கோடையில் ஒரு மழை

ச.ஆறுமுகம் மலைகள் இணைய இதழிலும் பல்வேறு இலக்கிய இதழ்களிலும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறார்,

ஒய்வு பெற்ற வட்டாட்சியரான ஆறுமுகம் வேலூரில் வசிக்கிறார், உலக இலக்கியத்தின் சமகாலப் படைப்புகளைத் தேடித்தேடி மொழியாக்கம் செய்துவருகிறார், சிறந்த மொழிபெயர்ப்பாளர்.

இவரது மொழியாக்கத்தில் வெளியான ஹரூகி முரகாமியின் யானை காணாமல் போகிறது சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது,

சமீபத்தில் வெளியான கோடையில் ஒரு மழை மொழியாக்க சிறுகதைகளின் தொகுப்பில் நோபல் பரிசு பெற்ற மோ யான், ஆலின் மன்றோ சிறுகதைகளுடன் ஜேடீ ஸ்மித், மார்க்வெஸ், யான் லியாங்கே, ஹ்வாங் சுன்வன் ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன,

கோடையில் ஒரு மழை தொகுப்பை ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள், இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை இங்கிலாந்தும் என் குல மக்களும்,

பிரிட்டீஷ் எதிர்ப்பு பற்றி எத்தனையோ கதைகளைப் படித்திருக்கிறேன், ஆனால் இக்கதை தரும் அதிர்வு அபாரமானது, லூசுன் விருது பெற்ற படைப்பாளியான யான் லியாங்கே தனது தாத்தா எப்படித் தன் வாழ்நாளில் ஒரு பிரிட்டீஷ்காரனையாவது கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார்,

அதற்குக் காரணம் தனது வம்சத்திற்கு அபின் பழக்கம் ஏற்பட்டதற்குப் பிரிட்டீஷ் காரணம் என அவர் குறிப்பிடுவதும், அதே இங்கிலாந்திற்குப் பேரன் பயணம் செய்யும் போது கத்தியைக் கொடுத்து தனது ஆசையை நிறைவேறச்சொல்வதும் அவன் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வருவதற்குள் தாத்தா இறந்துவிடுவதும் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது,

Yan Lianke சமகாலச் சீன இலக்கியத்தில் முக்கியப் படைப்பாளி, இவரது படைப்புகளில் சில அரசியல் காரணங்களுக்கான தடை செய்யப்பட்டுள்ளன, இவரது To Serve the People நாவலில் அதீதமாகக் காமம் எழுதப்பட்டுள்ளது எனக் கடுமையான விமர்சனம் உருவானது,

எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றி இவர் எழுதிய Dream of Ding Village நாவல் உலகப்புகழ்பெற்றது, இந்த நாவலை சீன அரசு தடைசெய்துள்ளது

The guardian இதழில் England and My Clan சிறுகதை வெளியாகி உள்ளது

தங்களைப் பிரிட்டீஷ் செய்த கொடுமைகளை எல்லாம் இந்திய சமூகம் எளிதாக மறந்துவிட்டு அவர்களது நற்பண்புகளை மட்டுமே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கும் சமகாலச்சூழலில் இக்கதை முக்கியமான விழிப்புணர்வு ஒன்றை உருவாக்குகிறது,  கதையை ஆறுமுகம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்

இந்த நூலின் முக்கியக் குறை எழுத்தாளர்களின் பெயர்கள், கதைகளின் தலைப்பு போன்றவை ஆங்கிலத்தில் இல்லாதது.

இவை ஆங்கிலத்தில் இடம் பெற்றால் தான் மேலதிகமாக வாசிக்க விரும்புகிறவர்களுக்கு உதவியாக இருக்கும்

அது போலவே எந்தத் தொகுப்பில் இருந்து இக்கதை எடுக்கபட்டுள்ளது என்ற விபரமும் எழுத்தாளர்களின் புகைப்படங்களும் இடம் பெற வேண்டியது அவசியம்,

இந்தக் குறைகள் அடுத்தப் பதிப்பில் சரி செய்யப்பட வேண்டியது அவசியம்

தொடர்ந்து சிறப்பான மொழியாக்கங்களை செய்துவரும் ஆறுமுகத்திற்கு எனது பாராட்டுகள்

••

0Shares
0