புத்தகங்களை என்ன செய்வது

To add a library to a house is to give that house a soul. Your library is your portrait.

– Cicero

புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, படிப்பது சரி என்று ஒத்துக் கொள்கிறவர்கள். புத்தகம் வைக்க இடமில்லை என்று சொல்வது என்னவிதமான மனநிலை, இது போல சங்கடங்கள் உங்களுக்கும் வந்திருக்கும் தானே இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் டி. எஸ். வெங்கட் என்ற நண்பர் ஒரு மின்னஞசல் அனுப்பியிருந்தார், இதே விசயத்தைப் பற்றி  சென்ற முறை கோவை வந்த போது ஒரு நண்பரின் மனைவி என்னிடம் நேரடியாகவே சண்டையிட்டார், அநேகமாக வாசிக்கும் விருப்பம் உள்ள எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது

வாசிக்க விருப்பமுள்ளவர்கள் அத்தனை பேரின் கனவும் வீட்டில் ஒரு நல்ல நூலகம் அமைக்க வேண்டும் என்பது தான், ஆனால் அதை எங்கே வைப்பது, யார் பராமரிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருக்கின்றன

ஒருவகையில் புத்தகங்களை வைக்க இடமில்லாத நெருக்கடி தான் புத்தகம் படிப்பதைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பேன், வீட்டில் மிகப் பெரிய நூலகங்களை அமைத்தவர்கள் அதன்பிறகு படிப்பதையே விட்டகதையை நான் அறிவேன், நெருக்கடியான இடத்திற்குள் மறைத்தும்  ஒளித்தும் சண்டையிட்டும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களே நம்மை மறுபடி வாசிக்கத் தூண்டுகின்றன,

ஒரு வணிகநிறுவன உரிமையாளர் தனது தாத்தா வாங்கிச் சேகரித்து வைத்திருந்த இரண்டாயிரம் புத்தகங்களை என்னிடம் காட்டி, இது புத்தகங்களின் கல்லறை போலதானிருக்கிறது, முப்பது வருசமாக யாரும் இதில் ஒன்றைக்கூட புரட்டிப் படிக்கவேயில்லை, அதே நேரம் புத்தகங்களை கடைக்குப் போட மனதுமில்லை, இதை என்ன செய்வது என்று கேட்டார், இது இன்னொரு விதமான நெருக்கடி.

உண்மையில் நமக்கு விருப்பமான ஒரு நூறு புத்தகங்களே போதுமானது தான், அது எந்த நூறு என்று தெரியாமல் தான் பலநூறு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்,

வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை தேர்வு செய்வது ஒரு குறிப்பிட்ட மனநிலையே, அப்படிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகின்ற மனநிலையில் விரும்பிய புத்தகம் கிடைக்காமல் போய்விட்டால் அடையும் வேதனைக்காகவே புத்தகங்கள் பாதுகாக்கபடுகின்றன, இன்னொன்று புத்தகங்கள் கூட இருப்பது ஏதோவொரு பாதுகாப்பு உணர்வைத் தருகின்றன, அதுவும் ஒரு காரணம் தான்,

புத்தகங்களைச் சேகரிப்பதற்கு முன்பு அதை எதற்காகச் சேமிக்கிறோம், எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும், அத்துடன் புத்தகப்பூச்சி, கரையான், தூசியில் இருந்து அதை எப்படிப் பாதுகாப்பது என்பது முக்கியமானது, அதற்காக ஆண்டிற்கு ஒருமுறை புத்தகங்களை முறையாக உதறி வெயில்பட வைத்து கிருமிநாசினி அடித்து மறுமுறை அடுக்கவேண்டும்,

பல ஆண்டுகளாக புத்தகங்களுக்குள்ளாக அலைந்து நான் சுவாச ஒவ்வாமையால் அவதிப்படுகிறேன், மருத்துவர் சொல்லும் முதல் அறிவுரை எந்தப் பழைய புத்தகத்தையும் கையால் தொடாதே, பழைய நூலகம் எதற்குள்ளும் போகாதே என்பது தான், இரண்டையும் தவறாமல் செய்துவருகிறேன் நான், பின்பு எப்படி ஒவ்வாமை நீங்கும்,

என்னிடம் நாலாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன, அதில் பாதி அரிய புத்தகங்கள். முதற்பதிப்புகள். பல அரிய மொழியாக்கங்கள், இதை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாக்க முடியாது என்று ஆங்காங்கே பிரித்து ஊருக்குக் கொஞ்சமாக தனியே பாதுகாத்து வைத்திருக்கிறேன்,

சமீபமாக இணையத்தில் கிடைக்கின்ற மின்னூல்களைப் படிக்கப் பழகி அதற்கென சோனி ஈபுக் ரீடரை வாங்கி அதில் ஐநூறு புத்தகங்களுக்கும் மேலாகச் சேகரித்து கையில் எடுத்துப்போய் பயணத்தில் படித்துவருகிறேன், கணிணியிலும் மடிக்கணிணியிலுமாக பலநூறு மின்னூல்கள் இருக்கின்றன, இவற்றைப் பொருள்வாரியாகப் பிரித்து தனியே தொகுத்து வைத்திருப்பதால் பயன்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் இருபது புத்தகங்கள் வாங்கிவிடுகிறேன், நான் வாசிக்க வேண்டும் என அனுப்பபடும் கதை, கட்டுரை, கவிதைப்புத்தகங்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டிவிடும். இவை தவிர புத்தகக் கண்காட்சி. பழைய புத்தகக் கடைகள் என்று வாங்கிக் குவித்த புத்தகங்கள் வீட்டில் நிரம்பிப் போயிருக்கின்றன, பலநேரங்களில் வாசிக்க பத்துத் தலைகள் வேண்டும் போலிருக்கிறது.

சிலநேரங்களில் ஒரே புத்தகத்தின் வேறுவேறு பதிப்புகளாக பத்துப் பிரதிகள் வாங்கி வைத்திருக்கிறேன், அது எதற்கு என்று எனக்கே புரியவில்லை, அது போலவே படித்த புத்தகங்களை ஆண்டுக்கு ஒரு முறை முதியோர் காப்பகம் அல்லது கிராமநூலகங்களுக்குத் தந்துவிடுகிறேன், அப்படியிருந்தாலும் புத்தகங்கள் வைக்க இடமேயில்லை,

கன்னிமாரா நூலக அளவில் ஒரு கட்டிடம் தந்துப் புத்தகங்களை வைக்கச்சொன்னாலும் இடம் போதவில்லை என்ற எண்ணம் இருக்கவே செய்யும், அது இடம் தொடர்பான பிரச்சனையில்லை, படிக்கவேண்டும் என்ற தீராத ஆசை தொடர்பானது.

புத்தகங்களை ஒரு முறைப் படித்து முடித்தவுடன் அதன் ஆயுள் முடிந்து போய்விட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள், பிறகு எப்போதாவது ஒரு முறை அதை இருபது முப்பது பக்கங்கள் புரட்டுவதோடு சரி, தனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்று அடுத்தவர் நம்பவேண்டும் என்பதற்குத் தான் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது,

பழைய உடைகள். வீட்டுஉபயோகப்பொருள்கள். பொம்மைகள். நாற்காலிகள் மெத்தைகள். கரண்டி டம்ளர்கள் என்று வேண்டாத பலநூறு பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் நிரம்பியிருக்கின்றன, ஆனால் அவை எல்லாம் என்றாவது உதவும் என்று நம்புகிறார்கள், புத்தகத்தை அப்படி நினைக்கவேயில்லை

அதைப் படித்து முடித்துவிட்டதும் எடைக்குப் போட்டால் கிலோவிற்கு ஐந்து ரூபாய் தருவார்கள், அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்,

உண்மையில் பழைய இரும்பு ஆணிகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கூட புத்தகங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை,

ஆனால் புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது  ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது, அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக. நண்பனாகவே கருதுகிறான், ஆகவே புத்தகவாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான்,

உலகின் கண்களில் புத்தகங்கள் வெறும் அச்சிடப்பட்ட காகிதங்கள், ஆனால் வாசகன் கண்ணில் அது ஒளிரும் ஒரு வைரக்கல், அதன் மதிப்பை காலம் தான் முடிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள்ளிருக்கிறது, ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஆன்மாயிருக்கிறது, அதை வாசகனால் நன்றாகவே உணர முடிகிறது, புத்தகத்தோடு உள்ள உறவு எப்போதுமே தனித்துவமான நினைவாகிவிடுகிறது, பலநேரங்களில் வாழ்க்கை அனுபவத்தை விடவும் புத்தகங்களே நம்மை வழிநடத்துகின்றன. ஆறுதல்படுத்துகின்றன.

எனது படுக்கையில், எழுதும் மேஜையில், நாற்காலியின் அடியில், அலமாரியில். காரில். என எங்கும் புத்தகங்களே இருக்கின்றன, ஒரு இரவு ரயில்பயணத்திற்கு துணையாக மூன்று புத்தகங்கள் கொண்டு போகின்ற ஆள் நான், காத்திருக்கும் எந்த இடத்திலும் படிக்க கையில் ஒரு புத்தகம் வைத்திருப்பேன், அப்படி விமானநிலையம் ரயில்நிலையத்தில் படித்தவை ஏராளம். இவையின்றி சிலவேளைகளில் படிப்பதற்காகவே தனியே பயணம் செய்திருக்கிறேன், ஆள் அற்ற தனியிடங்களில் தங்கியிருக்கிறேன்.

படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்கிறார்கள்,

ஒன்று நான் தினசரி படிக்கின்றவன், மற்றது நான் தேர்வு செய்து படிக்கின்றவன், மூன்றாவது நான் தொலைக்காட்சியே பார்ப்பது கிடையாது, ஆகவே போதுமான நேரம் எனக்கிருக்கிறது, படிப்பதில் திட்டமிடல் தான் முக்கியம்,

நான் ஒரே நேரத்தில் நாலு புத்தகங்கள் படிக்கின்ற ஆள், காலையில் ஒன்று. மதிய உணவுவேளையில் வேறு ஒன்று. காரில் செல்லும் போது படிப்பது வேறு, இரவு ஒன்று. என்று ஒவ்வொன்றிலும் ஐம்பது நூறு பக்கங்கள் படித்துவிடுவேன், நான் படிக்கின்ற வேகம் அதிகம், ஆகவே விரைவாக வாசித்துவிட முடியும்,

அப்படியானால் நிறைய பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டிவிடுவீர்களோ என்று சந்தேகமாக கேட்பார்கள், நாம் அரைமணி நேரம் சைக்கிள் ஒட்டும் தூரத்தை ரேஸில் ஒட்டுகின்றவன், எப்படி ஐந்து நிமிசத்தில் கடந்து போய்விடுகிறானோ அது போல படிப்பிலும் வேகமும் கூர்ந்த கவனமும் இருந்தால் வாசிப்பது சாத்தியமே, நான் எனது பதிநாலாவது வயதிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன், அன்று காமிக்ஸ் இன்று நீட்சே அவ்வளவு தான் வேறுபாடு.

ஒரு ஆண்டில் எந்த்த் துறை சார்ந்து முதன்மையாகப்படிப்பது என்பதைத் திட்டமிட்டு அது குறித்த ஆதாரப்புத்தகங்களை  வாங்கி அந்த ஆண்டிற்குள் படித்துவிடுவேன், மற்றபடி நண்பர்கள் மூலமும் இணையதளம் வழியாகவும் வேண்டிய புத்தகங்கள் கிடைத்துவிடுகின்றன.

அதிகம் விற்பனையாகிறது, பரபரப்பாகப் பேசப்படுகின்றது., யாரோ ஒரு பிரபலம் சிபாரிசு செய்கிறார் என்பதற்காக எதையும் நான் படிப்பதேயில்லை, பெரும்பாலும் நான் படிக்க ஆசைப்படுகின்றவை நூறு வருசங்களுக்கு முன்பாக எழுதப்பட்டவையாக  இருப்பதே பிடித்திருக்கிறது, இது தற்போதைய மனநிலை, பத்துவருசங்களுக்கு முன்பாக சமகால இலக்கியமாகத் தேடித்தேடி வாசித்தேன், இன்றுள்ள சமகாலச்சூழல் மீது அதிக ஈர்ப்பு இல்லை,

அகழ்வாய்வுகள்,  மன்னர்கள் எழுதிய புத்தகங்கள். வரலாற்று ஆவணங்கள். அறிவியலின் வரலாறு. நுண்கலையின் மகத்தான ஆளுமைகள்,  போன்றவற்றை வாசிக்கையில் துப்பறியும் கதைகள் படிப்பது  போலவே இருக்கிறது,

தமிழில் வாசிப்பது போல நாலு மடங்கு ஆங்கிலத்தில் வாசிக்கிறேன், எனது வாசிப்பின் முக்கியத்துறைகள். இலக்கியம், காமிக்ஸ். வரலாறு, வாழ்க்கைவரலாறு, விஞ்ஞானம் மற்றும் நுண்கலைகள்.  ஜென் கவிதைகள் சார்ந்த புத்தகங்கள்

பயணம் சார்ந்த நூற்களைப் பெரும்பாலும் படிக்க விரும்ப மாட்டேன், அது போலவே கல்விப்புலஆய்வுகள். அசட்டு நகைச்சுவை எழுத்து,  விஞ்ஞானக்கதைகள். திரில்லர் பேய்க்கதைகள். மனவியல் சார்ந்த புத்தகங்கள். இலக்கியக் கோட்பாடு சார்ந்த விளக்கங்கள். ஆய்வுகள் போன்றவை என் விருப்பமானவையில்லை,

சினிமாவின் புதிய தொழில்நுட்ப சார்ந்த விசயங்கள் மற்றும் உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்களை வாசிப்பேன், சினிமா விமர்சனங்களை வாசிப்பதில்லை, பௌத்த தத்துவம் எனது விருப்பங்களில் ஒன்று, அதில் ஆழமாக தேடித்தேடி வாசிக்க கூடியவன்,

பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்கள் தான் எனது விருப்பமான இலக்கியக்களம், அவற்றை மறுவாசிப்பு செய்வது பிடித்தமானது.

ஜப்பானிய மற்றும் சீனப்பண்பாடு கலாச்சாரம். இலக்கியம் கலைகள் குறித்து அறிந்து கொள்ளவும் வாசிக்கவும் அதிக நாட்டமுள்ளவன் அவற்றை நமது மரபின் நீட்சி என்று கருதுவதால் அதிகமாகவே வாசிப்பேன், அதை போலவே என் எழுத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த ருஷ்ய இலக்கியங்களை அடிக்கடி மீள்வாசிப்பு செய்தபடியே இருப்பேன்.

ஒரு புத்தகம் படிக்க எவ்வளவு நேரம் ஆகும், அதில் எவ்வளவு படிக்க முடியும் என்று நாள், மணி, நேரம் கணக்கிட்டு  நான் படித்த புத்தகங்கள் குறித்து என்னை சந்தேகப்பரிசோதனை செய்யும் சில அடிமுட்டாள்களை நான் கண்டுகொள்வதேயில்லை, காரணம் படிப்பது எனது விருப்பத்திற்காக மட்டுமே, அவர்களது பாராட்டுகளைப் பெறுவதற்கு அல்ல,

வீட்டிலே சிறிய நூலகம் வைத்துள்ள பலரையும் எனக்கு தெரியும், அவர்கள் என்னை விடவும் அதிகமான குடும்ப நெருக்கடியைச் சந்திக்கின்றவர்கள், ஆனால் அவர்கள் எந்த நெருக்கடியிலும் சேகரித்த புத்தகங்களை இழக்கவேயில்லை,

சென்னையில் கவிஞர் ராஜமார்த்தாண்டன் அறையில் ஒரு ஆள் படுக்கப் போதுமான அளவு கூட இடமில்லாத அளவு புத்தகங்கள் நிரம்பியிருந்தன, அதற்குள்ளாக தான் அவர் வசித்து வந்தார், மொழிபெயர்ப்பாளர் சா,தேவதாஸ் அறைமுழுவதும் புத்தகங்களாகவே இருக்கும், கோணங்கியின் நூலகம் மிகப்பெரியது, அபூர்வமான பல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறார், நாவலாசிரியர் பா.வெங்கடேன், தமிழவன், சுந்தர ராமசாமியின் நூலகங்கள் முறையாக. பகுக்கப்பட்டு துறைவாரியாக அடுக்கிவைக்கப்பட்ட சிறப்பான  நூலகங்கள், கவிஞர் நா. முத்துகுமாரின் தந்தை மிகப்பெரிய புத்தக வாசகர், காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நூலகம் மிக அற்புதமானது, பல முக்கிய எழுத்தாளர்களின் முதல்புத்தகங்கள் அவர்கள் கையெழுத்துடன் அவரிடமிருந்தன,

எண்பதுகளின் துவக்கத்தில் நானும் கோணங்கியும் கோட்டையூரில் உள்ள ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்றோம், தமிழ்நாட்டில் தனிநபராக ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் சேகரித்து தனியே நூலகம் வைத்திருந்தவர் அவர், அவரது சேமிப்பைத் தான் சிகாகோ பல்கலைகழகம் விலைக்கு வாங்கி டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி இன்று ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் என சென்னையில் நடத்திவருகிறது, தரமணியில் உள்ள இந்த நூலகம் தமிழின் மிகப்பெரிய பொக்கிஷம்

நாங்கள் ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்று டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளைக் கேட்டபோது அவர் எங்களை வரவேற்று உபசரித்து தன்னிடம் அதன் பிரதிகள் இருப்பதாக எடுத்து வந்து படிக்கத் தந்தார், புத்தகங்களை பாதுகாக்க ரோஜா முத்தையா தனி ஆட்கள் வைத்திருந்தார், அவரது  சேமிப்பில் அரிய பல தமிழ் நூல்கள் இருந்தன, இலக்கியப் புத்தகங்கள். இதழ்கள். நாடக சினிமா நோட்டீஸ். இசைத்தட்டுகள். விளம்பரங்கள்  என்று அவரது சேமிப்பு இன்று ஒரு பெரிய ஆவணக்களஞ்சியமாக விளங்குகிறது

ரோஜா முத்தையா நூலகம் போலவே புதுக்கோட்டையில் ஞானாலயா என்ற அரிய நூலகம் இயங்கிவருகிறது, அதை நடத்திவருபவர்கள் பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதிகள், தமது வாழ்நாள் முழுவதும் உழைத்துச், சேகரித்த புத்தகங்களை கொண்டு பத்து லட்சம் செலவில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்நூலகத்தில் அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

எனது நண்பரும்  மிகச்சிறந்த தமிழ் அறிஞருமான பல்லடம் மாணிக்கம் அவர்கள் தனது புத்தகச் சேமிப்பை கொண்டு தமிழ் நூல் காப்பகம் என மிகப்பெரிய நூலகம் ஒன்றை விருத்தாசலத்தில் நடத்திவருகிறார்

பல்லடம் மாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே வாங்கிச் சேகரித்த ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்குள்ளன, .இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரையான பல முதல் பதிப்புகள், கம்பராமாயணத்திற்குப் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள். திருக்குறள் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.

வேதங்கள், உபநிடதங்கள்,கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகள். ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் என அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பம்சம்.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் கொண்டதாக இது அமைந்திருக்கிறது.

இது போலவே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகமும் மிக முக்கியமான ஒன்றே, இங்கே பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முந்நூற்றுக்கும் அதிகமான தமிழ்நூல்களை வெளியிட்டும் மறுபதிப்புச் செய்தும், திருத்தப்பதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது இவ் ஆதீனம்.

தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் தற்போது 10 மொழிகளைச் சேர்ந்த 69,000 நூல்கள், 39,000  ஓலைச்சுவடிகள் மற்றும் சோழர்கால கலைநயமிக்க ஓவியங்கள் உள்ளன.

நாயக்கர் காலத்தில் சரஸ்வதி பண்டார் என்ற பெயரில் 1918 வரை அழைக்கப்பட்ட இந்த நூலகம், மராட்டியர்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சை மன்னர் சரபோஜியால் சரஸ்வதி மகால் நூலகம் என்று மாற்றம் பெற்றது. 1918-ல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்ட இந்த நூலகத்தில் அரிய ஒலைச்சுவடிகளை பாதுகாக்கவும் முறைப்படுத்தி பதிப்பிக்கவும் படுகின்றன.

தமிழ் இலக்கியங்களின் மூலச் சுவடிகளை தேடி சேமித்து, பகுத்து, பாடபேதம் கண்டு, தொகுத்து அச்சிலேற்றும் பணியாற்றும் நூலகம் உவேசா நூலகம், இது சென்னையில் உள்ளது, செவ்வியல் இலக்கியங்களுக்கான 61 ஓலைச் சுவடிகளைக் கொண்ட நூல் நிலையம் இதுவொன்றேயாகும்  பத்தொன்பதாம் நூற்றாண்டு வெளியீடுகள் டாக்டர். உ.வே.சா. கி.வா.ஜ. போன்ற பேரறிஞர்கள்        சேகரித்தவை. அனைத்துத் தமிழ் ‌   இலக்கியநூல்கள். இலக்கண நூற்கள் இங்கே உள்ளன

இது போலவே சென்னையில் ஒரு தமிழ் புத்தகம் கூட இல்லாத ஒரு நூலகமிருக்கிறது, அது சென்னை இலக்கிய சங்க நூலகம், அது நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், சங்கர நேத்ராலயா  மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள D.P.I வளாகத்தினுள் உள்ளது,

1812ஆம் ஆண்டுசென்னையிலிருந்த ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஒரு பகுதியாக இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது ஒன்றரை லட்சம் புத்தகங்கள் இங்கே உள்ளன. இலத்தின், பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் புத்தகங்கள் மட்டுமே இங்குள்ளன,  தமிழ் புத்தகமே  கிடையாது, இதில் உறுப்பினராவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.  வருட சந்தா ஐநூறு ரூபாய். உறுப்பினர் ஒரே நேரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள 134 ஆண்டு பழமை வாய்ந்த பென்னிங்டன் பொதுநூலகம் முக்கியமான ஒன்று,  1953-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1875-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் ஆசியுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமசந்திரராவ், டி. ராமஸ்வாமி ஐயர், டி.கிருஷ்ணராவ், முத்துஐயங்கார் மற்றும் முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இணைந்து, இந்த  நூலகத்தை ஆரம்பித்தனர். இங்கே தமிழில் 20,113 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 21,277 புத்தகங்கள் என மொத்தம் 41,390 புத்தகங்கள் உள்ளன.

இது போலவே சேலம் தமிழ்சங்க நூலகம். கும்பகோணம் கோபால்ராவ் நூலகம் மதுரை ரீகல் தியேட்டரின் பின்பக்கம் உள்ள விக்டோரியா நூலகம். சிரவணபெலகோலாவில் உள்ள சமண நூலகம். சித்தாமூரில் உள்ள குந்தகுந்தார் நூலகம். கயாவில் உள்ள பௌத்தநூலகம். பூனாவில் உள்ள பண்ட்ராகர் நூலகம். ராஜபாளையத்தில் உள்ள மு,கு,ஜெகநாத ராஜா நூலகம்.  பிஎஸ்கே,சமஸ்கிருத நூலகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம், கொல்கத்தாவில் உள்ள  இந்திய தேசிய நூலகம். டெல்லி பொது நூலகம், சாகித்ய அகாதமி நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், சென்னை அடையாறில் உள்ள அடையாறு நூலகம். பெரியார் நூலகம். மதுரை காந்தி மியூசிய நூலகம், நெய்வேலி மத்திய நூலகம். பனாரஸில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரி நூலகம். பரோடாவில் உள்ள மத்திய நூலகம், போன்றவை நான் பார்த்த நூலகங்களில் முக்கியமானவை,

புத்தகங்களை இரவல் கொடுப்பதைப் பற்றி எழுத்தாளர் அனதோலியா பிரான்சு வேடிக்கையாக குறிப்பிட்டது தான் நினைவிற்கு வருகிறது

Never lend books, for no one ever returns them; the only books I have in my library are books that other people have lent me.

ஆனால் கைவிடப்பட்ட புத்தகங்களை விடவும் படிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்ற புத்தகங்கள் வேதனைமிக்கவை, இதைக் கேலி செய்து ஸ்விப்ட் பேடில் ஆப் புக்ஸ் என்ற ஒரு புனைவு எழுதியிருக்கிறார், வர்ஜீனியா வுல்ப் கூட நடைபாதைக்கடைகளில் விற்கப்படும் புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்கிறார்,

புத்தகங்களை கண்ணாடி அலமாரியில் வைத்துப் பூட்டி சவமாக்கிவிடுவதை விட அவற்றை யாரோ படிக்கட்டும் என்று உலகின் கைகளுக்கே திரும்ப தந்துவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது, அது தான்  எப்போதும் புத்தகங்களின் விதிவசம் போலும்,

••

ஞானாலயா முகவரி: ஞானாலயா ஆய்வு நூலகம், 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை, 622002 இந்தியா தொலைபேசி: 914322221059. Gnanalaya Research Library, 6, Pazhaniyappa Nagar, Thirukkokarnam, Pudukkottai, 622002, India. Phone: 914322221059.

••

டாக்டர். உ.வே.சா. நூல் நிலையம்

எண்.2.அருண்டேல் கடற்கரை சாலை

பெசன்ட் நகர், சென்னை-90, இந்தியா

தொலைபேசி: 24911697

••
பல்லடம் மாணிக்கம் தமிழ்நூல் காப்பகம்,
சேலம் நெடுஞ்சாலை, தமிழ்நகர்,விருத்தாசலம்-606 001
செல்பேசி: + 91 9443042344

••

Roja Muthiah Research Library
3rd Cross Road
CPT Campus Taramani
Chennai 600 113
,
Phone nos. (044) 2254-2551 & 2254-2552
Fax no. (044) 2254-2552

••

0Shares
0