விண்ணாரம் என்ற அந்த மலை மிக உயரமானது. பதினெட்டு வயது இளைஞனாக இருந்த அவன் உற்சாகமாக மலையேறினான். கடினமான பாதையில் கூட அவன் சோர்ந்து போகவில்லை. மலையின் உச்சிக்கு வந்து நின்றபோது மலை அவனிடம் கேட்டது.
“எதற்காக இங்கே வந்திருக்கிறாய்“
“மனது நிறையச் சந்தோஷம் நிரம்பியிருக்கிறது. அதைக் கொடுத்துப்போகவே வந்திருக்கிறேன்“ என்றான் இளைஞன்
“உன் சந்தோஷத்தைக் கொடு, அதை மேகங்களாக்கி வானில் மிதக்க விடுகிறேன்“ என்றது மலை. இளைஞன் அப்படியே செய்தான்.
அந்த இளைஞனுக்குச் சில ஆண்டுகளில் திருமணமானது. புதிய வீடு மாறினான். பிள்ளைகள் பிறந்தார்கள். குடும்பப் பிரச்சனைகளும் கடன் சுமைகளும் அவனை வாட்டின. எப்போதாவது மனதில் விண்ணார மலைக்குப் போய்வர வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். ஆனால் நேரமிருக்காது. பொருளாதாரப் பிரச்சனைகள் காலைப்பிடித்து இழுக்கும்.
அவன் தனது முப்பத்தைந்தாவது வயதில் மறுபடியும் விண்ணார மலைக்கு ஏறத்துவங்கினான். இந்த முறை பயணம் சற்றே கடினமாக இருந்தது. வழியில் சோர்ந்து போனான். ஆனால் மனவுறுதியோடு மலையேறி உச்சிக்குப் போனான்.
மலை இப்போதும் அதே கேள்வியைக் கேட்டது
“எதற்காக இங்கே வந்திருக்கிறாய்“
“என் மனம் நிறையக் கவலைகள் இருக்கின்றன. அதைக் கொட்டிப்போகவே வந்தேன்“
மலை சொன்னது
“உன் கவலைகளை என்னிடம் தா. அவற்றைக் காற்றில் பறக்கும் தூசி போலாக்கி விடுகிறேன்.“
அப்படியே அவன் தனது கவலைகளைத் தந்தான். மறுநிமிசம் தூசியாக அவை காற்றில் பறந்தன
பின்பு அவன் புதியதொரு வணிகம் செய்தான். அதில் லாபமும் நஷ்டமும் மாறி மாறி வந்தன. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். வீடு, மனைவி, பிள்ளைகள். வேலை என்று சிறிய வட்டத்திற்குள் உழன்று கொண்டிருந்தான்.. பின்பு தனது ஐம்பதாவது வயதில் அவன் விண்ணார மலைக்குப் போனான்.
இந்த முறை அவனால் மலையேற முடியவில்லை. பெருமூச்சு வாங்கியது. வழியிலே மரணபயம் ஏற்பட்டது. முழங்கால் வலி தாங்க முடியவில்லை. ஆனால் எப்படியோ மலையுச்சிக்குப் போய்விட்டான்
மலை கேட்டது
“எதற்காக வந்திருக்கிறாய் நண்பனே“
அவன் சொன்னான்
“வாழ்க்கை மிகவும் சலிப்பாகவுள்ளது. எதிலும் ஆர்வமில்லை. என் சலிப்பினை ஒப்படைத்துப் போக வந்திருக்கிறேன்“
“உன் சலிப்புகளை உருகியோடும் பனி நீரில் கரைத்து விடுகிறேன். தண்ணீர் ஒரு போதும் சலிப்படைவதேயில்லை“ என்றது மலை.
அப்படியே அவன் சலிப்பை ஒப்படைத்துச் சென்றான்.
அடுத்த முறை அவன் விண்ணார மலைக்கு வருவதற்குள் எழுபத்தியாறு வயதாகியது. தலை முற்றிலும் நரைத்துப் போனது.. உடலில் வலுக்குறைந்து கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன. ஆனாலும் அவன் தட்டுத் தடுமாறி மலையின் உச்சிக்குச் சென்று சேர்ந்தான்
மலை கேட்டது
“எதற்காக வந்திருக்கிறாய் நண்பா. “
கிழவன் சொன்னான்.
“நிறைய இழப்புகளை, மரணத்தைப் பார்த்துவிட்டேன். மனது நினைவுகளால் கனத்துப் போயிருக்கிறது. நினைவுகள் என்னை வதைக்கின்றன. அவற்றை ஒப்படைத்துப் போக வந்திருக்கிறேன். “
மலை சொன்னது
“அதை மட்டும் என்னால் பெற்றுக் கொள்ள முடியாது. நீ நினைவுகளை எவரிடமும் ஒப்படைக்க முடியாது. அவற்றை மேகமாகவோ, காற்றில் செல்லும் தூசியாகவோ, ஓடும் நீரில் கரைத்துவிடவோ முடியாது, அவை நீ தாங்கிச் சுமக்க வேண்டிய சுமைகள். நானே நினைவுகளின் கனத்தால் தான் மௌனமாகியிருக்கிறேன். முதுமை என்பது நினைவுகளின் குடுவை. எவ்வளவு காலி செய்தாலும் நினைவுகள் தானே ஊறிவிடும். நண்பனே. வீடு திரும்பிப் போ.. நினைவுகள் இருக்கும் வரை தான் நீ இருப்பாய். நினைவில்லாமல் போனால் நீ வெறும் சவம். “
அதைக் கேட்டு அவன் துயரத்தில் அழுதான். பின்பு மெல்லத் தரையிறங்க ஆரம்பித்தான். அவன் மலையேறிய பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக மனதில் துளிர்க்க ஆரம்பித்தன. அது மேலும் மனதைக் கனக்கச் செய்வதாகயிருந்தது.
••