கொட்டுக்காரர்கள்.


நேற்று நண்பர் ஒருவரின்  குடியிருப்பில் வாட்ச்மேனாக உள்ள வயதான ஒருவரை  சந்தித்தேன். அவரது தோற்றம் வித்யாசமாக இருந்தது.  யார் என்று விசாரித்தேன். அவர் மிகுந்த தயக்கத்துடன் நான் கொட்டுக்காரன் என்றார். அந்த வார்த்தை எனக்கு பரவசமாக இருந்தது.


ஏன் இங்கே வந்துவிட்டீர்கள் என்றேன்.


இப்போ யாரு கொட்டு அடிக்க கூப்பிடுறா. ஊர்ல சாந்து சட்டி சுமந்துகிட்டு இருந்தேன்,  போதும்னு கிளம்பி வந்துட்டேன். இங்கே ஆயிரத்திஇருநூறு ருபாய் மாச சம்பளம் என்றார். அவரது விரல்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.


எத்தனை உரமேறிய விரல்கள். இசை அதன் நுனியில் இன்றும் ஒட்டிக் கொண்டுதானே இருக்கும். வாசிப்பதை மறந்து போகும் வரும் வாகனங்களுக்கு கதவை திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை.


கொட்டுக்காரர்கள் என்பது எனக்கு ஒரு சொல் அல்ல, அது ஒரு பரவசம். கொட்டுக்காரர்களின் ஒசை தொலைவில் கேட்க ஆரம்பிக்கும் போதே அவர்களை நோக்கி ஒடிச்செல்லும் சிறுவனாக நான் இருந்தேன். கொட்டு சப்தம் கேட்பது அன்றாடம் நடக்க கூடியதில்லை. திருமணம் , சாவு வீடு, திருவிழா என்று அதற்கு தனியான காரணம் வேண்டும். ஆனால் அன்றெல்லாம் ஊர் முழுவதும் அந்த துடிதாளம் நிரம்பி வழியும்.


கிராமங்களுக்கு வரும் இசைக்கலைஞர்கள் என்றால் நாதஸ்வரம் கொட்டு பம்பை போன்றவை தான். நாடகம் நடத்தும் நாட்களில் அபூர்வமாக ஆர்மோனியம் வாசிப்பவர் வந்து சேர்வார். மற்ற நாட்களில் இசைக்கும் ராமநாதபுர மாவட்டத்து கிராமங்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது


ஆனால் கொட்டுக்காரர்களின் வருவது தெரிந்துவிட்டால் வேலையை போட்டுவிட்டு கொட்டுக்கு ஆடுவதும் ரசிப்பதும் ரத்ததில் ஊறியிருந்தது.  கொட்டுக்காரர்கள் தங்களது வாத்தியகருவிகளுடன் மஸ்லின் ஜிப்பா அல்லது வெள்ளை ஜிப்பா வேஷ்டி சகிதமாக ஊரை நோக்கி வரும் வருவார்கள். அப்போது அவர்கள் முகங்களில் உள்ள பாவம் அற்புதமாக இருக்கும்.
சிரிப்பும் வித்தையை காட்டப்போகிறேன் பார் என்ற உற்சாகமும் நிரம்பிய முகமது. ஊரின் முக்கிய பிரமுகர்கள் யாராவது வழியில் தென்பட்டால் குனிந்து வணக்கம் சொல்வார்கள். அவர்களுக்கு யார் வீட்டுக்கு என்று விசாரித்து அனுப்புவார்கள்


கொட்டுக்காரர்களுக்கு வாத்தியக்கருவிகளை தொடுவதற்கு முன்பாக நாட்டுசாராயம் வேண்டும்.  உறையில் இட்ட கருவிகளை ஒரு ஆள் வெளியே எடுத்துக் கொண்டிருக்கும் போது வேலி செடி மறைவில் ஒதுங்கி சூடாக காய்ச்சிய நாட்டு சரக்கை அடித்துவிட்டு வியர்க்க வியர்க்க வந்து  இசைக்க ஆரம்பிப்பார்கள்


என்ன சப்தம் அது. இந்த கொட்டு என்ற இசைக்கருவியை யார் உருவாக்கினார்கள். கிறங்க அடிக்கும் தாளம். உச்சத்தலையில்  இருந்து பெருவிரல் வரை அது சுண்டி இழுக்ககூடியது. கொட்டுமேளத்திற்கு செத்த பிணம் கூட ஆடும் என்பார்கள்.



சாவு வீட்டில் கொட்டுகாரர்கள் போதை மீறி அடிக்கும் இசையின் உச்சத்தில் அது சாவு வீடு என்பதை மறந்து பலர் தாயோளி கொன்னுட்டான் என்று சப்தமாக பாராட்டுவதை கேட்டிருக்கிறேன்.


எனக்கு கொட்டுக்காரர்களின் தலைமயிரை ரொம்பவும் பிடிக்கும். தோளில் புரளும் கூந்தல் வளர்ப்பதில் ஏன் கொட்டுக்காரர்களுக்கு இத்தனை இஷ்டம் என்று புரியவேயில்லை.  கொஞ்சம் அதிகமாக முடி வளர்ந்துவிட்டால் கூட வீட்டில் பெரியவர்கள் என்னடா கொட்டுகாரன் மாதிரி முடியை வளத்துகிட்டு வெட்டிட்டு வா என்று திட்டுவார்கள்.


கொட்டுக்காரர்களின் முடி படியாதது. அதில் பாதி வளைந்து கிடக்கும். கொட்டுக்காரர்களின்  சுபாவம் விசித்திரமாக இருக்கும். அவர்கள் நாதஸ்வரக்காரனுக்கு ஒத்தாசையாக வாசிக்க வேண்டும் என்பதை விடவும் அவனோடு போட்டி போடுவது போலவே வாசிப்பார்கள்.  அந்த கொட்டுசப்தம் நரம்புகளை துள்ள செய்ய கூடியது.


கால்கள் தானே ஆட ஆரம்பிக்கும். கொட்டுக்காரனின் வித்தையில் மயங்கி நின்ற இடத்திலே ஆடுவார்கள். தாளகதி உயர்ந்து போக போக உடம்பில் மின்சாரம் பாய்வது போன்ற வேகம் உண்டாகும். கொட்டுக்காரர்களில் பெரும்பான்மை குடிப்பழக்கம் உள்ளவர்கள். நாட்டுசாராயம் குடித்துவிட்டு துண்டால் வாயை துடைத்துக் கொண்டு அந்த போதையில் பீறிடும் வியர்வை வழிய தன் உடலை ஒரு முறுக்கி கொட்டு அடிக்க ஆரம்பிப்பார்கள்.


என் கல்லூரி நாட்களில்  வாடிப்பட்டி கொட்டுக்காரர்கள் மிக பிரபலமாக இருந்தார்கள். அவர்கள் அடிக்கு போட்டியே கிடையாது என்பார்கள். இன்னும் சில அனுப்பானடி கொட்டுகாரர்களை கொண்டாடுவார்கள். ஒரு நாள் எங்கள் ஊர் திருவிழாவில் எதிர் எதிரே இரண்டு கொட்டுக்காரர்கள் வாசித்தபடி வந்துவிட்டார்கள்.


இருவருக்கும் போட்டியாகி விட்டது. யார் இதில் சிறந்தவர் என்று முடிவு செய்யாமல் அங்கிருந்து சாமிக்கு செலுத்தும் சட்டி போகக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள். கிட்டதட்ட மாலை நாலு மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரை இரண்டு கொட்டுக்காரர்களும் அசராமல் அடித்தார்கள்


அப்படியொரு இசைமேன்மையே வேறு எப்போதும் கேட்டதேயில்லை. சிறுவயதில் இருந்து தான் கற்று வைத்திருந்த அத்தனை ஜாலங்களையும் அவர்கள் காட்டினார்கள். அவர்கள் போட்டியை விலக்காமல் ஊரே திரண்டு பார்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் குடிப்பதற்கு கூட அவர்கள் நிறுத்தவில்லை. காளிமார்க் கலர் வாங்கிவந்து அப்படியே வாயில் கவித்தினார் ஒருவர். தாளஇசை அந்த இரவின் அடி ஆழங்களில் உறங்கிக் கொண்டிருந்த உயிர்களை கூட எழுப்பியிருக்க வேண்டும்


அந்த இரண்டு கொட்டுக்காரர்களின் உடல்களும் வியர்ந்த்து வழிந்து களைத்து சலித்த போதும் அடி வேகம் குறையவேயில்லை. விடிகாலையின் இருள் கலையும் ஒளியில் அவர்கள் தங்களை மறந்து வாசித்துக் கொண்டிருந்தார்கள். உறக்கம் அப்பிய விழிகளுடன் அவர்கள் முன் உட்கார்ந்திருந்தேன். இப்போது நினைக்கும் போது மனதில் அந்த இசை நிரம்பி வழிகிறது.


அந்த கொட்டுசப்தம் போல உலகின் வேறு இசையும் என் மனதிற்கு நெருக்கமாக இல்லை. விடிகாலையில் மக்களாக அவர்களை வணங்கி போட்டியை முடித்து கொள்ள வைத்து இருவருக்கும் மாலை போட்டு மரியாதை செய்தார்கள்.


வாட்ச்மேனாக உள்ள கொட்டுக்காரரைப்   பார்த்த இரவில் எப்படியாவது கொட்டுசப்தம் கேட்க வேண்டும் போலிருந்தது.


இந்த ஏக்கத்தை தீர்க்க உள்ள ஒரே துணை இளையராஜா. அவர் கொட்டு சப்தத்தை மிக சிறப்பாக தன் இசையமைப்பில் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கு புதிய வார்ப்புகளில் வரும் திருவிழா கூத்து என்ற பாடலும், விருமாண்டியில் வரும் கருமாத்தூர் காட்டுக்குள்ளே என்ற பாடலும் கேட்டால் போதும். அன்றிரவும் அந்த இரண்டு பாடல்களையும் நாலைந்து முறை திரும்ப கேட்டேன்.


மாநகரின் இரவு கரைந்து வெட்டவெளியில் தலைமயிர் தோளில் புரள கொட்டுக்காரர்கள், நாயனம் வாசிப்பவர்களின் இசையை நெருக்கமாக நின்று கேட்பது போலிருந்தது. இது தான் இளையராஜாவின் தனிச்சிறப்பு.


யுவன் இசையில் பருத்திவீரனில் தங்காதொங்கா என்ற பாடல் உள்ளது.  புதிய வார்ப்புகள் பாடலில் பாதிப்பில் உருவானது. அதையும் ஒரு முறை கேளுங்கள். அப்போது தான் கொட்டுக்காரர்களின் துடியான ஆவேசம் உங்களுக்குள் இறங்கும். எத்தனை அதிநவீன இசைக்கருவிகள், நடன அரங்கம் டிஜே இசை, ராப் ரே, வந்தாலும் இதற்கு இணையாக எதுவுமில்லை என்றே சொல்வேன். இது தான் தமிழ் மக்கள் இசையின் அடிநாதம் போலும்.


**


 


 

0Shares
0