சந்தையில் திரியும் மனிதர்களைப் போலப் புதிய வீடுகள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கின்றன.
புதிய வீடுகளுக்குத் தனது பெருமைகளை எவ்வளவு சொல்லியும் நிறைவு வருவதேயில்லை.
ஒரு புது வீடு சொன்னது
“வீடென்பது ஒரு மலர். அதன் வாசனை வசிப்பவர்களின் இயல்பாலே வெளிப்படுகிறது.“
கொஞ்சம் பழசாக ஆரம்பித்தவுடன் அவை தன்னைப் பிறர் கவனிப்பதில்லை என்று மெலிதாகப் புகார் சொல்ல ஆரம்பிக்கின்றன. இப்போதும் தான் அழகு தான் என்று சுயசமாதானம் செய்து கொள்கின்றன.
நடுத்தர வயதுப் பெண் தனது திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பதைப் போல ஆதங்கத்துடன், வெட்கத்துடன் நினைவில் ஆழ்ந்து போகின்றன.
வீட்டில் வசிப்பவர்களின் சுகமும் துக்கமும் சண்டையும் கோபமும் கண்டபிறகு வீடுகள் தானே மௌனமாகின்றன.
காற்றும் மழையும், பனியும் வெயிலும், கடந்து கடந்து வீடுகளும் மனிதர்களைப் போலவே நரை கொள்ளத் துவங்குகின்றன
கால மாற்றத்தில்பழைய வீடுகள் கைவிடப்பட்ட முதியவர்களைப் போல உருமாறிவிடுகின்றன.
புதிதாகக் கட்டப்பட்ட வீடுகள் சுயபெருமை பேசும் போது அவற்றிற்கு ஏதோ ஆலோசனை சொல்ல முயற்சித்துப் பின்பு தான் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள் என வாயை மூடிக் கொண்டுவிடுகின்றன.
சிதிலமடைந்த வீடுகள் வாழ்ந்து கெட்ட மனிதர்களைப் போல உலகை ஏறிட்டுப் பார்க்கத் திராணியற்று நிற்கின்றன
புதிய அடுக்குமாடி கட்டுவதற்காக இடித்துத் தள்ளப்படும் பழைய வீடுகளிலிருந்து கற்களும் செங்கல்லும் சிதறிப் போகையில் வீடு மெல்லிய குரலில் சொல்கிறது
“இவ்வளவு தான் வாழ்க்கை.“
வீடு இடிக்கப்பட்டபிறகு வெற்றிடம் முணுமுணுக்கிறது
“வீடும் மனிதனும் வேறுவேறில்லை“
••
