இதயத்திலிருந்து உதிரும் இலைகள்

பிரெஞ்சு எழுத்தாளரான குஸ்தாவ் ஃபிளாபேர் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் ஜூலியன் பார்ன்ஸ்.

ஜூலியன் பார்ன்ஸ் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்தவர். அவரது பெற்றோர் பிரெஞ்சு வம்சாவழியை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆகவே இயல்பாகவே அவருக்குப் பிரெஞ்சு மொழி மற்றும் இலக்கியத்தின் மீது விருப்பமிருந்தது. தனது ஆதர்ச எழுத்தாளரான குஸ்தாவ் ஃபிளாபேரைக் கொண்டாடும் விதமாக அவர் எழுதிய நாவல் Flaubert’s Parrot. 1984 இல் வெளியானது.

நாவலின் நாயகனாக வரும் மருத்துவர் ஜெஃப்ரி பிரைத்வைட் ஒருவகையில் ஜூலியன் பார்ன்ஸின் மறுவடிவமே.

மேடம் பவாரி நாவலில் வரும் மருத்துவரைப் போலவே பிரைத்வைட்டும் மருத்துவராக இருக்கிறார். அவர் மனைவியை இழந்தவர். பொருந்தாத திருமணத்தைப் பற்றிய மேடம் பவாரியின் கதை அவரது சொந்தவாழ்க்கையினை நினைவூட்டுகிறது

“How do we seize the past? How do we seize the foreign past? We read, we learn, we ask, we remember என்று ஒரு நாவலின் ஒரு இடத்தில் ஜூலியன் பார்ன்ஸ் குறிப்பிடுகிறார். இது தான் நாவலின் திறவுகோல்.

நாவலின் துவக்கத்தில் ரூவோன் நகரிலிருந்த குஸ்தாவ் ஃபிளாபேரின் சிலையைக் காணச் செல்கிறார் பிரைத்வைட். அந்தச் சிலை 1941 ஆம் ஆண்டு ஜெர்மானியர்களால் அப்புறப்படுத்தப்பட்டது. நீண்ட காலம் சிலையின் பீடம் காலியாகவே இருந்தது. நகரத்தின் மேயர் அசல் பிளாஸ்டர் வார்ப்பைக் கண்டுபிடித்து இரண்டாவது சிலையைச் செய்தார் எனப் பிரைத்வைட் குறிப்பிடுகிறார்

ஃபிளாபேர் 1846 முதல் 1854 வரை, கவிஞர் லூயிஸ் கோலட்டுடன் காதல் கொண்டிருந்தார். லூயிஸிற்கு ஃபிளாபேர் எழுதிய கடிதங்கள் வெளியாகியுள்ளன. அந்தக் காதல் உறவை அவர் மறைக்கவில்லை.

1846 இல் ஃபிளாபேர் பிரிட்டனிற்குப் பயணம் செய்திருக்கிறார். அத்தோடு 1849-50 இல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நீண்ட பயணமாகக் கிரீஸ் மற்றும் எகிப்துக்குச் சென்றிருக்கிறார். பெய்ரூட்டில் அவர் சிபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். தனது பயணங்களில் விலைமாதருடன் இருந்த தனது உறவினைப் பற்றி மிகவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். கடைசிவரை ஃபிளாபேர் திருமணம் செய்து கொள்ளவில்லை

1870 ஆம் ஆண்டுப் போரின் போது பிரஷ்ய வீரர்கள் அவரது வீட்டை ஆக்கிரமித்தனர், மேலும் அவரது அன்னை 1872 இல் இறந்தார். பாலியல் நோய் முற்றி அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, 1880 இல் 58 வயதில் பெருமூளையில் ஏற்பட்ட இரத்தபோக்கினால் இறந்தார். ரூவோன் நகரிலுள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது

நாவல் இந்தத் தகவல்களின் பின்னுள்ள நிஜத்தை, உண்மை நிகழ்வுகளை ஆராய்கிறது.

பிரைத்வைட் ஃபிளாபேர் நினைவாக உள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது, அங்கே பாடம் செய்யப்பட்ட பச்சைக் கிளி ஒன்றைக் காணுகிறார். அது ஃபிளாபேரின் கிளி என்கிறார்கள். அடுத்த நாள் வேறு அருங்காட்சியகத்தைப் பார்வையிடும்போது அங்கே வேறு ஒரு கிளியை எதிர்கொள்கிறார். இரண்டு அருங்காட்சியகங்களும் தங்களிடம் உள்ளதே உண்மையான ஃபிளாபேரின் கிளி என்கிறார்கள்

எது உண்மையானது என்பதைப் பற்றிக் கண்டறிய பிரைத்வைட் முயலுகிறார். இந்தத் தேடலின் வழியே குஸ்தாவ் ஃபிளாபேரின் வாழ்க்கை மற்றும் படைப்பின் பின்புலம் அவரது காதல் நினைவுகள் விவரிக்கப்படுகின்றன.

நாவலின் மையப்புள்ளியாக இருப்பது பாடம் செய்து வைக்கப்பட்ட ஒரு கிளி. அந்தப் பச்சைக்கிளியை ஃபிளாபேர் தனது எழுதும் மேஜையில் வைத்திருந்தார். அவரது A Simple Heart நாவலில் அக்கிளி இடம்பெற்றிருக்கிறது

ஜூலியன் பார்ன்ஸ் நாவலில் கிளி ஒரு உருவகமாக முன்வைக்கப்படுகிறது. மனிதனைப் போலவே கிளி பேசும் திறமையுள்ளது, ஆனால் அது தானாக எதையும் பேசாது. நாம் சொல்வதை மட்டுமே திரும்பச் சொல்லும். கிளி தனிமைத்தோழனாகக் கருதப்படுகிறது. ஃபிளாபேரின் உண்மைக்குரலை கண்டறிய இந்தப் பொய்குரலிடும் கிளி தூண்டுகோலாக இருக்கிறது

நாவலின் ஒரு இடத்தில் ஃபிளாபேரின் விருப்பத்திற்குரிய கிளிக்கதைகளில் ஒன்றை ப்ரைத்வைட் நினைவு கொள்கிறார். அதில் ஹென்றி கே என்ற கதாபாத்திரம் தீவிரமான தனிமையால் பீடிக்கப்பட்டுக் கிளி ஒன்றைத் துணையாக வைத்துக் கொண்டிருக்கிறார். அவரும் கிளியுமாக வாழுகிறார்கள். ஒரு நாள் அக்கிளி இறந்து போகவே ஹென்றியால் வேதனையைத் தாங்க முடியவில்லை. வெறுமையும் தனிமையும் ஒன்று சேர அவர் தானே ஒரு கிளியாக மாற முயலுகிறார். கிளியைப் போலவே சப்தமிடுகிறார். மரத்தில் ஏறி அமருகிறார். இறுதியில் பிரம்மாண்டமான கிளிக்கூண்டு ஒன்றை உருவாக்கி அதில் தானே போய் அமர்ந்து கொள்ள முயலுகிறார்.

கதையில் வருவது போலவே ஃபிளாபேரின் நாவலில் வரும் பணிப்பெண்ணும் தனது தனிமையைப் போக்கிக் கொள்ள ஒரு கிளியை வளர்க்கிறாள். அதனுடன் உரையாடுகிறாள். ஒரு நாள் அக்கிளி இறந்து போனதும் பாடம் செய்து வைத்துக் கொண்டு கடவுளுடன் பேசுவது போலக் கிளியுடன் பேசுகிறாள். ஹென்றியை போல அவள் பித்தேறி நடப்பதில்லை. ஆனால் கிளியை வானுலகின் தூதுவன் போலக் கருதுகிறாள். நாவலில் வரும் கிளியை எழுதுவதற்குத் தான் பாடம் செய்து வைக்கப்பட்ட பச்சைக்கிளி ஒன்றை ஃபிளாபேர் அருங்காட்சியகத்திலிருந்து வாங்கி வந்து தனது எழுதும் மேஜையில் வைத்திருந்தார் என்கிறார் பிரைத்வைட்.

இந்தத் தேடலில் ஃபிளாபேரின் தந்தை ஒரு மருத்துவர் என்பதால் அவர் பணியாற்றிய ரூவோன் மருத்துவமனையைக் காணச் செல்கிறார். அங்கே ஃபிளாபேரின் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை நடைபெறுவதைக் காணுகிறார். தேசம் முழுவதும் ஃபிளாபேர் கொண்டாடப்படுகிறார் என்பதற்குச் சான்றாக அவரது சிலை மற்றும் நினைவகங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மருத்துவமனை வளாகத்தில் கூட ஃபிளாபேரின் நினைவாகச் சிறிய அருங்காட்சியகம் ஒன்று செயல்பட்டு வருவதைப் பிரைத்வைட் காணுகிறார்

ஃபிளாபேரின் காலத்தில் நடந்த நிகழ்வுகள். அவர் மேற்கொண்ட பயணம். அவரது டயரிக்குறிப்புகள். காதல் கடிதங்கள் வழியாக ஃபிளாபேரின் உலகிற்குள் பிரைத்வைட் நுழைகிறார்

ஒரு படைப்பாளி தனது ஆதர்ச எழுத்தாளனைக் கொண்டாடுவது என்றால் இப்படித்தானிருக்க வேண்டும்.

ஜூலியன் பார்ன்ஸ் எவ்வளவு நுணுக்கமாக, ஆழ்ந்து ஃபிளாபேரை வாசித்திருக்கிறார், புரிந்து கொண்டிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது. உண்மையில் இது ஒருவகைப் பித்து. தீராப்போதை.

நாம் முதுமை அடையும் போது இதயத்திலிருந்து சில இலைகள் தானே உதிரத்துவங்குகின்றன. அதை நம்மால் தடுக்க முடியாது. சில நிகழ்வுகள் துயரங்கள் இதயத்தின் கிளையை முறிக்கவும் கூடும். இயற்கையில் யாவும் மீண்டும் புதிதாக துளிர்விட முடியும். மனித இதயத்தில் அப்படி நடக்காது என்று ஒரு இடத்தில் பார்ன்ஸ் குறிப்பிடுகிறார்.  வாழ்க்கையில் தன்னோடு பழகிய, நெருக்கமான மனிதர்களுக்கு தரும் இடத்தை புனைவில் இடம்பெற்ற கதாபாத்திரங்களுக்கு விருப்பமான கலைஞர்கள். எழுத்தாளர்களுக்கு தருகிறார்கள். அவர்களை ஆராதிப்பதை, நினைவு கொள்வதை மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள். இந்த நாவலும் அப்படியான ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாடு தான்.

ஜூலியன் பார்ன்ஸின் எழுத்து நடை வசீகரமானது. அவர் நம்மோடு உரையாடுகிறார். நம்மையும் பயணத்தில் உடன் அழைத்துச் செல்கிறார். நினைவுகளையும் சமகாலத் தேடலையும் நாவலில் அழகாக ஒன்றிணைக்கிறார். இலக்கிய வடிவத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் நாவலாக இதை உருவாக்கியிருக்கிறார். ஃபிளாபேரை இப்படிப் பாடம் செய்து வைக்கப்பட்ட கிளியின் வழியே நினைவு கொள்வது விசித்திரமானது.

துப்பறியும் நாவலை வாசிப்பது போல நிகழ்வுகள் பரபரப்பாக விரிகின்றன. நாவலை இடைவெட்டி ஃபிளாபேரின் வாழ்க்கையை அவரது பிறப்பு முதல் இறப்பு வரை பட்டியலிடுகிறார், தேர்வுத் தாள் போல ஒரு பகுதியை உருவாக்குகிறார். கட்டுரை. கடிதங்கள். குறிப்பு என மாறுபட்ட விஷயங்களை இணைக்கிறார். அவ்வகையில் இதைப் பின்நவீனத்துவ நாவலாக உருவாக்கியிருக்கிறார் ..

நாவலின் வழியாக நாம் ஃபிளாபேரின் காலத்திலிருந்த இலக்கியச் சூழல் மற்றும் பிரெஞ்சு பண்பாடு, லண்டன் நகர வாழ்க்கை. ஃபிளாபேரின் விருப்பங்கள் மற்றும் நட்பு வட்டம். அவரது ரகசியக்காதல் போன்றவை அறிந்து கொள்கிறோம். இவ்வளவு நுணுக்கமாக எழுதுவதற்கு எழுத்தாளனின் நிழல் போல ஒருவர் இணைந்தால் மட்டுமே சாத்தியம். ஜூலியன் பார்ன்ஸ் தன்னைக் குஸ்தாவ் ஃபிளாபேரின் நிழலாகக் கருதியிருக்கிறார். நாவல் முழுவதும் கடந்தகாலத்தைத் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஃபிளாபேரின் பழைய வீடு இடிக்கப்பட்டுக் காகித ஆலையால் மாற்றப்பட்டிருக்கிறது அதைப் பார்வையிட பிரைத்வைட் காகித ஆலைக்கு வருகை தருகிறார். அங்கே தற்செயல் நிகழ்வுகள் ஆழமான பொருளைக் கொண்டிருக்கின்றனவா என்று யோசிக்கிறார்.

பிரைத்வைட் பிரான்சில் ரயிலில் பயணம் செய்து, ஃபிளாபேரின் வாழ்க்கையோடு தொடர்புடைய ரயில்கள் மற்றும் ரயில் பயணங்களை அறிந்து கொள்வதுடன் தேசத்தின் ரயில் சேவை உருவாக்கப்பட்ட வரலாற்றையும் நினைவு கொள்கிறார். இது போலவே குஸ்தாவ் ஃபிளாபேர் எழுதி முடிக்கப்படாத புத்தகங்களை, கைவிடப்பட்ட திட்டங்களையும் அவர் ஆராய்கிறார்.

ஃபிளாபேரை அவரது சகோதரி செல்லமாகக் கரடி என்றே அழைக்கிறாள். இரண்டாவது பகுதியில் அவரே தன்னை ஒட்டகத்துடன் ஒப்பிடுகிறார். இறுதிப் பகுதி அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற நாய்களைப் பட்டியலிடுகிறது. இப்படி விலங்குகளின் வழியே அவரது பிணைப்பு வெளிப்படுகிறது

இந்த நாவலின் வழியே ஃபிளாபேரின் மீது விமர்சனம் செய்யும் இலக்கிய விமர்சகர்களைக் கண்டிக்கும் ஜூலியன் பார்ன்ஸ், ஃபிளாபேரின் நாவல்களில் சிறு பிழைகளைக் கண்டறியும் விமர்சகர்களின் வேலை அர்த்தமற்றது. அவர்கள் நாவலின் மீது தீர்ப்பு சொல்ல விரும்புகிறார்கள். நாவலாசிரியன் அறிந்தே சில செய்திகளை, தகவல்களை உருமாற்றக்கூடியவன். புனைவாக்கக் கூடியவன். அதை ஆழ்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். விமர்சகரோ நாவலைத் தணிக்கை அதிகாரி போல வாசிக்கிறார். அவரால் நாவலின் நுண்மைகளை ஒரு போதும் புரிந்து கொள்ளவே முடியாது.

கடந்தகாலத்தின் இடைவெளிகளை நிகழ்காலத்தால் பூர்த்தி செய்துவிட முடியாது. வாழ்க்கையைப் போலவே நாவலும் முழுமையானதில்லை. அது நிறைய விடுபடல்களும் கற்பனையும் மர்மங்களும் கொண்டதாகவே இருக்கிறது. ஆகவே ஒரு நாவலின் வாசகன் அந்த நாவலை முழுமையான ஒன்றாகக் கருதமுடியாது. அது போலவே எந்த நாவலையும் முழுமையாக வாசித்து அறிந்து கொள்ளவும் முடியாது. நாவலில் நிறைய இடைவெளிகள். தாவல்கள். மறைந்து வைக்கப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போலவே வாசகன் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டறிய வேண்டியிருக்கிறது.

ஃபிளாபேரின் மீது பித்துக் கொண்ட பிரைத்வைட் எழுத்திலிருந்து எழுத்தாளனின் உலகை நோக்கிச் செல்கிறார். அது இன்னும் புதிராக, குழப்பமாக, புனைவாக இருப்பதை உணருகிறார். எழுத்தாளனின் வாழ்க்கை என்பது அவனது புனைவுகளைப் போலவே இடைவெளிகளும் விசித்திரங்களும் கொண்டது என்பதை உணருகிறார். நாவலின் முடிவில் அவர் இறுதியான உண்மையாக எதையும் தெரிவிப்பதில்லை. மாறாக இன்னும் தேடினால் இன்னும் கூடுதலாகப் புதிர்கள் உருவாகும் என்றே சொல்கிறார்.

தீவிர வாசகர்களுக்கு நாவல் மட்டும் போதுமானதாகயிருப்பதில்லை. அவர்கள் நாவலிலிருந்து எழுத்தாளனை நோக்கித் திரும்பி விடுகிறார்கள். எழுத்தாளன் அந்நிலையில் ஒரு கதாபாத்திரமாக மாறிவிடுகிறான்.

இந்த நாவலில் குஸ்தாவ் ஃபிளாபேர் ஒரு கதாபாத்திரமே. அவரைப் பற்றிய புனைவுகளை விலக்கி உண்மையை அறிய முயலுகிறது பிரைத்வைட் கதாபாத்திரம். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தின் கடந்தகாலத்தை ஆராய்வது என்ற விசித்திரத் தேடல் நாவலை புதியதாக்குகிறது.

Flaubert’s Parrot 190 பக்கங்களே கொண்ட சிறிய நாவல். ஆனால் அது ஒரு நூற்றாண்டின் கதையைப் பேசுகிறது. குஸ்தாவ் ஃபிளாபேரை தெரியாதவர்களும் இதை வாசிப்பதன் வழியே எழுத்தாளர் மற்றும் எழுத்துலகின் விசித்திரங்களை அறிந்து கொள்ள இயலும்.

வாழ்க்கை வரலாறு, இலக்கிய விமர்சனம். இலக்கியத் துப்பறிதல், இரண்டு தேசங்களுக்கு இடையிலான பயணம், எழுத்தின் ரகசியம் என நான்கைந்து ஊடு இழைகளைக் கொண்டு ஒரு பின்நவீனத்துவ நாவலை எழுதியிருக்கிறார் ஜூலியன் பார்ன்ஸ். நுட்பமான மொழி மற்றும் ஆசிரியரின் பகடியான பார்வை, புனைவெழுத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் கவித்துவமான விவரணைகள் இந்த நாவலை மிகவும் ரசிக்க வைக்கிறது

••

.

0Shares
0