வெளியூர் செல்லும் நேரங்களில் அவன் தன் மனைவியை ஒரு சூட்கேஸ் போல உருமாற்றி எடுத்துச் சென்றுவிடுவான். சூட்கேஸ் ஒருபோதும் பயண நெருக்கடி பற்றியோ, புதிய இடம் பற்றியோ முணுமுணுப்பதில்லை. அதற்குச் சிறிய மூலை போதும். அவனுக்குத் தேவையான உடைகள். பற்பசை, சேவிங்கிரீம், ரப்பர் செருப்பு வரை எல்லாவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டது சூட்கேஸ். விடுதிகளின் வரவேற்பறையில் அவன் சூட்கேஸ் உடன் நிற்பது தான் பெருமையாகக் கருதப்பட்டது. வெறும் கையோடு வருபவனைப் பயணியாக யாரும் மதிப்பதில்லை. அவன் வெளியே செல்லும் போது சூட்கேஸ் மட்டும் அறையில் தனித்திருக்கும். அவன் தனியாகக் கருத்தரங்கிற்குச் செல்வான். இரவு விருந்திற்குப் போவான். போதையோடு பின்னிரவில் அறைக்குத் திரும்பி வருவான். அதுவரை சூட்கேஸ் மூடப்பட்ட கண்ணாடி ஜன்னல் வழியாகப் புதிய நகரை, புதிய வானத்தைப் புதிய மனிதர்களைப் பார்த்தபடியே இருக்கும். வந்த வேலை முடிந்தவுடன் அவனது அழுக்கு ஆடைகள். காலுறைகள், ஷாப்பிங் செய்த பொருட்கள். வாசனைத் திரவியங்கள் என எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டு சூட்கேஸ் அவனுடன் ஊர் திரும்பும். இப்படி எல்லா நாடுகளையும் அவனுடன் சேர்ந்து பார்த்திருக்கிறது அவனது சூட்கேஸ். அவன் ஒரு பொறுப்பான மனிதன். பொறுப்பான கணவன். ஒரு போதும் சூட்கேஸ் இல்லாமல் தனியே பயணிப்பதில்லை.**
17.3.20