கவிதை கேட்ட நரி

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் மிக முக்கியமானவர் மட்சுவோ பாஷோ, அவரைப்பற்றிய Basho And The Fox என்ற புத்தகத்தைப் படித்தேன், டிம்.ஜே,மேயர்ஸ் குழந்தைகளுக்காக எழுதிய சித்திரங்களுடன் உள்ள புத்தகமது

பாஷோ டோக்கியோ நகரின் புறவெளியில் இயற்கையோடு இணைந்தபடி சிறிய குடிலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர், பாஷோ என்பதற்கு வாழைமரம் என்று தான் பொருள், அவரது வீட்டின் அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு செர்ரி மரமிருந்தது, இந்த மரத்தடியில் அமர்ந்தபடியே அதன் பூக்களை ரசிப்பது பாஷோவிற்கு பிடித்தமான ஒன்று,

அந்த மரத்தில் பழுக்கும் செர்ரி பழங்கள் சுவையானவை, ஆனால் மரம் பழுக்கத் துவங்கியதும் அருகாமையில் வசிக்கும் நரி ஒன்று எல்லா செர்ரிப் பழங்களையும் பிடுங்கித் தின்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தது,

அப்படி ஒரு நாள் நரி செர்ரிப் பழங்களை தின்ன வருவதைக் கண்ட பாஷோ ஒரு தடியை எடுத்து அந்த நரியை விரட்டினார். நரி அந்தத் தடிக்கு பயப்படாமல் அவரைப்பார்த்து சொன்னது

பாஷோ ஒரு கவிஞராக இருந்து கொண்டு நீங்கள் செய்வது நியாயமில்லை,

நரி ஏதோ தந்திரம் செய்கிறது என்று புரிந்து கொண்ட பாஷோ அதனிடம் கேட்டார்

நீ திருட்டுத்தனமாக செர்ரிப் பழங்களை தின்பது தவறில்லையா,

அதற்கு அந்த நரி பதில்சொன்னது

தவறுதான், ஆனால் செர்ரிப் பழங்களை  எனக்குப் பிடித்திருக்கிறது, ஒன்று செய்வோம், நீங்கள் பெரிய கவிஞர் தானே, எனக்குப் பிடித்தமான ஒரு கவிதையைச் சொல்லுங்கள், அது உன்னதமான கவிதையாக இருந்தால் நானோ, எனது நண்பர்களோ இனி ஒருபோதும் உங்கள் செர்ரிப் பழங்களைத் திருடி தின்னமாட்டோம், ஒரு வேளை நீங்கள் தோற்றுப்போய்விட்டால்  செர்ரி மரத்தில் உங்களுக்கு ஒரு உரிமையும் கிடையாது, அத்தனை பழங்களும் எங்களுக்கே சொந்தம்.

இதைக்கேட்ட பாஷோ ஆச்சரியமடைந்தார்,

அதே நேரம் ஒரு கவிஞராக அது தன்னைச் சவாலுக்கு அழைக்கிறது, ஒரு நரியை சந்தோஷப்படுத்தகூடிய ஒரு கவிதையை தன்னால் பாடமுடியாதா என்ன, என்று நினைத்துக் கொண்டு அந்த சவாலை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்

நரி ஏளனமான குரலில் சொன்னது

ஒன்றில்லை, மூன்று வாய்ப்புகள் உங்களுக்குத் தருகிறேன், நீங்கள் தேவையான நாட்களை எடுத்துக் கொண்டு மூன்று ஹைக்கூ கவிதைகள் பாடலாம்.

பாஷோவும் ஒத்துக் கொண்டார், நரிக்காக என்ன கவிதை பாடுவது என்று பாஷோவின் மனம் யோசிக்கத் துவங்கியது, பருவ காலங்களைப் பற்றி பாடுவதில் வல்லவர் பாஷோ, காடு, மலை, ஏரி, குளம் என்று அலைந்து திரிந்தவர், பனிக்காற்றிலும், மழையிலும், வசந்தம் பூத்துகுலுங்கும் பூக்களின் சமவெளியிலும் சுற்றியவர், அவருக்கு கவிதை என்பது இயற்கையை அறிந்து கொள்ளும் ஒரு வழி, ஒரு தரிசனம், ஒரு விழிப்புணர்வு, ஒன்றிணைதல்,

குளத்தில் ஒரு கல்லை வீசி எறிந்தால் அது தண்ணீரில் பட்டு, தவளை போல தாவித் தாவி போகிறதே, அந்த கல் பறக்கும் விந்தை போன்றது தான் கவிதையும், ஒரு சொல்லை அனுபவப் பரப்பின் மீது பிரயோகிப்பதன் வழியே வேறுவேறு  உணர்ச்சிநிலைகளை எழுப்புவது கவிதை,

நரிக்கு என்னவிதமான கவிதைகள் பிடிக்கும், அதற்கு விருப்பமான கவிஞர் யார், இதற்கு முன்பு எந்த கவிதைகளை எல்லாம் படித்திருக்கிறது எதுவும் பாஷோவிற்குத் தெரியாது,

ஒரே செர்ரிப் பழத்தை சாப்பிட்ட போதும்  மனித ரசனையும் நரியின் ரசனையும் ஒன்று போல இருக்காதே, நரிக்கு மழைபிடிக்குமா, பனிபிடிக்குமா, இயற்கையின் விநோதம் என்று அது எதை நினைக்கிறது,இப்படி எதுவும் தெரியாது

தெரிந்து கொண்டு கவிதை பாட வேண்டிய அவசியமும் பாஷோவிற்குக் கிடையாது, அவர் மனது அந்த நரி கவிதை கேட்கிறது என்ற ஆச்சரியத்தினுள் கரைந்து கொண்டிருந்தது

அப்போது தான் கவனித்தார், அது ஒரு பெண் நரி, கிமோனா அணிந்து கொண்டு அல்லவா வந்திருக்கிறது, ஆகவே மரபான நரி, ஆண் நரிகள் கவிதைகளை விரும்புவதில்லை, கவிஞரை மதிப்பதுமில்லை, கவிதை விஷயத்தில் பெண்கள் தான் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் என்றபடியே அவரது மனம் ஒரு ஹைக்கூ கவிதையைப் புனையத் துவங்கியது

அவர் எதிரில் இருந்த நரியோ, கவிதையா, அல்லது செர்ரி பழமா இரண்டில் எது கிடைக்கப்போகிறது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தது, அதே நேரம் உலகமே கொண்டாடும் பாஷோ போன்ற மகத்தான கவியிடம் நேரடியாக கவிதை கேட்பது எவ்வளவு பெரிய அதிர்ஷடம் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டது, ஆனால் அந்த வியப்பைக் கண்ணில் காட்டிக் கொள்ளாமல் அது சலனமேயில்லாமல் உட்கார்ந்திருந்தது

பாஷோ நரிக்காக ஒரு ஹைக்கூ கவிதை சொன்னார்,

நரி இவ்வளவு தானா என்பது போல அமைதியாக இருந்தது,

இந்தக் கவிதை எப்படியிருக்கிறது என்று கேட்க கூச்சப்பட்டு பாஷோ அதை அமைதியாகப் பார்த்தபடி இருந்தார்,

நரி இந்தக் கவிதையில் சாரமில்லை, அடுத்த முறை சந்திப்போம் என்று விடைபெற்று போனது,

இரண்டாவது சந்திப்பில் நரியிடம் தனது புகழ்பெற்ற கவிதையை சொல்லி அசத்திவிட வேண்டியது தான் என்று முடிவு செய்தார் பாஷோ, அந்த சந்திப்பின் போது நரியிடம் தனது ஹைக்கூ கவிதையைச் சொன்னார்

பழைய குளம்

குதித்தது தவளை

தண்ணீர் சத்தம்

இதைக்கேட்ட நரி, ஒகே, பரவாயில்லாத கவிதை இது என்று ஒத்துக் கொண்டு நமட்டு சிரிப்புடன் ஆனால் வியப்பூட்டும் கவிதையாக இதை நினைக்கவில்லை என்றது,

பாஷோவிற்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது, அதில் தோற்றுப்போய்விட்டால் செர்ரி பழங்கள் போய்விடும், அத்துடன் நரியிடம் தோற்ற கவிஞன் என்ற அவப்பெயராகிவிடும் என்பதால் மூன்றாவது கவிதையாக எதைச் சொல்வது என்று யோசிக்கத் துவங்கினார்

அடுத்த சந்திப்பின் முன்பு பருவகாலம் மாறத்துவங்கியது

மூன்றாவது கவிதையை நரிக்காக அவர் புனைந்திருந்தார்

இந்த முறை அவர் கவிதை சொல்லத் துவங்கியதும் நரி அற்புதம் என்றது, கவிதை சொல்லி முடித்தபிறகு உன்னதமான கவிதை, நான் தோற்றுப்போய்விட்டேன், இனி உங்கள் செர்ரிபழங்களைத் தொடமாட்டேன் என்று சொன்னது

அப்படி நரியை மயக்கிய அந்த கவிதையில் என்னதானிருந்தது,

வேறு ஒன்றுமேயில்லை, அந்தக் கவிதையில் நரி ஒரு பாத்திரமாகியிருந்த்து, நரியைப் பற்றியது தான் அக்கவிதை, தன்னைப் பற்றி தான் அறியாத ஒன்றை அடையாளப்படுத்துவது தான் கவிதையின் வேலை, அதை தான் பாஷோவும்  செய்திருந்தார்,

கவிதையில் வந்த நரி, கவிதை கேட்ட நரி இரண்டும் ஒன்றில்லை, கவிதையில் வந்த நரி சொற்களால் உருவானது, அதன் இயல்பும் அமைதியும் வேறுவிதமானது, கண்ணாடி உருவத்தை பிரதிபலிப்பது போல கவிதை நரியைப் பிரதிபலிக்கிறது, ஆனால் கண்ணாடி போல புறத்தோற்றத்தை மட்டும் அது பிரதிபலிக்கவில்லை, நரியின் அகத்தை கவிதை சுட்டிக்காட்டுகிறது,

கவிதை  சொற்களின் வழியே உலகை மறுஉருவாக்கம் செய்கிறது, இங்கே தன்னை அறிதல் என்பது முக்கியமான பணி, உலகை உள்வாங்கிக் கொண்டு அதை தனது பார்வையில் வெளிப்படுத்துவது கவிதையின் இயல்பு, பனித்துளியில் மரங்கள் காட்சியாகத் தெரிகின்றன, ஆனால் பனித்துளி உருளும் போது மரங்கள் உருள்வதில்லை,

ஒரு பழத்திற்குள் எத்தனை விதை இருக்கிறது என்று கண்டுபிடிப்பவன் அறிவாளி, ஒரு விதைக்குள் எத்தனை பழங்கள் இருக்கின்றன என்று யோசிப்பவன் கவிஞன்.

கதையின் ஆரம்பத்தில் நரி கவிதை கேட்க காத்திருக்கும் போது  ஏதோ தந்திரம் செய்வது போல தோன்றினாலும் தன்னை முதன்மைப்படுத்திய கவிதையை ரசிப்பதன் வழியே அதற்குள்ளும் கவித்துவ ஈடுபாடு இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது

இந்த நூல் இளம் சிறுவர்களுக்கு கவிதை குறித்தும், இயற்கையை கவிதை எப்படி உள்வாங்கிக் கொண்டு பாடுகிறது என்பதை விளக்கவும் எழுதப்பட்டிருக்கிறது, இதில் வரும்  கவிதை கேட்கும் நரியின் படிமம் முக்கியமானது

பௌத்தக் கதை மரபில் நரி ஏமாற்றுதனமிக்கதில்லை, அது ஒரு ஞானி, நிறைய நேரங்களில் நரி விழிப்புணர்ச்சியின் ஒரு நிலை, ஞானநிலையை எய்திய நரி பற்றிய பௌத்த கதையைப் படித்திருக்கிறேன்

மகாபாரத்தில் கூட யாகத்தில் புரண்டு எழுந்து உடலின் ஒரு பக்கம் முழுவதும் தங்கமாகிப்போன ஒரு நரி வருகிறது, அது தன் உடலின் மறுபகுதியை தங்கமாக்கும் யாகசாலையைத் தேடி அலைகிறது.

உலகில் அதிகம் வெறுக்கவும் பரிகசக்கவும் பட்ட விலங்குகளில் ஒன்று நரி, அதை இந்த நூல் விருப்பத்திற்குரிய விலங்காக மாற்றியிருக்கிறது, அதே நேரம் பாஷோ எவ்வளவு மகத்தான கவி என்பதற்கு அவர் நரிக்கு கூட கவிதை பாடுகிறார் என்பதை வைத்து அவரது கவிதையின் முக்கியத்துவத்தை இந்நூல் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது,

இந்த நூலிற்காக  ஒகி எஸ் ஹான் வரைந்த ஒவியங்கள் அற்புதமானவை, மரபான ஜப்பானிய ஒவியங்களைப் போல அடர்சிவப்பும் மஞ்சளும் நீலமும் கொண்ட  வண்ணத்தால் வரையப்பட்ட இந்த சித்திரங்கள் கற்பனையைத் தூண்டுபவை,

இந்த நூலை வகுப்பறை விளையாட்டாக ஜப்பானியப் பள்ளிகள் நடத்துகின்றன, ஒருவர் நரியாகவும் மற்றவர் கவியாகவும் மாறி கவிதை சொல்கிறார்கள்,

நரிக்குப் பாஷோ பாடிய கவிதை எதுவெனத் தெரிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள்,

: Basho and the Fox – Tim J. Myers , Oki S. Han – Amazon Children’s Publishing

0Shares
0