ஒரு பொட்டலம் பூந்தி இவ்வளவு வெறுப்பை உருவாக்கிவிடும் என ஒரு போதும் நினைத்ததில்லை. ஆனால் அப்படித்தான் நடந்தது. இன்றைக்கும் எனக்குப் பூந்தி பிடிக்காது. அதற்குக் காரணம் எனது மூத்த அண்ணன் பாபு.
நிலத்தரகராக வேலை செய்த என் அப்பா எப்போதும் இரவு பத்து மணிக்கு தான் வீடு திரும்புவார். அவர் வரும் போது தள்ளுவண்டிக்கடையில் ஒரு பொட்டலம் பூந்தி,கொஞ்சம் காரசேவு அல்லது பக்கோடா வாங்கிக் கொண்டு வருவார்.
நாங்கள் ஐந்து பிள்ளைகள் இருந்த போதும் அப்பா உறங்கிக் கொண்டிருந்த பாபுவை எழுப்பிப் பூந்தியைச் சாப்பிடச் சொல்லுவார். விழித்துக் கொண்டிருக்கும் எங்களைப் பார்க்க வைத்துக் கொண்டு அவன் நிதானமாகச் சாப்பிடுவான்.
ஐந்து பிள்ளைகளில் அவன் மட்டும் ஏன் முக்கியமாகிப்போனான். எதற்காக அவனுக்கு மட்டும் இனிப்புப்பொட்டலம்
அப்பா தன்னிடமிருந்த காரசேவை, பக்கோடாவை எங்களுக்குப் பகிர்ந்து தருவார். ஆனால் பூந்தி பாபுவிற்கு மட்டும் தான். இதை அம்மாவும் அனுமதித்தாள்.
ஜவுளிக்கடைக்குத் துணி எடுக்கப்போனாலும் அவனுக்கு எங்களை விட விலை அதிகமான சட்டையை வாங்குவார் அப்பா. சினிமாவிற்குப் போவது என்றால் அவனை மட்டுமே அழைத்துக் கொண்டு போவார். பாபுவிற்கு என்று தனியாக வெள்ளித்தட்டு, டம்ளர் கூட வீட்டிலிருந்தன.
நாங்கள் பாபுவை வெறுத்தோம். அவனுக்கு மட்டும் பூந்தி வாங்கி வரும் அப்பாவை வெறுத்தோம். இதைக் கண்டிக்காத அம்மாவை வெறுத்தோம்.
பாபு முட்டாளாக இருந்தான். பத்தாம் வகுப்பில் பெயிலாகிப் போனான். அப்பா அவனைத் திட்டவோ அடிக்கவோ செய்யவில்லை. ஸ்பின்னிங் மில்லில் வேலைக்குச் சேர்த்துவிட்டார் அப்பா. பதினாறு வயதிலே பாபு சம்பாதிக்கத் துவங்கினான்.
ஒவ்வொரு நாளும் அவன் மில் விட்டு வரும் போது இரண்டு பொட்டலம் வாங்கி வருவான். ஒன்று அப்பாவிற்கான பக்கோடா. மற்றது அவனுக்கான பூந்தி. அப்போதும் அவர்கள் தின்பதை நாங்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டேதானிருந்தோம்.
மறுக்கப்படும் உணவு மனதில் ஏற்படுத்தும் வடு ஒரு போதும் அழிவதில்லை. பெரியவளாகி நான் ஒருத்தியே ஒரு கிலோ பூந்தி வாங்கித் தின்பேன் என்றாள் தங்கை. ஆனால் அப்படி நடக்கவில்லை. பதினைந்து வயதில் குளிர் ஜுரம் கண்டு இறந்து போனாள்.
எங்கள் வீட்டிலிருந்து பாபு தான் முதலில் வெளியேறிப் போனான் அவனுக்கு விருப்பமான கிறிஸ்துவப் பெண்ணைக் கட்டிக் கொண்ட போதும் அப்பா கோவித்துக் கொள்ளவில்லை.
பாபுவிற்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவன் குடித்தான். கடன் வாங்கினான். மதுரைக்கு வீடு மாறிப் போனான். ஆனாலும் சில நாட்கள் அப்பா தள்ளுவண்டிக் கடையில் பூந்தி வாங்கிக் கொண்டு அவனை மதுரையில் போய்ப் பார்த்து வந்தார்.
ஒருநாள் பாபு கடன் பிரச்சனையில் போலீசில் மாட்டிக் கொண்டான். அப்பா அன்று தான் வாய்விட்டு அழுதார். நாங்கள் குடியிருந்த வீட்டை விற்று அவன் கடனை அடைத்தார்.
வாழ்க்கை எங்களைத் திசைக்கொருவராகத் துரத்தியது. நான் படித்து வட இந்தியாவிற்கு வேலைக்குப் போய்விட்டேன். வீட்டைப் பற்றி எப்போது நினைத்தாலும் அப்பா பாபாவுக்காகப் பூந்தி பொட்டலத்துடன் வரும் காட்சி தான் மனதில் தோன்றும். அதை இன்றும் என்னால் சகித்துக் கொள்ள முடியவேயில்லை.
ஒரேயொரு முறை அப்பா என்னைத் தேடி டெல்லி வந்திருந்தார். அதுவும் பா[புவிற்கு உதவி கேட்டுத்தான். அப்போது அவர் முகத்திற்கு எதிராகவே கேட்டேன்.
“ஐந்து பிள்ளைகளில் பாபு மட்டும் என்ன உசத்தி. அவன் மட்டும் தான் உங்கள் பிள்ளையா“.
அப்பா சொன்னார்.
“அவன் எனக்கு முதல் பிள்ளை. தலைச்சன். ஒரே உடம்பில் இருந்தாலும் தலையும் காலும் ஒண்ணாகிறாது, அதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை “
அபத்தமான பேச்சு. எனக்கு ஆத்திரமாக வந்தது. அப்பா தன் தவறை உணரவேயில்லை. எந்த வீட்டிலும் உறவுகளுக்குள் சமநிலை இருந்ததேயில்லை. வீடு அப்படித்தான்.
உலகைப் புரிந்து கொள்வது கூட எளிது. பெற்றவர்களின் மனதைப் புரிந்து கொள்வது தான் கஷ்டம் என அன்று தான் உணர்ந்தேன்.
••
01.03. 20