சினிமாவே வாழ்க்கை.

இசைவிமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை கொண்ட ஷாஜியை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். எப்போது சந்தித்தாலும் அவரது பேச்சின் ஊடே சினிமாவும் இசையும் இலக்கியமும் பீறிடும். இசையின் மீது இத்தனை பித்து கொண்ட ஒருவரை நான் கண்டதில்லை. ஆழ்ந்து கரைந்து இசை கேட்கக் கூடியவர்.

அது போலவே தான் சினிமாவும். உலகச் சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை ஆராய்ந்து பேசக்கூடியவர். மிஷ்கின் படங்களில் நடிக்கத் துவங்கி தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஷாஜி எப்போதும் உற்சாகமானவர். பரபரப்பாக வாழ்க்கையை முன்னெடுப்பவர். இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்த அனுபவம் உண்டு. ஐந்தாறு மொழிகளை அறிந்தவர். அவர் தனது இசைக்கட்டுரைகளின் வழியே தமிழில் அறிமுகமாகி மெல்ல தனித்துவமிக்க இசைவிமர்சகராக உருவாகினார்.

ஷாஜியின் சினிமா வெறியின் நாற்பது ஆண்டுகள் என்ற கட்டுரை நூலை டிஸ்கவரி புக் பேலஸ் மிக நேர்த்தியாக, வண்ண ஓவியங்களுடன் வெளியிட்டுள்ளது. ரவி பேலட்டின் ஓவியங்கள் மிக அழகாக வரையப்பட்டிருக்கின்றன. கட்டுரைக்கு இணையாக ஓவியங்களை உயிர்ப்புடன் வரைந்திருக்கும் ரவி பேலட்டிற்கு மனம் நிரம்பிய பாராட்டுகள்.

ஷாஜி சினிமா பார்ப்பதற்காக ஊர் சுற்றியவர். மலையாளம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என வாரத்தில் ஐந்தாறு படங்கள். நல்ல படம் கெட்ட படம் என எந்தவொரு பாகுபாடுமில்லாமல் சகலமான திரைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன் எனத் தனது சுய அனுபவத்தை மிக அழகாக விவரித்திருக்கிறார்.

ஷாஜியின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வரை அவர் ஒரு பாடகர் என்பது எனக்குத் தெரியாது. ஷாஜி பாடி நான் கேட்டதில்லை. ஆனால் திரையிசைக் கச்சேரிகளில் பாடும் பாடகராக அவர் உருவான விதமும், ஊர் ஊராகப்போய்ப் பாடிய நாட்களையும் பற்றி எழுதியுள்ள கட்டுரை அவரது ஆளுமையின் மறுபகுதியைக் காட்டுவதாக உள்ளது

சினிமா வெறியின் நாற்பது ஆண்டுகள் நூலில் ஷாஜி சினிமாவோடு தனக்கு ஏற்பட்ட தீவிர நெருக்கத்தை மிக அழகாக விளக்கியிருக்கிறார். நூலை வாசிக்க வாசிக்கக் கட்டப்பனை என்ற கேரள கிராமம் மறைந்து எனது சொந்த ஊரும் சொந்த வாழ்க்கையும் நினைவில் வந்து போனது. அநேகமாக வாசிக்கும் பலரும் இதே அனுபவத்திற்கு உட்படுவார்கள் என்பதே நிஜம்.

கேரளாவின் இடுக்கி பகுதியில் உள்ள கட்டப்பனை என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஷாஜி முதன்முறையாகச் சினிமா பார்க்கச் சென்ற அனுபவத்தைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.. அது போலவே சினிமா பார்க்கப்போய் வீட்டில் அடிவாங்கியது, நண்பர்களுடன் கூடி சினிமாக் கதை பேசியது, இரவு செகண்ட் ஷோ பார்த்துவிட்டு . யாருமற்ற எஸ்டேட் சாலையில் இருட்டில் தனியே நடக்கப் பயந்து சினிமா பாடலைப் பாடியபடியே வரும் காட்சி என யாவும் திரையில் ஒளிருவது போலக் கண்முன்னே வந்து போகின்றன

இந்நூல் ஒரு சினிமா ரசிகனின் வாழ்க்கையை மட்டுமின்றிச் சிறிய கிராமத்தில் பிறந்த ஒருவன் பெருநகரங்களைத் தேடிப்போய்த் தனது கனவுகளை நிஜமாக்கப் பட்ட அவமானங்களை, துயரங்களை, அற்ப சந்தோஷங்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துகிறது. அவ்வகையில் இது ஒரு வகைச் சுயசரிதை.

பல்வேறு ஊர்களின்  திரையரங்குகள். சினிமாவோடு தொடர்புடைய மனிதர்கள். நடிகர் நடிகைகள். இசைக்கலைஞர்கள். மேடைப்பாடகர்கள், இசைக்குழுக்கள் என இந்தக் கட்டுரைகளில் நினைவு கொள்ளப்படும் விஷயங்கள் மறக்கமுடியாத சித்திரங்களாக மனதில் பதிந்துவிடுகின்றன.

வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள். துரத்தல்கள். வீழ்ச்சிகள். ஆனால் மனவுறுதியோடு ஷாஜி அவற்றைக் கடந்து சென்றிருக்கிறார். இன்று தனது கனவுகளைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

சினிமா பார்ப்பது என்பது வெறும் பொழுதுபோக்கில்லை. சினிமா பார்த்தல் என்பது விரும்பிக் காணும் கனவு போன்றது. ஷாஜியைப் போலவே நானும் வகுப்பை கட் அடித்துச் சினிமா பார்த்து அதற்காகத் தண்டனை பெற்றவன். சினிமா பார்ப்பதற்காகப் பல ஊர்களுக்குச் சென்று வந்தவன். சர்வதேச சினிமாக்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே டெல்லி மும்பை கோவா கல்கத்தா எனத் திரைப்பட விழாக்களுக்குப் போய் வந்தவன். இந்தச் சினிமா பைத்தியம் தான் ஷாஜியின் நூலை எனக்கு நெருக்கமாக்கியது

இந்த நூலின் வழியே மலையாள சினிமாவின் ஐம்பது ஆண்டுகளை, அதன் மறக்கமுடியாத ஆளுமைகளை அறிந்து கொள்கிறோம். கூடவே தமிழ் மற்றும் இந்தி ஆங்கிலச் சினிமாக்களின் புகழ்பெற்ற படங்களையும் பாடல்களையும் எதிர்கொள்கிறோம்.

ஒரு நண்பனிடம் சொல்வது போல நேரடியாக, எளிமையாக, உணர்வுப்பூர்வமாக இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

தனக்கு ஏற்பட்ட அவமானங்களை, துயரங்களை ஷாஜி மறைத்துக் கொள்ளவில்லை. மெல்லிய கேலியோடு தனது ஆறாத ரணங்களை அவர் விரிவாக எழுதிச் செல்கிறார். வாசிக்கும் நமக்கு மனது கனத்து விடுகிறது என்பதே நிஜம்.

இந்த நூலில் சோவியத் நாடு, ரஷ்யன் லைஃப், ஸ்புட்னிக் போன்ற ருஷ்ய இதழ்களுக்கு ஊர் ஊராகச் சென்று சந்தாக்களைச் சேர்க்கும் பணியில் ஷாஜிக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதியிருக்கிறார். தனியே திரைப்படமாகப் பண்ணும் அளவு அந்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.

மதுரை நகரில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம். ஆலப்புழை சாந்தி’ திரையரங்கில் சந்தித்த பெண், கொச்சி ஸ்ரீராக் இசைக்குழுவிற்குப் பாடப்போனது. . ஒரு கிறிஸ்தவ இசைக்குழுவிற்காகத் தமிழ், ஹிந்தி பக்திப் பாடல்களைப் பாடப் போன நினைவுகள், புகழ்பெற்ற இசையமைப்பாளர்ஆர் டி பர்மனைச் சந்தித்த தருணம் என அவரது கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனிச் சிறுகதைகள் போலக் கச்சிதமான வடிவ ஒழுங்குடன் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன.

சினிமா பார்ப்பதை வாழ்க்கையாகக் கொண்ட ஒருவரால் தான் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும். ஷாஜி அப்படி ஒரு மனிதர்.

என் சிறுவயதில் சினிமா பாட்டுப்புத்தகங்களை நாள் முழுவதும் கையில் வைத்துக் கொண்டு ரகசியமான குரலில் பாடிக் கொண்டிருந்த ஒரு அக்காவை அறிவேன்.

இந்தப் புத்தகத்தை நானும் அப்படித்தான் வாசித்தேன்.

••

0Shares
0