தொடுதிரை மீன்கள்

கவிதையில் தத்துவத்தின் இடம் என்ன என்ற கேள்வி இன்று காலாவதியானது. கவிஞர்கள் இதைப்பற்றியெல்லாம் பேசிக் கொள்வதில்லை. விவாதிப்பதில்லை.

காரணம் இன்றைய பெரும்பான்மைக் கவிதைகள், நிஜமீன்கள் போலவே செல்போன் திரையில் நீந்திக் கொண்டிருக்கும் பிம்பமீன்கள். அது உண்மையான மீனை விடவும் அதிக நிஜமாக, அதிக இயக்கம் கொண்டதாக, வசீகரமாக இருக்கிறது. திரையில் அலைவுறும் மீனுக்குப் பசியெடுக்காது. அதற்கு மரணமில்லை

செல்போன் சட்டகத்தில் நாம் காணும் தண்ணீரும் மீன் கூட்டங்களும் பாசியும் குமிழிடும் நுரைகளும் நிஜமில்லை. அவை நிஜத்திற்கு மாற்றானவை. இந்த வண்ணமீன்கள் பிடிக்கவில்லை என்றால் மெய் நிகர் உருக்கொண்ட புலியை, அல்லது அருவியை நாம் திரையில் வைத்துக் கொள்ளலாம். உங்கள் சட்டைப்பாக்கெட்டிற்குள் ஒரு அருவி சப்தம் இல்லாமல் வழிந்தோடிக் கொண்டிருக்கும். அதன் ஈரம் உங்கள் மீது படவே செய்யாது. இந்த அனுபவத்தையே இன்றைய கவிதை தருகிறது.

உலகோடு நேரடியாகப் பங்குபெறவோ அனுபவம் பெறவோ தேவையில்லை. அவற்றைப் பிம்பங்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என இன்றைய படைப்பாளிகளும் நினைக்கிறார்கள். நம் வாழ்க்கையை நிஜமில்லாத நிஜம் ஆக்ரமித்துவிட்டிருக்கிறது.

இன்றைய கவிஞன் கவிதையிலிருந்து எல்லாவற்றையும் வெளியேற்றுபவனாக இருக்கிறான். அவனுக்குக் கவிதை அமீபா போல ஒரே நேரத்தில் எல்லாத் திசையிலும் இயங்க வேண்டியிருக்கிறது. தமது உருவத்தை எளிதாக மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

லேசரால் உருவாக்கப்படும் உருவம் எதையும் எளிதாகக் கடந்து செல்வது போலக் கவிதையில் நிகழ்வுகள் எளிதாக நடந்தேறுகின்றன.

இன்றைய கவிதைகள் பெரிதும் ஊடகங்களால் வழிநடத்தப்படுகின்றன. தற்காலிக ஜொலிப்பும் பாராட்டுகளும் மட்டுமே போதுமானதாகக் கருதப்படுகிறது.

நான் கவிதைகளில் தத்துவம் வெளிப்பட வேண்டும் என நினைப்பவன். அத்தகைய கவிதைகளை விரும்பி வாசிப்பவன். அதே நேரம் தத்துவம் என்ற பெயரில் அசட்டு உளறல்கள், உபதேசங்கள் முன்வைக்கப்படுவதை விரும்பாதவன். நீரில் ஒளிரும் நிலவைப் போல தத்துவம் கவிதையினுள் வெளிப்பட வேண்டும் என நினைப்பவன்.

வெகுஜன தளத்தில் கவிதை என்பது சாக்லேட் போன்று ஒரு நுகர்வு பொருள். அது உடனடித்தன்மை கொண்டதாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் கவிதையின் இயல்பு என்பது மாற்று உலகை, மாற்று அனுபவத்தை, மாற்றுப் பார்வைகளை முன்வைப்பதாகும். அது எளிய அனுபவத்தைக் கூட அபூர்வமான அனுபவமாக மாற்றிவிடக்கூடியது. உண்மையில் ஒரு மாயக்கரத்தால் தொடப்பட்டவுடன் கல் வானில் பறக்க முடிவது போன்ற செயல்படாது.

கவிதை என்பது தத்துவத்தை ஏந்திக் கொள்ளும் கோப்பையில்லை என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இன்னொரு சார்பில் இலையையும் அதன் நிறத்தையும் பிரிக்க முடியாது என்பது போலக் கவிதையும் தத்துவமும் ஒன்றிணைந்தது என்றும் சொல்லப்படுகிறது. உலகை தோன்றியும் தோன்றாமல்  வெளிப்படும் ஒன்றாக மாற்றுகிறது கவிதை

நவீனத் தமிழ்க் கவிதைக்குச் சிறந்த பங்களிப்பு செய்த கவிஞர்கள் அனைவரிடம் தனித்து வெளிப்படுவது தத்துவ வெளிப்பாடுகளே. அது கவிதையின் உடலாகவோ, வாசனையாகவோ வெளிப்பட்டிருக்கிறது. ந.பிச்சமூர்த்தி, நகுலன். ஞானக்கூத்தன். பிரமீள், தேவதச்சன், ஆனந்த், அபி எனப் பலரையும் இதன் உதாரணங்களாகச் சொல்லலாம்.

கவிதையின் நோக்கம் காணுலகை அப்படியே விவரிப்பது அல்ல. ஆராய்ச்சி செய்வதல்ல. அதை அறிவியல் கவனித்துக் கொள்கிறது. கவிதை எப்போதும் உலகின் மர்மம் மற்றும் புதிர் தன்மையை ஆராய்கிறது.

தத்துவத்தில் அரூபமான விஷயங்கள் நேரடியான சொற்களில் விளக்கப்படுகிறது, அதே நேரத்தில் கவிதையில் நேரடியான நிகழ்வுகள். விஷயங்கள் யாவும் அரூபமாக்கப்படுகின்றன. இரண்டு எதிரெதிர் பாதைகள். ஆனால் தத்துவமும் கவிதையும் வாழ்க்கை குறித்த முன்முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. விசாரணை செய்கின்றன. தேடலை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. தத்துவம் தத்துவத்தைக் கையாளுவதை விடவும் கவிதை அதை வேறு விதத்தில் அழகாகக் கையாளுகிறது என்றே தோன்றுகிறது. ..

சிறந்த தத்துவவாதிகளின் எழுத்துகள் பெரும்பாலும் கவித்துவமாகவே இருக்கிறது. அவற்றைக் கவிதை என நாம் வரையறை செய்வதில்லை. காரணம் கவித்துவத்தின் வெளியே வெளிப்படும் போது உண்மையை எளிதாக அடையாளப்படுத்த முடிகிறது. அந்த வகையில் தத்துவத்திற்குக் கவிதையின் தேவை அதிகமாக உள்ளது.

நகுலனின் கோட் ஸ்டாண்ட் கவிதைகளை வாசிக்கும் போது எப்போதும் ஆங்கிலக் கவிஞர் ஜான் டன் நிழலாக வந்து போகிறார். தன்னைத் தன்னிலிருந்து விலக்கிக் காட்டும் கோட் ஸ்டாண்ட் அனுபவங்களை ஜான் டன் நிறையவே எழுதியிருக்கிறார். நகுலனுக்கு விருப்பமான கவிஞர்களில் ஜான் டன்னும் ஒருவர். நகுலன் நாவலில் சில இடங்களில் ஜான் டன் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

ஜான் டன்னைப் போலக் காதல். கடவுள். தனிமை என்று மூன்று நிலைகளில் கவிதைகள் எழுதியவர் நகுலன். இருவரிடம் அன்றாட நிகழ்வுகள் அபூர்வமான காட்சிகளாக உருமாறுகின்றன. எளிமையான கவிதைகளைப் போலத் தோற்றம் கொண்டிருந்தாலும் இவை ஆழமான பொருளைக் கொண்டிருக்கின்றன. நகுலனிடம் வெளிப்படும் பகடி கூட ஜான் டன்னைப் போன்றதே.

இருவரது கவிதைகளையும் விரிவாக ஒப்பிட்டு ஆய்வு செய்தால் ஒரே கவியுலகின் இருவேறு ஆளுமைகளாக அவர்கள் இருப்பதை அறிய முடியும்.

அகம் புறம் என நாம் பிரித்து வைத்துள்ள பிரிவை நகுலன் கொண்டிருக்கவில்லை. அவரது அகமும் புறமும் வேறானது. தண்ணீரின் அகம் புறத்தை எப்படிப் பிரிப்பது என்பது போலப் புதிரானது. அவர் அன்றாட நிகழ்வுகளை அசாதாரணத் தளத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். குறிப்பாக நகுலனின் கவிதைமொழி நேரடியான உரையாடலைப் போன்றது. உண்மையில் அது ஒரு தந்திரம். வாசகனைக் கவனம் கொள்ளவைக்கும் வழி. ஆனால் இந்த உரையாடலின் மையத்தை அவரே தீர்மானிக்கிறார். கைக்குட்டையை முயலாக மாற்றிவிடும் மாயக்காரனைப் போல எதையும் இன்னொரு பொருளாக, அனுபவமாக மாற்றிவிடுகிறார்.

நகுலனின் புனைவுலகில் திருமூலரும் தெகார்த்தேயும் திருவள்ளுவரும் எமிலி டிக்கின்சனும் ஒன்று கலந்துவிடுகிறார்கள்.சில சொற்களை ஜம்பிங் போர்ட் போல நகுலன் பயன்படுத்துகிறார். அதன் வழியே எந்தத் தளத்திலிருந்து எந்தத் தளத்திற்கும் அவரால் தாவ முடிகிறது. அந்தரத்தில் பறக்க முடிகிறது.

ஜான் டன் போன்ற மெய் தேடல் கொண்ட கவிகள் தமிழில் நிறைய இருந்திருக்கிறார்கள். அவர்களின் கவிதைகளில் பண்பாடு உருவாக்கிய, அனுமதித்த வெளியும் மொழியுமே பயன்படுத்தப்படுகிறது. மீறல்கள் பகடியாகவோ, அறச்சீற்றமாகவே தான் வெளிப்பட்டிருக்கிறது. ஆன்மா என்ற சொல்லை இந்தியர்கள் பயன்படுத்தும் விதம் முற்றிலும் வேறானது. இதை ஜான் டன்னை வாசிக்கையில் தெளிவாக உணர முடிகிறது. அவர் தன் கவிதைகளில் Soul என்ற சொல்லக் கிறிஸ்துவ மரபிலிருந்து விலகிய அர்த்தத்தில் தான் வெளிப்படுத்துகிறார்..

ஜான் டன்னின் கவிதைகள் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாசிப்பிலிருந்து மறைந்து போயிருந்த சூழலில் அதன் மீது கவனம் பெற வைத்தவர் கவிஞர் டி.எஸ். எலியட்.

இன்று ஜான் டன் தீவிர இலக்கியத்தை நேசிக்கும் அனைவராலும் வாசிக்கப்படுகிறார். அவரது கவிதைகள் குறித்துப் பல்கலைக்கழகங்களில் விரிவான ஆய்வு செய்கிறார்கள். ஜான் டன்னின் கவிதைகள் மற்றும் உரைநடைகளின் தொகுப்புகள் பல்வேறு பதிப்பகங்களால் சிறப்புப் பதிப்புகளாக வெளியிடப்படுகின்றன. For Whom the Bell Tolls என்ற ஹெமிங்வே நாவலின் தலைப்பு இவரது கவிதை வரியே

ஜான் டன் 1572 ஆம் ஆண்டுப் பழைய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இங்கிலாந்தில் கத்தோலிக்க எதிர்ப்பு உணர்வு உச்சத்தில் இருந்த காலமது. ஜான் டன்னின் மாமா ஜேசுவிட் பணியில் ஈடுபட்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் அவரது சகோதரர் கத்தோலிக்கப் பாதிரியாரை மறைத்ததற்காகக் கைது செய்யப்பட்ட பின்னர்ச் சிறையிலே இறந்து போனார்.

அவரது தந்தை இறந்த போது ஜானுக்கு நான்கு வயது. அம்மா எலிசபெத் ஒரு பணக்கார மருத்துவரை மறுமணம் செய்து கொண்டார். ஆக்ஸ்போர்டில் வரலாறு, கவிதை, இறையியல் பயின்ற ஜான் டன் 1597 இல் நீதிபதி தாமஸ் எகெர்டனின் செயலாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஜார்ஜ் மோர் பிரபுவின் மகளான ஆனியைக் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக அவர் சட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறைக்குச் செல்லவும் நேர்ந்தது. அத்துடன் அவரது வேலையும் பறிபோனது.

தனது நாற்பது வயதில் அவர் இரண்டு கத்தோலிக்க எதிர்ப்பு விவாதங்களை வெளியிட்டார் இதன் காரணமாக அவரை மதநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் ஜேம்ஸ் மன்னர் அவரைப் பாதிரியாக்க விரும்பி லண்டனிலுள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் பணி நியமனம் செய்தார். அங்குச் சிறப்பாகப் பணியாற்றிய டன்

காலவோட்டத்தில் மறைந்து போன ஒரு கவிஞனைக் கண்டுபிடித்து அவனது கவிதைகளின் மேன்மைகளை எடுத்துச் சொல்லி சமகால வாசகரை வாசிக்க வைப்பது எளிதானதில்லை. இதற்குத் திறந்த மனதும் ஆழ்ந்த வாசிப்பும் தெளிந்த புரிதலும் இலக்கியத்தின் பன்முகத்தன்மையை உணர்ந்த அறிவாற்றலும் தேவை. அது டி.எஸ். எலியட்டிடம் இருந்தது

ஜான் டன்னின் காலத்திற்கும் டென்னிசன் காலத்திற்குமான வித்தியாசம் என்பது அறிவார்ந்த கவிஞருக்கும் உணர்வுப்பூர்வமான கவிஞருமான வேறுபாடாகும். ஒரு கவிஞரின் மனம் தீவிரமாகச் செயல்படத் துவங்கும் போது அது மாறுபட்ட அனுபவத்தை ஒருங்கிணைக்கிறது , இதன் காரணமாக ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத இரண்டு அனுபவங்களை அது எளிதாக ஒன்றுசேர்கிறது என்கிறார் எலியட். இதை ஜான் டன் கவிதைகளில் தொடர்ந்து காணமுடிகிறது

மெய்யியல் கவிதைகளில் அனுபவம் நேரடியாக வெளிப்படுவதில்லை. அது சிக்கலாக, மறைமுகமாக, ஆழ்ந்து, விரிந்த தளத்தில் பகிர்ந்து தரப்படுகிறது. இதன் காரணமாக எளிய சொற்கள் கூட அதன் நேரடிப் பொருளை குறிப்பதில்லை. இத்தகைய அணுகுமுறை இன்றைய நவீன கவிதைக்குத் தேவையாக இருக்கிறது. செய்திகள் மற்றும் அன்றாடத் தகவல்களிலிருந்து கவிதை மாறுபடுவதற்காக மறைபொருள் கொண்டதாக, அடர்த்தியாகவும் சற்றே சிக்கலாகவும் அது வெளிப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு ஜான் டன் போன்றவர்கள் முன்னோடிகளாக வழிகாட்டுகிறார்கள்..

1959ல் சி.சு.செல்லப்பா தனது எழுத்து இதழில் டி.எஸ். எலியட்டை முதன்மைப்படுத்தினார். அவரது விமர்சனக் கோட்பாடுகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். ஆனால் தமிழ் சூழலில் எலியட்டின் நவீனத்துவம் பற்றிய பார்வைகளுக்கு வெளியே அவரது கவிதைகளோ, மெய்யியல் கவிதைகள் பற்றிய பார்வைகளோ அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை.

பதினேழாம் நூற்றாண்டிற்குப் பிறகு ஆங்கிலக் கவிதையுலகம் மதம் சாராமல் இயங்கவே முற்பட்டது. கடவுளுக்குப் பதிலாக இயற்கையை முதன்மைப்படுத்தியது. இயற்கையை வியந்து பாடும் கவிஞர்களே கொண்டாடப்பட்டார்கள். மெய்யியல் கவிதைகள் கடவுளிடம் மன்றாடுதலை தவிரவேறு ஒன்றையும் செய்யவில்லை என நினைத்தார்கள். ஆனால் எலியட் இந்தக் கவிதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழியும் பார்வையும் தனித்துவமானது என்பதை அடையாளப்படுத்தியதுடன் நவீனப் பார்வையில் வாழ்க்கையை அணுகியிருக்கிறார்கள் என விளக்கிச் சொன்னார். குறிப்பாக ஜான் டன் மற்றும் ஆண்ட்ரூ மார்வெல் கவிதைகளைப் பற்றிய எலியட்டின் ஆய்வுக்கட்டுரை மெய்யியல் கவிதைகளை எப்படி அணுகுவது என்பதற்குச் சரியான வழிகாட்டுதலை உருவாக்கியது

மெட்டாபிசிகல் கவிதைகள் பெரும்பாலும் அதன் கவிமொழியாலும் கேள்விகள் அல்லது விசாரணையை வெளிப்படுத்தும் விதத்திலும் தனித்துவமானவை. ஜான் டன் கவிதைகளிலும் இதனைக் காணமுடிகிறது

டி.எஸ். எலியட் ஜான் டன்னை வாசித்த காலத்திலிருந்து இன்று இலக்கிய வாசிப்பும் புரிதலும் நிறைய மாறியிருக்கிறது. புரியாத கவிதைகளை ஒதுக்கத் தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள எளிய வாசிப்பு மட்டும் போதாது என்பதைப் பல்வேறு கவிதையியல் கட்டுரைகள் விளக்குகின்றன. ஆகவே இன்று ஜான் டன்னை வாசிக்கும் போது அவரது கவிதைகளை விடவும் உரைநடை மிகுந்த நெருக்கமுள்ளதாகத் தோன்றுகிறது. கவிதைகளிலும் காதல் மேலோங்கி அதன் மெய் தேடல் பின்னால் சென்றுவிட்டதை உணர முடிகிறது.

சொந்த வாழ்க்கையில் நிறைய இழப்புகளை ஜான் டன் சந்தித்திருக்கிறார். கடவுள் குறித்த சந்தேகம் மற்றும் குழப்பம் அவருக்குமிருந்தது. அதே நேரம் இழப்புகளிலிருந்து மீளவும் புதிய கண்ணோட்டத்தில் வாழ்க்கை மற்றும் மரணம் பற்றிப் புரிந்து கொள்ளவும் முயன்றிருக்கிறார். தனது காலகட்டத்தில் ஜான் டன் விரும்பி வாசிக்கப்பட்டிருக்கிறார். இவரது கவிதைகளைப் பலரும் படியெடுத்துப் படித்திருக்கிறார்கள். அவரது மரணத்தின் பிறகே முழுமையான கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த போதும் அவர் நவீன மனிதனைப் போலவே சிந்தனை செய்திருக்கிறார். எழுதியிருக்கிறார். கடவுளிடம் சரணாகதி அடைந்துவிடுவதற்குப் பதிலாகக் குழப்பத்துடன் உரையாடலை நிகழ்த்த முயன்றிருக்கிறார். மரணம் ஒரு முற்றுப்புள்ளியில்லை என்பதை அடையாளப்படுத்துகிறார்.

தனது குழப்பங்களையும் இழப்புகளையுமே அவர் கவிதைகளாக எழுதியிருக்கிறார். இவற்றுக்கெல்லாம் கடவுள் தீர்வு தருவார் என்ற நம்பிக்கை கூட அவரிடமில்லை. மாறாக அவர் கடவுளைச் சகபயணியைப் போலவே கருதுகிறார். உரையாடுகிறார்.

“A Valediction: Forbidding Mourning” 36-வரிகளைக் கொண்ட காதல் கவிதையாகும் . மனைவி ஆனியைப் பிரிந்து ஐரோப்பியப் பயணம் ஒன்றை மேற்கொள்ள இருந்த போது அந்தப் பிரிவுத்துயரை விவரிக்கும் விதமாக எழுதப்பட்ட கவிதையிது. 1611ல் எழுதப்பட்ட அக்கவிதையில் தங்களின் காதல் உறவைக் அடையாளப்படுத்த வட்டம் வரையும் கவராயத்தை உருவகமாகக் குறிப்பிடுகிறார். பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன காம்பஸ் போன்றதே தங்கள் உறவு. ஒன்று விலகி வெளியே சுற்றினாலும் மறுமுனை ஒரேயிடத்தில் அசைவற்று தாங்கிக் கொள்கிறது. இரண்டும் இணைந்து ஒரு வட்டத்தை உருவாக்குகின்றன. அப்படியானது தான் தங்களின் காதலும் என்கிறார்

கவராயத்தின் இரண்டு கைகளுக்கு நடுவே இடைவெளி அதிகமான போதும் அவை பிரிந்துவிடுவதில்லை. மாறாக எப்போதும் ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

பிரிவும் இடப்பெயர்வும் தவிர்க்க முடியாதவை. ஆனால் பிரிவிலும் இணைந்தேயிருப்பதை ஜான் டன் அழகாக வெளிப்படுத்துகிறார். காதலின் பிரிவை இப்படிக் கணிதக் கருவியைக் கொண்டு எவரும் வெளிப்படுத்தியதில்லை. இந்த நவீன பார்வையும் மொழிதலும் தான் டன்னின் கவிதைகளை இன்றும் கொண்டாட வைக்கின்றன.

The Ecstasy கவிதையில் ஒன்று சேர்ந்த கைகளை Our hands were firmly cemented எனக் குறிப்பிடுவது அபாரமானது. தனது அகக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்துவதற்காக ஜான் டன் ரசவாதம் (alchemy )சார்ந்த சொற்களைக் கவிதையில் பயன்படுத்தியிருக்கிறார். இது புதிய கவிதை மொழியை உருவாக்கியிருக்கிறது

Life is not historical, but something more like nature. என்கிறார் கவிஞர் ஆக்தோவியா பாஸ். இயற்கையின் புதிர்மை அதி நவீன அறிவியல் வளர்ச்சிக்குப் பின்பு இன்றும் முழுமையாக விளக்கப்படவில்லை இந்தப் புதிர் அல்லது விந்தை வாழ்வில் நீடிக்கும் வரை கவிதையில் தத்துவத்தின் வெளிப்பாடு நீடிக்கவே செய்யும் .

.

0Shares
0