ஈரானில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு 20 ஆண்டுகாலம் திரைப்படம் இயக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
2019ல் வெளியான 3 Faces திரைப்படம் தடையை மீறி ரகசியமாக இயக்கப்பட்டதாகும்.

பனாஹியின் திரைப்படங்கள் சமகால ஈரானிய வாழ்வைத் துல்லியமாகப் பிரதிபலிக்கக் கூடியவை. அரசியல் ரீதியாகத் துணிச்சலான கருத்துகள் மற்றும் எதிர்ப்பினை முன்வைக்கக்கூடியவை
திரைப்படம் எடுப்பதற்குப் பெரிய கதை தேவையில்லை. ஒற்றை நிகழ்வு போதும். அந்த நிகழ்வினை முன்பின்னாக ஆழ்ந்து அறிவதன் மூலம் சிறந்த திரைக்கதையை எழுதிவிட முடியும் என்பதற்கு இப்படம் சிறந்த உதாரணம். கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை இப்படம் பெற்றுள்ளது.
செல்போனிற்கு வரும் வீடியோ ஒன்று தான் படத்தின் மையக்கரு. மார்சியே என்ற இளம்பெண் செல்போன் கேமிராவைப் பார்த்துப் பேசியபடியே குகை ஒன்றினுள் நடந்து செல்கிறாள். அந்தக் குகை எங்கேயிருக்கிறது. யார் அந்தப் பெண் எனத் தெரியவில்லை. ஆனால் அவளது கலக்கமான முகம். தயக்கமான நடை, குழப்பத்திலிருப்பதைக் காட்டுகிறது.
அவள் கேமராவை நோக்கிக் கண்ணீருடன் பேசுவதைக் காணும் போது எதற்காக அவள் குகைக்கு வந்திருக்கிறாள் என்ற கேள்வி பார்வையாளருக்கு எழுகிறது

சட்டென அவள் செல்போன் கேமிராவை உயர்த்திக் காட்டுகிறாள். மரக்கிளை ஒன்றில் ஒரு தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அவள் தற்கொலை செய்து கொள்ளப்போகிறாள் என்ற அதிர்ச்சியை நாம் உணரும் முன்பு அந்தப் பெண் கழுத்தில் கயிற்றை மாட்டிக்க் கொள்கிறாள். கயிறு இழுபடுகிறது. அவள் உதவிக்காக கூக்குரலிடுகிறாள். சட்டென மரக்கிளை முறிகிறது. காட்சி துண்டிக்கப்படுகிறது
இந்தக் காட்சி செல்போன் மூலம் காணொளியாக ஈரானிய நடிகை பெஹ்னாஸ் ஜாஃபரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மார்சியே அந்தக் காணொளியில் ஜாஃபரியிடம் உதவி கேட்கிறாள். அவளைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று மன்றாடுகிறாள்.
யார் அந்தப் பெண் எதற்காகத் தன்னைத் தொடர்பு கொள்ள முயன்றாள். உண்மையில் அவள் இறந்துவிட்டாளா எனப் பதற்றமடையும் ஜாஃபரி உண்மையை அறிந்து கொள்ள இயக்குநர் ஜாபர் பனாஹி துணையோடு மார்சியே வாழ்ந்த வடமேற்கு ஈரானிய கிராமம் ஒன்றைத் தேடி பயணிக்கிறாள். அந்தப் பிரதேசத்தில் பிறந்தவர் தான் பனாஹி.

அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கிறார். ஆனால் இந்தப் பயணம் வேர்களைத் தேடிய பயணமில்லை. உண்மையை கண்டறியும் பயணம்.
இந்தப் பயணமும் அதில் விடுபடும் புதிர்களும், வெளிப்படும் உண்மையும் தான் திரைப்படம். உண்மையில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டது ஒரு நாடகமா, ஒருவேளை ஜாபர் பனாஹி தான் திட்டமிட்டு இப்படி ஒரு காட்சியை உருவாக்கியிருக்கிறாரோ என்ற சந்தேகம் வரும்படியாக ஆரம்பக்காட்சிகள் விரிகின்றன.
ஓரிடத்தில் ஜாஃபரி அதை நேரடியாக அவரிடமே கேட்கிறாள். இதற்காக அவர் கோவித்துக் கொள்கிறார்.
எதற்காக அந்தக் காணொளி பனாஹிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏன் அந்தப் பெண் தன்னைத் தொடர்பு கொள்ள விரும்பினாள் என்று குற்றமனதுடன் கேட்கிறாள் ஜாஃபரி. தன்னால் அதற்கான விடையைக் கண்டறிய முடியவில்லை என அமைதியாகப் பதில் தருகிறார் ஜாபர் பனாஹி

நீண்ட பயணத்தின் பின்பு அவர்கள் மலைப்பிரதேசத்தை அடைகிறார்கள். அங்கே அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை அவள் இறந்து போயிருந்தால் நிச்சயம் அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களுக்குத் தெரிந்திருக்கும் என்கிறாள் ஜாஃபரி, ஆனால் குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் தற்கொலையை மறைத்திருக்கக் கூடும் என்கிறார் பனாஹி
ஒரு நடிகையும் இயக்குநரும் மேற்கொள்ளும் பயணம் ஒரு சரடு. இன்னொரு சரடில் மலைக்கிராமத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள். மூன்றாவது சரடில் தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்படும் பெண், அவளது குடும்பம். மற்றும் தோழி. அவர்கள் வெளிப்படுத்தும் உண்மை இடம்பெறுகிறது. இந்த மூன்றும் இணைந்தும் விலகியும் செல்கின்றன. இதன் ஊடாக ஈரானில் மதமும் குடும்ப அமைப்பும் பெண்களை எப்படி அடக்கியும் ஒடுக்கியும் வைத்திருக்கிறது என்பது விவரிக்கப்படுகிறது.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பனாஹி சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்குள்ளாகவே ஒரு படத்தை இயக்கி (This Is Not a Film) வெளியிட்டிருக்கிறார். திரைப்படத்திற்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியை அழித்து எது நிஜம். எது புனைவு என்ற கேள்வியை அவரது படங்கள் எழுப்புகின்றன மெட்டாஃபிக்சன் பாணியிலான இப் படங்கள் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கின்றன
மூன்று முகங்கள் படத்தின் ஒரு காட்சியில் வயதான பெண் தனக்கான கல்லறை ஒன்றைத் தானே உருவாக்கிக் கொண்டு அதில் படுத்துக் கொண்டிருக்கிறாள். பாம்புகள் வருவதைத் தடுக்க அவள் தலைமாட்டில் விளக்கு ஏற்றிவைக்க படுவதாகச் சொல்கிறாள்.

இன்னொரு காட்சியில் கால் உடைந்த பொலி காளை பயண வழியில் படுத்துக்கிடக்கிறது. அந்தக் காளை ஒரு குறியீடு போலவே சித்தரிக்கப்படுகிறது அந்தப் பொலிகாளை ஒரே இரவில் 10 மாடுகளைக் கருவூட்டக்கூடிய வீரியமான விலங்கு என்று பெருமையாகச் சொல்கிறார் கிராமவாசி. இதன் மற்றொரு வடிவம் போலவே இன்னொரு காட்சியில் வயதான ஆள் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதுடன், ஆண்மையின் அடையாளமாக உள்ள பழைய நடிகரை ஆராதனை செய்கிறான்.
இவை தனித்தனிக்காட்சிகளாக இருந்தாலும் ஈரானிய சமூகம் பெண்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் அடையாளமாகவே இருக்கிறது.
மலைப்பாதையின் வளைவுகள் போலக் கதை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிச் செல்கிறது. இறுதியில், மலைப்பாதையில் கதை முடிவது தான் சிறப்பு. இனியும் பெண்கள் காத்திருக்கப்போவதில்லை. தங்களுக்கான வழியைத் தாங்களே கண்டறிந்து கொள்வார்கள் என்பது போல விரிகிறது கடைசிக் காட்சி
ஒரே கிராமத்தில் இரண்டு உலகங்கள் இயங்குகின்றன. ஆண்கள் சுகபோகங்களையும். கொண்டாட்டங்களையும் மேற்கொள்கிறார்கள். பெண்கள் ஒதுங்கியும் விலகியும் ஒடுங்கியும் காணப்படுகிறார்கள். தன் வீட்டிற்கு அழைக்கும் கிராமவாசியுடன் ஜாஃபரி செல்கிறாள். அப்போது அவளுக்கு தேநீர் கொண்டுவரும் அவனது இளம்மனைவியின் நிலை ஒரு வார்த்தை கூட வசனமின்றி அழகாக வெளிப்படுத்தபடுகிறது
நாம் காணுவது ஒரு திரைப்படமில்லை. உண்மைக் கதை என்பது போன்ற நம்பிக்கையை ஏற்படுத்தவே இயக்குநர் பனாஹி மற்றும் நடிகை ஜாஃபரி அவர்களாகவே படத்தில் இடம்பெறுகிறார்கள். உண்மையான பெயர்கள், உண்மையான கிராமத்துடன் புனைவான ஒரு இளம்பெண்ணின் நிஜமான பிரச்சனையைத் திரைப்படமாக உருவாக்கியிருப்பது தேர்ந்த கலைத்திறனாகும்.

வசீகரமான நிலப்பரப்பும் எளிய வாழ்க்கையை வாழும் கிராமவாசிகளும் ஏதோ வேறு நூற்றாண்டில், வேறு நியதிகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பது போலிருக்கிறது. தூசி நிறைந்த, வளைந்து செல்லும் சாலைகளில் அவர்கள் செல்லும் பயணம், வழியில் நடைபெறும் திருமணம். கிராமத்தில் ஒரு வீட்டில் நடக்கும் விருத்தசேதன சடங்கு. மூன்று நாட்களாகக் காணாமல் போன மார்சியேவை சந்திப்பது. இரவில் தனது படப்பிடிப்பு பற்றித் தெரிவிக்க ஜாஃபரி போன் செய்யப் போவது. காரில் பனாஹி இரவில் உறங்குவது. இனப்பெருக்கத் திறனுக்காகப் புகழ் பெற்ற காளை, ஒரு சிறுவனின் நுனித்தோல் வினோதமான பரிசாக வழங்கப்படுவது என நேர்த்தியான உருவாக்கபட்டுள்ள காட்சிகள் படத்தை சிறந்த கலைப்படைப்பாக்குகின்றன.
கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடனக்காரி, நடிகையாக விரும்பும் மார்சியே. தேடிவரும் நடிகை ஜாஃபரி என்ற இந்த மூன்று முகங்களின் வழியே ஈரானிய பெண்களின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அடையாளப்படுத்துகிறார் பனாஹி. தற்கொலை செய்து கொண்ட பெண்ணைத் தேடிய பயணத்தின் வழியே தன்னை அறிந்து கொள்கிறாள் ஜாஃபரி.
காருக்குள்ளாகவே சுழலும் கேமிரா . மலைப்பாதைகளில் கார் செல்வது படமாக்கவிதம், மற்றும் இருட்டிற்குள் இருந்தபடியே பெண்ணின் வீட்டைக் காணும் அழகு. கிராமவீதிகளுக்குள் கேமிரா செல்லும் நேர்த்தி என கவித்துவமான ஒளிப்பதிவு படத்தின் சிறப்பாகும். நான்கே கதாபாத்திரங்கள். மற்றவர்கள் கிராமவாசிகள். இவர்களை வைத்து அழகான படத்தை எடுத்துவிட முடிவது ஆச்சரியமளிக்கிறது.

உலகை நோக்கிக் கேமிராவைத் திருப்புவதைத் தவிர்த்து தன்னை நோக்கிக் கேமிராவைத் திருப்பி அதன் வழியே தனது தேசத்தின் முக்கியப் பிரச்சனை ஒன்றைச் சொல்ல முயன்றிருப்பது ஜாபர் பனாஹியின் சாதனை மட்டுமில்லை. சினிமாவிற்கும் புதிய பாதையாகும்.