எமிலி டிக்கின்சனின் காதல்

கவிஞர் எமிலி டிக்கின்சன் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் Wild Nights with Emily என்ற படத்தைப் பார்த்தேன். மேடலின் ஓல்னெக் என்ற பெண் இயக்குநர் இயக்கிய படமிது

A Quiet Passion என்ற ஒரு திரைப்படமும் எமிலியின் சுயசரிதையை மையமாகக் கொண்டதே. இரண்டிலும் அறியப்படாத எமிலியின் ரகசியக் காதலே முதன்மையாகப் பேசப்படுகிறது.

தனது இருபதாம் பிறந்தநாளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், எமிலி டிக்கின்சன் முதன் முறையாகச் சூசன் கில்பர்ட்டை சந்தித்தார். சூசன் அவளை விட ஒன்பது நாட்கள் இளையவள்

அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. சூசனே எமிலியின் வழிகாட்டி, முதன்மை வாசகர், ஆசிரியர், மற்றும் நெருக்கமான தோழி.

இருவரும் ஒன்றாகக் காட்டில் நீண்ட தூரம் நடந்தார்கள், புத்தகங்களைப் பரிமாறிக் கொண்டார்கள் ஒருவருக்கொருவர் கவிதைகளைப் படித்தார்கள், தீவிரமான, நெருக்கமான கடிதத் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள். , எமிலி ஒருமுறை சூசனிடம் சொன்னார்

“We are the only poets, and everyone else is prose.”

எமிலி டிக்கன்சன் இறந்தபிறகே அவரது கவிதைகள் வெளியாகின. அவர் எழுதி வைத்திருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை ஒரு பெட்டியில் கண்டுபிடித்தார்கள். அந்தக் கவிதைகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து நூலாக்கினார்கள், அதுவும் கூடப் பணம் கொடுத்தே புத்தமாக வெளியிடப்பட்டது.

வாழும் போது எமிலி டிக்கன்சன் தனது கவிதைகளை வெளியிடவில்லை. ரகசியமாகவே வைத்திருந்தார்.

வீட்டை விட்டு வெளியே எங்கும் வராமல் சதா படிப்பு, கவிதை எழுதுவது எனச் சிறியதொரு வட்டத்திற்குள் வாழ்ந்தவர் எமிலி. அவரது வீட்டின் அருகில் ஒரு கல்லறைத் தோட்டமிருந்தது. ஆகவே மரணச்சடங்குகளைக் காணுவது அன்றாட வேலையானது. மரணம் குறித்த எண்ணங்கள் எமிலிக்கு ஆழமான பாதிப்பை உருவாக்க இதுவும் ஒரு காரணம்.

பூக்களின் மீது மிகுந்த விருப்பம் கொண்டிருந்த எமிலி அழகான பூந்தோட்டம் ஒன்றை வைத்திருந்தார். பூக்களுடன் பேசவும் பூக்களை வியந்து ஆராதிக்கவும் கூடியவர். அவருக்குச் சூசன் என்ற இளம்பெண்ணுக்குமான ரகசிய காதலைத் தான் இந்தப்படம் பேசுகிறது

ஷேக்ஸ்பியர் சொசைட்டியின் சார்பில் நாடக ஒத்திகை ஒன்றை நிகழ்த்தும் போது சூசனும் எமிலியும் நெருக்கமாகிறார்கள். ஆணைப் போலப் பெண்ணால் எப்படி முத்தமிடமுடியும் என்று கேட்கிறார் சூசன். எமிலி தன்னால் முடியும் என்று சொல்லி சூசனை முத்தமிடுகிறாள். அவர்களுக்குள் ரகசியக் காதல் உருவாக ஆரம்பிக்கிறது. காதலர்களாக அவர்கள் மாறுகிறார்கள்.

எமிலியின் குடும்பம் ஒரு மாத காலம் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது. அந்த நாட்களில் தனக்குத் துணையாகச் சூசன் இருக்கட்டும் என்று அவளைத் தன் வீட்டிலே தங்க வைத்துக் கொள்கிறாள் எமிலி. இருவருக்குமிடையில் நெருக்கம் அதிகமாகிறது. மாறிமாறி முத்தமிட்டுக் கொள்கிறார்கள். காதலர்களைப் போலச் சந்தோஷமாகப் பேசிக் கழிக்கிறார்கள்.

1851 இலையுதிர்காலத்தில் பால்டிமோரில் கணித ஆசிரியராக வேலை கிடைத்து சூசன் புறப்பட்டார் . அவளது பிரிவைத் தாங்கமுடியாத எமிலி நிறையக் காதல் கடிதங்களையும் கவிதைகளையும் எழுதினார்.

எட்டு மாதங்களுக்கு பின்பு சூசன் திரும்பி வந்தார். இப்போது எமிலியின் சகோதரன் ஆஸ்டினைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தாள். இந்த உறவு எமிலிக்குத் தெரியாது. விஷயம் அறிந்து அவள் அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் எமிலியின் சகோதரனைத் திருமணம் செய்து கொண்டுவிட்டால் தான் பக்கத்து வீட்டிலே வாழலாம். தங்களின் ரகசிய உறவிற்கு ஒரு தடையும் வராது என்றாள் சூசன். தானும் பொருளாதார ரீதியாக நிம்மதி அடைவேன் என்கிறாள்

இதற்கு எமிலி சம்மதிக்கிறாள். ஆஸ்டினைத் திருமணம் செய்து கொண்டு பக்கத்திலே புதிய வீடு கட்டி குடிவருகிறாள் சூசன். இருபது ஆண்டுகாலம் இருவரும் நெருக்கமான உறவிலிருந்தார்கள். அந்த உறவை ஆஸ்டின் சந்தேகம் கொள்ளவேயில்லை , ரகசியக் காதலின் அடையாளமாக நிறையக் கவிதைகளை எமிலி எழுதியிருக்கிறார்.

தன் காலகட்டத்தின் முக்கியப் பெண்கவியாக இருந்தவரை விடவும் தான் சிறந்த கவிஞர் என்று எமிலி வாதிடுகிறார். அவருக்கு வால்ட் விட்மனைப் பிடிக்கிறது. எமர்சன் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார். ஒரு காட்சியில் எமர்சன் இயற்கை குறித்துப் பேசுவதை எமிலி ரசித்துக் கேட்கிறார்.

எமிலி துண்டு காகிதங்களிலும். சமையற்குறிப்பு எழுதிய காகிதத்தின் பின்பக்கத்திலும் கவிதைகள் எழுதுகிறாள். அதைத் தொகுத்துப் பிரதியெடுத்துத் தருகிறாள் சூசன்.

அட்லாண்டிக் இதழிற்காகக் கவிதைகளைத் தேர்வு செய்யும் தாமஸ் வென்ட்வொர்த் ஹிக்கின்சன் ஒரு நாள் எமிலியை தேடி வருகிறார்.

ஹிக்கின்சன் அடிமைமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவர். பெண்ணுரிமை பேச்சாளர். இயற்கையை வியந்து போற்றும் கட்டுரைகளை எழுதியவர்

நீண்ட நேரம் அவருடன் இலக்கியம் குறித்து எமிலி உரையாடுகிறாள். தனது கவிதைகளைப் படிக்கத் தருகிறாள். தன் கவிதைகளுக்கு உயிர் இருக்கிறதா என்று கேட்கிறாள். அவளது கவிதைகளை எடிட் செய்து வாசித்துக் காட்டும் வென்ட்வொர்த் அவளுக்கு இன்னமும் கவிதைகள் கைகூடவில்லை என்கிறார். அது எமிலிக்கு ஏமாற்றம் அளிக்கிறது. புதிய பெண் கவிஞர்கள் உருவாக வேண்டியது அவசியம் என்று சொல்லும் வென்ட்வொர்த் எமிலியை தொடர்ந்து கவிதைகள் எழுதச் சொல்லித் தூண்டுகிறார்.

எப்போதும் ஒரே வெள்ளை நிற ஆடையை உடுத்துகிறார் எமிலி. கடவுள் நம்பிக்கையும் கிடையாது.

எமிலி திடீரென நோய்வாய்ப்பட்டுக் காலமாகிறார். எமிலியின் சகோதரி லாவினியா சூசனிடம் அடக்கம் செய்ய உடலைக் கழுவச் சொல்கிறார். அத்தோடு சூசனின் ரகசிய காதல் முடிந்து போகிறது.

எமிலியின் மறைவுக்குப் பிறகு அவரது சகோதரி லாவினியா எமிலியின் கவிதைகளையும் தொகுத்து வெளியிட முனைந்தார். அப்போது தொகுப்பாளரான மேபெல் அந்தப்பணியில் இணைந்து கொண்டார். அவர்கள் ஹிக்கின்சன் வழிகாட்டுதலின் படியே தொகுப்பை உருவாக்கினார்கள்.

எமிலியின் கடிதங்களில் குறிப்பிடப்பட்டது சூசனின் பெயரே என்று மேபல் பெண்களின் கூட்டமொன்றில் விளக்கிச் சொல்லும் உரையின் இடைவெட்டாக அவரது வாழ்க்கை வரலாறு வந்து போகிறது

எமிலியின் தனிமையையும் அவர் கவிதைகள் மீது கொண்டிருந்த ஈடுபாட்டினையும் .சூசனோடு கொண்ட  காதலின் பித்தினையும் படம்  அழகாகச் சித்தரித்துள்ளது. சூசனும் எமிலியும் படுக்கையில் நெருக்கமாக இருந்தபடியே கவிதைகளைப் பற்றிப் பேசும் காட்சி சிறப்பானது.

Figuring என்ற Maria Popova எழுதிய நூலில் இந்தக் காதல் உறவு மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு காட்சியில் எமிலி டிக்கன்ஸ்ன் தனது உடைகளுக்குள் இருந்து ஒரு கவிதையை எடுத்துத் தருகிறார். தலைமுடிக்குள் வைத்திருந்த இன்னொரு கவிதையை எடுத்து நீட்டுகிறார். அவரது உடல் தான் அவரது கவிதை என்பது போலவே அந்தக் காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.

A Quiet Passion எமிலியின் மௌனத்தைக் காட்சிப்படுத்தியது என்றால் இந்தப்படம் எமிலின் கொந்தளிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இரண்டிலும் எமிலியின் ஆளுமை விசித்திரமாகவே இருக்கிறது.

••

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: