புதிய குறுங்கதை
அவன் கையிலிருந்தது இருமொழிப்புத்தகம். அவனுக்கு அந்த இரண்டு மொழிகளும் தெரியாது. ஆனாலும் அப்புத்தகத்தை அவன் ஆசையாக வைத்திருக்கிறான். அடிக்கடி புரட்டிப் பார்க்கிறான். அது ஒரு கவிதைத் தொகுதி என்பதை வடிவத்தை வைத்துத் தெரிந்து கொண்டான்.

ஒரு பக்கம் கவிஞனின் மூலமொழியிலும் மறுபக்கம் மொழியாக்கம் செய்யப்பட்ட மொழியிலும் அச்சிடப்பட்டிருந்தது.
அவனைப் போன்றவர்களுக்கு இருபுறமும் தெரிவது சொல்வடிவு கொண்ட கோடுகளே. கிழே கிடந்த கூழாங்கல்லை கையில் எடுத்து உருட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் போல மொழி அறியாத சொற்களுக்கு அவனே பொருள் தருகிறான். அதைத் தனது இஷ்டம் போல உச்சரித்துக் கொள்கிறான்..
உண்மையில் அவன் முன்னே இருப்பது மௌனத்தின் வரிசை. அந்த மௌனத்தைப் பல நேரம் அப்படியே விழுங்கிக் கொள்கிறான். சில நேரம் தனக்குப் பிடித்த சொல்லாக்கி விளையாடுகிறான். கவிதை எழுதுவது என்பதே இருமொழி விளையாட்டு தானே.
தாய்மொழி தவிர வேறு அறியாதவனுக்கு உலகின் எல்லா மொழிச்சொற்களும் அழகான கோட்டுருவங்களே.
அந்த நூலை அவன் ஒரு பழைய புத்தகக் கடையில் பத்து ரூபாயிற்கு வாங்கினான். கடைக்காரனுக்கும் அது என்ன புத்தகம் என்று தெரியாது. ஆனால் ஒரு வெளிநாட்டுக்காரன் லாட்ஜில் விட்டுப் போன புத்தகம் என்று மட்டும் தெரிந்திருந்த்து. வெளிநாட்டுக்காரன் படித்த புத்தகம் என்பதாலே அதன் விலை அதிகம்.
மொழி அறியாத புத்தகத்தை வாங்கும் போது அது ஒரு சிற்பம் போலாகி விடுகிறது. சிற்பத்தை நாம் விரும்பியபடி ரசிக்கலாம். பொருள் கொள்ளலாம்.

வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது அந்தப் புத்தகத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. எந்தப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தாலும் ஒரே மௌனம் தானே. ஆயினும் முதற்பக்க மௌனமும் கடைசிப்பக்க மௌனமும் ஒன்றாக இருக்காதே. அவன் மனதில் ஒரு எண்ணை நினைத்துக் கொண்டு அந்தப் பக்கத்தைப் புரட்டினான். முப்பத்தி நான்காவது மௌனம் என்பது அவனுக்குப் பிடித்திருந்தது.
அந்தப் பக்கத்தில் ஒரேயொரு தமிழ் சொல்லை எழுதினால் போதும் மௌனம் கலைந்துவிடும். ஆனால் அப்படிச் செய்ய அவன் விரும்பவில்லை.
பள்ளிப் படிப்போடு அவனது கல்வி முடிந்துவிட்டது. ஆயினும் அவன் நூலகத்திற்குச் சென்று விருப்பமான புத்தகங்களைப் படித்தான் முப்பது நாற்பது புத்தகங்களுக்கும் மேலாக விலைக்கு வாங்கியும் வைத்திருக்கிறான். குளத்தில் நீந்திக் குளிக்கும் போது உடல் எடையற்றுப் போவது போலவே வாசிக்கும் போதும் உடல் எடையற்றுப் போய்விடுகிறது என்பதை உணர்ந்திருந்தான்.
அவனிடமிருந்த ஒரே இருமொழிப் புத்தகம் அது மட்டுமே. இரண்டு அறியாத மொழிச் சொற்களில் எந்த இருசொற்கள் போலிக்கிறது என்று தேடிப்பார்த்து விளையாடுவான்.
புத்தகத்தைக் கையில் கொண்டு செல்லும் போது இரண்டுதேசங்களைச் சுமந்து செல்வது போல உணருவான். சில வேளைகளில் அவனுக்கு இருமொழிப் புத்தகம் படிப்பது போலவே நம்மைச் சுற்றிய இயற்கையை உணருகிறோம் என்றும் தோன்றியது.
இரண்டு மொழிகளின் மௌனம் ஒன்று போல இருக்காது என்று நினைத்தான். ஆனால் அதை யாரிடமும் சொல்ல அவன் விரும்பவில்லை.