விழிப்புணர்வின் பாதை.

கொரியாவின் புகழ்பெற்ற கவிஞரான கோ யுன் (Ko Un) எழுதிய நாவல் Little Pilgrim

1991ல் வெளியான இந்த நாவல் சுதானா என்ற சிறுவனின் அகத்தேடலை விவரிக்கிறது. இந்த நாவல் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தாவைப் போன்றது. ஆனால் சித்தார்த்தா ஒரு இளைஞன். அவனது மெய் தேடல் வணிகம், காமம், ஞானம் என மூன்று நிலைகளில் சஞ்சரித்து முடிவில் ஞானத்தை அடைகிறது.

இந்தச் சித்தார்த்தான் ஒரு சிறுவன். ஒருவகையில் புத்தர் தான் அந்தச் சிறுவனோ எனும்படியாகக் கூடத் தோன்றுகிறது.

அவதாம்சக சூத்திரத்திலிருந்து தான் இந்தக் கதைக்கான கருவை எடுத்துக் கொண்டதாகக் கோ யுன் கூறுகிறார்.

தான் பௌத்த துறவியாக இருந்த நாட்களில் இந்தக் கருவைக் கொண்ட இதிகாசம் போல நீண்ட கவிதை புனையும் படி தலைமை குரு ஆலோசனை சொன்னதாகவும்  ஆனால் அப்போது அதில்  ஈடுபாடு காட்டவில்லை. நீண்ட பல வருஷங்களுக்குப் பிறகு அந்த எண்ணம் இந்த நாவலாக உருமாறியது என்றும் கூறுகிறார்.

பௌத்த துறவியாக வாழ்ந்தவர் என்பதால் கோ யுன்னால் மெய்த்தேடலின் பல்வேறு நிலைகளை அழகாகக் காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.

சுதானா தன் பயணத்தின் ஊடே பல்வேறுவிதமான மனிதர்களைச் சந்திக்கிறான். காடு மலை பள்ளத்தாக்கு பாலைவனம் என நிலவெளி மாறிக் கொண்டேயிருக்கிறது. தான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தனது ஆசானாகக் கொள்கிறான் சுதானா. அது விலங்குகளாக, தாவரங்களாக இருந்தாலும் அவ்வாறே உணருகிறான். விழிப்புணர்வு கொண்ட ஒருவன் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ சாத்தியங்கள் இருக்கிறது .

சித்தார்த்தா நாவலில் ஆறு ஒரு முக்கியப் படிமம். படகோட்டும் கோவிந்தன் ஆற்றின் வழியே ஞானத்தை அறிகிறான். அதே போலவே கோ யுன் நாவலும் ஒரு ஆற்றில் தான் துவங்குகிறது. ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்த சுதானாவை ஒரு கிழவன் காப்பாற்றுகிறான். அவன் உயிரோடு இருக்கிறான் என மஞ்சு ஸ்ரீ சொல்கிறாள். கதை நடக்கும் இடம் இந்தியா.

கங்கையில் கலக்கும் சோன் நதியின் கரையில் தான் சுதானா விழுந்து கிடக்கிறான். அவன் ஒரு அநாதைச் சிறுவன். உலகம் இருட்டாக இருக்கிறது என்றபடியே கண்விழிக்கிறான் சுதானா. அவனைக் கிழவர் தன் பொறுப்பில் ஏற்றுக் கொள்கிறார்

ஒரு நாள் சுதானா ஒரு மரத்திடம் பேசுகிறான்.

என் வயது ஒன்பது. உன் வயதோ ஐம்பது. நீயும் ஏன் சிறுவனைப் போல நடந்து கொள்கிறாய் என்று கேட்கிறான்.

மரம் சொல்கிறது. ஒன்பது வயது சிறுவனுடன் இருக்கையில் எனக்கும் ஒன்பது வயது தான் என்கிறது. சிறுவர்களும் மரங்களும் விளையாட்டுத் தனம் நிரம்பியவை தானே.

சுதானா மரத்திடம் உனக்கு இமயமலையைத் தெரியுமா எனக்கேட்கிறான். மரம் எனக்குத் தெரியாது. ஆனால் காட்டில் உள்ள விலங்குகள் யாவும் இங்கே தான் ஒன்று கூடுவார்கள். ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும் என்கிறது. இவர்கள் உரையாடலுக்குள் கிளையிலிருந்த மலர் தலையிட்டுப் பேசுகிறது. இப்படி மரங்கள் மலர்கள் மட்டுமில்லை நத்தை கூடச் சுதானாவோடு பேசுகிறது.

தனது ஞானகுருவைத் தேடியபடியே மலையொன்றின் அடிவாரத்திற்குப் போய்ச் சேருகிறான் சுதானா. அங்கே ஒரு வேட்டைக்காரன் சிறுவனாகிய நீ எப்படித் தனியே இங்கே வந்தாய் என வியந்து கேட்கிறான். அத்துடன் தண்ணீர் கொடுத்து உதவி செய்கிறான். அந்த வேட்டைக்காரனிடம் பயிற்சி தரப்பட்ட பருந்து ஒன்றிருக்கிறது. அது வேட்டையாடுவதற்கு உதவி செய்யக்கூடியது. அந்தப் பருந்தை தன் உயிர்த்தோழன் போல நேசிக்கிறான் வேட்டைக்காரன்.

சுக்ரீவா மலைக்குச் செல்லும் சுதானா அங்கே மேகஸ்ரீயை சந்திக்கிறான். தனக்கு ஏதாவது போதனை செய்யும் படிகேட்டுக் கொள்கிறான். மேகஸ்ரீ கண்களை அகலத் திறந்து உலகின் வனப்பை பார். எல்லையற்ற இயற்கையின் பேரழகினைப் பார் என்று போதிக்கிறாள். கோ யுன் புத்த ஜாதகக் கதைகளின் மரபை புத்துருவாக்கம் செய்வது போலவே நாவலை எழுதியிருக்கிறார்

ஆகவே இயற்கையின் அங்கமாக உள்ள பறவைகள், விலங்குகள் மரம் செடி கொடிகள் பாறைகள் மலைகள் என யாவும் சுதானாவோடு பேசுகின்றன. அது தான் நாவலின் தனித்துவமாக உள்ளது.

இந்த நாவலை வாசிக்கையில் குட்டி இளவரசனின் மாற்று வடிவம் போலவே சுதானா காணப்படுவதாக உணர்ந்தேன். அதே நேரம் குட்டி இளவரசனை விடவும் சுதானா வெகுளித்தன்மை அதிகம் கொண்டவனாகவும், துயரமற்றவனாகவும் இருக்கிறான். குட்டி இளவரசனிடம் வெளிப்படுத்தப்படாத துயரமிருக்கிறது. அது சுதானாவிடம் இல்லை

சாகர்மேகா என்ற பௌத்த துறவியைச் சந்திக்கும் சுதானா அவர் புத்தரைக் கண்டிருக்கிறாரா எனக் கேட்கிறான்.

அதற்குச் சாகர்மேகா இந்த உலகில் பல்வேறு புத்தர்கள் தோன்றியிருக்கிறார்கள். புத்தருக்கு முன்பும் புத்தர் இருந்தார். புத்தருக்குப் பின்பும் புத்தர் இருப்பார். ஆகவே சித்தார்த்தன் என்பது புத்தரின் ஒரு நிலையே. அந்த நிலையில் அவர் துக்கம் குறித்த ஆழ்ந்த ஞானத்தை வெளிப்படுத்தினார். ஆனால் உலகம் துக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை. புத்தரைக் காணவேண்டும் என்ற ஆசையை, காணாத துக்கத்தைச் சுமந்துகொண்டிருக்கிறது. உண்மையில் நீயும் நானும் புத்தனே என்கிறார்.

இது தான் நாவலின் மையக்குரல். பத்து படிநிலைகளின் வழியே முழுமையான விழிப்புணர்வை ஒருவன் அடைவதையே நாவல் விவரிக்கிறது.

•••

0Shares
0