புகழ்பெற்ற மெக்சிக எழுத்தாளரான கார்லோஸ் ஃபுயெண்டெஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான Myself with Others: Selected Essays வாசித்துக் கொண்டிருந்தேன்.
அதில் அவர் எப்படி எழுதத் துவங்கினார் என்றொரு கட்டுரையிருக்கிறது. அக்கட்டுரை அவரது பிறப்பில் துவங்குகிறது. ஃபுயெண்டெஸ்ஸின் அம்மா சினிமா பார்க்கச் சென்றிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு பாதி படத்தில் எழுந்து மருத்துவமனைக்குப் போனதைக் கேலியுடன் நினைவுகூறுகிறார்.
ஃபுயெண்டெஸ்ஸின் தந்தை மெக்சிக அரசின் அயல்நாட்டு தூதுவராகப் பணியாற்றியவர். அமெரிக்காவில் தான் ஃபுயெண்டெஸ்ஸின் பள்ளிப்பருவம் கழிந்தது. அமெரிக்காவில் வசித்த போதும் ஒரு மெக்சிகராகவே அவரை வளர்க்க முயன்றார் தந்தை. இதற்காக மெக்சிகோவின் வரலாற்றைத் தொடர்ந்து படிக்கும்படி செய்தார். பதினாறு வயதிலே ஃபுயெண்டெஸ் தனது கற்பனை தேசமான மெக்சிகோவிற்குத் திரும்பினார்.
மெக்சிகோ வாழ்நாள் முழுவதும் ஃபுயெண்டெஸ்ஸை ஒரு அந்நியரைப் போலவே நடத்தியது. அதே நேரம் அமெரிக்காவில் அவர் மெக்சிகர் என்றே அறியப்பட்டார். இந்த அடையாளச் சிக்கல் ஃபுயெண்டெஸை மிகவும் பாதித்தது. அது குறித்து விரிவான விளக்கத்தை எழுதியிருக்கிறார்.
முதற்கட்டுரையில் ஃபுயெண்டெஸ் ஒரு சம்பவத்தை நினைவுகூறுகிறார். அது கவிஞர் பாப்லோ நெருதாவைப் பற்றியது.
தெற்கு சிலியில் உள்ள சுரங்கப்பகுதி ஒன்றில் ஒரு தொழிலாளி தனது வேலையை முடித்துவிட்டு வந்து இரவில் நெருப்பை மூட்டி குளிர் காய்வதை பார்த்துக் கொண்டிருந்தார்.
அழுக்கடைந்த சட்டை அணிந்த அந்தத் தொழிலாளி ஒரு கிதாரை எடுத்து மீட்டியபடியே உணர்ச்சிபூர்வமாக ஒரு பாடலை பாடத்துவங்கினான். அப்பாடல் நெருதாவின் கான்டோ ஜெனரலிலுள்ள ஒரு கவிதை. அப்படியொரு சூழலில் அக்கவிதையைக் கேட்கும் போது மகிழ்ச்சியாகயிருந்தது.
இதை நெருதா கேட்டிருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார் என்றார் ஃபுயெண்டெஸ்
அவன் புரியாதவன் போல யார் நெருதா எனக் கேட்டான்..
நீ பாடிய பாடலை எழுதியவர் என ஃபுயெண்டெஸ் சொன்னதும், அவன் அதை மறுத்தபடி இதெல்லாம் வாய்மொழியாகப் பாடப்பட்டு வரும் பாடல் என்றான்.
நெருதா அந்த அளவு சிலி தேசத்தின் மக்கள் கவிஞராகியிருந்தார். அவரது காதல்கவிதைகள் நாடோடிப்பாடல்கள் போல வீதிதோறும் பாடப்பட்டன. ஸ்பானிய மொழியை அவரைப் போலப் புத்துருவாக்கம் செய்தவரில்லை என ஃபுயெண்டெஸ் வியந்து கூறுகிறார்
மெக்சிகோவில் சட்டம் படிக்கச் சென்ற போது டான் மேனுவல் பெத்ரேசோ என்ற முன்னாள் இயக்குனர் அவரிடம் ஒரு அறிவுரை கூறினார்
“சட்டவிதிகளை ஒதுக்கிவைத்துவிட்டு தஸ்தாயெவ்ஸ்கியையும் பால்சாக்கையும் படி, குற்றவாளிகளைப் பற்றியும் தண்டனை பற்றியும் அதிகம் தெரிந்து கொள்வாய் “
அதுதான் தனது இலக்கியவாசிப்பின் திறவுகோலாக இருந்தது என்கிறார்.
இன்னொரு கட்டுரையில் தனது எழுத்து பற்றிய ஃபுயெண்டெஸ்ஸின் கூற்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
I always tried to tell my critics: Don’t classify me, read me. I’m a writer, not a genre
••
ருஷ்ய எழுத்தாளர் கோகல் குறித்த முக்கியமான கட்டுரை ஒன்று இத்தொகுப்பிலுள்ளது. அதில் இரண்டு வரிகள்
Kafka writes in his diary: “I hate everything that is not literature.”
Gogol foreshadows him: “I have no life outside of literature.”
Kafka, Borges, MilanKundera, Gabriel García Márquez, Octavio Paz போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள் குறித்தும், லத்தீன் அமெரிக்க சினிமா, கலை, அரசியல் எனப் பல்வேறு விதமான அனுபவங்களையும் மிகவும் நுண்மையாக எழுதியிருக்கிறார் ஃபுயெண்டெஸ்.
••