காலைக்குறிப்புகள் 18 சிறிய கதை

இயக்குநர் மணிகௌல் ஒரு நேர்காணலில் தனது படங்களுக்குச் சிறிய கதை போதுமானது. பெரிய கதையும் நிறையக் கதாபாத்திரங்களும் சிலருக்கே தேவைப்படுகின்றன என்கிறார். Uski Roti (1970) Duvidha போன்ற அவரது படங்களே இதற்கு உதாரணம்.

இதையே தான் ஹெமிங்வே சிறுகதை பற்றிய குறிப்பு ஒன்றில் வெளிப்படுத்துகிறார். குறைவான கதாபாத்திரங்கள். ஒரு சம்பவம் ஒரு நல்ல சிறுகதைக்குப் போதும். கதையின் ஆழம் தான் முக்கியமானது என்கிறார்.

இதற்குச் சிறந்த உதாரணம் அவரது Killers என்ற சிறுகதை. சிகாகோவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஓலே ஆண்ட்ரேஸனைக் கொல்ல ஒரு உணவகத்தில் காத்திருக்கும் இரண்டு கொலையாளிகளைப் பற்றியதே கதை. இறுக்கமான அந்தச் சூழலே கதையின் பிரதான உணர்வு.சிறிய வாக்கியங்களின் மூலமே கதையைக் கொண்டு செல்கிறார்.அலங்காரமான சொற்கள் எதுவும் கிடையாது. கொலையாளிகளின் காத்திருப்பே கதையின் மையப்புள்ளி.

ஈரானிய சினிமா உலக அளவில் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் சிறிய கதையைக் கையாண்டது தான். சில கதைகளில் இரண்டோ மூன்றோ கதாபாத்திரங்கள் மட்டுமே. அந்தக் கதையில் பெரிய திருப்பங்கள் எதையும் உருவாக்கவில்லை. ஆனால் கதையினை அழுத்தமாக, இயல்பாக, உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துச் சொல்லியதே அதன் சிறப்பு.

All you have to do is write one true sentence. என்கிறார்  ஹெமிங்வே. நல்ல கதையின் ஒரு வரியில்லை. நிறைய உண்மையான வரிகள் இடம்பெற்றிருக்கும். அதை வாசகனால் நன்றாக உணர முடியும்.

இந்தியச் சிறுகதைகளில் நிறையக் கதை சொல்கிறார்கள். அல்லது ஒரு கதையில் பத்து இருபது நிகழ்வுகள் நடக்கின்றன. பல நேரம் சிறுகதை ஒரு நாவலைப் போல நாற்பது ஐம்பது வருஷ கால வாழ்க்கையை விவரிக்கிறது. சிறிய கதை போதும் என்று ஏன் நினைப்பதில்லை

காரணம் சிறிய கதை என்பது சிறுவர்களுக்கானது என்று நினைக்கிறோம். அல்லது சிறிய கதைகள் பெரியவர்களுக்குப் போதவில்லை. அவர்கள் நிறைய நிகழ்ச்சிகள். அதன் வழி வெளிப்படும் உணர்ச்சிப்பூர்வமான நாடகம். மோதல். பரபரப்பான முடிவு எனக் கதையை வாசித்துப் பழகியிருக்கிறார்கள்.

பால் கிரெவில்லாக் என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் கதை ஒன்றில் கடற்கரையில் பெயரற்ற ஒருவன் வந்து நிற்கிறான். கடலை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறான். அவன் நினைவில் அதே கடற்கரைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த நினைவு பீறிடுகிறது. அன்றைய அவனது வாழ்க்கையின் சிரமங்களை நினைத்து பெருமூச்சிட்டபடியே அவன் அலைகளை வேடிக்கை பார்க்கிறான்.

தொலைவில் இரண்டு சிறுவர்கள் கடற்கரையில் பந்து விளையாடுகிறார்கள். அதில் ஒரு சிறுவனின் பந்து கடலில் விழுந்துவிடுகிறது. அதை எடுக்கச் சென்ற சிறுவன் அலையில் மாட்டிக் கொள்கிறான். கடற்கரையே பதைபதைப்பாகிறது. அந்தச் சிறுவனை மீட்கமுடியவில்லை. மீட்புக்குழுவினர் வருகை தருகிறார்கள். கடற்கரை பரபரப்பாகிறது. என்ன ஆகிறது என்று தெரிந்து கொள்வதற்குள் பெயரற்றவன் கிளம்பிவிடுகிறான் என்று கதை முடிகிறது

இதில் என்ன கதையிருக்கிறது என்று தான் தோன்றுகிறது.

நம் ஊரில் இந்தக் கதையை எழுதியிருந்தால் சிறுவன் மீட்கப்படுவதே கதையின் முக்கியப்பகுதியாக இருக்கும். ஆனால் தத்தளிப்பு என்பது பெயரற்றவனின் வாழ்க்கை. அது தான் வெளியிலும் நடக்கிறது. அவனும் இந்தச் சிறுவன் போலவே காப்பாற்ற முடியாத சுழலில் சிக்கியிருக்கிறான். ஆனால் கதையில் அதை எழுத்தாளன் உரத்துச் சொல்வதில்லை. மாறாக அவன் கடற்கரையில் நிற்கும் அந்த மனிதனின் உணர்ச்சிகளை மட்டுமே எழுதுகிறான்.

சுபமாக ஒரு கதையை எழுதி முடிக்க வேண்டும் என்று எழுத்தாளன் விரும்பவில்லை.மாறாக இப்படியான நெருக்கடிகள் திடீரெனத் தோன்றுவது தான் வாழ்க்கை. அந்த நெருக்கடியை யாரோ சிலர் தீவிரமாக எதிர் கொள்கிறார்கள். சிலர் நெருக்கடியைக் காணாதவர் போலத் தப்பிப்போய்விடுகிறார்கள். இரண்டும் உண்மையே. கதையைப் படித்த போது ஏற்பட்ட உணர்வினை விடவும் கதை ஆழ்ந்து யோசிக்கையில் விரிந்து கொண்டே செல்கிறது. அது தான் இன்றைய சிறுகதையின் தனித்துவம்.

கதையை ஒரு கதாபாத்திரத்தின் மனோநிலைப்படியே வளர்த்து எடுத்துச் செல்வது ஒரு கலை.. மௌனி அதில் தான் வெற்றிபெறுகிறார். ஜானகிராமன் சிறுகதைகளில் நிறைய உரையாடல்கள் இருக்கும். சில நேரம் ஒரு கதையினுள் நாலைந்து சிறுகதைகள் அடங்கியிருக்கும். ரஷ்யச் சிறுகதைகளை வாசிக்கும் போது அவை ஒரு குறுநாவல் போலவே இருப்பதை உணர்ந்திருக்கிறேன். காரணம் டால்ஸ்டாய் காலத்தில் சிறுகதைகளும் தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்களில் தொடராக வெளியாகியிருக்கிறது. ஆகவே நாற்பது ஐம்பது பக்கங்கள் கொண்டதாக எழுதியிருக்கிறார்கள்.

ஹெமிங்வேயின் சிறுகதையில் மைய உணர்ச்சி தான் முக்கியமானது. கதாபாத்திரங்களின் காத்திருப்பை அவர் துல்லியமாக எழுதக் கூடியவர். சீன நிலக்காட்சி ஓவியர்கள் தொலைவைச் சித்தரிப்பதற்கு ஒரு சில கோடுகளே போதும் என்கிறார்கள். அது சிறுகதையாசிரியனுக்கும் பொருத்தமானதே.

Archives
Calendar
October 2020
M T W T F S S
« Sep    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: