எனக்கு விருப்பமான அமெரிக்க பெண் எழுத்தாளர் வில்லா கேதர் . நான் அறிந்தவரை தமிழில் இவரது நாவல் எதுவும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவில்லை.
ஆனால் உலகின் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலை எவர் சிபாரிசு செய்யும் போதும் வில்லா கேதரின் பெயர் நிச்சயம் இடம் பெற்றுவிடுகிறது. அந்த அளவு தனித்துவமும் நுட்பமான கதை சொல்லலும் கொண்டவர்.
வில்லியம் பாக்னரை பிடிக்கின்றவர்களுக்கு வில்லா கேதரை நிச்சயம் பிடிக்கும். இருவரும் கதை தேர்வு மற்றும் சொல்முறையில் நிறைய ஒற்றுமை கொண்டவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு வில்லாவின் புகழ்பெற்ற நாவலான டெத் கம்ஸ் டு ஆர்ச்பிஷப் என்ற நாவலை மறுபடியும் தேடி எடுத்து வாசித்தேன். நாலைந்து முறை முன்னதாக வாசித்திருக்கிறேன்.
இந்த முறை வாசித்த போது வில்லா கேதர் மெக்சிகோவின் பூர்வகுடி நிலவியலையும் கிறிஸ்துவ மதம் குறித்த அவதானிப்புகளையும் எவ்வளவு நுட்பமாக எழுதியிருக்கிறார் என்ற வியப்பிலிருந்து மீளவே முடியவில்லை . ஆழ்ந்த வாசிப்பில் மனம் மிகுந்த எழுச்சியும் உவகையும் கொண்டது.
நாவல் வாசிப்பது என்பது ஒரு விசித்திரமான அனுபவம். அதை எப்படி வரையறை செய்வது என்று இன்றும் எனக்கு தெரியவில்லை. நாடோடிகளின் பின்னால் திரிந்து உலகை காண்பதற்கு ஒப்பனாது நாவல் வாசிப்பு. அது காட்டும் உலகம் நாம் முன் அறிந்ததின் அறியாத பகுதிகள் . அத்துடன் நம் கற்பனையின் வரம்புகளை கடந்து சென்று அது சஞ்சரிக்கிறது. பருந்து வானில் மிதப்பது போல நம்மை அந்தரம் கொள்ள வைக்கிறது. நாம் அறியவிருப்பமற்று விலகி போனதையும் நினைவுபடுத்துகின்றது.
ஒரு ஜிப்சியை போல நாவலின் கதாபாத்திரம் நம்மை எங்கெங்கோ கூட்டி செல்கிறது. கதை சொல்கிறது. சேர்ந்து பாட செய்கிறது. நிழலை போல நாமும் கதாபாத்திரங்களின் பின்னால் சென்றபடியே இருக்கிறோம்.
நாவல் வாசிப்பது ஒரு உயர்நிலை அனுபவம். பலநேரங்களில் அது வாசிப்பவனின் வயதை, நினைவுகளை, சொந்த அடையாளங்களை அழித்து அவனை வேற்று மனிதாக்குகிறது. குறிப்பாக மனதில் திட்டுகளாக பதுங்கியிருந்த ரகசியங்கள், அவமானங்கள், அசிங்கம் என்று ஒதுங்கி வைத்தவை யாவும் மிதக்க துவங்குகின்றன. உலகின் இயக்கம் எனக்கு நாவலின் வழியே தான் மிக நெருக்கமாக கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் வில்லா கேதரின் நாவல்கள் மிக முக்கியமானவை. அவள் கதை சொல்வதின் வழியே நமது அந்தரங்கத்துடன் உரையாட துவங்குகிறாள்.
அந்த உரையாடல் மிக ரகசியமாகவும் பல நேரங்களில் நினைவுகளின் பகிர்தலாôகவும் இருக்கிறது. அதற்காகவே எனக்கு வில்லா கேதரை பிடிக்கும்.
இந்த விருப்பத்தில் வில்லா கேதரின் சுயசரிதையை தேடிப் படித்தேன். அது அவளது நாவல்களை விடவும் ஆச்சரியமானது. தனித்துவமானது.
அமெரிக்காவின் வர்ஜீனியா பகுதியில் உள்ள வின்செஸ்டரில் 1873 ல் பிறந்தவர் வில்லா. அப்பா ஒரு விவசாயி. குடும்ப சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து நெப்ராஸ்காவிற்கு மாறினார். அது அவரது வாழ்வின் போக்கினை மாற்றிய முக்கிய நிகழ்வாகியது. மாறுப்பட்ட சூழ்நிலை. தனிமை. மற்றும் இயற்கையின் வேறுபட்ட காட்சிகள். இவை அவருக்குள் ஒரு படைப்பாளியை உருவாக்க துவங்கியது. விஞ்ஞானம் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார் வில்லா. அதற்காக சிறப்பு ஆசிரியரை நியமித்து வீட்டிலே படித்தார்.
சிறு வயதில் இருந்தே தன்னை ஆண் என்று நம்ப துவங்கிய வில்லா பள்ளி நாட்களிலே ஆண்களை போல உடையணிந்து கொண்டு தலைமயிரை கிராப் வெட்டிக் கொண்டார். அத்துடன் தன் பெயரையும் வில்லியம் என்று மாற்றிக் கொண்டார்.
தான் ஆண் என்ற அடையாளம் அவரை பெருமிதம் கொள்ள வைத்தது. மற்ற ஆண்களோடு சேர்ந்து விளையாடவும், ஊர்சுற்றவும் விரும்பினார். ஆனால் வீட்டில் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதை மீறி தனது கையெழுத்தை கூட ஆண் பெயரில் தான் வில்லா போடத்துவங்கினாள்.
பின்னர் நெப்ரோஸ்கா பல்கலைகழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். இந்த நாட்களில் அவர் தான் ஒரு ஆண் என்பதால் தன்னோடு படிக்கும் பெண்களை காதலிக்க விரும்பினார். தன்னோடு படித்த பெண் மீது காதலனாது. அவளுடன் வாழ விரும்பினாள். அந்த இச்சை மெல்ல வளர்ந்து அவர் தனக்கு விருப்பமான பெண்ணோடு ஒன்றாகவே ஊர் சுற்றினார்.
பள்ளி ஆசிரியையாக வாழ்க்கை துவங்கிய அவருக்கு சில மாதங்கள் பிரான்சில் சுற்றுப்பயணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. தன்னோடு இசபெல் என்ற பெண்ணை அழைத்துக் கொண்டார். இருவரும் காதலர்களை போல சந்தோஷமாக சுற்றியதாக வில்லா குறிப்பிடுகிறாள். கவிதைகளும் சிறுகதைகளும் எழுத துவங்கிய நாட்கள் அவை.
எழுத்தின் மீதான விருப்பதால் நியூயார்க் இடம் பெயர்ந்த வில்லா அங்கே மெக்யூர் இதழின் நிர்வாக ஆசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.
திருமணமே செய்து கொள்ளாமல் தனக்கு விருப்பமான பெண்துணையுடன் தனியே வாழ்ந்த வில்லாவின் வாழ்க்கையை இன்றைய விமர்சகர்கள் ஒரின சேர்க்கையாளர் என்று குறிப்பிடுகிறார்கள்.
வில்லாவோ தான் ஒரு ஆண் தன்னால் ஒரு பெண்ணை காதலித்து அவளோடு வாழ முடியும் என்பதற்காகவே தான் ஒரு பெண்துணையுடன் வாழ்வதாக கூறுகிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களோடு அவருக்கு காதல் இருந்தாகவும் அந்த உறவு நீண்டநாட்கள் நீடிக்கவில்லை எனவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
எட்வித் லூயி என்ற பெண்ணே அவரது கடைசி நாள் வரை துணையாக இருந்தார். இருவரும் ஒன்றாக பயணம் செய்தார்கள். வில்லாவின் மரணத்திற்கு பிறகு லூயி அவரது படைப்புகள் மற்றும் சொத்தின் காப்பாளராக பணியாற்றினார். மிக நெருக்கமான தொடர்பு கொண்ட இந்த இரண்டு பெண்களின் நட்பு குறித்து பல சர்ச்சைகள் உருவாகின. வில்லா அதை கண்டு கொள்ளவேயில்லை.
அவள் தனக்கு விருப்பமான லூயியை பலர் அறிய முத்தமிடுவதும் கட்டிக் கொள்வதுமாகவே நடந்து கொண்டாள். இருவரும் ஒன்றாக நியூயார்க்கில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கினார்கள். சர்ச்சைக்குரிய இந்த உறவு குறித்து அவர் எழுதிய நாட்குறிப்புகள் மற்றும் கடிதங்களை வில்லாவின் தன் அந்திம நாட்களில் தீயிட்டு எரித்துவிட்டார் என்கிறார்கள் அவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள்.
One of Ours புலிட்சர் நாவலுக்கு புலிட்சர் விருது பெற்ற வில்லா கேதர் O Pioneers! ,My Ántonia, , Death Comes for the Archbishop ஆகிய மூன்று முக்கிய நாவல்களை எழுதியிருக்கிறார்.
Death Comes for the Archbishop நாவல் லத்தூர் என்ற பிஷப் மதஊழியத்தின் பொருட்டு மெக்சிகோவிற்கு மாற்றப்படுகிறார். இவரது பயணமும் மெக்சிகோவில் இவர் சந்திக்கும் சூழலும் இவரது இரண்டு நண்பர்களின் கதையுமே நாவலின் மையச்சரடு. முந்நூறு வருசங்களுக்கும் திருச்சபையால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட நியூமெக்சிகோவின் நிலப்பரப்பிற்கு ஊழியம் செய்ய பிரெஞ்சு பாதிரியான லத்தூரை வாடிகன் திருச்சபை நியமனம் செய்கிறது.
அவர் அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்த புதிய தேவலாயம் ஒன்றினை கட்ட விரும்புகின்றார். இதற்கு ஏற்படும் தடைகளும் அதை மீறும் அவரது முயற்சிகளையும் நாவல் ஒரு தளத்தில் விவரிக்கிறது. இன்னொரு தளத்தில் அந்த மக்களிடையே பணியாற்றி வேலியன்ட் என்ற பாதிரியின் மூர்க்கமான குணசித்திரம் விவரிக்கபடுகிறது.
மக்கள் தங்கள் அன்றாட வாழ்வின் நெருக்கடியின் ஊடாக மதநம்பிக்கைகளையும் ஈடுபாட்டையும் எப்படி கைக்கொள்கிறார்கள். அதை மதம் ஒரு நிறுவனமாக செயல்பட்டு எப்படி தன் கைவசப்படுத்திக் கொள்கிறது என்பதை விவரிக்கிறது நாவல்.
புதிய சூழ்நிலையை சந்திக்கும் லத்தூர் அங்குள்ள மதகுருமார்கள் மக்களிடம் சடங்குகளுக்காக நிறைய பொருள் சம்பாதிப்பதையும் தங்களது சுயலாபத்திற்காக மதத்தை பயன்படுத்திக் கொள்வதையும் காண்கிறார். அவர்கள் லத்தூரின் அதிகாரத்தை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். அதை நிருபணம் செய்ய மீண்டும் பயணம் செய்கிறார் லத்தூர் . பயண நடுவில் வழி தவறிப்போய்விடுகிறார். அவருக்கு வழிகாட்ட வருகிறாள் ஒரு இடையச்சிறுமி.
இந்த அலைக்கழிப்பின் ஊடாக பூர்வகுடி மக்கள் தங்களுக்காக மரபான நம்பிக்கைகளை ஒரு போதும் கைவிடுவதில்லை. அவர்களை கிறிஸ்துவர்களாக்குவது எளிதானதில்லை என்பதை உணர்கிறார்.
நாவலில் அற்புதமான சில தருணங்கள் விவரிக்கபடுகின்றன. குறிப்பாக லத்தூரும் அவரது வழிகாட்டியும் இணைந்து பயணம் செய்கிறார்கள். வழியில் தங்குமிடம் இன்றி ஒரு பெண் வீட்டில் அடைக்கலம் ஆகிறார்கள். அவளோ தன் கணவனுக்கு கத்தோலிக்க திருச்சபையின் மீது கோபம் அதிகம். அவன் வந்தால் உங்களை கொன்றுவிடுவான் என்று சொல்லி அவர்களுக்கு தேவையானதை தந்து அனுப்பிவிடப்பார்க்கிறாள். போக்கிடம் அறியாத லத்தூர் அந்த பெண்ணையும் குடும்பத்தையும் புரிந்து கொள்கிறார்.
அங்கிருந்து விடைபெற்று நடையாக நடந்து பூர்வகுடி தலைவன் ஒருவரை கண்டுபிடிக்கிறார். அவன் தான் அவர்களின் மதகுரு. அவனை சம்மதிக்க வைப்பது எளிதாக இல்லை. அவன் தனது சடங்குகளின் மீது மக்களின் நம்பிக்கை குறைந்து போய்விட்டது என்று சொல்லி தன்னிடம் உள்ள மரக்கிளி ஒன்றை அவரிடம் காட்டுகிறான். அது ஒரு நினைவுசின்னம் போல அந்த பூர்வகுடியிடம் உள்ளது.
இப்படியாக அவரது மதஊழியத்தின் ஊடாக சந்திக்கும் மனிதர்கள் மதகுருக்கள் என்று விரிந்துசெல்கிறது நாவல். ஆர்ச்பிஷப்பாக பதவி உயர்ந்த லத்தூர் தன் அந்திம நாளில் தான் கடந்து வந்த நாட்களை நிலப்பரப்புகளை நினைவு கொண்டபடியே இறந்து போகிறார். திருச்சபை அவருக்காக துக்கம் அனுஷ்டிக்கிறது.
இந்த நாவலின் சிறப்பு பூர்வகுடி மக்களுக்குள் கிறிஸ்துவ மதம் எப்படி சென்றது என்பதை பற்றிய துல்லியமான விவரணையே.வில்லா ஒரு கதையோடு இன்னொரு கதையை முடிச்சிட்டு செல்வது போன்று கதையை வளர்த்து போகிறாள். மதகுருமார்கள் கதாபாத்திரங்கள் மிகுந்த கவனத்துடன் துல்லியமாக எழுதப்பட்டுள்ளது.
எதன் மீது மனித நம்பிக்கைகள் வேர் ஊன்றியிருக்கின்றன என்பதை நிருபணம் செய்யும் நாவலது
வில்லா கேதர் பனிரெண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கது. paul`s case ,இந்த கதையில் கல்விசூழல் எந்தளவு மொண்ணையாகவும் அபத்தமானதாகவும் இருக்கிறது என்பதை பால் என்ற கதாபாத்திரத்தின் வழியே விவரிக்கிறார்
பால் ரசனையும் கற்பனை திறனும் மிக்கவன். அவனுக்கு படிப்பதில் ஆர்வமில்லை. முக்கிய காணரம் பாடங்களும் கற்றுக்கொடுக்கும் முறையும் மிக அலுப்பூட்டுகிறது. இதனால் முறையாக வகுப்பிற்கு போக மறுக்கிறான். அவன் மீது விசாரணை நடக்கிறது. அவன் நாடகம் மட்டுமே தனக்கான உலகம் என்று சொல்கிறான். இவனை என்ன செய்வது என்று கல்விபுல அதிகாரிகள் எரிச்சல்படுகிறார்கள்.
இந்த சூழலில் இருந்து தப்ப கொஞ்சம் பணத்தை திருடிக் கொண்டு மாநகரை நோக்கி செல்கிறான் பால். ஆனால் அங்கும் கலை இலக்கியம் குறித்த ரசனையும் ஈடுபாடும் குறைவாகவே இருப்பதை காண்கிறான். படைப்பு மனநிலையும் தீவிர ஆர்வமும் கொண்டவனால் இந்த சூழ்நிலையில் வாழமுடியாது என்று முடிவு செய்து முடிவில் தற்கொலை செய்துவிடுகிறான்
1905ல் இந்த கதையை வாசித்த அன்றைய இளைஞர்கள் இது குறித்து தீவிரமான விவாதம் செய்தார்கள். பால் ஒரு முன்மாதிரி இளைஞன் போல கொண்டாடப்பட்டான்.
மனிதகுலவரலாறு என்பதே இடம்விட்டு மனிதர்கள் போவதும் தங்கள் வாழ்விடத்திலிருந்து அவர்கள் துரத்தப்படுவதும், புகலிடம் ஒன்றில் எப்படி தங்கள் வாழ்வை வேர் ஊன்றுகிறார்கள் என்பதே. அதை தான் எனது படைப்புகள் தொடர்ந்து பிரதிபலிக்கின்றன என்கிறார் வில்லா கேதர்.
பயம் தான் மதத்தின் ஆதார வேர். எல்லா மதங்களும் மனிதபயத்திலிருந்தே பிறக்கின்றன. உண்மையில் மதம் பயத்தலிருந்து நம்மை விடுவிப்பதற்கு பதிலாக எண்ணிக்கையற்ற புதிய பயங்களை உற்பத்தி செய்துவிட்டது என்று வில்லா கேதர் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்
நவீன இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியான இவர் வர்ஜீனியா வுல்ப் போலவோ, பியர்ள் எஸ் பெக் போலவே உலகெங்கும் மிகுந்த பிரபலம் அடையவில்லை. ஆனால் அமெரிக்கா இலக்கியத்தினுள் சிறந்த படைப்பாளியாக கொண்டாடப்பட்டார். டாக்டர் பட்டம் , அவரது பெயரால் தபால்தலை என்று நிறைய விருதுகளும் கௌரவங்களும் அவரை தேடி வந்தன.
பாக்னரின் அகவுலகம் போலவே வில்லா கேதரின் நாவல்களும் அமைந்துள்ளன என்று சமகால விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பதினைந்துவயது வரை நடைபெற்ற நிகழ்வுகள், அவதானிப்புகள் தான் ஒரு எழுத்தாளனின் மிகப்பெரிய சொத்து. அதிலிருந்து எடுத்து தான் எப்போதும் எழுத்தாளன் எழுதி தள்ளுகிறான். ஆகவே என் பால்யத்தின் தனிமையும் வலியுமே என்னை இன்றும் எழுத வைக்கிறது என்று தன் நூலின் முன்னுரையில் வில்லா குறிப்பிடுகிறார்.
நூற்றாண்டை கடந்து இன்றும் அவரது கதைகள் வாசிப்பில் மிகுந்த புத்துணர்வும் எழுச்சியும் தருகின்றன. அதற்காகவே வில்லாவை திரும்ப திரும்ப வாசிக்கிறேன்.
***