யுத்தமுனையிலிருந்த இளம் போர்வீரன் ஒவ்வொரு நாளும் தனது மனைவியை, பிள்ளைகளை, தாயை, சொந்த வீட்டினை, வீட்டுச் சுவரில் ஓடியாடும் அணிலை, எப்போதாவது வந்து போகும் பச்சை கழுத்து புறாவை நினைவு கொண்டபடியே இருந்தான்.
சில வேளைகளில் அவன் நினைவில் வீட்டுப்பசுவின் கழுத்துமணி சப்தம் கூடக் கேட்கும். அடுப்பில் தாளிக்கும் மணம் கூட நாசியைத் தொடும். படியில் கிடந்த மனைவியின் செருப்பில் ஒட்டியிருந்த சேறு கூடத் துல்லியமாகத் தெரியும். இவ்வளவு ஏன் உறங்கும் குழந்தைகளின் சீரான மூச்சொலி கூட அவனுக்குக் கேட்கும். வீட்டிலிருந்த நாட்களில் இவற்றை அவன் அறிந்ததுமில்லை. உணர்ந்ததுமில்லை.
தொலைவில் இருக்கும் போதே வீடும் அதன் மனிதர்களும் நெருக்கமாகிறார்கள். துல்லியமாகிறார்கள். முழுமையாக உணரப்படுகிறார்கள்.
யுத்த களத்தில் இறந்துகிடந்த வீரன் ஒருவனின் உதட்டில் வண்ணத்துப்பூச்சி ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டான். இப்போது அவன் ஒரு மனிதமலர். சிதறிக்கிடந்த போர்வீரனின் தலைக்கவசத்தில் ஏறி இன்னொரு தலைக்கவசம் நோக்கி தவளை ஒன்று உற்சாகமாகக் குதிப்பதைக் கண்டான். இப்போது அந்தத் தலைக்கவசம் ஆயுதமில்லை. இடிபாடு ஒன்றில் எதிராளி விட்டுச் சென்ற ரேடியோவில் ஒலித்த சங்கீதமும் இனிமையாகவே இருப்பதை உணர்ந்தான். வாழ்க்கை கற்றுத்தராத விஷயங்களை யுத்தம் கற்று தந்துவிடுகிறது.
அன்றாடம் சூரிய உதயத்தைக் காணும் போதெல்லாம் அவன் மனதில் தாளமுடியாத வேதனையும் ஏக்கமும் பீறிடும். அப்போது தான் அவன் யுத்தகளத்தில் இருப்பதை முழுமையாக உணர்ந்தான். ஊரில், வீட்டில். வயல்வெளியில் கண்ட சூரியன் வேறு. போர்க்களத்தில் ஒளிரும் சூரியன் வேறு.
உயிர்வாழுதல் என்பது இன்னொரு சூரிய உதயத்தைக் காண்பது தானே. மரணம் என்பது ஒரு மோதிரம். அது எவர் விரலுக்கும் பொருந்தக்கூடியது. எந்த விரலிலும் தங்கிவிடாது என்பதை யுத்தம் புரிய வைத்தது.
யுத்தமுனையில் தானிருந்த போதும் வீட்டுக் கொடியில் உலரும் தன் அரைக்கை சட்டை தன் இருப்பை வீட்டோருக்கு உணரச் செய்து கொண்டிருக்கிறது என்பது தான் அவனது ஒரே ஆறுதல்.
••
18.2.20
