புதிய சிறுகதை. செப்டம்பர் 14 2026
அவள் இரண்டு வான்கோ தலையணைகளை வாங்கியிருந்தாள்.

ஒன்றில் வான்கோவின் உருவமும் மற்றொன்றில் சூரியகாந்திப்பூக்களின் ஓவியமும் இருந்தன. இணையத்தில் தேடி அந்த இரண்டு தலையணைகளையும் வாங்கியிருந்தாள். அதன் விலை எவ்வளவு என அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை.

அந்தத் தலையணைகளைப் பார்த்தவுடன் எதற்காக இப்படி ஓவிய உறை கொண்ட தலையணையை வாங்க வேண்டும் என்று தான் ரவிக்குத் தோன்றியது. பிரவீணாவாகச் சொல்லட்டும் என அதை அலட்சியமாகப் பார்த்தான். அவள் எதையும் சொல்லவில்லை. மாறாக வான்கோ உருவம் பதித்த தலையணையில் முகம் புதைத்துப் படுத்துக் கொண்டாள். இன்னொரு தலையணை அவளது கையடியில் கிடந்தது.
தன் கையிலிருந்த போனில் ரீல்ஸ் பார்த்தபடியே ரவி கேட்டான்
“என்னது இது“
அந்தக் கேள்வி அவளை எரிச்சல்படுத்தியது
“பாத்தா தெரியலையா“ எனக்கேட்டாள்
“இந்த ஆள் யாரு“ என்று கேட்டான்
“வின்சென்ட் வான்கோ“ என்றாள். அந்தப் பெயரை அவள் சொன்னவிதம் விருத்தாசலத்திலுள்ள அவளது மாமாவின் பெயரைச் சொல்வதைப் போலிருந்தது
“வான்கோன்னா“ என்று கேட்டான்
“உனக்கு அதைப்பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது“ என்றபடி அவள் தலையணையிலிருந்த வான்கோவின் முகத்தில் விரல்களை நகர்த்தினாள்
“பாட்டுப்பாடுறவனா“ எனக்கேட்டான் ரவி
“நீ தெரிஞ்சி என்ன ஆகப்போறே.. எனக்குப் பிடிச்சிருக்கு.. வாங்கியிருக்கேன். விடேன்“ என்றாள்
அந்தப் பதில் ரவியை மேலும்எரிச்சல்படுத்தியது.
“ஏன் நான் தெரிஞ்சிக்கிட கூடாதா.. அந்த வொயிட் பில்லோ நல்லா தானே இருந்துச்சி“
“அது ஹாஸ்பிடல்ல இருக்கிற மாதிரி தோணுச்சி அதான் மாத்திட்டேன்… இந்த மாதிரி கலர்புல்லா பில்லோ இருக்கணும்“
“அப்போ தான் கலர்புல்லா கனவு வருமா“ எனக்கேட்டான்
“உன் ஜோக் சகிக்கலை. இப்போ உனக்கு என்ன பிரச்சனை“ என்று முறைத்தபடியே கேட்டாள் பிரவீணா
“நீ சொல்லவே வேண்டாம். இவன் யாருனு நானே கண்டுபிடிச்சிடுகிறேன்“ என்றபடி அந்தத் தலையணையைச் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் தேடினான்.

வின்சென்ட் வில்லியம் வான்கோ டச்சு ஓவியர் எனக் காட்டியது. அத்துடன் அவரது ஓவியங்கள் மற்றும் அது சார்ந்த கலைப்பொருட்களை நிறையவே காட்டியது. அவரைப் பற்றி வாசிக்க விருப்பமற்றவன் போல வீடியோ இணைப்புகளைப் பார்த்தான். ஏராளமான இணைப்புகள் இருந்தன.
இந்தத் தாடிக்காரனை எப்படி இவளுக்குப் பிடிக்க ஆரம்பித்தது. யார் அறிமுகம் செய்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்ப யாருக்கு எப்போது எதில் ஆர்வம் வரும் எனச் சொல்ல முடியாது. அவனுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் திவாகர் திடீரெனக் கறுப்பு முயல் வளர்க்க ஆரம்பித்து இப்போது வேலையை விட்டுவிட்டு முயல்பண்ணை நடத்துகிறானே அதை எப்படிப் புரிந்து கொள்வது.
அன்றாடத்தின் சலிப்பைப் போக்கிக் கொள்ளப் புதிய விருப்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது ஒரு மாயஅலை. அந்த அலை நம்மையும் இழுத்துக் கொண்டு போக அனுமதிக்க வேண்டும். ஞாயிற்றுகிழமைகளில் ஷாப்பிங் மாலில் அலைமோதும் கூட்டமே இதன் சாட்சி. அவர்கள் எதையும் வாங்குவதற்காக மாலிற்கு வருவதில்லை. வேடிக்கை பார்க்கிறார்கள். வீடில்லாத இன்னொரு உலகம் தேவைப்படுகிறது. அதுவும் புதிய புதிய பொருட்களின் உலகம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு ஆசை. ஷாப்பிங் மால் சுதந்திரம் என்றே ஒன்றிருக்கிறது. அது சோப்புக்குமிழ் போல நம்மை எடையற்று உணரவைப்பது. நம் ஆசைக்கும் நமக்குமான இடைவெளியை ஷாப்பிங் மால் குறைக்கிறது. நகரும் படிக்கட்டுகளைப் போல நகரும் காட்சிகளின் உலகமது.
காதலித்த நாட்களில் ரவியும் பிரவீணாவும் நிறைய முறை ஷாப்பிங் மாலிற்குச் சென்றிருக்கிறார்கள். சினிமா பார்த்திருக்கிறார்கள். புட்கோர்ட்டில் சாப்பிட்டிருக்கிறார்கள். ரகசியமாக முத்தமிட்டிருக்கிறார்கள். இப்போது ஷாப்பிங் மாலிற்குப் பதிலாகப் புதிதாக முளைத்துள்ள கஃபே மற்றும் பன்னாட்டு உணவகங்களுக்குப் போவதே பிடித்திருந்தது.
வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வை உள்நாட்டிலே அனுபவிக்க வேண்டும் என்றாள் பிரவீணா.
ஒருமுறை பிரவீணா மேஜையில் வைக்கக் கூடிய அளவிற்கான ஜப்பானிய ஒளிமீன்களை வாங்கியிருந்தான். அந்த விளக்கைப் பொருத்திவிட்டால் விதவிதமான வண்ணங்களில் மீன்கள் போன்ற ஒளிபிம்பம் சுற்றிக் கொண்டேயிருக்கும்.
“நிஜமான மீன்தொட்டி ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளலாமே“ என அவளிடம் கேட்டதற்கு “அதுக்கு யாரு தினம் இரை போடுவா.. ஒரே மீனை தினம் தினம் பாத்துட்டு இருக்க முடியாது“ என்று பதில் சொன்னாள்.
அந்த ஒளிமீன்கள் ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின்பு மேஜையிலிருந்து மறைந்து போயிருந்தன.
அதைப் பற்றிக் கேட்டதற்கு “ரிப்பேர் ஆகிருச்சி.. தூக்கி குப்பைல போட்டுட்டேன்“ என்றாள். எதனால் ஒருவர் மகிழ்ச்சி அடைகிறார் என்று அவனுக்குக் குழப்பமாகயிருந்தது.
பிரவீணா அவனுடன் ஒன்றாக வேலை பார்த்தாள். அந்த நாட்களில் துவங்கிய நட்பு மெல்லக் காதலாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு திருமணம் செய்து கொண்டார்கள். அந்த நாட்களில் பிரவீணா ஒர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தாள். நாலைந்து முறை பைக்கில் அவளை இறக்கிவிட்டிருக்கிறான். அப்போது இது போன்ற ஒளிமீன்களை வைத்திருந்தாளா என்று தெரியவில்லை.
திருமணமான இரண்டே மாதங்களில் அவள் தனது வேலையை விட்டு வேறு நிறுவனத்தில் சேரப் போவதாகச் சொன்னாள்
“ஏன் பிரவீணா.. நாம ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ்ல வேலைபாக்குறதுன்னா.. டெய்லி போயிட்டு வர்றது ஈஸிதானே“ என்றான்
“அதெல்லாம் சரியா வராது. கிரண் புதுக்கம்பெனிக்குப் போறான். அங்கே என்னையும் கூப்பிடுறான்“
“அவனை நம்பி போக வேணாம் பிரவீணா.. அவன் நாளைக்கு யுஎஸ் போனாலும் போயிடுவான்“
“அப்போ நானும் போயிடுவேன்“
“அப்போ நான்“ எனக்கோபமாகக் கேட்டான்
“உன் கம்பெனி உன்னை அனுப்பிவைக்காது. அதான் நான் புதுக்கம்பெனிக்கு போறேன்“.
“அப்போ நானும் வேலையை ரிசைன் பண்ணிடுறேன். உன் கம்பெனில வேலை தரச்சொல்லு“ என்றான் ரவி.
“அங்கே உன் கேடர்ல வேலையில்லை“
“வேலையை விடுறதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்கமாட்டயா“
“உன்கிட்ட கேட்டா. வேலைக்குச் சேர்ந்தேன். “
“அது முன்னாடி. இப்போ நமக்குக் கல்யாணம் ஆகிருச்சில்லே“
“நான் எந்த வேலை பாக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன். இதுல உனக்கு என்ன பிரச்சனை“
“நம்ம ஆபீஸ் டைம் வேற வேறயாகிரும். அது சரியா வராது“
“எனக்கு கம்பெனி கார் அனுப்பும். நீ கொண்டுவந்து விட வேண்டியதில்லை. “
“இது தான் உன்முடிவா“ எனக்கேட்டாள்
“நீ இப்படிக் கேட்கிறது சினிமா டயலாக் மாதிரியிருக்கு.. சின்ன விஷயத்துக்கு எல்லாம் எமோஷன் ஆகாதே. ஸ்மால் டவுன்ல வளர்ந்தவங்களோட சிண்ட்ரோம் இது.. எதையும் ஈஸியா எடுத்துகிடத் தெரியாது. “
“இது ஒண்ணும் ஈஸியா எடுத்துகிடுற விஷயமில்லே“
“அப்போ சீரியஸா எடுத்துக்கோ. யார் வேணாம்னு சொன்னா.. நான் முடிவு பண்ணிட்டேன். ஆறாம் தேதி புதுக்கம்பெனில ஜாயின் பண்ணுறேன். “

அவள் விரும்பியது போலவே புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கொண்டாள். அவளது சம்பளம் உயர்ந்தது. அலுவலக வேலையாக இரண்டு முறை லண்டன் சென்று வந்தாள். பழைய அபார்ட்மெண்ட் வீடு போதாது என்று இப்போது குடியிருக்கும் அபார்ட்மெண்டினை அவள் தான் தேர்வு செய்தாள்.
இதன் வாடகை மாதம் எண்பத்தைந்தாயிரம். இது தவிரப் பராமரிப்புச் செலவு வேறு. குடியிருப்பில் நீச்சல் குளம், ஜிம், கோவில் என யாவும் இருந்தன. ஆனால் அவன் ஒருமுறை கூட அந்த நீச்சல் குளத்தில் குளிக்கவேயில்லை. திருமணமாகி நாலு ஆண்டுகள் கடந்திருந்தன. ஆனால் நீண்டகாலம் ஆகிட்டது போலவே அவள் சலித்துக் கொண்டாள். வார இறுதியில் ஸ்பானிஷ் கற்றுக் கொள்ளச் சென்றாள். இத்தாலிய உணவகத்தைத் தேடிச் சென்று சாப்பிட்டாள். அதே நேரம் வாரத்தில் ஒரு நாள் முருகன் கோவிலுக்குப் போவதையும் நிறுத்தவில்லை.
தெரிந்த பெண்ணிலிருந்து தெரியாத பெண்ணாக அவள் மாறிக் கொண்டேயிருக்கிறாள் என ரவிக்குத் தோன்றியது.
அதன் வெளிப்பாடாகவே வான்கோ தலையணைகளைக் கண்டான்.
“உனக்குப் பெயிண்டிங் பிடிக்குமா“, எனப்படுக்கையில் புரண்டபடியே கேட்டான் ரவி
“உன் பில்லோ கவர்ல வாத்து இருக்கே. அப்போ உனக்கு வாத்துபிடிக்குமா“ எனக்கேட்டாள் பிரவீணா
“இதை நான் செலக்ட் பண்ணலே“ என்றான்
“எனக்கு வின்சென்ட் வான்கோவை ரொம்பப் பிடிக்கும். கிரேட் ஆர்டிஸ்ட்“. என்றாள்
“ஏன் இப்படியிருக்கான். ஆர்டிஸ்ட்னா. ஒரு டைப்பா இருக்கணுமா…. ஒரு சாயல்ல நம்ம நவாப் டெய்லர் மாதிரி இல்லே“
“எனக்கு எந்த நவாப்பையும் தெரியாது. நீ தேவையில்லாம வான்கோவை கேவலப்படுத்துறே“
“உன்னோட டேஸ்ட் எல்லாம் டிபரெண்டா மாறிட்டு வருது“ என்றான்.
“அதுக்கு என்ன இப்போ“ என்று முறைத்தபடியே கேட்டாள்
“தோணுச்சி. சொன்னேன்“ என்றபடி போனில் ஒரு வீடியோவைப் பார்க்கத் துவங்கினான்.
அந்த நிமிஷமே வான்கோ தலையணைகள் அவனுக்குப் பிடிக்காமல் போயின. அதனைக் காட்டிக் கொள்ளவில்லை.
புருஸ்லீ படம் போட்ட தலையணை உறை கிடைக்கிறதா என ரவி கூகிளில் தேடினான். புருஸ்லீ படம் போட்ட பெட்ஷீட் கண்ணில் பட்டது. அதன் விலையைப் பார்க்காமல் ஆர்டர் செய்தான். அந்த அறையில் வான்கோவிற்கு இடம் உண்டு என்றால் ஏன் புரூஸ் லீக்கு இடம் இல்லாமல் போய்விடும். நிச்சயம் அதனைக் கேலி செய்வாள். செய்யட்டுமே என்று நினைத்துக் கொண்டான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு வான்கோவின் ஓவியம் ஒன்று அச்சிடப்பட்ட கைப்பை ஒன்று கூரியரில் வந்தது. அந்தப் பையைப் பிரவீணா அலுவலகம் கொண்டு போகத் துவங்கினாள். வான்கோ உருவம் கொண்ட தண்ணீர் பாட்டில். செல்போன் கவர், காபி மக் என அவர்கள் வீட்டில் வான்கோ நிறையத் துவங்கினார்

பார்சலில் வந்திருந்த புருஸ்லீ பெட்ஷீட் மிகக்சிறியதாக இருந்தது. அளவு பார்க்காமல் ஏன் அதை வாங்கினோம் என எரிச்சல் அடைந்தான். இந்தப் பெட்ஷீட்டை என்ன செய்வது எனப்புரியாமல் சோபாவின் மீது விரித்து வைத்தான். பிரவீணா அதைப்பற்றி எதையும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு நாட்களின் பின்பு அந்தப் பெட்ஷீட் காணாமல் போயிருந்தது.
அந்த வாரம் ஞாயிற்றுகிழமை வால்பேப்பர் ஒட்டும் இருவர் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் பிரவீணா ஹாலில் உள்ள சுவரில் வால்பேப்பரை ஒட்டும்படியாகச் சொன்னாள்.
கஃபே டெரஸ் அட் நைட் என்ற வான்கோவின் ஓவியத்தை வால்பேப்பராக்கியிருந்தார்கள். காஃபிக்கடை ஒன்றின் இரவுக்காட்சி, விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட மொட்டை மாடியும், நாற்காலிகளும் நட்சத்திரங்கள் நிறைந்த பின்னணியும் கொண்ட ஓவியமது. ஹால் சுவரின் அளவிற்கு ஏற்ப வால்பேப்பர் அச்சிடப்பட்டிருந்தது. அவர்கள் கவனமாக அதனைச் சுவரில் ஒட்டினார்கள்.

பிரவீணா அதன் அடியில் அமர்ந்து பார்த்துச் சிரித்தபடியே அவர்களுக்குரிய பணம் கொடுத்து அனுப்பினாள்
“நம்ம வீடே காஃபி ஷாப் மாதிரி ஆகிருச்சி“ என்றான்
“இது வான்கோவோட ரொம்பப் பாப்புலரான ஆர்ட். ஒரு காஃபி ஷாப்ல பார்த்தேன். அதான் நம்ம வீட்லயும் இருக்கட்டும்னு ஆர்டர் பண்ணினேன். 12000 ரூபீஸ்“ என்றாள்.
“வீட்டுக்கான பீல் போயிருச்சி“ என்று சலித்துக் கொண்டான்
“அப்போ இந்தச் சுவர்ல ஒரு புருஸ்லீ வாங்கி ஒட்டிக்கோ“.. என்று சிரித்தாள்.
“என் போட்டோவை பெரிசு பண்ணி மாட்டிகிடுவேன்“ என்றான் ரவி
“அது உன் இஷ்டம்“. என்றாள்
யார் இப்படி வான்கோ நகல்களைத் தயாரித்து விற்கிறார்கள். இந்த ஓவியத்தில் அப்படி என்ன சிறப்பிருக்கிறது. தான் கல்லூரியில் படிக்கும் போது ஹாஸ்டல் பக்கம் இது போல ஒரு காஃபி ஷாப் இருந்தது. அங்கே இரவில் நீண்ட நேரம் நண்பர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது நினைவில் வந்து போனது. பாண்டிச்சேரியில் இது போலவே ஓரு காஃப ஷாப்பை பார்த்ததாகவும் ஞாபகம் வந்தது.
வீட்டிற்கு வரும் ஒவ்வொரு இரவு சுவரில் இருந்த காலி நாற்காலிகள் அவனைக் கேலி செய்வதைப் போல உணர்ந்தான். அவளை எரிச்சல்படுத்த வேண்டும் என்பதற்காகவே வான்கோ உருவம் பதித்த குப்பைக்கூடை ஒன்றை வாங்கி வந்து வைத்தான். அதனைக் கண்டதும் அவள் ஆத்திரமாகி “உன் டேஸ்ட் ரொம்பச் சீப்பா இருக்கு“ என்றாள். அந்தச் சண்டை நீண்டது. அவளைத் திட்டுவதற்குப் பதிலாக வான்கோவை கண்டபடி திட்டினான். அவள் வான்கோவிற்காகப் பதில் அளித்தாள். இரண்டு நாட்கள் பிரவீணா பேசவில்லை.

அடுத்த ஞாயிறு அன்று அவர்கள் வீட்டிற்குச் சாம்பவி வந்திருந்தாள். அவள் பிரவீணாவின் உறவுக்காரப் பெண். ஆர்கிடெக்ட்டாக இருந்தாள். அவள் கையிலும் அதே வான்கா ஹேண்ட்பேக். தலைமுடியைச் செம்பட்டை வண்ணமாக்கியிருந்தாள்.
ஹாலில் இருந்த வான்கோவின் ஓவியத்தை அவள் வெகுவாக ரசித்தாள். வீட்டிலுள்ள ஒவ்வொரு வான்கோ பொருட்களாகப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
“வீட்டுக்குள்ளே நீ ஒரு வான்கோ மியூசியமே வச்சிருக்கே. நாம ரெண்டு பேரும் ஒருதடவை ஆம்ஸ்டர்டம் போயிட்டு வருவோம். அங்கே வான்கோ மியூசியம் இருக்கு. நான் பாத்திருக்கேன். எவ்வளவு அழகான இடம் தெரியுமா.. ஹெலன் முல்லர்னு ஒரு பிசினெஸ்மேனோட மனைவி தான் வான்கோ ஓவியங்களை வாங்கிக் காட்சிக்கு வச்சிருக்காங்க. அது பெரிய கதை“
“நாம ஒரு தடவை போகலாம்“ என்றாள் பிரவீணா
சாம்பவியிடமிருந்து தான் வான்கோ மீதான ஈடுபாடு பிரவீணாவிற்கு வந்தது என்பதை ரவி தெரிந்து கொண்டான்.
அவர்கள் பால்கனியில் அமர்ந்து ஊர்கதைகளை ஆசையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருமாகக் கிளம்பிச் சாப்பிடச் செல்வார்கள். ஆகவே நாம் தனியே போய்ச் சாப்பிட்டு வரலாம் எனப் பிரவீணாவிடம் சொல்லிக் கொள்ளாமல் அவனுக்குப் பிடித்த மகாலெட்சுமி மெஸ்ஸிற்குச் சாப்பிடச் சென்றான். புகழ்பெற்ற அசைவ உணவகமது. பிரவீணாவிற்குச் சோறு கிடைக்கும் இடங்கள் பிடிக்காது. பெரும்பாலும் அவள் தேர்வு செய்யும் உணவகத்தில் சோறு கிடைக்காது. வித்தியாசமான உணவு வகைகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் ரவி சோற்றை விரும்பினான். அதுவும் இலை போட்டு மட்டன் சிக்கன் மீன் என விதவிதமான வகைகளை வாங்கிச் சாப்பிடும் ஆசை கொண்டிருந்தான்.
அன்று வான்கோ மீதான கோபத்தை நண்டின் மீது காட்டினான். வழக்கத்தை விடவும் அதிகமாகச் சாப்பிட்டான். தனியே ஷாப்பிங் மாலிற்குச் சென்று வேடிக்கை பார்த்தான். திடீரெனக் கல்லூரி நாட்களில் இருப்பதைப் போல உணர்ந்தான்.
ஞாயிற்றுகிழமைகளில் நகரம் நடிக்கத் துவங்கிவிடுகிறது. அதன் பகட்டு. மினுப்பு. பொய் சிரிப்பு. ஆரவாரம் விநோதமானது. அவனது சிறுவயதில் ஊரில் இரண்டே திரையரங்குகள் இருந்தன. அதில் வாரம் ஒருமுறை படம் மாத்துவார்கள். ஏதாவது ஒரு படத்தை ஞாயிறு மாலை பார்ப்பது அவனது வழக்கம். நகரில் நூற்றுக்கணக்கான திரையரங்குகள். ஆனாலும் எதிலும் டிக்கெட் கிடைக்காது. ஹோட்டல். மின்சார ரயில், கடற்கரை, மால், கோவில் என எங்கும் ஜனத்திரள். இந்தக் களிப்பு மக்களுக்குத் தேவைப்படுகிறது. ஞாயிற்றுகிழமைகளில் வீட்டிலிருப்பவர்கள் நோயாளிகள். முதியவர்கள் அல்லது வாழத்தெரியாதவர்கள் என்ற நினைப்புப் பொதுவாகயிருக்கிறது.
பிரவீணாவிற்குத் தன்னை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்கிறது. தனக்குத் தான் தெரியவில்லை என்று ரவி நினைத்தான். நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது. சிகரெட் பிடிப்பது, அரட்டை அடிப்பதெல்லாம் சலித்துப்போயிருந்தது. திடீரெனத் தான் பார்க்கின் சிமெண்ட் பெஞ்ச் போல உறைந்துவிட்டதாக உணர்ந்தான்.
பிரவீணா லண்டன் போயிருந்த நாட்களில் திடீரெனப் புறப்பட்டுத் தனது சொந்த ஊருக்குப் போயிருந்தான். பள்ளிவயதில் பெரிய ஊராகத் தெரிந்தது தற்போது மிகச்சிறியதாகத் தோன்றியது. அவனது பழைய நண்பர்களில் ஒருவனைத் தேரடி சிக்னலின் முன்பாகப் பார்த்தான். அவன் பள்ளி செல்லும் மகளைப் பைக்கில் அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.
பைக்கில் இருந்தபடியே “என்ன ரவி எப்போ வந்தே“ எனக்கேட்டான்
“நேத்து நைட்“
“என் மகளை டியூசனுக்கு விடப்போறேன். நம்ம பழைய பிரெண்ட்ஸ் இப்பவும் சித்ரா டீஸ்டால்ல மீட் பண்ணுறோம். காலைல வாக்கிங் வர்றயா.. சித்ராவுல டீக் குடிப்போம்“ என்றான்
அதைக்கேட்கும் போதே சலிப்பாக இருந்தது. எத்தனை ஆண்டுகள் அதே டீக்கடை வாசலில் சந்திப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மாற்றுக் கிடையாது. இந்தச் சந்தோஷமே போதுமானதாகயிருந்தது. ஒரே நாளைக்குள் வீடும் ஊரும் சலித்துப் போகவே அவசரமாக ஊரைவிட்டுக் கிளம்பினான்.
வேலை. பணம், வசதி, வீடு“ மனைவி என எல்லாவற்றையும் தாண்டி அவனுக்கு ஏதோ தேவைப்பட்டது.அது என்னவென்று அவனால் கண்டறிய முடியவில்லை.
ஆனால் பிரவீணா அதனை அறிந்திருந்தாள். புதிய ஆசைகளின் வழியே அவள் உருமாறிக் கொண்டேயிருந்தாள். அவனை மாற்ற வேண்டியது தன்னுடைய வேலையில்லை என்பது போலவும் நடந்து கொண்டாள். ஒரே வீட்டின் கதவும் ஜன்னலும் போல அவர்கள் வாழ்ந்தார்கள்.
ரவிக்கு வான்கோவின் மீது உருவான வெறுப்புக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழிவாங்கும் உணர்வாக மாறியது. வான்கோ, வான்கோ எனப் பேப்பரில் எழுதி அதனைக் கிழித்துக் குப்பைக்கூடையில் போட துவங்கினான். என்றோ இறந்து விட்ட வான்கோவை அவன் கொலை செய்ய வேண்டும் என்றும் விரும்பினான். வான்கோவின் வீட்டில் தான் வசிப்பது போல உணர்ந்தான்.
எல்லாமும் ஒரு வெள்ளிகிழமை மாறத்துவங்கியது. அன்று பிரவீணா நான்கு மணிக்கெல்லாம் அலுவலகம் விட்டு வீடு திரும்பியிருந்தாள். அதிசயமாக அவனுக்குப் போன் செய்து “நாம வெளியே சாப்பிடப்போகிறோம்… லேட் பண்ணாம வந்துடு“ என்றாள்.
அவர்கள் சாப்பிடுவதற்காக ஆப்கானிஸ்தான் உணவுவகைகள் கிடைக்கும் உணவகத்திற்குச் சென்றார்கள். உணவை ஆர்டர் செய்துவிட்டு சொன்னாள்
“ஆபீஸ்ல என்னைச் சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க.. “
“என்ன சொல்றே.. எதுக்குச் சஸ்பெண்ட்“.
“யுகே பிராஜெக்ட்ல சின்னத் தப்புப் பண்ணிட்டேன். அதைச் சமாளிச்சிரலாம்னு நினைச்சேன். ஆனா பெரிய இஷ்யூ ஆகியிருச்சி.. எல்லோரும் என்னைக் கையைக் காட்டிவிட்டுட்டாங்க. சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. ஹைலெவல் என்கொயரி போய்கிட்டு இருக்கு “
“என்ன பண்ணுவாங்க.. விடு.. பாத்துகிடலாம்“
“இனிமே நான் வேலைக்குப் போகப்போறதில்லை. படிக்கலாம்னு நினைக்கிறேன்“
“படிக்கப்போறயா.. “
“ஆமா.. ஜெர்மன்ல ஒரு கோர்ஸ் இருக்கு. ரெண்டு வருஷம். படிக்கலாம்னு இருக்கேன்“
“அதுக்குச் செலவு ஆகுமே“
“என்னோட சேவிங்ஸ் இருக்கு. நகை இருக்கு. நீ ஒரு லோன் போடு. பாத்துகிடலாம்“
“நீ படிக்கபோயிட்டா நான் என்ன செய்றது“
“படிச்சி முடிச்சிட்டா. எனக்கு ஜெர்மனில வேலை கிடைக்கும். நீயும் அங்கேயே வந்திரலாம்“
“அங்கே வந்து நான் என்ன பண்ணுறது“
“அதெல்லாம் ரெண்டு வருஷம் கழிச்சி யோசிக்க வேண்டியது. “
“வேலை போனா பரவாயில்ல. இங்கேயே உனக்கு வேற வேலை தேடலாம்“
“அது சரியா வராது. நான் படிக்கிறது உனக்குப் பிடிக்கலையா“
“அதெல்லாமில்லே. நிறையச் செலவு ஆகும். அதான்“.
“கடன்வாங்குவோம். அதைத் திரும்பக் கட்டிரலாம்“
“ஜெர்மனில படிக்கிறதுக்குச் சீட் கிடைக்கணுமே“
“கிடைச்சிரும். பாத்துகிடலாம். “
“என்கொயரியிலே கிரண் உனக்கு ஹெல் பண்ணலயா“
“அவன் தான் போட்டுவிட்டது. அவன் சரியில்லை. வேஸ்ட்டுப்பய. புத்தியை காட்டிட்டான்“
“அதை நான் டே ஒன்னே சொன்னேன். நீ கேட்கலை“
“ஆமா. நம்பினேன். இப்போ கவுத்திட்டான். நீ பெரிய தீர்க்கதரிசி தான் போதுமா“ என்றாள்
“அவனை எனக்கு நல்லா தெரியும். அதான். “.
“பிராஜெக்ட்ல நான் தப்பு பண்ணலேனு சொல்லலே. என்னோட தப்பு தான்னு என்கொயரில ஒத்துகிட்டேன். என்ன ஸ்டெப் எடுக்கணுமோ எடுப்பாங்க. என் சம்பளம் வராது. போகட்டும் “
“லீகல் டீம்ல பேசினயா“
“அதெல்லாம் பேசிப் பாத்துட்டேன். என்னோட பேட் லக்குக்கு என்ன காரணம் தெரியுமா.. நம்ம வீடு. அது எனக்குச் செட் ஆகலே. தப்பா பீல் பண்ணிக்கிட்டே இருந்தேன். அப்படியே நடந்துருச்சி“
“நீ தான் வீடு பாத்தே. “
“கரெக்ட். முன்னாடி குடியிருந்தவங்களும் நாலே மாசத்துல காலிபண்ணிட்டுப் போயிட்டதா சொன்னாங்க. அதை நான் பெரிசா நினைக்கலை“
“வேலைல நீ பண்ணுன தப்புக்கு வீடு என்ன செய்யும். “
“அப்படி சொல்ல முடியாது. எபெக்ட் இருக்கும்.. ஒரு வீடியோவுல அதைப்பற்றி வி.கே.ராவ் பேசியிருக்கார். அவரை நீ கேட்டிருக்கியா“
“கேட்டதில்லை. யாரு அவரு “
“இகிகாய் எக்ஸ்பெர்ட்“
“எனக்கு நம்பிக்கையில்லே“
“எனக்கும் முழுசா நம்பிக்கையில்லே. ஆனா திடீர்னு தோணுது“ என்றபடி உணவை மென்றாள். பிறகு குடிப்பதற்குப் புளுபெர்ரி மோஜிடோ ஆர்டர் செய்துவிட்டு ரவியிடம் கேட்டாள்
“உனக்கு வான்கோவை பிடிக்கலையா“
“பிடிக்கலைனு சொல்ல முடியாது. தெரியலை. அவருக்குப் புத்திசுவாதீனம் இல்லாம மெண்டல் ஹாஸ்பிடல்ல இருந்தாருனு படிச்சேன்“
“அவரை யாரும் புரிஞ்சிகிடலை. “
“அதான் உனக்கு அவரைப் பிடிச்சதா“ எனக்கேட்டான்
“அப்படினு சொல்ல முடியாது.. வான்கோவை பிடிக்குது.. அவ்வளவு தான்“
“இப்போ என்ன வேற வீடு மாறுவமா“
“சிட்டியை விட்டு வெளியே போயிடலாம். கிராண்ட் பீச் வில்லாவில கிருத்திகா இருக்கா.. அங்கே ஏழெட்டு வீடு காலியா இருக்காம்“
“தினம் நான் ஆபீஸ் வந்து போகணும் ரொம்பத் தூரம்“
“ஒன்றரை மணி நேரம் ஆகும். அதைப் பாத்தா அமைதியா வாழ முடியாதுல்லே“
“யோசிப்போம்“ என்றபடி சாப்பிட்டான்
“எனக்கும் ஐடியா இல்லே. இப்போ இருக்கிற வீடே நல்லா தான் இருக்கு“
“பிறகென்ன “
“ரெண்டு யோசனையா இருக்கு.. முடிவு பண்ண முடியலை“
அவள் மிகவும் குழம்பிப்போயிருக்கிறாள் என்பது பேச்சில் தெரிந்தது. அதன்பிறகு வீடு மாறும் எண்ணத்தைக் கைவிட்டாள். தினமும் மாலை வகுப்பிற்குச் சென்று ஜெர்மன் படிக்க ஆரம்பித்தாள். அவளாக ஜெர்மனியிலுள்ள கல்வி நிறுவனம் ஒன்றுக்கு விண்ணப்பம் செய்தாள். இந்த நாட்களில் அவளிடமிருந்த இயல்பான வேடிக்கை, புதிய விருப்பங்கள் யாவும் விடைபெற்றுப் போயிருந்தன. அவள் வான்கோ ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு போகவில்லை. சுவரில் இருந்த வான்கோ ஓவியத்தை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. யோசனை, யோசனை, குழப்பம். அவள் ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான்.
திடீரென ஒரு நாள் ஜெர்மனியில் படிக்க இடம்கிடைத்துவிட்டது. அதற்கான பணத்தை உடனே கட்ட வேண்டும் என்று கடிதத்தைக் காட்டினாள். அவள் புறப்படுவதற்கு ஒன்றரை மாதங்கள் ஆனது.
தனியாக வாழ்வதற்கு எதற்கு இவ்வளவு பெரிய வீடு என ரவி வீடு மாற முடிவு செய்தான். பிரவீணா பயணம் புறப்படுவதற்கு முன்பாக வீடு மாறிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். இரண்டே நாட்களில் புதிய வீடு பிடித்தார்கள். சிறிய வீடு. இரண்டே அறைகள். பழைய வீட்டைக் காலி செய்யும் போது வான்கோ ஓவியம் இருந்த வால்பேப்பரை அப்படியே விட்டுவர வேண்டும் என்றாள்
“புதுசா வர்றவங்களுக்குப் பிடிக்குமா“ எனக்கேட்டான்
“பிடிக்காட்டி அவங்களா கிழிச்சிக்கிடட்டும்“ என்றாள்.
புதிய வீடு மாறிய பத்தாம் நாள் அவள் ஜெர்மனிக்குப் புறப்பட்டாள். அங்கே ஒரு விடுதியில் தங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தாள். நீண்ட கோட் அணிந்த அவளைப் பார்க்க யாரோ போலிருந்தது. அன்றாடம் அவனைப் போனில் அழைத்துக் கொண்டிருந்தவள் மெல்ல வாரம் ஒருநாள் அழைக்கத் துவங்கினாள். பின்பு தேவையான போது மட்டுமே அழைத்தாள். இரண்டு வருஷங்கள் முடியப் போகும் போது ஒரு நாள் அவளிடமிருந்து ஒரு போட்டோ வந்திருந்தது
அவள் ஆம்ஸ்டர்டமிலுள்ள வான்கோ மியூசியத்தின் முன்னால் நின்றிருந்தாள். அதில் அவள் வான்கோ உருவம் பதிந்த வெள்ளை பனியன் அணிந்திருந்தாள். அவளது முகம் அவ்வளவு மலர்ச்சியாக இருந்தது. அந்தப் புகைப்படத்தின் அடியில் “உனக்கு ஒரு வான்கோ தொப்பி வாங்கியிருக்கிறேன். ஊருக்கு வரும் போது கொண்டுவருகிறேன். அதை அணிந்து கொண்டால் நீயும் ஒரு வான்கோ தான் “ என எழுதியிருந்தாள்.
அந்த வரியைப் படித்த போது அவனுக்கு வான்கோவைப் பிடிக்கத் துவங்கியிருந்தது.
••••