அந்த மனிதருக்குக் கூட்டல் கணக்கு சுத்தமாக மறந்து போயிருந்தது. இரண்டும் இரண்டும் நான்கு என்றோ, ஐம்பது ரூபாயும் ஐம்பது ரூபாயும் சேர்ந்தால் நூறு ரூபாய் என்றோ அவரால் கணக்கிட முடியவில்லை. அவரிடமிருந்தது கழித்தல் கணக்கு மட்டுமே.
கூட்டலை மறந்துவிட்டால் உலகம் மிகச்சிறியதாகிவிடும். அனுபவங்களும் சுருங்கிவிடும். பொருள்தேடுதல் முக்கியமற்றுப் போய்விடும். புத்தகங்களோ, இசையோ, பயணமோ எதுவும் தேவைப்படாமல் போய்விடும். கூட்டலை மறந்தவன் உதிர்ந்த சிறகைப் போன்றவன் எனப் பலரும் அவரைக் குற்றம் சாட்டினார்கள்.
வயது ஏற ஏற சந்தோஷங்கள் குறைந்து கொண்டு தானே வருகிறது. இரட்டிப்புச் சந்தோஷம், பத்து மடங்கு மகிழ்ச்சி என்பதெல்லாம் முதியவர்களுக்குக் கிடையாதே என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
வயது அதிகமாகிக் கொண்டு வருவது கூட்டல் கணக்கு தானே என ஒருவர் சொன்ன போது அந்த மனிதர், இல்லை மொத்த வாழ்நாளில் இந்த எண்ணிக்கை கழிந்து கொண்டு தானே வருகிறது என்று சொன்னார்.
கூட்டல் தானே குடும்பமாகிறது. தலைமுறையாகிறது தொழில் வளர்ச்சியாகிறது. கூட்டல் இல்லாத வாழ்க்கை வெறுமையானது என்றார் வேறு ஒருவர்.
அதற்கு அந்த மனிதர், வீட்டு மனிதர்களும் பணமும் தொழிலும் கூடிக் கொண்டே போகும் போது பிரச்சனைகளும் கூடிவிடுகிறது. உண்மையில் கூடுவதை விடவும் குறைவது தான் அதிகம் கற்றுத் தருகிறது. வலி கூடுவதை விட வலி குறைவதைத் தானே மனது விரும்புகிறது என்றார்.
கூட்டல் தான் வளர்ச்சியின் அடையாளம் என வாதிட்டார் ஒருவர். கழித்தல் தான் அனுபவத்தின் அடையாளம் என்றார் அந்த மனிதர்.
இப்படியாகக் கூட்டலை மறந்த மனிதர் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்.
முடிவில் அவரது பள்ளி தோழர் சொன்னார். “நண்பா.. சிறுவர்கள் கூட்டலைத் தான் விரும்புகிறார்கள். பிடித்த சாக்லேட்டிலிருந்து புத்தாடைகள் வரை கூடிக் கொண்டே போகவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் என்பது வெறும் கணக்கில்லை. கூட்டலையும் கழித்தலையும் ஒரே நேரத்தில் சமமாக உலகம் செய்து கொண்டிருக்கிறது உனக்குள் இருந்த சிறுவனை இழந்துவிட்டால் கூட்டல் மறந்து போய்விடும். கழித்தல் மட்டுமே மிஞ்சியிருப்பது முதுமையின் அடையாளம். அது தான் உனது பிரச்சனை “என்றார்.
கூட்டலை மறந்த மனிதர் ஆமோதிப்பது போலத் தலையசைத்துக் கொண்டார்.
அவ்வளவு தானே செய்ய முடியும்.
••