வேட்டையை வரைவதென்பது மனிதர்கள் குகையில் வசித்த காலத்திலிருந்து உருவான பழக்கம். குகை ஓவியங்களில் விலங்குகளே பிரதானமாக வரையப்பட்டிருக்கின்றன. மான் கூட்டத்தை அல்லது எருதை நேர் நின்று வேட்டையாடும் காட்சிகள் அதிகம் வரையப்பட்டிருக்கின்றன. இவற்றில் விலங்கிற்கும் மனிதனுக்குமான இடைவெளியை வரைந்தது முக்கியமானது. வேட்டையாடுபவர்களின் உடல்மொழி அழகாக வரையப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஓவியர்கள் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து விலங்குகளை வரைவதிலும், வேட்டைக்காட்சிகளை வரைவதிலும் ஆர்வம் காட்டினார்கள். இது தனித்த வகைமையாக வளர்ச்சி அடைந்தது. வேட்டைக்காட்சி ஓவியங்கள் அரசர்கள் மற்றும் பிரபுக்களின் வனமாளிகைச் சுவரை அலங்கரித்தன.
ஓவியர் பீட்டர் பால் ரூபன்ஸ்(Peter Paul Rubens) விலங்குகளை வரைவதில் திறமையானவர். குதிரைகள், சிங்கங்கள், நீர்யானைகள் மற்றும் முதலைகளை ரூபன்ஸ் சிறப்பாக வரைந்திருக்கிறார். அதன் துல்லியமும் வண்ணங்களும் வியப்பளிக்கின்றன. 1616 ஆம் ஆண்டில், பவேரியாவின் இளவரசர் மாக்சிமிலியன் நான்கு வேட்டை ஓவியங்களை வரைந்து தரும்படி ரூபன்ஸை பணித்தார். அந்த ஓவியங்களில் வேட்டை மிகவும் ஆவேசமாகவும் போர்க்களத்தின் உன்மத்தம் கொண்டதாகவும் காணப்படுகின்றன. சிங்கம் வீழ்ந்து பாய்வது உயிரோட்டத்துடன் வரையப்பட்டிருக்கிறது.

பதினைந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்த பிளெமிஷ் ஓவியர் பிரான்ஸ் ஸ்னிஜ்டர்ஸ்(Frans Snijders) சந்தைக்காட்சிகளையும், வேட்டையினையும் வரைவதில் தனித்துவமானவர். அறுபதுக்கும் மேற்பட்ட வேட்டை ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவர் வேட்டைக் காட்சியில் இருந்து மனிதனை விலக்கி வரைந்திருக்கிறார்.
இவரது புகழ்பெற்ற காட்டுப்பன்றி வேட்டை ஓவியத்தில் பன்றியைத் தாக்கும் நாய்களின் ஆவேசத்தையும் பன்றியின் கண்களில் வெளிப்படும் வேதனையினையும் காண முடிகிறது.

நாயின் வண்ணமும் அது உடலை வளைத்து இரையைக் கவ்வ முயற்சிக்கும் விதமும் அபாரமான அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. நாயின் பற்கள் மற்றும் ஒளிரும் கண்கள் நம்மை ஈர்க்கின்றன. பன்றிவேட்டையின் பின்புலமாக வரையப்பட்ட இருண்ட மேகங்களும் மரத்தின் சலனமற்ற இலைகளும் மயக்கமூட்டுகின்றன. கழுத்துப்பட்டி அணிந்த இந்த நாய்கள் வேட்டைக்காரனால் அழைத்து வரப்பட்டவை. ஓவியத்தில் வேட்டைக்காரன் இடம்பெறவில்லை. ஆனால் அவனே நாய்களை ஏவிப் பன்றியை வேட்டையாடுகிறான்.
இதே காலகட்டத்தில் வரையப்பட்ட முகலாய மன்னர்களின் வேட்டைக்காட்சிகளுடன் பிரான்ஸ் ஸ்னிஜ்டர்ஸ் ஓவியங்களையும் ஒப்பிடும் போது அவரது சிறப்பை புரிந்து கொள்வதுடன் முகலாய ஓவியங்களின் தனித்துவத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது.
வேட்டையாடுதல் முகலாய மன்னர்களின் முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. இவை போர்க்களத்தில் எதிரியைக் குறிவைப்பதற்குப் பயிற்சி களமாகக் கருதப்பட்டது. ஆகவே பாபர் முதல் தாரா ஷிகோ வரை வேட்டையாடுவதில் ஆர்வமாகப் பங்கேற்றார்கள். ஓளரங்கசீப் விலங்குகளை வேட்டையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர் மனிதர்களைத் துரத்தி துரத்தி வேட்டையாடினார் என்பது வேறு கதை.

வேறுவேறு காலகட்டங்களில் வயைரப்பட்ட முகலாய மன்னர்களின் வேட்டை ஓவியங்களில் சில பொதுத்தன்மைகளைக் காண முடிகிறது. பொதுவாக வேட்டைக்களம் அடர்ந்த காட்டுப்பகுதியாக அல்லாமல் நீர்நிலைக்கு அருகே அமைந்திருக்கிறது. விலங்குகள் ஒன்று கூடும் இடமாகக் காணப்படுகிறது. வளர்ப்பு மிருகங்களைக் கொண்டு வேட்டையை நிகழ்த்தியிருக்கிறார்கள். காலனிய ஓவியங்களில் காணப்படுவது போல அதிகமான ஆட்களோ, ஆயுதங்களோ முகலாய ஓவியத்தில் காணப்படவில்லை.

மன்னர் வேட்டைக்கு வருவதற்கு முன்பாக ஷிகாரிகள் காட்டிற்குள் வந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். இதனை விவரிக்கும் ஓவியத்தில் ஷிகாரி இருவரும் பச்சை வண்ண உடை அணிந்திருக்கிறார்கள். இலைகளைக் கொண்டு தன்னை மறைத்தபடியே ஒளிந்திருக்கிறார்கள். அவர்கள் அருகே மான்களின் நடமாட்டம் காணப்படுகிறது. தொலைவில் யானையில் மன்னர் வருவதும் உடன் வேட்டையாடிகள் வருவதும் சித்தரிக்கபட்டுள்ளது.
பிரான்ஸ் ஸ்னிஜ்டர்ஸின் ஓவியத்திலுள்ள நாயின் ஆவேசத்தையும் முகலாய வேட்டை நாய்களின் வேகத்தையும் பார்க்கும் போது பிரான்ஸ் ஸ்னிஜ்டர்ஸின் தூரிகை வீச்சு வியப்பளிக்கிறது.



முகலாய வேட்டைக்காட்சியில் மான்கள் வியப்பூட்டும் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அதன் கண்களைப் பாருங்கள். தனியழகு கொண்டிருக்கிறது. அது போலவே மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட காளையின் கண்கள். பதுங்கியிருக்கும் முயல்கள். வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் யானையின் கம்பீரம். அது சிங்கத்தைத் தாக்கும் வேகம். ஓவியத்தினுள் காணப்படும் இயக்கம் வேட்டையின் வேகத்தை உணர்த்துகின்றன.
ஜஹாங்கீர் வேட்டையாடும் ஓவியம் ஒன்றில் சிறுத்தையின் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அது பழக்கப்படுத்தபட்ட சிறுத்தை, அதைக் கொண்டு மான்வேட்டையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
காட்டுவிலங்குகளைப் பிடித்து வந்து பழக்கி அவற்றை வேட்டைக்கு அழைத்துச் செல்வது அன்றைய வழக்கம்.

ஜஹாங்கீர் தனது பனிரெண்டு வயது முதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள். அவர் வனவேட்டைக்காகவே லாகூரை அடுத்தக் காட்டில் ஹிரன் மினார் என்று மாளிகை ஒன்றை கட்டியிருக்கிறார். தனது வளர்ப்பு மானின் நினைவாக அந்தப் பெயரை வைத்துள்ளார்.
ஜஹாங்கீர் தனது பத்து வயதில் போர்களத்திற்கு அனுப்பபட்டார். அங்கே அவரது விளையாட்டுத் தோழனாக ஒரு மான் இருந்தது. அதை ஒருமுறை எதிரிகள் பிடித்துக் கொண்டு போய்விடவே தனி ஒருவராக எதிரியின் முகாமுக்குள் நுழைந்து மானைக் காப்பாற்றியிருக்கிறார். அவ்வளவு ஆசையாக வளர்ந்த மான் இறந்து போகவே அதன் நினைவாக வனமாளிகைக்கு ஹிரன் மினார் எனப் பெயரிட்டார் என்கிறார்கள் .

அக்பர் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் காட்டிலிருந்து பிடித்து வரப்பட்டுப் பழக்கப்பட்டிருக்கின்றன. இதற்கென தனி வளாகம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கே சிறுத்தைகளைப் பழக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஊழியர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். அக்பர் தனது செல்லபிராணியான சிறுத்தைக்கு மதன்காளி என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
பள்ளம் தோண்டிப் பிடிக்கும் போது குழிக்குள் விழும் சிறுத்தையின் கால்கள் முறிந்துவிடக்கூடும் என்பதால் அதற்கு மாற்றான பொறிக்கதவு ஒன்றை அக்பர் உருவாக்கியிருக்கிறார்.
பிடிபட்ட சிறுத்தைகளுக்குக் கழுத்துப்பட்டி அணிவிக்கபடுவதுடன் அதற்குச் சிறப்புப் பெயரும் சூட்டியிருக்கிறார்கள். பிடிபட்ட சிறுத்தைகளை எட்டுவகையாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சிறுத்தைகள் இணை சேர அனுமதிக்கபடுவதில்லை.
சிறுத்தைகளுக்கு மூன்று மாதகாலம் பயிற்சி அளிக்கபடுவதுண்டு. இதற்கெனப் சிறப்புப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பயிற்சிகளை அக்பரே நேரில் பார்வையிடுவார் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஜஹாங்கீர் காலத்தில் தான் வரிக்குதிரை அறிமுகமாகியிருக்கிறது. அதை ஓவியர் மன்சூர் அழகாக வரைந்திருக்கிறார்
பெர்சியாவிலிருந்து ஓவியர்கள் மீர் சயீத் அலி மற்றும் அப்த் அஸ்-சமத் ஆகியோரை ஹுமாயூன் மீண்டும் தனது அரண்மனைக்கு அழைத்து வந்தார். அவர்கள் அரண்மனை ஓவியர்களாக நியமிக்கபட்டார்கள்.
ஷெர்ஷாவின் மரணத்திற்குப் பிறகு புராணகிலா கோட்டையைக் கைப்பற்றிய ஹுமாயூன், ஷேர் மண்டலை தனது நூலகமாகவும் வானவியல் கண்காணிப்பகமாகவும் மாற்றினார். அரண்மனையில் செலவிட்ட நேரத்தினை விடவும் இந்த நூலகத்திலே ஹுமாயூன் அதிகம் நேரம் செலவிட்டார். அன்றாடம் வானவியல் அறிஞர்களுடன் உரையாடினார்.

ஜனவரி 24, 1556 அன்று மாலை தனது நூலகத்தில் மன்னர் ஹுமாயூன் அறிஞர் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார், பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என எழுந்து படிக்கட்டுகளில் இறங்கியபோது தடுமாறி கீழே விழுந்தார். அதில் அவரது மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தபெருக்கானது. ஜனவரி 26, 1556 அன்று ஹுமாயூன் காலமானார். பெரும் யுத்தகளங்களைக் கண்டு உயிர் பிழைத்த ஹுமாயூன் நூலகத்தின் படிக்கட்டில் விழுந்து இறந்து போனது புதிரானதே
அக்பர் அரியணைக்கு வந்தபோது அவரது வயது பதின்மூன்று. அவர் மரபுரிமையாகப் பெற்ற கிதாப்கானா எனும் நூலகம் மிகப்பெரியது. தனது போர் வெற்றிகளின் மூலம் பெறப்பட்ட ஏராளமான புத்தகங்களை அங்கே சேர்த்து வைத்திருந்தார்.
அக்பர் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்த போதிலும், புத்தகங்கள் மற்றும் ஓவியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவரிடம் இருபத்தைந்தாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் கொண்ட நூலகம் இருந்தது. அவை துறை வாரியாகப் பட்டியலிடப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.
அன்றாடம் புத்தகம் வாசிக்கச் சொல்லி கேட்பது அவரது வழக்கம். அறிஞர்கள் கொண்டு வந்து படிக்கும் புத்தகங்களை ஆரம்பம் முதல் இறுதி வரை ஆர்வத்துடன் கேட்பார் என அயின்-இ-அக்பரி குறிப்பிடுகிறது.

முகலாயப் பேரரசர்கள் ஏன் வேட்டையாடுவதை ஒவியமாக வரைந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வேட்டையாடுவது அரசனின் கடமையாகக் கருதப்பட்டது. இளவரசர் மற்றும் இளவரசிகளுக்குப் போர் பயிற்சி தரும் போது அதில் வேட்டையும் ஒரு பகுதியாகக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது.
பாபரும் அக்பரும் ஜஹாங்கீரும் தாங்கள் நிகரற்ற ஆட்சியாளர்கள் மற்றும் அஞ்சாத வீரர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காக வன வேட்டையை ஓவியம் வரையச் செய்திருக்கிறார்கள்.

வேட்டையாடுதல் என்பது அச்சுறுத்தும் எதிரிகளைக் கட்டுப்படுத்துவதன் அடையாளம். பேரரசரின் வலிமை மற்றும் திறனை வெளிப்படுத்தும் செயலாகக் கருதப்பட்டது. வேட்டையாடுதல் என்பது சமூகப் படிநிலை மற்றும் அரசியல் வலைப்பின்னல் கொண்ட திறந்த வெளி நாடகம் என்றே சொல்ல வேண்டும். யார் யாரெல்லாம் மன்னருடன் வேட்டைக்கு வர வேண்டும். வேட்டையாடிய மிருகங்களை யார் கொண்டு செல்வது. முகாம் அமைப்பது எவர் பொறுப்பு. எந்த நாளில் வேட்டை துவங்குவது என்பதை விரிவாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜஹாங்கீர் தனது தாயிற்குச் செய்து கொடுத்த சத்தியம் காரணமாக வெள்ளிக்கிழமை வேட்டையாட மாட்டார் என்கிறது ஜஹாங்கீர் நாமா.
மன்னரின் வேட்டையில் ஒரு விலங்கு தப்பிச் சென்றுவிட்டால் அது மோசமான சகுனமாகக் கருதப்பட்டது. மன்னருக்கு தீங்கு வரப்போவதன் அடையாளமாக அதைக் கருதுவார்கள். ஆகவே அதற்குப் பரிகாரங்கள் செய்யப்படுவதும் உண்டு.
அக்பரை போல ஜஹாங்கீர் தனது வேட்டைக்காட்சி ஓவியங்களில் விலங்குகளின் ஓட்டத்தையோ, தாக்குதலையோ முதன்மைப்படுத்தவில்லை. அவர் வேட்டையாடும் மனிதர்களின் முகபாவங்களை, விலங்குகளின் முகபாவங்களையே துல்லியமாக வரையச் செய்திருக்கிறார்.

வேட்டையாட குதிரை மீது அமர்ந்திருக்கும் மன்னர் முகத்தில் ஆவேசமில்லை. அவர் தியானத்திலிருப்பவர் போல அமைதியாகக் காணப்படுகிறார்கள். வேட்டைக்காட்சிகளில் இயற்கையை வரையும் போது இயல்பாக வரைய வேண்டும் என்றிருக்கிறார்கள். ஆகவே முறிந்த மரங்களையோ, நசுங்கிய மலர்களையோ நாம் காண முடிவதில்லை.

ஜஹாங்கிருக்கு இயற்கையை அவதானிப்பதில் இருந்த பேரார்வம் அவற்றைச் சிறந்த ஓவியங்களாக வரையச் செய்திருக்கிறது. காஷ்மீரில் அவர் பார்த்த பூக்களின் அழகையும் அரிய பறவைகளையும் ஓவியமாக வரையச் செய்திருக்கிறார்.
போர்களக்காட்சியைப் போலவே வனவேட்டையை வரைந்திருக்கிறார்கள். அடர் சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்- போன்ற அடர்வண்ணங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். மரங்கள் மற்றும் செடிகளின் இலைகளை விநோத அழகுடன் வரைந்திருக்கிறார்கள். விலங்குகளின் உடற்கூறியியலை ஆராய்வதற்காக ஓவியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கபட்டிருக்கின்றன. வேட்டைக்களத்திற்கே ஓவியர்களை அழைத்துச் சென்றும் அவதானிக்கச் செய்திருக்கிறார்கள்.
ஒருமுறை ஜஹாங்கீருக்கு இரண்டு கொக்குகள் பரிசாக அளிக்கபட்டன. அதற்கு லைலா, மஜ்னு எனப் பெயரிட்டு தனது வளர்ப்பு பறவைகளாக வைத்துக் கொண்டார் . அவர் தர்பாருக்கு வரும் போது அந்தக் கொக்குகளும் உடன் வரும் என்கிறார்கள். இரண்டு கொக்குகளுடன் மன்னர் நடந்து வரும் காட்சியை நினைத்துப் பார்த்தேன். வேடிக்கையாக இருந்தது.
ஜஹாங்கீர் அரியணையில் அமர்ந்திருக்கும் ஓவியம் ஒன்றை மனோகர் மிக அழகாக வரைந்திருக்கிறார். அப்துஸ் சமத், மிர் சையது அலி, பஸ்வான். கேசு தாஸ். தஸ்வந்த் போன்ற ஒவியர்கள் வனவேட்டையை வரைந்திருக்கிறார்கள்.

மன்னருக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் பட்டியலில் பிஷந்தாஸ், மன்சூர் இருவரும் முக்கியமானவர்கள். பிஷந்தாஸ் அந்தப்புரக்காட்சிகளை வரைவதில் தனித்திறன் கொண்டிருந்தார். மன்சூர் விலங்குகள் பறவைகள் மற்றும் இயற்கை காட்சிகளைத் துல்லியமாக வரையக் கூடியவர். அவர் வரைந்துள்ள பருந்தின் ஓவியம் நிகரற்றது.

அக்பர் துப்பாக்கிகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிறந்த துப்பாக்கி தயாரிப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்திருந்தார்.
வெடிமருந்தினை நிரப்பிச் சுடும் “மேட்ச்லாக்” துப்பாக்கிகளே அன்று பயன்படுத்தபட்டன. வேட்டையாடுபவர் மரத்தின் கிளைகளில் ஒளிந்து கொண்டு விலங்குகளைத் துப்பாக்கியால் சுடுவதை ஓவியத்தில் காணமுடிகிறது.
அக்பரின் சொந்தத் துப்பாக்கி சங்கராம் என்று அழைக்கப்பட்டது. அவரது ஆயுதக் கிடங்கில் மிகப்பெரிய துப்பாக்கிகளை வைத்திருந்தார், அதில் ஒரு துப்பாக்கி “ஜஹாங்கீர்” என்று பெயரிடப்பட்டிருந்தது.
வேட்டையாடிய விலங்குகளை இறைச்சிக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். விலங்குகளின் தோலிலிருந்து விரிப்புகள், தோலாடைகள் செய்திருக்கிறார்கள்.

ஜஹாங்கீர் தனது வாழ்நாளில் 17167 விலங்குகளை வேட்டையாடிக் கொன்றிருக்கிறார் என்று துசுக்-இ-ஜஹாங்கிரியின் தொகுதி I குறிப்பிடுகிறது இதில் 1677 மான்கள். 889 காட்டெருமைகள். 86 சிங்கங்கள் 64 காண்டாமிருகங்கள்,13964 பறவைகள் பத்து முதலைகள் அடங்கும் .
முகலாய , ராஜஸ்தானிய, வட இந்திய ஓவியங்களில் காணப்படுவது போலச் சேர சோழ பாண்டிய மன்னர்களின் வேட்டைக்காட்சிகள் வரையப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவின் பல்வேறு கோவிற்சிற்பங்களில் புலிவேட்டை சித்தரிக்கபட்டிருக்கிறது. ஆனால் இப்படித் துப்பாக்கி ஏந்திய மன்னரின் ஓவியம் எதையும் தென்னிந்தியாவில் நான் கண்டதில்லை.
பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகு வேட்டைகாட்சிகள் அதிகம் வரையப்பட்டிருக்கின்றன. குறிப்பாகக் கவர்னர்கள். மற்றும் ஜமீன்தார்களின் வேட்டைக்காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டிருக்கின்றன.
கேமிரா அறிமுகப்பட்டதும் இதே வேட்டைக்காட்சிகளைப் புகைப்படமாக எடுத்திருக்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் வேட்டைபுகைப்படங்கள் நிறைய காணக்கிடைக்கின்றன.

டோடோ என்ற அழிந்துபோன பறவையை மன்சூரின் ஓவியத்தில் காண முடிகிறது. இன்று அந்தப் பறவையினம் இல்லை. சூரத்தில் இருந்த ஜஹாங்கீரின் மிருகக்காட்சிசாலையில் அவை வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.
மறதியெனும் இருளுக்குள் வரலாற்று உண்மைகள் மறைந்து போய் விடுகின்றன. ஆனால் கலை அவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன் வரலாற்று சாட்சியமாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றன.
முகலாய மன்னர்களின் அரசவை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கலைஞர்களை உள்ளடக்கியது. அவர்கள் வரைந்த ஓவியங்களில் இந்திய, பாரசீக மற்றும் மேற்கத்திய பாணிகளின் கலவையைக் காணமுடிகிறது.
இந்தப் பன்மைத்துவமும் புதிய வெளிப்பாட்டு முறைகளும் கலையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. முகலாய வேட்டைக்காட்சிகள் இவற்றின் சாட்சியமாக இருப்பதாலே இன்றும் பேசப்படுகின்றன.