முகாமில் இரண்டு நாட்கள்

திண்டுக்கல்லில் நடைபெற்ற நாவல் இலக்கிய முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கவிஞர் தேவதச்சன், தோழர் எஸ்.ஏ.பெருமாள், விமர்சகர் முருகேச பாண்டியன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் விநாயகமுருகன், எழுத்தாளர் முருகவேள், கவிஞர் நேசமித்ரன், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், காந்திகிராமப்பல்கலைகழகப் பேராசிரியர் முனைவர் பிச்சை, அந்திமழை ஆசிரியர் அசோகன், உள்ளிட்ட 60 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

50 முதல் 75 பேர் வரை கலந்து கொண்டால் போதும், அப்போது தான் பரஸ்பரம் முகம் பார்த்துப் பேசிக் கொள்ளவும், கூடி விவாதிக்கவும் உதவியாக இருக்கும் என முடிவு செய்திருந்தேன்.

ஆறு அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வில், உலகின் சிறந்த நாவல்கள், பின்நவீனத்துவ நாவல்கள், தமிழின் சிறந்த நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்களும் தமிழ் சூழலும், நாவல் எழுத விரும்புகிறவர்களுக்கான கலந்துரையாடல், தேர்வு செய்யப்பட்ட ஐந்து நாவல்கள் குறித்த அறிமுகமும் கூட்டு விவாதமும் நடைபெற்றன.

காலை 9.30 மணிக்கு துவங்கி மாலை ஆறு மணி வரை நிகழ்வுகள் நடைபெற்றன, அதன் பிறகு இரவு 8 மணிக்கு இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் ஒன்று கூடி சாவகாசமாக உரையாடினோம்,

இலக்கியம் சினிமா, சமூகப்பிரச்சனைகள், பயணம் என இரவு 11.30 வரை நிறையப் பேசிக் கொண்டிருந்தோம்.

லைப் சென்டர் வளாகம் இயற்கையான சூழலில் அற்புதமாக இருந்தது,  நல்ல உணவு, அமைதியான சூழல், கலந்து கொண்டவர்களின் முழுமையான பங்களிப்பு என முகாம் இரண்டு நாட்களும் முழுமையாக நாவல்கள் குறித்துப் பேசுவதற்கும் விவாதிப்பதற்குமான களமாக அமைந்தது சந்தோஷம் தந்தது

முகாமைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும், ஒத்துழைப்பு தந்த நண்பர்களுக்கும், முகாமில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0Shares
0