கார்க்கியின் இசெர்கீல்

I never meet my lovers after I had left them. It would be bad to meet them – like meeting the dead – கார்க்கி

மாக்சிம் கார்க்கியின் (Maxim Gorky) தாய் நாவலை விடவும் அவரது சிறுகதைகளை எனக்கு அதிகம் பிடிக்கும். கார்க்கியின் வாழ்க்கை ஆலிவர் ஸ்டுவிட் கதாபாத்திரத்தினைப் போன்றது. டிக்கன்ஸின் நாவலில் வரும் அந்த சிறுவனைப் போலவே தான் வறுமையோடு போராடியபடி இளமையில் இருந்ததாக கார்க்கியே குறிப்பிடுகிறார்

சிறுவயதிலே பெற்றோரை இழந்து வறுமையால் வேலைக்குச் சென்ற கார்க்கி தன் வாழ்நாளில் செருப்புக்கடை, ரொட்டிக்கடை இரும்புப் பட்டறை சமையற்காரன், திருடன். பூட்டு சரிசெய்கின்றவன். பழக்கடைக்காரன். பிச்சைக்காரன். துணிக்கடையாள்.  மீன்பிடிப்பவன், ரயில்ரோடு போடுகின்றவன், உப்புக் காய்ச்சுகின்றவன் என்று முப்பதுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்திருக்கிறார். அத்தனையும் அடிதட்டு உலகைச் சேர்ந்தவை.

ஆகவே அவரது கதையுலகம் பெரும்பாலும் எளிய மனிதர்களின் தினசரி வாழ்வையே பேசுகின்றது. மாக்சிம் கார்க்கி ஒரு தேர்ந்த கதைசொல்லி. ஜிப்சிகளைப் போல அவர் அறிந்த உலகை கதைகளின் வழியே பகிர்ந்து கொள்கிறார்.

வறுமையால் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க முடியாமல் போன கார்க்கி தானே இலக்கியங்களை கற்றுக் கொண்டார்.  எழுதவும் துவங்கினார். எழுத்தாளனாக விரும்பிய முயற்சிகளுக்கு ஆரம்ப நாட்களில் பெரிய வரவேற்பு கிடைக்கவேயில்லை. மனம் உடைந்து ஒரு முறை தற்கொலை முயற்சி கூட செய்து பார்த்தார். ஆனால் பிழைத்து கொண்டார். ஒவ்வொரு மனிதனின் பிறப்பிற்கும் ஏதோவொரு உயர்வான காரணமிருக்கிறது என்பதை அன்று தான் உண்மையாக உணரத் துவங்கினேன் எனும் கார்க்கி தொடர்ந்து தனது வாழ்க்கை அனுபவங்களை கதைகளாக எழுத்த் துவங்கினார்.

அத்தோடு வேலை தேடி ருஷ்யா முழுவதும் தொடர்ந்து சுற்றியலைந்து கொண்டுமிருந்தார். கசாக்கிய கிராமம் ஒன்றில் சில மாதங்கள் கூலித் தொழிலாளியாக பணியாற்றினார். மால்டா பிரதேசத்தின் விவசாய பண்ணையில் வேலை செய்திருக்கிறார். அந்த நாட்களில் தான் ஜிப்சிகள் மற்றும் நாடோடி இனக்குழுவினர்களுடன் நேரடியான பரிச்சயமும் அனுபவங்களும் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்யப் புரட்சி காலத்தில் நேரடியான அரசியல் மாற்றங்களுடன் தொடர்பு கொண்டதால் அவர் கைது செய்யபடும் சூழல் உருவானது. புரட்சிக்கான நிதி திரட்டுவதற்காக அவர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார்.

கார்க்கியின் எழுத்து பெரிதும் சமூக அக்கறை சார்ந்ததாகவே இருந்தது. ஸ்டாலின் அரசால் அரசியல் காரணங்களுக்காக எழுத்தாளர்கள்  காரணமில்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்ட காலங்களில் அவர்களை விடுவிக்க சொல்லி கார்க்கி எழுதிய கடிதங்களைக் காணமுடிகிறது. அதில் கார்க்கி மீது அரசிற்கு இருந்த நன்மதிப்பும் அவரை ஒரு கலாச்சார நாயகன் போல ரஷ்ய மக்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருந்ததையும்  அறிந்து கொள்ள முடிகிறது.

கார்க்கி தனது பயணத்தின் ஊடாக நிறைய காதல் அனுபவங்களை கொண்டிருந்தார். அவரது காதல்கதைகளை அவர் விவரித்து கேட்பது வேடிக்கையாக இருக்கும் என்று செகாவ் குறிப்பிடுகிறார். கார்க்கி தனது முன்னோடி படைப்பாளியாக டால்ஸ்டாயை குறிப்பிடுகிறார். அவரை தேடி சென்று சந்தித்து உரையாடியதோடு தனது பயண அனுபவங்களை விவரித்திருக்கிறார். செகாவின் மீதும் கார்க்கிக்கு தனிப்பட்ட அன்பிருந்திருக்கிறது. இருவரும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்

கார்க்கியின் எழுத்துகளில் தஸ்தாயெவ்ஸ்கியின் பாதிப்பு இருப்பதையும் காணமுடிகிறது.

அர்தமனோவ் நாவலை தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் போலவே தானிருக்கிறது.

கார்க்கியின் கதைகளில் அதிகம் வயதானவர்களும் குழந்தைகளுமே வருகிறார்கள். அவர்கள் தங்களது கடந்த காலத்துயரை பரிகாசத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தனிமையும் புறக்கணிப்புமே பசியின் துரத்துதலால் உருவான அவமானங்களும்  அவர்களது முக்கியப் பிரச்சனைகளாக இருந்தன. அன்றாட வாழ்விற்கான போராட்டத்தில் மனிதர்கள் தங்கள் சுய இயல்பை மறந்துவிடுகிறார்கள். அவர்களை ஆறுதல்படுத்தும் ஒரேயொரு அம்சம் காதல் மட்டுமே. பெண்களின் வசீகரத்தால் மட்டுமே உலகம் தன் இயல்பை கைவிடாமல் இருக்கிறது என்று கார்க்கியின் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது.

அதை நிஜமாக்குவது போல அவரது இருபத்தியாறு பேரும் ஒரு அழகியும் என்ற சிறுகதை விவரிக்கிறது. ஒரு ரொட்டிக்கடையில்  வேலை செய்யும் இருபத்தியாறு இளைஞர்கள் சாலையைக் கடந்து செல்லும் ஒரு அழகியை தினமும் சந்திக்கிறார்கள். அவளின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். அவளை மானசீகமாக்க் காதலிக்கிறார்கள். அவள் இந்தக் காதலைப்பற்றி அறிந்து கொள்ளவேயில்லை. ஆனால் கடினமான, இருட்டடைந்து மூச்சுமுட்டும் தங்கள் தினசரி உழைப்பின் நடுவில் அவர்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அந்த அழகியின் வருகை அவசியமாகிறது. அவளை ஒரு தேவதை போலவே அவர்கள் நினைக்கிறார்கள். அந்த பெண்ணைப் பற்றி நிறைய கனவு காண்கிறார்கள். கார்க்கியின் முக்கியமான காதல்கதையது.

அது போலவே அவரது நான் பயின்ற பல்கலைகழகம் நூலில் செருப்புக்கடையில் வேலை பார்த்த போது ஒரு பெண் தினமும் கடைக்கு வந்து விதவிதமான செருப்புகளை தொட்டு பார்த்து ஆதங்கப்பட்டு  செல்வதையும். கடைத்தெருவில் உள்ள பிச்சைக்காரர்களின் உலகைப்பற்றியும், பாலியல்தொழிலாளிகளின் இருண்ட உலகையும் பற்றி மிக நுட்பமாக எழுதியிருக்கிறார்

.ஒரு நாவலை படிப்பதைவிடவும் இந்த கட்டுரைகள் மிக சுவாரஸ்யமாக வாழ்வை  அடையாளம் காட்டுகிறது. வாழ்க்கையின் அடர்த்தியை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் அவசியம் இதை ஒரு முறை வாசிக்க வேண்டும்.

கார்க்கி கதைகளில் கதைகள் பெரும்பாலும் ஒற்றை மையம் கொண்டவையல்ல. இரண்டோ மூன்றோ கதைகள் ஒன்று சேர்ந்து ஒரு கதையை உருவாக்கியது போல தான் அவரது சிறுகதைகள் இருக்கின்றன. கதையின் தனித்துவம் அவரது கதாபாத்திரங்கள்.  அவர்கள் தனித்துவமானவர்கள். கார்க்கி அவர்களை சொற்களில் மிக துல்லியமாக உருவாக்கி காட்டிவிடக்கூடியவர்.

கார்க்கியின் கதைகளில் கிழவி இசெர்கீல் (The Old Woman Izergil) என்ற சிறுகதையை பலமுறை படித்திருக்கிறேன். கொண்டாடப்பட வேண்டிய ருஷ்ய கதைகளில் ஒன்று. இந்தக் கதை வழக்கமான கார்க்கியின் கதைகளில் இருந்து பெரிதும் மாறுபட்டது.

ஆராயிரத்து ஒரு அற்புத இரவுகளில் வரும் கதை சொல்லும் பாணியில் அமைந்த சிறுகதையிது. ஒரு கதையில் துவங்கிய மற்றொரு கதைக்குச் சென்று அதன் ஊடாக சுய அனுபவம் கலக்கும் விந்தை இக்கதையில் சாத்தியமாகியுள்ளது.

பெசராபியாவில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்த கார்க்கி அன்றாட வேலைக்குப் பிறகு தனது உரிமையாளர் கடற்கரைப் பகுதிக்கு உல்லாசமாகச் சென்றதால் திராட்சை தோட்டத்தில் ஒரு இரவைக் கழிக்கிறார். அவருடன் இசெர்கீல் என்ற ஒரு கிழவி துணையாக இருக்கிறாள். அவள் நீ ஏன் அந்த குழுவோடு நடனமாடப் போகவில்லை என்று கேட்கிறாள்.

தனக்கு களியாட்டங்கள் பிடிக்கவில்லை என்று கார்க்கி சொன்னதும் அவள் இரவின் தனிமையைப் போக்கி கொள்ள தனக்குத் தெரிந்த கதைகளை அவனோடு பகிர்ந்து கொள்கிறாள். அதில் ஒன்று அவளது கதை. இசெர்கீல் கதை மூன்று மாறுபட்ட கதைகளின் தொகுப்பு. மூன்றுமே ஸ்டெப்பியில் வாழ்ந்த ஜிப்சிகளின் பூர்வகதைகளைப் போலவே சொல்லப்படுகிறது. மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களின் வழியே கார்க்கி மனித சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் வாழ்வின் உன்னதமான தருணங்களைக்  குறித்து பேசுகிறார்.

பரந்துவிரிந்த ஸ்டெப்பியை இரவு மூடிக் கொண்டிருக்கிறது. அங்கே நிழல் போல இருள் அசைந்து அசைந்து போகிறது. அது வெறும் நிழல் இல்லை  லாரா தான் நடந்து போகிறான் என்று அடையாளம் காட்டுகிறாள் கிழவி. அப்படி யாரையும் தனக்கு தெரியவில்லை.  நிழல் மட்டுமே அசைந்து போகிறது என்கிறான் கதை கேட்பவன். அந்த நிழல் தான் லாரா. அவன் ஒரு சாபத்தால் இப்படி அலைந்து கொண்டேயிருக்கிறான். அவனால் நிம்மதியாக இருக்கவே முடியாது என்று உறுதியாகச் சொல்கிறாள் இசெர்கீல். யார் லாரா என்ற கேட்டதற்கு அவனைப் பற்றிய கதையைச் சொல்லத் துவங்குகிறாள்.

பல ஆயிரம் வருசத்தின் முன்பு ஒரு கழுகு வானிலிருந்து பறந்துவந்து ஸ்டெப்பியில் உள்ள அழகான இளம்பெண் ஒருத்தியைத் தூக்கி கொண்டு போய்விடுகிறது. அதை வீரர்கள் அம்பு எய்ந்து தடுக்க முயன்ற போது அக்கழுகு தப்பி போய்விடுகிறது. அதன்பின்னால் அந்தப் பெண்ணை ஊர்க்காரர்கள் மறந்துவிடுகிறார்கள்.

இருபது வருசத்தின் பிறகு அந்த பெண் கழுகிற்கும் தனக்கும் பிறந்த மகனான லாராக் கூட்டிக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறாள். காலம் அவள் அழகை மாற்றவேயில்லை. தான் கழுகைத் திருமணம் செய்து கொண்டு மலையின் உச்சியில் வாழ்ந்து வந்ததாக அவள் உறவினர்களிடம் குறிப்பிடுகிறாள். லாரா  கழுகின் உக்கிரமான குணங்களை.  மூர்க்கத்தைக் கொண்டிருக்கிறான்.

ஸ்டெப்பியில் வாசிக்கும் தாயின் இனக்குழுவோடு லாரா சேர்ந்து வாழ மறுக்கிறான். மனம் போன போக்கில் அலைந்து கொண்டு எந்த நியாய தர்மத்திற்கும் கட்டுப்பட மறுக்கிறான். பெண்களை பலவந்தமாக அடைய முயற்சிப்பது. வம்புச் சண்டையிடுவது என்று அவனது குற்றங்கள் பெருகுகின்றன. அவனை எப்படி தண்டிப்பது என்று இனமே கூடி விவாதிக்கிறது. லாரா எந்த தண்டனையாலும் திருந்திவிட மாட்டான் என்றே நினைக்கிறார்கள். ஆகவே அவன் சாவேயில்லாமல் தனித்து அலைந்து கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.

அது தான் லாராவின் தண்டனை. அன்றிலிருந்து லாரா மரணமேயில்லாமல் காற்றில் தனி ஆளாக அலைந்து கொண்டேயிருக்கிறான். முடிவில்லாத தனிமையின் அடையாளமாகயிருக்கிறான் லாரா. அது அவனை வேதனைப்படுத்துகிறது. உண்மையில் லாரா சாக விரும்புகிறான். ஆனால் அது அவனால் இயலாது. ஆகவே மரணமில்லாத இருப்பை வெறுத்தபடியே லஸ்டெப்பியில் அலைந்து கொண்டிருக்கிறான் என்று அவன் கதையை சொல்கிறாள் இசர்கீல்

இந்த கதை அப்படியே மகாபாரத்தில் வரும் அஸ்வத்தமாவின் கதையை நினைவுபடுத்துகிறது. அஸ்வத்தமா யுத்த முடிவில் இது போன்று சாவே இல்லாமல் தனித்து அலையும்படியாக சாபமிடப்படுகிறான். அவன் நேசித்த தந்தை நண்பர்கள் என அத்தனை பேரும் இறந்து போய்விட்டார்கள். ஆனால் பாண்டவர்களின் வாரிசுகளைக் கொன்ற குற்றத்திற்காக அஸ்வத்தமா மட்டும் காலம் காலமாக காற்றில் அலைந்து கொண்டேயிருக்கிறான். லாராவின் இருப்பும் அஸ்வத்தமாவின் இருப்பும் ஒன்று போலவே உள்ளது.

இன்னொரு தளத்தில் ஒரு இளம்பெண்ணைக் கழுகு தூக்கி சென்றுவிட்டது என்பது நிஜமான கழுகு இல்லை. அது ஒரு நாடோடி இனம். கழுகு அந்த இனத்தின் அடையாளச் சின்னம். அழகான இளம்பெண்களை நாடோடி இனக்குழுவினர் தூக்கிப் போய் திருமணம் செய்து கொள்வது வழக்கம். அப்படி தான் ஸ்டெப்பி புல்வெளியில் வாழ்ந்த ஒரு பெண்ணை ஒரு நாடோடித் தலைவன் தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்து கொண்டுவிடுகிறான்.

அவனது மகன் தான் லாரா. அவன் திரும்பி வந்த போது தாயின் இனக்குழு அவனை தங்களோடு சேர்த்துக் கொள்ள மறுக்கிறது. அவனுக்கும் அது தனது இனமில்லை என்ற கோபமிருக்கிறது. ஆகவே அவன் அதன் சட்டதிட்டங்களை மீறி குற்றம் புரியத் துவங்குகிறான். ஆகவே தங்கள் வழிவந்த பெண்ணின் மகன் என்று அவனை கொல்லமறுத்துவிட்டுவிடுகிறார்கள். லாராவை சுதந்திரமான கட்டுபாடற்ற மனப்போக்கின்  அடையாளமாகவும் எடுத்து கொள்ளலாம்.

இந்த மனப்பாங்கின் இன்னொரு பிம்பம் போலவே கிழவி இசெர்கீலின் கதையிருக்கிறது. அவள் அடிமை;g பெண்களில் ஒருத்தியாக பிறந்தவள். ஆனால் ஒரு போதும் அவள் அடிமையாக வாழவில்லை. சுதந்திர வேட்கையில் அவள் ஒவ்வொரு இடமாக மாறிமாறி அலைவுறுகிறாள் . இசெர்கீல் நிறைய ஆண்களைக் காதலித்திருக்கிறாள். ஆனால் எந்த ஆணோடும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கவில்லை.

ஆண்களால் முத்தமிடவும் கொஞ்சிப் பேசவும் மட்டுமே முடியும். பெரும்பான்மை ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காகவே பெண்களைக் காதலிக்கிறார்கள் , அதற்கு உடலின்பமே முக்கிய காரணம் தன்னைக் காதலித்த போலந்தை சேர்ந்த ஒருவன் காதல்வசப்பட்ட போது இனிமையான சொற்களை பேசுவான் அதுவே உடல் உறவு முடிந்த பிறகு வாய்கூசாமல் திட்டுவான் அவன் ஒரு கோழை. ஆனால் வீரமானவன் போல கத்துவான் என்கிறாள்.

அவனை ஒரு நாள் இசெர்கீல் மிரட்டி ஆற்றில் தள்ளிவிட்டு அவன் தத்தளிப்பதை வேடிக்கை பார்க்கிறாள். அவன் பயத்தில் அலறிக் கத்துகிறான். அது அவளுக்கு சந்தோஷம் தருகிறது. தனது காதலை தானே பெரும்பாலும் முறித்து கொண்டுவிடுவேன் எனும் இஸர்கீல்.

அப்படிப் பிரிந்த காதலர்களை மீண்டும் ஒரு போதும் சந்திப்பதேயில்லை. அது செத்த பிணத்தை மறுபடிக் காண்பதை ஒத்தது என்று கூறுகிறாள். அவளை ஒருமுறை  துருக்கிய பதின்வயது பையனை தீவிரமாக்க் காதலித்தான். அவன் மீது அவளுக்கு பரிதாபம் உருவானது. அவன் அழகாக இருந்தான். ஆகவே அவனை சில காலம் இசெர்கீல் காதலிக்கிறாள். அதுவும் ஒரு நாளில் முறிந்து போகிறது. அதற்கு இஸர்கீல் சொல்லும் உதாரணம் முக்கியமானது. இளஞ்செடி அதிகமான சூரிய வெப்பத்தைத் தாங்கமுடியாமல் சுருண்டு வதங்கிவிடுவதை போல தனது காதலைத் தாங்க முடியாமல் அவன் முறிந்துவிட்டான் என்கிறாள்.

இசெர்கீலின் காதல் அனுபவங்கள் கார்க்கியின் இளம்பருவத்தின் சாட்சி போலவே இருக்கிறது. அத்தனை காதலுக்கு பின்னும் முதிய வயதில் இஸர்கீல் தனியாக வாழ்கிறாள். இன்று அவளோடு எந்த ஆணும் இல்லை. இப்போது அவள் யாரையும் நேசிக்கவும்  இல்லை. லாராவின் மறுபிம்பம் போல இசெர்கீலும் இருக்கிறாள். தனிமையின் தீவிர மனப்பாங்கு தான் இருவரின் பொது அடையாளம்

மூன்றாவது கதை ஸ்டெப்பி இனமக்களை வழிநடத்தி சென்ற டாங்கோ என்ற நாயகனின் கதை. ஸ்டெப்பி இனமக்கள் நெடுங்காலத்தின் முன்பு அடர்ந்த காட்டிற்குள் வாழ்ந்துவந்தனர். ஒரு சமயம் காட்டில் வாழமுடியாத நெருக்கடியான சூழல் உருவாகவே காட்டில் இருந்து மக்கள் வெளியேற நினைத்தனர். ஆனால் அடர்ந்த காட்டிலிருந்து அவர்களால் வெளியேறி செல்ல வழி தெரியவில்லை. ஒரு பக்கம் எதிரிகள். மறுபக்கம் புதைகுழி, மற்றும் அடர்ந்த புதர்வழிகள். அவர்களை தான் வழிநடத்தி செல்வதாக சொன்ன டாங்கோ தனது இதயத்தை அறுத்து கையில் ஏந்தி அதன் வெளிச்சத்தில்  அவர்களை நடத்தி கூட்டிக் கொண்டு சென்றான் என்கிறது பழங்கதை.

அதையே இஸர்கீலும் நினைவு கொள்கிறாள். அப்படி அவர்கள் நடந்து சென்றதன் அடையாளமாகவே இப்போதும்  இரவில் மின்மினி போல வெளிச்சம் ஊர்ந்து போகிறது  என்கிறாள்.

டாங்கோ சுதந்திரமான மனப்போக்கின் தூய்மையான அடையாளம் போலிருக்கிறான். மக்களை வழிநடத்துகிறான். அவ்வகையில் அவன் லாராவின் எதிர்உருவம்.

கதைகளை கேட்டு முடித்த பிறகு இசெர்கீலை கதைகேட்டவன் வியப்போடு பார்த்து கொண்டிருக்கிறான். இந்தக் கிழவிக்குள் இது போல இன்னும் எவ்வளவு கதைகள் இருக்கும் என்று நினைத்துவியப்படைகிறான்.

கதையின் ஆதாரபுள்ளி அன்பிற்கான தேடுதல் அதில் அடையும் ஏமாற்றங்களே. ஸ்டெப்பியின் தனிமையான இரவு தான் அவர்கள் கதை கேட்பதற்காக முக்கிய காரணம்.

கிழவி இசெர்கீல் நெடுநாட்களாக தனித்துவாழ்கிறாள். நினைவுகள் மட்டுமே அவளுக்குத் துணை. அவள் கடந்த காலத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ளவேயில்லை. ஆகவே அவளுக்கு நடந்தசம்பவங்கள் யாவும் இப்போதும் அரூபமாகத் தன்னை சுற்றி அலைந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

இசெர்கீல் கதைகளின் தாய் போலவே இருக்கிறாள். நமது புராதன நினைவுகள் மறுபடி மறுபடி சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மனிதர்கள் கதைகளின் வழியாகவே கடந்தகாலத்தை அதிகம் அறிந்து கொள்கிறார்கள் என்கிறாள்.

மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களின் வழியாக ருஷ்யாவின் கட்டுபாடற்ற ஆன்மாவே இக்கதை வெளிப்படுகிறது.

கார்க்கி இக்கதையை ஜிப்சிகளின் கதைப்பாடல் போன்ற மொழியிலே எழுதியிருக்கிறார். தன் அழகை பற்றி சொல்லும் போது இஸர்கீல் சொல்லும் உவமைகள் அற்புதமானவை.

கிழவி இசெர்கீலின் மாற்றுவடிவம் போலவே தாய் நாவலில் வரும் பாவெலின் தாய் சித்திரிக்கட்டிருக்கிறாள்.

ஸ்டெப்பியின் ஊடாக மினுமினுக்கும் வெளிச்சம் போல ருஷ்ய சிறுகதைப் பரப்பில் கார்க்கியின் இசர்கீல் எப்போதும் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது.

•••

0Shares
0