இது வேறு சினிமா

பாங்காங்கில் உள்ள திரைப்படவளாகம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள்  இருந்தன. ஆனால் அதில் ஒன்றில் கூட பாங்காங்கில் தயாரிக்கபட்ட படங்கள்திரையிடப்படவில்லை. அத்தனையும் ஹாலிவுட் படங்கள்.அந்தத் திரைப்படங்களைக் காண வருகின்றவர்களில் பெரும்பான்மை உள்ளுர் இளைஞர்கள். அவர்களுக்குச் சினிமா பார்ப்பது பெண்களுடன் சேர்ந்து பொழுது போக்குவதற்கான கேளிக்கை நிகழ்வு.. சினிமா அரங்கம் வணிகத்தின் அத்தனை சாத்தியப்பாடுகளும் நிரம்பியதாக இருந்தது. அங்கே சினிமாவும் காட்டுகிறார்கள் என்பதே உண்மை. .

அமெரிக்க வணிக சினிமாவின் சந்தை இன்று உலகெங்கும் விரிந்து பரவியிருக்கிறது. செங்கல்பட்டு அருகில் உள்ள சிற்றூர்களில் கூட  தமிழாக்கம் செய்யப்பட்ட டிம்பர்டன் படம் ஒடுகிறது. ஒவ்வொரு மாதமும் வெளியாகும் தமிழ்படங்களை விட ஹாலிவுட் மொழிமாற்று படங்களின் எண்ணிக்கை அதிகம். டிவிடியின் வருகை ஒடும்ரயில்களில் துணிப்பையில் வைத்து அகிரா குரசேவாவும் பொலான்ஸ்கியும் கிம்கிடிக்கும், மார்டின் ஸ்கார்சசியும் மலிவு விலையில் விற்பனையாகும் நிலை வந்திருக்கிறது.

ஹாலிவுட் திரைப்படங்களின் மிதமிஞ்சிய பெருக்கம் வெறும் வணிகம் மட்டுமில்லை.மாறாக சினிமா பற்றிய நமது அகப்பார்வையை உருவாக்குவதில் அது  ஆழ்ந்த பாதிப்பை உருவாக்குகின்றது ஆங்கிலப்படங்கள் மட்டுமே உயர்ந்தசினிமா என்ற பொதுக்கருத்தை வெகுமக்கள் மனதில் எளிதாக ஏற்படுத்துகின்றன. அத்துடன் அமெரிக்காவே உலக சினிமாவின் ரட்சகன் என்ற நம்பிக்கையை விதைப்பதற்கான எளிய தந்திரங்களாகவே அவை உள்ளன.

மிதமிஞ்சிய சாசகமும் வன்முறையும்,அமெரிக்க கலாச்சாரச் சூழலின் நுண்மையற்ற வெளிப்பாடுகள் கொண்ட  காட்சிகளும், மிதமிஞ்சிய தொழில்நுட்ப பிரம்மாண்டமும், குற்றஉலகின் மீதான வசீகரமுமமே  ஹாலிவுட் படங்களின் பிரதான அம்சம்.

யுத்தம், வேற்றுகிரகமனிதர்கள், மதச்சர்ச்சைகள், பாலியல் பிறழ்வுகள், பகட்டான தேசப்பற்று, விசித்திர விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் உருவாகும் சிக்கல்கள், பிரிந்த குடும்ப உறவுகள். ரக்பி அல்லது விளையாட்டு சார்ந்த சாகசம், மாபியா உலகம் இவை தான் ஹாலிவுட்டின் பிரதான கதைக்களங்கள். அமெரிக்க சினிமாவை இன்றும் தீர்மானிப்பது ஸ்டுடியோக்களின் வணிக அதிகாரம் மட்டுமே.

ஹாலிவுட் சினிமாவிற்கு வெளியில் எதுவுமில்லை என்ற பொதுபிம்பத்தை உருவாக்குவதே அதன் பிரதான நோக்கம்.  இதற்கு அப்பால்  பிற நாடுகளில் சினிமா வளர்ச்சியடையும் போது அதன் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தங்களது வணிக சந்தைக்குள் இழுத்துக் கொள்வதில் அமெரிக்க என்றுமே முன்னோடியாக இருக்கிறது. அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கபட்ட குழந்தை போன்றதே அமெரிக்க சினிமா.

உலகில் எந்த மூலையில் ஒரு நல்ல இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர் எழுச்சி கொண்டாலும் அவரை உடனே அவரை விலைக்கு வாங்கிவிடும். செல்லம் கொடுக்கபட்ட குழந்தை விரும்பிய பொம்மையை வாங்கி ஒருமுறை விளையாடிவிட்டு வீசி எறிந்துவிடுவது போல அமெரிக்க சினிமாவும் தன் ஆசை தீர்ந்தவுடன் அவரை கழட்டிவிட்டுவிடும்.இது தான் இயல்பு என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

காட்சித்தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட உருவாக்கதில் புதிய பரிசோதனைகள் யாவிலும் இன்று அமெரிக்க சினிமாவை விட ஆசிய சினிமாவே மேம்பட்டதாக உள்ளது. குறிப்பாக அனிமேஷன் துறையில் ஜப்பான் உலகிற்கே முன்னோடியாக இருக்கிறது. இருபத்தைந்து வருசங்களுக்கு முன்பு வரை ஹாலிவுட் திரைப்படங்களின் பாதிப்பில் வளர்ந்துவரும் நாடுகளில் திரைப்படங்கள் உருவாக்கபட்டன.இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அவதார் போன்ற படத்திற்கு கூட இந்திய புராணீக பிம்பங்கள் தேவைப்படுகின்றன.

ஹாலிவுட் வணிக சினிமா ஆசியநாடுகளிலிருந்து உரிமையை வாங்கி ஆங்கிலப்படங்களை தயாரிக்கத் துவங்கியிருக்கிறது.

கொரியப்படமான Infernal Affairs ஐ  அமெரிக்காவின் பிரபல இயக்குனர் மார்டின் ஸ்கார்சசி The Departed,, என்ற ஆங்கிலப்படமாக மறுஉருவாக்கம் செய்து சிறந்த படம் மற்றும் இயக்கத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார். Kwak Jae-yong இயக்கி மாபெரும் வெற்றிகண்ட My Sassy Girl திரைப்படம் ஹாலிவுட்டில் அதே பெயரில் யான் சாமுவேல் இயக்கத்தில் மறுஉருவாக்கம் பெற்றது. ஆனால் வெற்றிபெறவில்லை.

சமகால ஆசிய சினிமாவினை கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஐரோப்பியத் திரைப்படங்களை விடவும் ஆசிய சினிமா நெருக்கமானதாகவும் தனக்கான புதிய அழகியலை, கதைசொல்லும் முறையை, காட்சிபடுத்துதலில் தனித்துவத்தை உருவாக்கி வருவதையும் கண்கூடாகக் காணமுடிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற பெரும்பான்மை உலகப்படவிழாக்களில் ஆசியப்படங்களே முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றன. ஈரான் மற்றும் சீனா, தென்கொரிய திரைப்படங்களை காண்பதற்கு திரைப்பட விழாக்களில் பெரும்திரளனாவர்கள் கூடுவதும், அந்தப் படங்கள் குறித்த விமர்சனங்கள். விவாதங்கள் உலகு தழுவி நடைபெறுவதும் ஆசிய சினிமாவின் மீது உலகின் கவனம் குவிந்திருப்பதையே காட்டுகிறது.

ஆசிய சினிமா நான்கு பிரிவுகளாக உள்ளது. அதாவது கிழக்கு ஆசிய சினிமா. சீனா ஐப்பான் கொரியா ஹாங்காங் மற்றும் தைவான் நாட்டுப் படங்கள் இதில் அடக்கம். அடுத்தது தென்கிழக்கு ஆசிய சினிமா இதில் கம்போடியா தாய்லாந்து ஆகியவையும், மத்திய ஆசிய சினிமா என்ற பிரிவில் ஈரான், துருக்கி இஸ்ரேல் ஆகியவையும்  தெற்காசிய சினிமா என்பதில் இந்தியா, பாகிஸ்தான். நேபாளம், போன்றவை அடங்குகின்றன. ஆசிய சினிமாவிற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று அதன் வணிக திரைப்படங்கள். மற்றது கலைப்படங்கள் மற்றும் பரிசோதனை முயற்சிகள்.

கலைப்படங்கள் என்றதும் அவை நாற்பது ஐம்பது பேர் மட்டுமே பார்க்கும் படம் என்ற நமது பொதுப்புத்தி இங்கே செல்லுபடியாவதில்லை. பெரும்பான்மை கலைப்படங்களும் வணிக ரீதியாக  வெற்றி பெறுகின்றன என்பதே இந்த நாடுகளில் உண்மை. கொரியாவின் கிம் கி டிக் படங்களே இதற்கு சாட்சி.

ஆசியநாடுகளின் வணிக திரைப்படங்கள் கூட இன்று ஆங்கிலபடங்களின் சம்பிரதாய கதை சொல்லல் முறையைப் பின்பற்றப்படுவதில்லை. பெரும்பான்மை வணிகப்படங்கள் ஆறு பிரதான கதைக்களங்களிலே உருவாக்கபடுகின்றன. அதில் முதன்மையானது கேங்ஸ்டர் படங்கள் எனப்படும் குற்றபின்புலத் திரைப்படங்கள் இரண்டு வீரக்கலையாக அறியப்படும் மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள். சண்டையிடலை உயர்ந்த சாகசமாக முன்வைப்பவை. மூன்று அமானுஷ்யம் பற்றிய படங்கள். இதில் பேய்ப்படங்கள். மற்றும் விஞ்ஞானப் பயமுறுத்தல்கள் அடக்கம். நான்காவது பதின்வயதின் காதல்கதைகள். ஐந்தாவது பாலுணர்வு சார்ந்த வெளிப்படையான மற்றும் மறைமுகமான கதையம்சம் கொண்டவை. ஆறாவது வரலாற்று திரைப்படங்கள்.

நான் கவனம் கொள்ளவிரும்புவது ஆசிய சினிமாவின் கலை மற்றும் பரிசோதனை படங்கள் பற்றி மட்டுமே. அதில் ஒவ்வொரு நாடும் தனக்கான தனி அழகியலையும் அரசியல் பார்வையும், சாதனைகளையும் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளின் சினிமா வரலாறு மிக நீண்டது.

1960களில் பிரான்சில் உருவான புதிய அலைத்திரைப்படங்களின் வருகையும் கெஹதே சினிமா என்ற இதழின் வழியாக உருவான சினிமா விவாதங்களும் விமர்சனங்களும் உலகம் முழுவதும் புதிய சினிமா குறித்த தேடுதல்களைத் துவக்கியது. கிட்டதட்ட அதற்கு சமமானதொரு எழுச்சியே இந்த பத்தாண்டுகளில் ஆசிய சினிமாவில் உருவாகி உள்ளது.  ஆசிய சினிமாவின் எழுச்சியலைகள் என்று வேண்டுமானால் இதைக் குறிப்பிடலாம்.

எது ஆசிய சினிமாவை இத்தனை சிறப்பானதாக ஆக்குகிறது. ஈரான். கொரியா சீனா ஜப்பான் என்று வேறு வேறு நாடுகளில் படங்கள் உருவாக்கபட்ட போதும் இந்த திரைப்படங்களுக்குள்  சில பொதுக்காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது இவை ஹாலிவுட் சினிமாவிற்கு எதிரான புதிய அழகியலை முன்வைக்கின்றன. தினசரி வாழ்வை நெருங்கிச் சென்று படமாக்குகின்றன. தங்களது கலாச்சார வாழ்க்கையை, அதன் நுண்உணர்வுகளை,  புறக்கணிக்கபடும் கலைகள் சார்ந்த அவலத்தை அடித்தட்டு மக்களின் அழகியலை முன்வைக்கின்றன. அரசியல் மற்றும் பொருளாதார குற்றங்கள் பற்றிய நேரடியான விமர்சனங்களை இப்படங்களில் காணமுடிகிறது. பெண்கள் மீதான வன்குற்றங்களை இப்படங்கள் உரத்துப் பேசுகின்றன. இன்றைய இளைஞர்களின் தடுமாற்றமிக்க மனப்போக்கும், அமெரிக்க கலாச்சார பாதிப்புகளையும் சுட்டிக்காட்டுகின்றன. இப்படி திரைப்படங்களை வாழ்க்கை குறித்த தீவிர விசாரணைக்கான கலைவடிவமாக மாற்றியிருப்பதே இதன் சிறப்பம்சம்.

ஸ்டுடியோக்களின் வணிகப் பிடிக்குள் இருந்து பெரிதும் தங்களை விடுவித்துக் கொண்டவை ஆசியப்படங்கள். பராம்பரியமான திரைப்பட ஸ்டுடியோக்கள் கூட இன்று ஆசிய நாடுகளில் செயல் இழந்து முடங்கிப்போயிருக்கின்றன.  அத்துடன் பிரபல தொழில்நிறுவனங்களின் தனித்த முதலீடுகளை பெற்றுக் கொண்டும் வங்கியின் உதவியாலும், அரசு நிதிநல்கையாலுமே இங்கே படங்கள் அதிகமாக உருவாக்கபடுகின்றன. ஐப்பானிய  இயக்குனர்கள் தங்களது சினிமாவிற்கான முதலீட்டை பெரிதும் தொலைக்காட்சி நிறுவனங்களில் இருந்தே பெறுகிறார்கள். அல்லது தொலைக்காட்சிக்கு தங்களின் படங்களின் உரிமையை விற்பதன் வழியே படத்தின் செலவில் அறுபது சதவீத்தை அவர்கள் ஈடுகட்டிவிடுகிறார்கள்.

அரசியல் கெடுபிடிகளும். மதச்சட்டங்களும், தணிக்கை துறையின் கடுமையான கண்டிப்புகளும், தொலைக்காட்சியின் மித மிஞ்சியபெருக்கமும் சவால்களாக இருந்த போதும் அவை யாவும் தாண்டி இன்று புதிய இளந்தலைமுறை இயக்குனர்கள் உருவாகி தங்களது முதல்படத்திலே உலகின் கவனத்தைத் திருப்பி விடுகிறார்கள். சுயசார்பாக படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் அதிகமாவதுடன், திரைப்படப் பள்ளிகள் மிக அதிமாக இருப்பதும் ஆசிய நாடுகளில் தான்.

கடந்த பத்தாண்டுகளில் ஆசிய சினிமாவின் போக்கினை மாற்றியமைத்ததில் முக்கிய பங்கு வகித்த இயக்குனர்களாக தைவானின் Edward Yang,  ,  சீனாவின் Wang Xiaoshuai, மற்றும் Lu Chuan இலங்கையை சேர்ந்த Prasanna Vithanage ஹாங்காங்கின் Fruit Chan, Wong Kar-wai துருக்கியின், Nuri Bilge Ceylan ஈரானை சேர்ந்த Reza Mirkarimi Jafar Pan ஐப்பானின் Hirokazu Koreeda , Takeshi Kitano இஸ்ரேலை சேர்ந்த  Amos Gitai கொரியாவின் Kim Ki-duk, Kwak Jae-yong. இந்தியாவின் Pan Nalin, Rituparno Ghosh, Vishal Bharadwaj, AnuragKashyap போன்றவர்களைக் குறிப்பிடுவேன்.  ஒவ்வொருவருக்கும் சுயமான அகப்பார்வையும், வெளிப்பாட்டு முறையும், சினிமா இலக்கணத்தை மாற்றி எழுதிய தனித்துவமும் இருக்கிறது

ஆசிய சினிமாவின் கதைசொல்லும் முறையும் காட்சிபடுத்துதலும் மிகவும் நுட்பமானது. அவை பொது மாதிரிகளிலிருந்து உருவாக்கபடுவதில்லை. சிட் பீல்டின் திரைக்கதை அமைப்பிற்குள் ஒரு போதும் அடங்குவதுமில்லை. இலக்கிய வடிவங்களைப் போல சுயமான கதைசொல்லும் முறையும் கவித்து எழுச்சியும், ஆழ்ந்த புரிதலும் கொண்டவையாகவே இருக்கின்றன

லூசான் இயக்கிய மவுண்டன் பட்ரோல் (Mountain Patrol) என்ற சீனப்படம் திபெத்திய பனிப்பிரதேசமான கோஜெலியில் அரிய வகை கலைமான்களை வேட்டையாடும் திருடர்களைப் பிடிக்கும் காவற்படையின் போராட்டத்தை விவரிக்கிறது. நேஷனல் ஷியாகிரபி சேனல் தயாரித்துள்ள இந்தப் படம் சமகால பிரச்சனையொன்றை தீவிரமாக முன்வைக்கின்றது.

படம் ஒரு காவலரின் சாவில் துவங்குகிறது. கோஜெலி என்ற பனிப்பிரதேச மலைகிராமம் ஒன்றில் சாவுச்சடங்கு நடைபெறுகிறது. ஒரு மனிதன் இறந்து போயிருக்கிறான். அவனுக்குப் பௌத்த முறைப்படி சாவுச்சடங்குகள் அனுஷ்டி க்கபடுகின்றன. அந்த மனிதன் காவல்பணியின் போது கொல்லப் பட்டிருக்கிறான். அதைப் பற்றிய செய்தி சேகரிப்பதற்காக பீஜிங்கிலிருந்து காயூ என்ற பத்திரிக்கையாளன் வந்து சேர்கிறான். உண்மையைக் கண்டறிவதற்காக மான் வேட்டைக்காரர்களைப் பிடிக்கச் செல்லும் படைப்பிரிவுடன் தானும் பயணம் மேற்கொள்கிறான். ரிதாய் என்பவன் தலைமையில் அந்தப் படை செல்கிறது.

மனித நடமாட்டமேயில்லாத பனிவெளி. கண் கொள்ளாத வெண்ணிறம். நடுங்கும் மூச்சுக்காற்று. மிதக்கும் மேகங்கள் நிரம்பிய ஆகாசம். அப்படியான நிலவெளியில் கிராமத்து மக்கள் தாங்களாகவே உருவாக்கிய காவல்படையுடன் பயணம் செய்கிறான் காயூ.

மலையின் ஒரு இடத்தில் தடுப்புக் காவல் முகாம் உள்ளது. அதில் ஒரேயொரு மனிதன் தனிமை தாங்க முடியாமல் தனக்குத் தானே எதையோ முணுமுணுத்துக் கொண்டு தொலை தூர மலையை வேடிக்கை பார்த்தபடியிருக்கிறான். தொலைவில் வாகனம் வரும் சப்தம் அவனைச் சந்தோஷம் கொள்ளச் செய்கிறது. மனிதர்களைப் பார்ப்பது தான் அவன் சந்தோஷத்தின் ஆதாரப் புள்ளி. தன்னைத் தேடி வரும் கிராம மக்களோடு ஒன்று சேர்ந்து குடிக்கிறான்.  பனிப்பிரேதசத்தினைக் கடக்கும் வாகனங்களை சோதனையிடுகிறார்கள். அதில் ஒருவனிடம் கடத்தல் பொருள் கிடைக்கிறது. அதைப் பறிமுதல் செய்கிறார்கள். அப்போது மலையின் அதிஉயரத்தில் மான்வேட்டைக்காரர்கள் புகுந்திருப்பதாக தகவல கிடைக்கிறது, அவர்களைத் தேடி வாகனத்தில் செல்கிறார்கள்.

வழியெங்கும் தோலிற்காக கொல்லப்பட்ட மான்களின் இறந்த உடல்கள்  சிதறிக்கிடக்கின்றன. அந்தக் காட்சியின் போது பனியில் கசிந்து கொண்டிருக்கும் குருதியும். கொன்று வீசி எறியப்பட்ட மான்களின் விறைத்த உடல்களும் இயற்கையின் மீது எந்த அளவு வன்முறையைப் பிரயோகம் செய்கிறோம் என்பதை வார்த்தைகள் இன்றி உணர வைக்கின்றன.

வேட்டைக்காரர்கள் அதிக தூரம் தப்பிபோயிருக்கமுடியாது என்று காவல்படையினர் துரத்திப் போகிறார்கள். அவர்கள் நினைத்தது போலவே வாகனத்தடம் தெரிகிறது. அதைப் பின்தொடர்கிறார்கள். வழியில் வாகனம் பழுதாகிவிடுகிறது.ஆனாலும் துரத்திச் சென்று வேட்டைகாரர்களை பிடிக்கிறார்கள்.  பிடிப்பட்டவர்களை விசாரிக்கும் போது. அவர்கள் நகரில் வாழும் யாரோ ஒரு கடத்தல் வியாபாரியிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு அவனுக்காக மான்களை கொல்வதாகச் சொல்கிறார்கள். பகலிரவாக கைதிகளுடன் காவல்படையின் பயணம் நீள்கிறது.

ஆனால் எதிர்பாராமல் இன்னொரு வேட்டைக்கும்பல் தாக்கி காவலர்களிடமிருந்து வேட்டைக்காரர்களை விடுவிக்கிறது. அதில் இரண்டு தரப்பும் சண்டை நடக்கிறது. சண்டையில் ரிதாய் படுகாயமடைகிறான். அத்துடன் காவல் படையினரைப் பிணையக்கைதியாக பிடித்துக் கொள்கிறார்கள். அதில் பத்திரிக்கையாளன்  காயூவும் பிடிபடுகிறான். அவனை வேட்டைக்காரனாக உள்ள ஒரு கிழவன் நன்றியோடு விடுவித்து தப்பிப் போகும்படியாக செய்கிறான்.

மிக சிறிய பட்ஜெட்டில் உருவாக்கபட்ட இப்படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே நடிகர்கள்.மற்ற யாவரும் திபேத்திய மலைவாசிகளே. பனியில் வாகனங்கள் செல்லமுடியாத அதிஉயரத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. படத்தயாரிப்பின் போது அதன் நிர்வாகி ஒருவர் பனிபொழிவில் சிக்கி இறந்து போனார். படக்குழுவினர்கள் அத்தனை பேரும் நோய்மையுற்றார்கள். தொடர்ந்த பனிப்பொழிவு காரணமாக நாளைக்கு சில மணி நேரங்களே படமாக்க முடியும் என்ற சூழல் நிலவியது. இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி உருவாக்கபட்ட இந்தத் திரைப்படம் ஆறு உலகத் திரைப்பட விருதுகளைப பெற்றது. அத்துடன் சீனஅரசு திபெத்திய கலைமான்களை பாதுகாப்பதற்கான சிறப்புச் சட்டம் ஒன்றினை நிறைவேற்றி கோஜெலி பகுதியை சிறப்பு காப்பகமாக  அறிவிக்க காரணமாக இருந்திருக்கிறது.

மவுண்டன் பட்ரோல் படத்தின் ஒளிப்பதிவு உலக்தரமிக்கது . நிலக்காட்சி ஒவியங்களைப்போல அற்புதமானது. அகன்ற பனிப்பிரதேச காட்சிகளிலும், மிருகங்களை வேட்டையாடும் போதும், இறந்த மிருகங்களை சேகரிக்கும் அதிகாலை காட்சியிலும், நீண்ட வெளிர்நீல வெட்டவெளியும் மேகங்களுமான காற்றும் அலைவுறும் நிலக்காட்சியின் போதும் பார்வையாளர்கள் தங்கள் உடலில் குளிர் நிரம்புவதை உணர்கிறார்கள்.

ஒரு ஆவணப்படமாக உருவாக்கவேண்டிய பொருளை கதையாக்கி அதை வெற்றிகரமான திரைப்படமாக மாற்றியதில் இயக்குனர் லூசான் பாராட்டுக்குரியவர்.தொழில்முறை நடிகர்கள் மற்றும் விசேச அரங்கஅமைப்புகள்,ஸ்பெஷல் எபெக்ட்ஸ் போன்று எவ்விதமான சிறப்புவசதிகளும் இன்றி சாமானியர்களை நடிகர்களாக்கி அவர்களின் வழியே புதிய வகை திரைப்படங்களை உருவாக்கமுடியும் என்பதற்கு இது ஒரு முன்னோடி.

லூசான் இதன் முன்னால் ஒரேயொரு படமே இயக்கியிருக்கிறார். . முதல்படம் மிஸ்ஸிங் கன்(TheMissingGun) ஒரு போலீஸ்காரன் தன் துப்பாக்கியை;j தொலைத்துவிடுவதையும் அதைத் தேடி அலைவதையும் பற்றியது. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தில் இரண்டாவது படத்தை உருவாக்கியிருக்கிறார்.

வேட்டையாடப்படல் வனவிலங்குகளுக்கு மட்டுமானதில்லை. பெருநகரில் மனிதர்களும் காரணமின்றி வேட்டையாடப்படுகிறார்கள் என்பதையே Three Monkeys என்ற துருக்கிய படம் விவரிக்கிறது. இந்த படத்தை இயக்கியிருப்பவர் Nuri Bilge Ceylan. கான்ஸ் திரைப்பட விழாவில் 2008 ம் ஆண்டிற்கான சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றது இப்படம்.

துருக்கியில் உள்ள அரசியல்வாதியான செர்வாத் ஒரு நாளிரவு காரில் வரும்போது எதிர்பாராமல் ஒரு மனிதனை அடித்துக் கொன்றுவிடுகிறான். இந்த விபத்து பற்றிய செய்தி வெளியானால் தனது அரசியல் வாழ்க்கை பாதிக்கபடும் என்பதால் தனது கார் டிரைவரான அயூபை அழைத்து அவனுக்குத் தேவையான பணமும் வசதியும் செய்து தருவதாகச் சொல்லி குற்றத்தை அவன் ஏற்றுக் கொண்டு சிறைக்குச் செல்லும்படியாகச் சொல்கிறான். அயூப் தன் குடும்பத்தினரை நினைத்து முதலில் தயங்குகிறான். அவர்களுக்குத் தேவையான அத்தனை பொருளாதார வசதிகளையும் தான் செய்து தருவதாக சொல்கிறான் செர்வாத்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட அயூப்பிற்கு ஒரு ஆண்டு கால தண்டனை கிடைக்கிறது. அவன் சிறைக்குப் போகிறான். தன் குடும்பத்தின் நலனிற்காகவே அப்படி நடந்து கொள்வதாக மனைவியிடம் சொல்லிச் செல்கிறான் அயூப். ஆனால் அவன் இல்லாத நாட்களில்  செர்வாத்துடன் நெருங்கிப் பழகத் துவங்குகிறாள் டிரைவரின் மனைவி ஹேசர். அவர்களது மகன் இஸ்மாயில் தன் இஷ்டம் போலச் சுற்றியலைகிறான். செர்வாத் ஹேசருடன் தொடர்ந்து பாலுறவு கொள்கிறான். அது இஸ்மாயிலுக்குத் தெரிந்து போவதால் அவனை சமாளிக்க பொய் மேல் பொய்யாக சொல்கிறாள் ஹேசர். அவளைப் போலவே இஸ்மாயிலும் அவள் கேட்பதற்கும் பொய்யே சொல்கிறான்.

இந்தச் சூழலில் ஜெயிலில் இருந்து வெளியாகும் டிரைவர் அயூப் தனக்கு வேண்டிய பணத்திற்காக செர்வாத்தை நெருக்குகிறான்.அப்போது தன் மனைவிக்கும் செர்வாத்திற்கும் கள்ளஉறவு இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு பொய்யைச் சுமந்து கொண்டிருப்பதை உணர்கிறான. தன் அம்மாவோடு செர்வாத் கள்ள உறவு கொண்டிருப்பதை சகிக்க முடியாமல் இஸ்மாயில் ஒரு நாள் செர்வாத்தை கொலை செய்துவிடுகிறான். இனி வாழ்வில் என்ன பிடிப்பு இருக்கிறது என்று அறியாமல் அயூப் தனித்திருப்பதோடு படம் நிறைவு பெறுகிறது.

தீய விஷயங்களைக் காணக்கூடாது. தீய சொற்களைக் கேட்க கூடாது. தீய சொற்களை பேசக்கூடாது என்பதை உணர்ந்துவதற்கான அந்த மூன்று குரங்குகளும் நிஜமான மூன்று மனிதர்களின் அடையாளம் ஆகிவிடுகிறார்கள். சமகால அரசியல் வாழ்க்கை. தனிநபரின் சுயநலம் நம்பிக்கைககள் யாவும் பொய்யில் தான் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்று கிளைவிட்டு பெருகக்கூடிய குற்றங்களில் இருந்து நவீன மனிதன் தப்பிப்போக முடியாது என்கிறது இப்படம். சமூகமும் தனிநபர்களும் பிரிக்கமுடியாதபடி கசடுபடிந்து போயிருக்கிறார்கள் தங்களை கறைபடுத்திக் கொள்கிறார்கள். நம்பிக்கைகள், அன்பு, குடும்பஉறவு யாவும் வெறும் அரத்தமற்ற சொற்கள் மட்டுமே. நிஜவாழ்க்கை எதையும் பார்க்கவும் கேட்கவும் சொல்லவும் முடியாததாகவுமே மாறியிருக்கிறது என்ற உண்மையை இப்படம் மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

தார்கோவெஸ்கியின் பாணியில் அமைந்த காட்சிபடுத்துல் முறையும் மிகக் குறைவான வசனங்களும் கதாபாத்திரங்களின் உளவியலைப் பிரதிபலிப்பது போன்ற ஒளிப்பதிவும். தேர்ந்த இசையாக்கமும் இந்த படத்தின் கூடுதல் சிறப்புகள். படம் முழுவதும் என்ன செய்வது என்று தெரியாத வெறுமையும் நிசப்தமும் நிரம்பி வழிகிறது. இன்மையை காட்சிப்படுத்துவதில் படம் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.  படத்தின் துவக்கக் காட்சியில் சாலையில் ஒரு மனிதனை அடித்து கொன்றுவிட்டதை விடவும் தேர்தல் நெருங்கும்போது இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது தன் அரசியல்வாழ்வினை மாற்றிவிடும் என்று யோசனை செய்யும் செர்வாத்தின் அண்மைகாட்சி கோணங்கள் வழியே அவன் மேற்கொள்ளப்போகும் தந்திரங்கள் பளிச்சிடுகின்றன.

அது போலவே தன்னுடைய அம்மா அரசியல்வாதியோடு படுக்கையை பகிர்ந்துகொள்வதை இஸ்மாயில் சாவித்துவாரம் வழியாகப் பார்க்கும் காட்சியில் உள்ளே அம்மாவின் பாலுறவு காட்டப்படுவதில்லை. மாறாக அவன் அடையும் எரிச்சலும் கோபமுமே மட்டுமே காட்சிப்படுத்தபடுகிறது. முடிவில் அரசியல்வாதியை இஸ்மாயில் கொலை செய்தது கூட காட்சிப்படுத்தபடவில்லை. நான் தான் கொன்றேன் என்று மட்டுமே அவன் கூறுகிறான்.

குடும்பத்திற்காகத் தன்னைத் தியாகம் செய்து கொள்வதாக நினைக்கிறான் அயூப். ஆனால் அவனோடு உள்ள திருமண உறவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்த காரணத்தால் தான் மனைவி ஹேசர் அரசியல்வாதியோடு கள்ள உறவு கொள்கிறாள். கணவன் மனைவி இருவருமே தங்கள் பிள்ளையின் எதிர்காலம் கருதியே இதைச் சொல்வதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால் மகன் அவர்கள் மீது துளியும் அன்பு கொண்டவன் இல்லை. இந்த வெறுமையும் உறவிற்குள் ஏற்படும் கசப்பும் உலகெங்கும் ஒன்று போலவேதானிருக்கிறது போலும்.

மனவேற்றுமை கொண்ட குடும்பம் ஒன்றாக வாழ்ந்த போதும் உடைந்த மண்பாத்திரம் போன்று ஒன்று சேர்க்கவே முடியாதது என்பதைத் துருக்கியப்படம் விவரிக்கிறது. இதற்கு நேர்எதிரான தளத்தில் அன்பும் நேசமும் இருந்தால் கையளவு இடத்தில் கூட மனிதர்கள் சந்தோஷமாக வாழமுடியும் என்பதை முன்வைக்கிறது  Nobody Knows என்ற திரைப்படம். ஜப்பானிய இளந்தலைமுறை இயக்குனரான Hirokazu Kore-eda இயக்கியது.

தன் பனிரெண்டு வயது மகனுடன் கெய்கோ என்ற பெண் டோக்கியோவில் உள்ள ஒரு குடியிருப்பில் மிகச்சிறிய அறை ஒன்றை வாடகைக்கு எடுக்கிறாள். அந்த அறையின் உரிமையாளர் இரண்டு பேருக்கும் அதிகமாக அங்கே தங்கக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகிறார். தனித்து வாழும் தானும் தன் மகன் அகிராவும் மட்டுமே வசிக்க போவதாக உறுதி அளிக்கிறாள். அதன்படியே அவர்கள் வீட்டுப்பொருட்களுடன் மிகப்பெரிய பை ஒன்றுடன் அந்த வீட்டிற்கு குடியேறுகிறார்கள்.

அந்த பையிலிருந்து அவளது மூன்று குழந்தைகள் வெளியே வருகிறார்கள். வீட்டுக்காரன் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களை அறைக்குள்ளாகவே அடைத்து வைக்கிறாள் கெய்கோ. அந்தப் பிள்ளைகள் கெய்கோவிற்கு பிறந்தவர்கள். ஆனால் ஒவ்வொருவரின் அப்பாவும் வேறுவேறு நபர்கள்.

வீட்டுக்காரனுக்குத் தெரிந்தால் தன்னைத் துரத்திவிடுவான் என்பதால் கெய்கோ தன் பிள்ளைகள் எவரும் சப்தம் போடக்கூடாது. பால்கனி பக்கமே வரக்கூடாது. ஒடியாடி விளையாடக்கூடாது என்று கட்டுபாடுகள் விதிக்கிறாள். எட்டு பத்து வயதான போதும் அந்தப் பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்பபடுவதில்லை. அகிராவிற்குப் படிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அவனது சகோதரிக்குப் பியானோ வாசிக்க விருப்பம். அடுத்த பையனோ படுசுட்டி. கடைசி பையன் எந்நேரமும் விளையாட ஆசைப்படுகின்றவன். இத்தனை பேரையும் யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைக்கிறாள் அம்மா. சில நாட்கள் அவர்களுக்குக் கதை சொல்லி ஆறுதல் படுத்துகிறாள். சிலவேளை பரிசுகள் வாங்கி தருகிறாள். சில நாட்கள் இரவில் தாமதமாக வீடு திரும்புகிறாள்.

புதிய வீட்டில் குழந்தைகளைப் பராமரிக்கும்  பொறுப்பு அகிராவிற்கு வந்து சேர்கிறது. அவன் கடைக்குப் போகிறான். சமைக்க உதவி செய்கிறான். வீட்டுக்காரன் கண்ணில் படாமல் குழந்தைகளை ஒளிப்பதற்கு திண்டாடுகிறான். ஒரு நாள் அவர்களது அம்மா தனக்கு புதிய காதலன் கிடைத்துவிட்டான் என்று பிள்ளைகளை மறந்து தனியே விட்டுப் போய்விடுகிறாள்.

இதை அறிந்த அகிரா அந்த உண்மை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு சகோதர்களை தானே  வளர்ப்பது என்று முடிவு செய்கிறான். கையில் இருந்த பணம் தீர்ந்து போகவே அகிரா தன்னை நம்பிய பிள்ளைகளை வளர்ப்பதற்காக போராடுகிறான். பிறர் அறியாமல் அவர்களை வெளியே அழைத்துக் கொண்டு போகிறான். பயந்து பயந்து வீட்டிற்கு கொண்டுவருகிறான். இப்படியாக வேடிக்கையாகவும் வேதனையாகவும் நாளும் பொழுதும் நீள்கின்றன.

முதலில் மின்சாரம் போய்விடுகிறது. அடுத்து தண்ணீர் கிடைக்கவில்லை. மூன்றாவதாக உணவுப் பிரச்சனை ஏற்படுகிறது. இதை எப்படி சமாளித்து தங்களை மறைத்துக் கொண்டார்கள் என்பதை வலியோடு விவரிக்கிறது படம்

குழந்தைகளின்  கண்வழியாகவே உலகம் காட்டப்படுகிறது. ஒருவர் மீது மற்றவர் காட்டும் அக்கறையும் அம்மாவின் அன்பிற்காக கொள்ளும் ஏக்கமும், பசியிலும் தங்களுக்குள் உள்ள பிணைப்பை விட்டுவிடாமலிருக்கும் ஒட்டுதலுமாக படம் குழந்தைகளின் அகஉலகை மிகவும் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறது. 1988ல் ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றிலிருந்து இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது.

பனிரெண்டு வயதான அகிரா ஒரு தகப்பனைப் போலவும் தாயைப் போலவும் மற்ற குழந்தைகளின் மீது அக்கறை கொள்கிறான். நெருக்கடியான நேரங்களில் அவன் முகம் கொள்ளும் மாற்றங்கள் தீராதவலி தருபவை. இயல்பான, அற்புதமான நடிப்பு. கான்ஸ் திரைப்பட விழாவில் இந்த சிறுவன் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற போது ஜப்பானே சந்தோஷத்தில் ஆழ்ந்தது.

சிறிய அறை என்பதால் கேமிரா அதற்குள்ளாகவே நகர்கிறது. குழந்தைகளின் முகங்களை கேமிரா கடக்கும் போது வெகுஇயல்பாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு நெருக்கடியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது கேமிராவின் வழியாகவே உணர்த்தப்படுகிறது. மெல்லிய கிதார் இசை இந்தத் துயரை அதிமாக்குகிறது.

குழந்தைகளின் அகஉலகை இயல்பாகவும், உண்மையாகவும் வெளிப்படுத்துவது ஆசியபடங்களின் பிரதான பலம்.ஈரானிய படங்கள் அதற்கு சிறந்த உதாரணங்கள். நேர்த்தியான படமாக்கலும் ,எளிமையும், கதை சொல்வதில் உணர்ச்சிப்பூர்வமான ஈடுபாடும்,, சக மனிதன் மீதான அக்கறையுமே ஆசிய சினிமாவின் தனித்துவ குணங்கள்.அது தான் இன்றும் இப்படங்கள் உலகப்படவிழாக்களில் தொடர்ந்து வெற்றி அடைவதற்கான  அடிப்படைக் காரணமாகயிருக்கிறது.

***

0Shares
0