லியோ டால்ஸ்டாய் தனது 82வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிப் போன நிகழ்வை பாவெல் பெசின்ஸ்கி விரிவாக ஆராய்ந்து தனது Flight from Paradise நூலில் எழுதியிருக்கிறார்.

அதில் டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறிய செய்தி நாளிதழ்களில் எவ்வாறு வெளியிடப்பட்டது என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
கிழட்டுச் சிங்கம் தன் குகையை விட்டு வெளியேறிச் சென்றது,
தப்பிப்பறந்தார் டால்ஸ்டாய்
டால்ஸ்டாய் எங்கே ஒளிந்திருக்கிறார்
என செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒடேசா என்ற நாளிதழ் “டால்ஸ்டாயைத் தேடாதீர்கள். அவர் குடும்பத்திற்கு மட்டும் உரியவரில்லை. நம் அனைவருக்கும் சொந்தமானவர் என்று செய்தி வெளியிட்டது. அத்தோடு அவரது புதிய வசிப்பிடம் நிச்சயமாக வெளிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இன்னொரு பத்திரிக்கை. “வயதான சிங்கம் தனிமையில் இறக்கப் போய்விட்டது” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

இவான் புனின் எழுதிய தி லிபரேஷன் ஆஃப் டால்ஸ்டாய் என்ற புத்தகத்தில், அவர் தனது மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதம் இடம்பெற்றுள்ளது. அதில் என் வயதிலுள்ள முதியவர்கள் வழக்கமாகச் செய்வதைத் தான் நானும் செய்கிறேன் என்று டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார்.
எளிய விவசாயிகள் இப்படிக் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டுச் செல்வார்கள். ஆனால் டால்ஸ்டாய் போன்ற பண்ணை முதலாளி இப்படி நடந்து கொள்வாரா என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர் ஒருவேளை புனித யாத்திரை சென்றிருக்கக் கூடும் என்றும் நினைத்தார்கள்.
டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறப் போவது அவரது மகள் சாஷாவிற்குத் தெரியும். அவளிடமே தனது கடைசிக் கடிதத்தை ஒப்படைத்திருக்கிறார். சில நாட்களுக்குப் பின்பு அவர் இருக்குமிடத்திற்குச் சாஷா வருவாள் என்பதே ஏற்பாடு.

உறங்கிக் கொண்டிருந்த மனைவி எழுந்துவிடாமல் டால்ஸ்டாய் வெளியேறியிருக்கிறார். அவரது படுக்கையறைக்கும் அவளது அறைக்கும் இடையே மூன்று கதவுகள் இருந்தன , இரவு நேரங்களில் சோபியா அவற்றைத் திறந்து வைப்பது வழக்கம், அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால். சோபியா எழுந்து வருவார். ஆனால் அன்று அந்தக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. நிழல் போலச் சப்தமின்றி அறையை விட்டு வெளியேறி நடந்தார் டால்ஸ்டாய்
டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறிய செய்தியை ரஷ்யா முழுவதும் மக்கள் பரபரப்பாக வாசித்தார்கள். அவர் எங்கே சென்றிருப்பார் என்ற யூகத்தைப் பத்திரிக்கைகளே வெளியிட்டிருக்கிறார்கள்.
அத்தோடு டால்ஸ்டாய் பண்ணைக்குப் பத்திரிக்கையாளர்கள் திரண்டு வந்து பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். பலரையும் நேர்காணல் செய்திருக்கிறார்கள்
டால்ஸ்டாயோடு துணையாக அவரது மருத்துவர் மாகோவிட்ஸ்கியும் சென்றிருந்தார். தாங்கள் டால்ஸ்டாயின் மருமகனுக்குச் சொந்தமான பண்ணைக்குப் போவதாகவே அவர் நினைத்துக் கொண்டிருந்தார். காரணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டால்ஸ்டாய் அங்கே சென்று வருவது வழக்கம்.
அதிகாலை நேரம் குதிரைவண்டியில் டால்ஸ்டாய் செல்வதைத் தபால்காரர் ஃபில்கா பார்த்திருக்கிறார். அவரது பேட்டியும் நாளிதழில் வெளியாகியிருக்கிறது.
நோயுற்ற நிலையில் டால்ஸ்டாய் அஸ்தபோவ் ரயில் நிலையத்திலிருக்கிறார் என்ற செய்தியை சோபியாவிற்குத் தந்தி மூலம் தெரிவித்தவர் பத்திரிகையாளர் கான்ஸ்டான்டின் ஓர்லோவ். அவசரமாக துலாவிலிருந்து அஸ்தபோவ் செல்வதற்காகத் தனி ரயில் ஒன்றை சோபியா ஏற்பாடு செய்தார். அதற்குச் செலவிடப்பட்ட பணம். 492 ரூபிள் மற்றும் 27 கோபெக்குகள்
கிங் லியர் நாடகத்தில் கைவிடப்பட்ட லியர் கடைசியில் போக்கிடம் தெரியாமல் நடந்து செல்வான். லியர் சென்ற அதே பாதையில் தான் டால்ஸ்டாயும் சென்றிருக்கிறார்.
டால்ஸ்டாயின் மறைவிற்குப் பிறகு அவரது ஆறு பிள்ளைகள் வீட்டில் ஒன்று கூடினார்கள். (செர்ஜி, தாத்தியானா, இலியா, ஆண்ட்ரி, மிகைல் மற்றும் சாஷா), பண்ணையின் எதிர்காலம் மற்றும் அம்மாவின் நிலை பற்றி விவாதித்தார்கள். அம்மா துயரம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்று பயந்தார்கள். ஆகவே அம்மாவிற்கு ஆறுதல் சொல்லி அவளது கண்ணீரைத் துடைத்தார்கள். டால்ஸ்டாய் தனது மகள்களிடம் காட்டிய நெருக்கத்தை மகன்களிடம் காட்டவில்லை. ஆகவே மகன்கள் அம்மாவின் பக்கமே நின்றார்கள்.
டால்ஸ்டாய் மூன்றுமுறை உயில் எழுதியிருக்கிறார். தனது எண்பதாவது பிறந்தநாளுக்குச் சில வாரங்களுக்கு முன்பு மூன்றாவது உயிலை எழுதியிருக்கிறார். அதில் தனது இறப்பிற்குப் பின்பு உடலுக்கு எந்தச் சடங்குகளும் செய்யக்கூடாது. எளிய சமாதி அமைத்தால் போதும் என்று குறிப்பிட்டிருக்கிறார். தனது சமாதிக்கான இடத்தையும் அவரே தேர்வு செய்திருக்கிறார். அந்த உயிலே அவரது மரணத்திற்குப் பிறகு நடைமுறைப்படுத்தபட்டது,