நீதியின் குரல்

சாண்டியாகோ மிட்ரே தயாரித்து இயக்கிய Argentina, 1985 திரைப்படம் அர்ஜென்டினாவை ஆட்சி செய்த இராணுவ தலைமையின் மீதான நீதி மன்ற விசாரணையினை மையமாகக் கொண்டது. சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.

1975 இல் விடேலா அர்ஜென்டினா இராணுவத்தின் படைத்தளபதி ஆனார். மார்ச் 1976 இல் ராணுவம் இசபெல் பெரோனுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது அதனை அடுத்து விடேலாவின் இராணுவ ஆட்சிக்குழு, தேசிய மறுசீரமைப்புச் செயல்முறை, அரசியல் கட்சிகளைத் தடைசெய்தல் மற்றும் சிவில் உரிமைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் வன்முறையை அவிழ்த்துவிட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். பலர் காணாமல் போனார்கள்.

புதிதாக உருவான ஜனநாயக அரசாங்கம் 1976 முதல் 1983 வரையில் ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட சித்ரவதைகள். சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் ஆட்கடத்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுகிறது.

ராணுவ அதிகாரிகள் தங்களை விசாரிக்கப் பொது நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என்று வாதிட்டார்கள். ஆனால் திட்டமிட்ட வன்முறை மற்றும் கொலைகள் காரணமாகப் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால் இதனை நீதிமன்றம் விசாரிக்க உரிமையிருக்கிறது என்று வழக்கை எடுத்துக் கொண்டது.

இந்த நீதி விசாரணையை நடத்துவதற்காக அரசு வழக்கறிஞர் ஜூலியோ சீசர் ஸ்ட்ராசெரா நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவி செய்வதற்கு வேறு வழக்கறிஞர்கள் வரத் தயங்குகிறார்கள். இந்நிலையில் இளம் வழக்கறிஞரான லூயிஸ் மோரேனோ ஒகாம்போ அவருடன் இணைந்து கொள்கிறார். ராணுவத்தின் நேரடியான மிரட்டல் மற்றும் கொலை அச்சுறுத்தல்களைத் தாண்டி எப்படி ஸ்ட்ராசெரா நீதி விசாரணையை மேற்கொண்டார் என்பதைப் படம் மிகவும் அழகாகச் சித்தரிக்கிறது

ஜூலியோ சீசர் ஸ்ட்ராசெரா வீடு திரும்புவதில் துவங்கும் திரைப்படம் . மகளின் காதல் உறவு பற்றிய பிரச்சனை அவரைக் கவலை கொள்ளவைக்கிறது. தனது விருப்பத்திற்கு மாறாக மகள் நடந்து கொள்வதை அவர் விரும்பவில்லை. தன்னைக் கண்காணிக்க உளவாளிகள் சுற்றிவருவதை அவர் உணர்ந்திருக்கிறார். ஒரு வேளை மகளின் காதலும் கூட உளவாளிகளின் வேலையாக இருக்குமோ என்று அச்சமடைகிறார். ஆனால் அவரது மனைவி சந்தேகங்களைத் தாண்டி மகளின் காதலை ஏற்றுக் கொள்ளும்படி சொல்கிறார். இந்நிலையில் அவருக்கு ராணுவ அதிகாரிகளை விசாரிக்கும் பணி ஒப்படைக்கப்படுகிறது

ராணுவம் மேற்கொண்ட குற்றங்களை எப்படிக் கண்டறிவது. சாட்சிகளிடம் எவ்வாறு வாக்குமூலம் பெறுவது எனக் குழம்பிப் போகிறார். இந்தப் பணியில் உதவி செய்வதற்காக இளம் சட்டப் பட்டதாரிகள் சிலரை வேலைக்கு நியமிக்கிறார் மோரேனா. அவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து குற்ற விபரங்களைக் கண்டறிகிறார்கள். சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறுகிறார்கள்.

இந்நிலையில் தொலைபேசி வாயிலாக ஸ்ட்ராசெரா கொலை மிரட்டல் விடப்படுகிறார். அதை அவர் பொருட்படுத்துவதேயில்லை. நீதி விசாரணை துவங்குவதற்கு முன்பு தனது வழிகாட்டியாக உள்ள மூத்த வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கேட்கிறார். அவர் தைரியமாக, உண்மையாகச் செயல்படும்படி அறிவுரை தருகிறார்.

ஆரம்பத்தில் ஒகாம்போவின் இராணுவ குடும்பப் பின்னணி காரணமாக அவரை முழுமையாக நம்ப மறுக்கிறார் ஸ்ட்ராசெரா. ஆனால் அவரது தீவிர ஈடுபாடு மற்றும் உண்மையினை வெளிக்கொணரும் அறிவாற்றல் காரணமாக அவரை நம்பி முழுமையாகச் செயல்படுகிறார். ஒகாம்போ தொலைக்காட்சி நேர்காணலில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் காட்சி சிறப்பானது.

விசாரணையின் முதல் நாளில், நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது, இதனால் நீதி விசாரணை நிறுத்தப்படும் சூழல் உருவாகிறது. இந்த மிரட்டலைக் கண்டு நாம் அஞ்சக்கூடாது. விசாரணையைத் தொடர வேண்டும் என்று ஸ்ட்ராசெரா வேண்டுகோள் விடுகிறார். அதனை நீதிபதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்

இந்த நீதி விசாரணை ஏப்ரல் 22 முதல் டிசம்பர் 9, 1985 வரை நீடித்தது 700 க்கும் மேற்பட்ட குற்றங்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட சாட்சியங்களை முன்வைத்தார்கள்

இராணுவ ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் அனுபவித்த அல்லது கண்ட சித்திரவதை பற்றிச் சாட்சியமளிக்கின்றனர். இதற்கிடையில் ஒரு நாள் ஜனாதிபதி ரவுல் அல்போன்சின், ஸ்ட்ராசெராவை தனியே சந்தித்து உண்மையை வெளிகொண்டுவரும் அவரது போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

குற்றவாளிகள் பட்டியலிலிருந்து விமானப்படை விடுவிக்கப்பட வேண்டும் என்று தந்திரம் செய்கிறார்கள். அந்த முயற்சி தோற்கடிக்கப்படுகிறது.

இறுதி வாதங்களை எழுத முற்படுவதற்கு முன்பாக ஸ்ட்ராசெராவின் மனைவி அவருடன் உரையாடும் காட்சி சிறப்பானது. நீதி மன்றத்தில் ஸ்ட்ராசெரா தனது இறுதிவாத்ததை முன்வைத்து உரையாடுவதும் அதற்குக் கிடைக்கும் கைதட்டல்களும் சிலிர்ப்பூட்டுகின்றன. தீர்ப்பு வெளியாகும் நாளின் போது ஸ்ட்ராசெராவின் மகன் நடந்து கொள்வது வேடிக்கையானது.

நீதி விசாரணையைச் சுற்றி நடக்கும் திரைக்கதையை அழகாகப் பின்னிச் செல்கிறார்கள். சில காட்சிகள் நூரென்பெர்க் விசாரணையை நினைவுபடுத்துகின்றன.

நீதிமன்றத்தில் பெண்கள் அளிக்கும் சாட்சியங்கள் கண்ணீர் வரவழைக்கக்கூடியவை. அவை ராணுவத்தின் குரூர செயல்பாடுகளை வெளிப்படையாக விளக்குகின்றன. ஸ்ட்ராசெராவாக நடித்துள்ள ரிக்கார்டோ டேரியன் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

தேசத்தின் உண்மையான வரலாற்றைத் திரை வடிவில் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.  உண்மை வெல்லும் என்பதை ஸ்ட்ராசெரா அடையாளப்படுத்துகிறார். அவரது பணி இப்போதும் முடிவடையவில்லை. தொடருகிறது என்ற கடைசிக்காட்சி அழகானது. அது படத்திற்கு கூடுதல் கலையுணர்வைத் தருகிறது.

0Shares
0