The Letter Room என்ற முப்பது நிமிஷம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றைப் பார்த்தேன். சிறைக் கைதிகளுக்கு வரும் கடிதங்களைத் தணிக்கை செய்து ஒப்படைக்கும் அதிகாரியின் கதை.

தனிமையில் வாழும் சிறை அதிகாரி ரிச்சர்ட் இரக்க குணம் கொண்டவர். சிறைக்கைதிகளிடம் அன்பாக நடந்து கொள்கிறார். இவரைத் தகவல் தொடர்பு இயக்குநராகப் பதவி உயர்வு கொடுத்து நியமிக்கிறார்கள். தனது புதிய வேலையில் கைதிகளுக்கு வரும் கடிதங்களைப் படித்துத் தணிக்கை செய்கிறார். சிறைக்கோப்பிற்காக இந்தக் கடிதங்களை ஸ்கேன் செய்து வைப்பதும் அவரது வேலை.
மரணதண்டனை கைதி ஒருவன் தனக்கு மகளிடமிருந்து கடிதமே வருவதில்லை என்று ஏங்குகிறார்.
ஒரு கைதிக்கு அவனது மனைவி ரோசிட்டாவிடமிருந்து வரும் கடிதங்களில் உள்ள நெருக்கத்தையும் காதலையும் உணர்ந்த ரிச்சர்ட் கைதி ஏன் பதில் கடிதம் எழுத மறுக்கிறான் எனப் புரியாமல் குழம்பிப் போகிறான். அந்தப் பெண் மீது கொண்ட பரிவின் காரணமாக ரோசிட்டாவை நேரில் தேடிச் சென்று அவளது கணவனைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறாள்.

அவள் கடிதம் எழுதுவது பதில் பெறுவதற்காக அல்ல. நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்காகத் தான் என்று ரிச்சர்ட்டிற்குப் புரிய வைக்கிறாள். இது அவனுக்குள் மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது
நம் அனைவருக்கும் நம்மை நேசிக்க யாராவது ஒருவர் தேவை என்பதைப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது
Elvira Lind இயக்கியுள்ளார். ரோசிட்டாவின் கடிதம் வழியாக அவன் தன்னை நேசிக்க எவருமில்லை என்பதை உணர்ந்து கொள்கிறான். ரிச்சர்ட்டின் வீடு. இரவு வாழ்க்கை. காரில் அமர்ந்தபடியே சாப்பிடுவது. சிறையில் ரோசிட்டா கடிதத்தைப் படித்துக் காம உணர்வினை அடைவது என நுட்பமாகப் படம் விரிகிறது.
ரிச்சர்ட் தன்னோடு பணியாற்றுகிறவர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. விலகியே நடந்து கொள்கிறான். அவனது மேலதிகாரியிடம் நடந்து கொள்வதும் அப்படியே.
தான் பாட்காஸ்ட ஒன்றில் கேட்ட கதையிலிருந்து இந்தப் படத்தை உருவாக்கியதாக இயக்குநர் கூறுகிறார். அந்தக் கதையில் முகம் தெரியாத ஒரு பெண் எழுதும் கடிதங்களில் மயங்கி அவளுக்குத் தொடர்ந்து பணம் அனுப்புகிறான் ஒருவன். முடிவில் அது பெண்ணில்லை. ஒரு ஆண் பெண் பெயரில் கடிதம் எழுதி பணம் பறிக்கிறான் என்பதைக் கண்டறியும் போது மனம் உடைந்து போகிறான்.
இந்தக் கதைச் சரட்டினை சிறைச்சாலையினுள் பொருத்தி திரைக்கதை எழுதியுள்ளதாகக் கூறுகிறார்
ரோசிட்டாவின் கடிதங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வரிகளின் வழியே அவளுடன் ரிச்சர்ட் நெருக்கமாகிறான். சிறைவிதிகளை மீறி அவளைத் தேடிப் போகிறான். அவள் வழியாக அவன் புதிய மாற்றத்தையும் அடைகிறான்.
அரைமணி நேரப்படத்திற்குள் ஒரு கதாபாத்திரத்தின் அகவுலகையும் அவனது மனமாற்றத்தையும் நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியது.