வாசிப்பு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையின் உண்மையான பொருள் என்ன ? வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் இந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறபோது இது மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக எனக்குப்படுகிறது
சுந்தர ராமசாமி
**
இன்று சுந்தர ராமசாமியின் 83வது பிறந்த தினம். அவரது அன்பையும் நட்பையும் நினைவு கொள்ளும்விதமாக மனக்குகை ஒவியங்கள் என்ற அவரது கட்டுரைகளின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுந்தர ராமசாமியின் குரலில் தான் எத்தனை தெளிவு. உறுதி. தான் சொல்லவந்த விஷயத்தை மிகத்துல்லியமாக, கச்சிதமாகச் சொல்லும் அற்புதமான எழுத்து.