தது

பிரதானச் சாலையை விட்டு விலகி நாடக அரங்கு அமைந்துள்ள உட்புற சாலையில் பிரவேசிக்கும் போது ஆள் நடமாட்டமேயில்லை, மேபிள் மர இலைகள் பழுத்து உதிர்ந்து கிடந்தன, அமைதி பொங்கி வழிந்தது, அழகான விக்டோரியா ஏரி, அதில் நீந்தும் வாத்துகள், பெயரறியாத இளமஞ்சள் நிற பூக்கள் உதிர்ந்து கிடந்த கல்பாவிய நடைபாதையைக் கடந்து அரங்கினை நோக்கிச் சென்றேன்.

ஆள் உயர ஷேக்ஸ்பியர் சிலை வரவேற்றது, அதன் அருகில் கூடாரம் அமைப்பது போன்ற பணியில் உள்ள ஆட்களின் சிலைகள், ஷேக்ஸ்பியரின் உருவம் பதித்த கொடி பறந்து கொண்டிருந்தது

மிகப்பெரிய நாடக அரங்கு, அதை ஒட்டிய பூங்கா, ஷேக்ஸ்பியர் பற்றி அரிய நூல்கள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை, காபிஷாப், மற்றும் நீருற்றுகள்,  நான் போயிருந்த மதியக்காட்சி துவங்க ஒரு மணி நேரமிருந்தது, நாடகம் பார்ப்பதற்காக நிறைய முதியவர்கள் வந்திருப்பதைக் காண முடிந்தது,

விசாரித்தபோது முதியவர்கள் நாடகம் பார்ப்பதற்கு கட்டணச் சலுகை உண்டு என்றும் குறிப்பிட்ட இந்தக் காட்சி அது போன்ற ஒன்று என்பதால் நிறைய முதியவர்கள் தம்பதிகளாக வந்திருக்கிறார்கள் என்றும் அறிய முடிந்தது,

கிறிஸ்தோபர் பிளம்பர் என்ற புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் நடிகர் இங்கே நிறைய நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார், அவர் பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார், அவர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றிய கண்காட்சி அரங்கின் ஒரு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சாலைப்பயணம் முழுவதும் ஷேக்ஸ்பியரைப்பற்றியே பேசிக்கொண்டு வந்தோம், அ.முத்துலிங்கத்துடன் பேசிக் கொண்டிருப்பது ஒரு அற்புதமான அனுபவம், அவர் மற்றவர் பேசுவதை ஆழ்ந்து ரசிப்பவர், அவர் கேட்கும் கேள்விகள் எவரையும் மனம்விட்டு பேச வைத்துவிடும், முத்துலிங்கத்தின் தனித்துவம் அவரது பிரத்யேகச் சிரிப்பு,  பாதரசம் சிந்தியது போல மினுமினுக்கும் வசீகரம் கொண்ட சிரிப்பது, உலக இலக்கியங்களைத் தேடித்தேடி  படித்திருக்கிறார், ஆப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி உலக அனுபவம் பெற்றிருக்கிறார், ஆனாலும் நாமாகக் கேட்காமல் அவர் தன்னைப் பற்றிய எதையும் பகிர்ந்து கொள்வதில்லை, தனது எழுத்து பற்றி அதிகம் பேசுவதில்லை, அதை அடக்கம் என்று மட்டும் சொல்லமுடியாது, எழுத்தின் வல்லமையை உணர்ந்தவர்கள் தன்னைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று தான் தோன்றுகிறது

சட்டத்தரணி யேசுதாசனும் நிறைய வாசிக்க கூடியவர் என்பதால் பேச்சு ஷேக்ஸ்பியரின் முக்கியக் கதாபாத்திரங்களைப் பற்றியதாக நீண்டு கொண்டிருந்தது, தமிழில் ஷேக்ஸ்பியரின் முக்கிய நாடகங்கள் யாவும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்தேன், அத்துடன் காரைக்குடியை சேர்ந்த அரு. சோமசுந்தரம் தனது பொன்முடி பதிப்பகம் வழியாக 15க்கும் மேற்பட்ட நாடகங்களை மொழியாக்கம் செய்து ஷேக்ஸ்பியர் வரிசை என வெளியிட்டுள்ளதைச் சொன்னேன்,

கனடாவில் இயங்கி வரும் ஆங்கில நாடகச் சூழல்  குறித்து நிறைய தகவல்களை முத்துலிங்கம் பகிர்ந்து கொண்டார், டொரன்டோவில் நடைபெற்று வரும் தமிழ்நாடக முயற்சிகள் மிகுந்த உத்வேகம் அளிக்கின்றன, நவீன தமிழ்நாடகத்தின் எதிர்காலம் கனேடியத் தமிழர்கள் கையில் இருப்பதாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டேன்,

ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப் என்ற எனது சிறுகதையை மனவெளி கலையாற்றுக் குழுவினர் சிறப்பாக மேடையேற்றினார்கள், அது பற்றிய சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டேன், நாடகத்துறையை சார்ந்த நண்பர்கள் செல்வன், நவம் மாஸ்டர், செழியன்,  புராந்தகன், ஜெயகரன், ரஞ்சனி, துஷி என பலரையும் சந்தித்து உரையாடியது மனநிறைவாக  இருந்தது என்று பகிர்ந்து கொண்டேன்,

கார் ஸ்ட்ராபோர்டினுள் நுழைந்தவுடன் ஒரு புத்தகக் கடையில் நிறுத்தச் சொன்னேன், கால்மணி நேரத்தேடுதலில் முக்கியமான புத்தகம் ஒன்றும் அகப்படவில்லை, வெளியே வரும்போது சாலையோரம் தற்செயலாக ஒரு அணிலைப் பார்த்தேன்,  சாம்பல் நிறத்தில் கீரியளவு பெரியதாக இருந்தது, கனடாவில் பார்த்த முதல் அணில் இது தான் என்றேன், எப்படியிருக்கிறது என்று யேசுதாசன் கேட்டார்,

கனடா மக்களைப் போலவே சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கிறது, தமிழ்நாடாக இருந்தால் இந்த நேரம் அடித்துக் கொன்று சாப்பிட்டிருப்பார்கள் என்று சொல்லி சிரித்தேன்

ஐந்தாம் ஹென்றி ஒரு வரலாற்று நாடகம், ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களைப் புரிந்து கொள்ள இங்கிலாந்தின் வரலாற்றை அவசியம் தெரிந்திருக்க வேண்டும், ஷேக்ஸ்பியரின் பெரும்பான்மை நாடகங்கள் அரச சபையில் நிகழ்த்தப்பட்டவை என்பதால் எந்த அரசன் முன்பாக நாடகம் நிகழ்த்தப்பட்டதோ அதற்கு ஏற்ப அதற்குள் உள் அரசியல் இருக்கும், ஐந்தாம் ஹென்றி நாடகம் 1599ல் எழுதப்பட்டது.  பிரான்சின் மீதான இங்கிலாந்தின் வெற்றி குறித்த பெருமிதத்தைச் சொல்லும் நாடகமது,  

ஆயிரம் பேருக்கும் மேலாக நாடகம் துவங்குவதற்கு முன்பாகவே வந்து காத்திருந்தார்கள், அதில் நாங்கள் மூவர் மட்டுமே தமிழ் பேசுகின்றவர்கள், இந்தியர்கள் என ஒருவரைக்கூட காணமுடியவில்லை, காபியும் ரொட்டிதுண்டுகளும் சாப்பிட்டுவிட்டு நாடக அரங்கில் போய் அமர்ந்தோம்,

மரத்தாலான பெரிய மேடை, விசேச ஒளியமைப்பிற்காக அரங்கின் வெவ்வேறு இடங்களில் பிரகாசமான விளக்குகளைப் பொருத்தியிருந்தார்கள், மேடையின் முன்பாக உள்ள மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தோம், நாடகத்தில் எழுபதிற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டார்கள், அதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நடிகர்கள், கோரஸ் மூலமாக நாடகம் துவங்கியது,

அறுபது ஆண்டுகாலமாக இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதாக அறிவித்தார்கள், ஆரம்பக்காட்சியில், இந்த நாடகத்தை இதற்கு முன்பாக எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று  நாடகஇயக்குனர் அறிமுகமாகி கேட்டபோது பலரும் கைகளை உயர்த்தினார்கள், முதன்முறையாக நாடகம் பார்க்க இருக்கின்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு இயக்குனர் மேடையினுள் மறைந்து போனார்,

எக்காளம் முழங்கியது, முரசு அடிக்கப்பட்டது, காலம் பின்னோக்கிப் புரண்டு படுத்துக் கொண்டது போல அரங்கில் இருள் சூழ இங்கிலாந்து அரசனின் வருகையும் படையெடுப்பிற்கான முகாந்திரமும் துவங்கியது, தலையைத்திருப்பி அரங்கினைச் சுற்றிப் பார்த்தேன், இருக்கைகள் யாவும் நிரம்பியிருந்தன, ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்,

நாடகம் பார்க்க ஐம்பது பேர் கூட வராமல் போய்விட்ட இன்றைய தமிழகச் சூழல் நினைவிற்கு வந்து மனதை வருத்தமடைய செய்தது, கனடாவிலும் தொலைக்காட்சி இருக்கிறது, நிறைய சேனல்கள் ஒளிபரப்பாகின்றன, அதற்கான பார்வையாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மரபான ஒரு நாடகத்தைப் பார்க்க விருப்பமிருக்கிறதே, அந்த மனதை நாம் ஏன் இழந்து போனோம். 

இன்று தமிழகத்தில் சினிமா, தொலைக்காட்சி தவிர மற்ற அத்தனை கலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகின்றன, எத்தனையோ கிராமிய கலைகள் நிகழ்த்த சந்தர்ப்பமின்றி  முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டன, மகத்தான கிராமியக் கலைஞர்கள் வீதிகளில் பலூன் விற்கப் போய்விட்டார்கள், நமது நாடக மரபை, கிராமியக் கலைகளைக் காப்பாற்ற வேண்டிய நாமே அதைக் குழி தோண்டி புதைத்து வருகிறோம்.

இங்கிலாந்து பிரெஞ்சு தேசத்தின் மீது படையெடுத்து சென்ற யுத்த நிகழ்வே கதைக்களம் என்பதால் போரும் படைமுகாமும், போர்வீரர்களை உற்சாகப்படுத்த ஹென்றி நிகழ்த்தும் வீர உரைகளும், பிரெஞ்சு தேசத்தின் அரச சபையும், போரில் தோற்ற பிரெஞ்சு தேசத்தின் இளவரசியை ஹென்றி காதலிப்பதும் முடிவில் ஹென்றிக்கே அவளை மணமுடித்து, இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய இரண்டு தேசங்களும் நேசநாடுகளாவது தான்  நாடகத்தின் முக்கிய நிகழ்வுகள்

ஹென்றியாக நடித்தவர் Aaron Krohn என்ற இளம் நடிகர், நாடகமாக வாசிக்கையில் மனதில் உருவாகியிருந்த ஹென்றியின் பிம்பத்திற்கும் இவருக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள், இவரது தோற்றம் ஹென்றியின் பிம்பத்தோடு பொருந்தவில்லை, ஆனால் ஆரோன் தேர்ந்த நடிகர் என்பதை அவரது உடல்மொழியாலும், வசனங்களைத் தெளிவாக, உணர்ச்சிமயமாக வெளிப்படுத்தும் முறையிலும் நிரூபித்தார்

நாடக மேடையினை எளிய அரங்கப் பொருள்களை கொண்டே பிரம்மாண்டமானதாக உருமாற்றிக் காட்டினார்கள், ராஜா, ராணி போன்றோரின் உடைகளைத் தவிர மற்ற உடைகள் எளிய முறையில் உருவாக்கப்பட்டிருந்தன, அதிக ஒப்பனைகள் இல்லை, போர்வீரர்களின் கவசங்கள், உடைவாள்கள், பீரங்கிகள் அந்த காலத்தைய அதே வடிவமைப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தன,

மேடையில் குளியல் காட்சி ஒன்று நடைபெற்றது, குளித்துவிட்டு இளவரசி கேதரின் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக எழுந்து நின்று மாற்று உடைகளை சுற்றிக் கொண்டாள், அரங்கில் யாரோ எச்சிலை விழுங்கும் சப்தம் துல்லியமாக கேட்டது.

மேடையில் பால்ஸ்டாப்பைத் தூக்கிலிடும் காட்சியில் உயரமான தூக்கு கம்பத்தில் உடல் தொங்குவது சர்க்கஸ் போலிருந்தது. மரக்குதிரைகளை மேஜையோடு இணைத்துப் பொருத்திப் பயன்படுத்தினார்கள், யுத்தமே நாடகத்தின் பிரதான நிகழ்வு, அதற்காக பீரங்கி முழங்கியது, வெடி வெடித்தது, வீரர்கள் மோதிக் கொண்டார்கள், இரவில் காயம்பட்ட வீரர்கள் குளிர்காயும் காட்சி நாடகத்தின் முக்கியத் தருணம், அந்த நிமிசத்தில் யுத்த களத்தின் வலியும் வேதனையும் சொற்களின்றி காட்சியின் வழியாகவே புரியும்படியாக உருவாக்கப்பட்டிருந்த்து,

மேடையின் தளமானது பல்வேறு சிறிய ரகசியத் திறப்புகளைக் கொண்டிருந்த்து, ஆகவே அதற்குள்ளிருந்து நாற்காலிகளும், மேடைப்பொருள்களும் மேலே வருவதும் திடீரென மறைந்து போவதுமாக இருந்தன, நாடகத்தில் நடித்தவர்களில் பெரும்பான்மை பிரிட்டீஷ் மற்றும் பிரெஞ்சு வம்சாவழிகள், ஆசியர்களும் கறுப்பினத்தவரும் குறைவே, ஒளி மற்றும் இசை இரண்டும் பார்வையாளர்களை ஒரு மேஜிக் நிகழ்ச்சி பார்ப்பது போல  தன்னை மறக்க செய்திருந்தது

பார்வையாளர்கள் சில நகைச்சுவையான வசனங்களின் போது மில்லிமீட்டர் அளவில் சிரித்தார்கள், பலத்த சிரிப்பு பிரிட்டீஷ் சம்பிரதாயத்திற்கு உரியதில்லை என்பது இன்றும் நடைமுறையில் இருக்கிறது

மூன்று மணிநேரம் நாடகம் முடிந்து வெளியே வந்த போது அடுத்த காட்சிக்காக அதே அளவு ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருந்தார்கள், இங்கேயே வந்து ஹோட்டலில் தங்கி நாடகம் பார்த்து போகிறவர்கள் அதிகம் என்றார் முத்துலிங்கம்.

நீண்ட பகல் கொண்ட நாட்கள் என்பதால் நல்ல பகல்வெளிச்சத்துடன் இரவு எட்டு மணிக்கு டொரன்டோ வந்து சேர்ந்து அங்குள்ள சரவண பவன் உணவகத்தில் சாப்பிட்டோம்,

டொரன்டோவில் உள்ள தமிழக உணவங்கள் யாவிலும் சென்னையில் கிடைக்கின்ற அதே உணவுகள் கிடைக்கின்றன, ஒரே வித்தியாசம் உணவின் பெயர் மட்டும் ஒன்றாக இருக்கிறது, மற்றபடி சுவை ஒரு சம்பந்தமில்லாதது, தோசை  சாப்பிடுவது சூயிங்கத்தைத் தின்பது போல சவைக்க வேண்டியிருந்தது. இதுவாவது கிடைக்கிறதே என்ற ஆசையில் அதைச் சாப்பிட்டு முடித்து இரவு அறைக்கு திரும்பி ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஈபுக்கை இன்டெர்நெட்டில் தேடி வாசித்தேன்,

We few, we happy few, we band of brothers.

என்ற ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற வரி இந்த நாடகத்தில் தான் இடம்பெற்றிருக்கிறது, ஹென்றியின் வீர உரையில் இடம்பெற்றுள்ள இந்த வரி நாடகம் பார்க்கும் போது காதில் விழவேயில்லை

ஷேக்ஸ்பியரை வாசிப்பது ஒரு தனித்த அனுபவம், நாடகமாகப் பார்ப்பது இன்னொரு அனுபவம், இரண்டையும் ஒரு சேர மேற்கொள்ளும்போது தான் நாடகத்தைப் புரிந்து கொள்ள முடியும், ஒரு வரி படித்தாலும் முழுநாடகம் படித்தாலும் ஷேக்ஸ்பியர் தேனைப்போல ருசிக்க கூடியவர், அவரது மேதமையின் வீச்சைப் புரிந்து கொள்ள திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டும்,  

அந்த இரவு முழுவதும் ஷேக்ஸ்பியரில் ஆழ்ந்திருந்தேன்,

தியேட்டர் லேப் நாடகக் குழுவினை நடத்தி வரும் நண்பர் ஜெயராவ் ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தை சென்னையில் நிகழ்த்த இருக்கிறார், அதற்கான ஒத்திகைகள் தற்போது நடைபெற்று வருகிறது, பிரம்மாண்டமான நிகழ்வாக அமைய உள்ள அந்த நாடகத்தை காண வேண்டும் என்ற ஆசை அந்த இரவில் மேலோங்கியது

ஆனால் தமிழ் சூழலில் நாடகத்திற்கான வரவேற்பைப் பற்றி யோசிக்கும் போது மனம் சோர்வடைந்து போனது.

When we are born we cry that we are come to this great stage of fools என்ற ஷேக்ஸ்பியரின் வரி நினைவில் எழுந்து அடங்கியது

அன்று உறங்குவதற்கு முன்பாக , ஒரு நாள் முழுவதும் ஷேக்ஸ்பியரோடு சேர்ந்து இருக்க காரணமாக அமைந்த அ.முத்துலிங்கத்திற்கும் யேசுதாசனுக்கும் மனதிற்குள்ளாக நன்றி சொல்லிக் கொண்டேன்.

••••

0Shares
0