பதினாறாம் நூற்றாண்டில் பெர்சியாவில் ஒரு ஞானியிருந்தார். அவன் தன்னைச் சிரிக்கும் நட்சத்திரம் என்று அழைத்துக் கொண்டார். அந்த ஞானி திருமணமானவர். குழந்தைகள் இல்லை. வாசனைத் திரவியம் தயாரிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவரது மனைவிக்கு அவர் ஞானி என்பதிலோ, அவரைத் தேடி பலரும் வந்து அறிவுரை கேட்பதிலோ துளியும் மரியாதை கிடையாது. இருவரும் அடிக்கடி சண்டையிடுவார்கள். அவள் பலத்த கூச்சல் போடுவாள். சண்டையின் உச்சத்தில் ஞானி தன் வீட்டிலிருந்த பானை, சட்டி, கரண்டி, தட்டு, ஸ்பூன், டம்ளர், படுக்கை, தலையணை, போர்வை, நாற்காலிகள், ஸ்டூல்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, உடைகள், துண்டு, தரைவிரிப்பு, மேலங்கி, கால்மிதி, கண்ணாடி பாட்டில்கள், கொதிகலன்கள். தைலப்புட்டிகள் எனச் சகலபொருட்களை அள்ளி எடுத்து வீதியில் வைத்துக் கொண்டு போய் வைத்துவிடுவார். நான்கு சுவர்கள் மட்டுமே கொண்ட வெறும் வீடாகிவிடும். அவரும் வெளியேறி தெருவிலே உட்கார்ந்து கொள்வார். காலியாக உள்ள வீட்டில் அவரது மனைவி மட்டும் இரவு தனியாக இருப்பாள். விடிந்தவுடன் அவள் கதவைத் திறந்து வெளியே வந்து மனமாற்றத்தோடு அவரை வீட்டிற்குள் கூட்டிப்போய் விடுவாள். மீண்டும் அவர் சகல பொருட்களையும் வீட்டிற்குள் திரும்பக் கொண்டு போய் வைத்து விடுவார். இப்படித்தான் அவர்கள் சண்டை நடந்து வந்தது.
பொருட்கள் எதுவுமில்லாத வீட்டில் அந்தப் பெண் என்ன உணர்கிறாள். எதற்காக அவரைச் சமாதானம் செய்து அழைத்துக் கொள்கிறாள் என யாருக்குமே விளங்கவில்லை.
ஒரு முறை இதைப்பற்றிச் சிரிக்கும் நட்சத்திரத்திடம் கேட்டபோது அவர் சொன்னார்
“அவள் ஒரு ஞானி. அதை நான் நினைவூட்டுகிறேன்.“
••