நாளை மறுதினம் மனுஷ்யபுத்திரனின் புதிய கவிதைத்தொகுப்பான பசித்த பொழுது வெளியாக இருக்கிறது, அந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேசுகிறேன்,
மனுஷ்யபுத்திரனின் சமீபத்தைய கவிதைகளை ஒரே சேர வாசிக்கும் போது அது தமிழ் நவீன கவிதையின் அரிய குரலாக, கவித்துவ உச்சத்தைத் தொட்டிருப்பதை உணர முடிகிறது, இக்கவிதைகளை தமிழ் சமூகம் கொண்டாடி மகிழ வேண்டும் என்று தான் சொல்வேன்.
கவியின் குரலில் தான் எத்தனை மிருது, எத்தனை வன்மம், எவ்வளவு நெகிழ்வு, எவ்வளவு கருணை, எவ்வளவு ஆவேசம், எவ்வளவு காதல். இந்தக் கவிதைகளை கூழாங்கற்களை உருட்டிக் கொண்டு போகும் ஆற்றின் ஆவேசத்துடன் தான் ஒப்பிடுவேன்,
ஆறு எளிதில் கல்லை கரைத்துவிட முடியாது, அதே நேரம் கரைக்கவே முடியாமலும் போய்விடாது, அது ஒரு காதல், ஒரு தீவிரமான எதிர்வினை, அன்பிலிருந்தே அந்த எதிர்வினை துவங்குகிறது,
அன்பு செலுத்த விரும்பும் ஒருவன் அது புறக்கணிக்கபடும் போது அதை எங்கே வைப்பது என்று அறியாமல் சொற்களில் வைத்துவிடுகிறான், அன்பின் சுமையைத் தாளமுடியாமல் சொற்கள் விம்முகின்றன, அவை தானே பாடத்துவங்குகின்றன, அப்படி அன்பின் வலிமையால் உண்டான பாடல்கள் தான் இந்தக் கவிதைகள்
நகுலன் ஒரு கவிதையில் சொல்கிறார்
எனக்கு யாருமில்லை
நான்
கூட
அந்தக் குரல் தான் மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் ஆதாரப்புள்ளி, தன்னிருப்பின் கடினம் கரைந்து அதைத் திரவம் போல மாற்றிவிட்ட ஒருவரால் தான் இது போன்ற கவிதைகளை எழுத முடியும், அவ்வகையில் மனுஷ்யபுத்திரனின் இக் கவிதைகள் அவரது முந்தைய கவிதைகளில் இருந்து பெரும்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன,
மொழியை அவர் கையாளும் விதம் ஆப்பிள் பழத்திற்கு கத்தி நுழைவது போல மிருதுவாகவும் துண்டாடும் வலிமை கொண்டதாகவும் ஒரே நேரத்தில் நடக்கிறது
பெரும்பான்மை கவிதைகள் வலியைப் பேசுகின்றன, ஆனால் அந்த வலி தனி நபரின் உடல் சார்ந்த வலியில்லை, அது ஏமாற்றத்தில், கசப்புணர்வில், புறக்கணிப்பில் உருவான வலி, பனிக்கோளம் போல வலி நம் கண்முன்னே உருண்டு திரண்டு துல்லியமாகத் தெரிகிறது, அது தான் இந்த கவிதைகளின் சிறப்பம்சம்
பெரும்பான்மை கவிதைகளின் அடியில் துயருற்ற மனிதன் தனக்கு தானே பேசிக் கொண்டிருக்கிறான், கேள்விகேட்கிறான், அதில் சில அவனது சந்தேகங்கள், சில அவனது பயங்கள், சில அவன் உலகிற்கு சொல்லும் உண்மைகள், ஆனால் அவன் தன்னை அவமதிப்பதாக உலகின் மீது குற்றம் சொல்லவேயில்லை, தனது நிழலைக் கூட பைத்தியக்காரதனம் கொண்டது என்கிறான், காரணம் நிழல்கள் எப்போதும் தடுமாறிக் கொண்டேயிருக்கின்ற்ன, மனித மனதின் ஊசலாட்டத்தை முன்னறிவிப்பது போல தான் அவை நடமாடுகின்றன,
பிணியாளுக்கு
சொல்லப்பட்டது போல
இந்த உலகில் அதிகம் சொல்லப்பட்டது
எதுவும் இல்லை
ஒரு ஆரோக்கியமான
மனிதனுக்குச் சொல்ல
எதுவுமே இல்லை
அவன் நேராக இந்த பிரபஞ்சத்தை
நோக்கி வருகிறான்
எந்த யோசனையும் இன்றி
அதை
அப்படியே எடுத்து விழுங்குகிறான்
என்றொரு கவிதையிருக்கிறது, இந்த கவிதையில் வரும் பிணியாளியின் குரல் நோவு தன் உடலை மட்டும் ஒடுக்கவில்லை, தனது இருப்பையே ஒடுக்கிறது என்று அடையாளம் காட்டித்தருகிறது,
நோயாளிகளிடம் சொற்கள் தோற்றுப்போகின்றன என்பதை கவிஞன் அறிந்திருக்கிறான், ஆரோக்கியவான் சொற்களை கிழிந்த காகிதங்களைப் போல அக்கறையற்று பயன்படுத்துகிறான், நோயாளியோ அவற்றைத் தானியத்தை கொத்தும் புறாக்களை போல கவனமாக தனதாக்கிக் கொள்கிறான்,
பிரபஞ்சத்தின் முன்பு ஆரோக்கியவான், நோயாளி என்ற பேதமில்லை, அது இருவருக்கும் ஒரே பகலை, ஒரே இரவை, ஒரே காற்றைத் தான் கொண்டுவருகிறது, ஆனால் மனிதர்கள் பேதம் பிரித்துக் கொள்கிறார்கள், எந்த மனிதனும் தன்னை விட இன்னொருவன் ஆரோக்கியமாக இருப்பதை உள்ளுற விரும்புகின்றவன் இல்லை என்பது தான் உண்மையா.
இந்தக் கவிதைகளின் ஊடே அடுத்தவரின் தயவுக்காக காத்திருப்பதின் வேதனை ஆழமாகப் பதிவாகியுள்ளது, தயவு என்ற சொல் எளிதாக இருக்கிறது, ஆனால் அதற்காக காத்திருப்பவன் அச்சொல்லை ஒரு இரும்புக்குண்டைச் சுமப்பது போல கையாள முடியாமல் தத்தளிக்கிறான்
கவிதைத் தொகுப்பு முழுவதும் புதிய புதிய உவமைகள், படிமங்கள், காட்சிரூபங்கள் தோன்றி மறைகின்றன, கவிஞன் பித்தேறிய நிலையில் சந்நதம் வந்தாடும் பெண் தன் இயல்பு உலகை மிரட்சியோடு கண்டு, புனைவின் உச்சநிலையில் துடி அடங்காமல் வெறிகொண்டு பாடுவது போல கவிதைகளைப் பாடியிருக்கிறான்.
கடவுளும் நம்பிக்கைகளும் கைவிட்ட உலகில் கவிஞன் இப்படித்தான் நடந்து கொள்வான், அவனது கொந்தளிப்பு கவிதைகளாகவே செய்யும்.
வாசிக்க வாசிக்க மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உத்வேகம் தந்தபடியே இருக்கின்றன.
பசித்த பொழுது தொகுப்பின் கவிதைகளில் இரண்டுநாட்களாகவே அமிழ்ந்து போயிருக்கிறேன்
மனுஷ்யபுத்திரனின் விழாவில் அது குறித்து விரிவாகப் பேசுவேன்
•••