Louis van Beethoven ஜெர்மன் தொலைக்காட்சிக்காக 2020ல் உருவாக்கப்பட்ட திரைப்படம். பீத்தோவனின் 250வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நிக்கி ஸ்டெயின் இதனை இயக்கியுள்ளார்

லுட்விக் பீத்தோவனின் இறுதி ஆண்டுகளில் துவங்கி அவரது பால்யகாலத்திற்குள் இடைவெட்டி முன்பின்னாகக் கதை நகர்கிறது . குழந்தைப் பருவம். இளமைக்காலம், முதுமை என்று மூன்று வேறுபட்ட காலங்களில் பீத்தோவனைக் காணுகிறோம்.
படம் பீத்தோவனின் பயணத்தில் துவங்குகிறது. தனது இளைய சகோதரன் வீட்டிற்குக் கோச் வண்டியில் பயணம் செய்கிறார் .வீட்டில் அவருக்குக் கிடைக்கும் அழையா விருந்தாளி போன்ற வரவேற்பு, அவரது உதவியாளரின் நடத்தை. அவரது வருவாய். உணவை மறந்து இசையில் ஈடுபடும் அவரது தீவிரம் எனக் கொஞ்சம் கொஞ்சமாகப் பீத்தோவனின் வாழ்வினுள் பிரவேசிக்கிறோம். படம் அவரது கடந்தகாலத்தை நோக்கி நகர்கிறது.

ஐந்து வயதிலே இசைமேதையாக மொசார்ட் உருவானதால் அவரைப் போலவே பீத்தோவனையும் உருவாக்க வேண்டும் என்று அவரது தந்தை முயலுகிறார்.
இதற்காகப் பீத்தோவனின் உண்மையான வயதை மாற்றிச் சொல்கிறார். வீட்டில் இடைவிடாமல் இசைப்பயிற்சி மேற்கொள்ள வைக்கிறார். தந்தையின் கோபம் மற்றும் மிதமிஞ்சிய கண்டிப்பு பீத்தோவனைப் பாதிக்கிறது. பகலிரவாக இசைப் பயிற்சியினை மேற்கொள்கிறார். வாசிக்கக் கடினமான இசைக்குறிப்புகளைக் கூட எளிதாக வாசிக்கிறார். தானே சொந்தமாக இசைக்குறிப்புகளை எழுதுகிறார்.
தந்தையின் கட்டளைக்குப் பதில் தரும்விதம் விதமாகப் பீத்தோவன் ப்யானோ வாசித்துக் காட்டும் காட்சி சிறப்பானது.
காது கேளாத பீத்தோவன் எல்லாவற்றையும் சிறிய கையேட்டில் எழுதிக் காட்டுகிறார். அவர் உருவாக்க விரும்பும் ஒன்பதாவது சிம்பொனியை உடனிருக்கும் இசைக்கலைஞர்கள் கூடப் புரிந்து கொள்வதில்லை.
பீத்தோவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது சகோதரர் ஜோஹன் குடும்பத்துடனே வாழ்ந்து வந்தார். சகோதரனின் மகனுக்கு இசை கற்றுக் கொடுத்தார். அவனுக்கு இசையின் மீது விருப்பமேயில்லை. ராணுவத்தில் சேர ஆசைக் கொண்டிருந்தான். ஆகவே பிடிக்காத இசையைத் தொடர விரும்பாமல் தற்கொலை செய்து கொள்ள முயலுகிறான். இது பீத்தோவனைக் குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது.

இசைக்கலைஞர் ஹைடனிடம் இசை கற்பதற்காக நவம்பர் 1792 வியன்னா நகருக்குச் சென்றார். அங்கே உயர்குடியைச் சேர்ந்த எலியோனார் வான் ப்ரூனிங் என்ற இளம்பெண்ணைக் கண்டார். அவள் பீத்தோவனின் இசைதிறமையைக் கண்டு காதலுற்றாள்.. இந்தக் காதலை எலியோனாரின் குடும்பம் ஏற்கவில்லை. ஆகவே அவரது காதல் தோல்வியில் முடிவடைந்தது. எலியோனார் 1802 இல் ஃபிரான்ஸ் வெகெலரை மணந்தாள். ஆயினும் அவர்களுக்குள் கடித தொடர்பு இருந்தது
பிரெஞ்சுப் புரட்சி பீத்தோவனின் இதயத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது. புதுயுகத்தை வாழ்த்தி அவர் இசை அமைத்தார்
பீத்தோவன் 1787 இல் வியன்னாவில் மொஸார்ட்டை சந்தித்தார். படத்தின் முக்கியக் காட்சிகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.
பீத்தோவன் போன்ற இசை மேதையை அவரது குடும்பம் புரிந்து கொள்ளவில்லை. உறவுகளால் அலைக்கழிக்கப்படுகிறார். பீத்தோவன் பற்றி Immortal Beloved: என்றொரு படம் வந்திருக்கிறது. அதிலும் அவரது காதலே முதன்மையாகச் சித்தரிக்கப்பட்டது.
உலகையே தனது இசையால் மகிழ்ச்சிப்படுத்திய மேதை சொந்த வாழ்வில் துயரமும் வேதனையும் சூழவே வாழ்ந்திருக்கிறார். படத்தில் அவரது தனிமை முழுமையாக வெளிப்படுகிறது.
பீத்தோவனின் இசையைப் போலவே இப்படமும் நம்மைப் புத்துணர்வு கொள்ள வைக்கிறது.