Nouvelle Vague 2025ல் வெளியான திரைப்படம். 1950- 60 களில் தோன்றிய பிரெஞ்சு புதிய அலையின் முக்கிய இயக்குனர் கோதார் இயக்கிய “பிரத்லெஸ்” திரைப்படம் எப்படி உருவானது என்பதைப் பற்றிய படம்
Cahiers du Cinema இதழில் சினிமா விமர்சனங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்த கோதார் எப்படித் திரைப்பட இயக்குநராக உருவானார் என்பதைப் படம் விவரிக்கிறது.
“All you need to make a movie is a girl and a gun” என்கிறார் கோதார். வெகுஜன சினிமாவில் இன்றைக்கு வரை இந்தப் பார்முலா பயன்படுத்தபட்டே வருகிறது. பலவேளைகளில் வெற்றியும் அடைகிறது.

இளம் இயக்குநர்கள் அவசியம் காண வேண்டிய படம். கோதார் எப்படித் தனது திரைக்கதையை எழுதினார். எப்படி நடிகர்களைத் தேர்வு செய்தார். எப்படிப் படப்பிடிப்பினை நடத்தினார். முதற்படத்திலே அவர் மேற்கொண்ட புதுமைகள் எவை என்பதைப் படம் சிறப்பாக விளக்குகிறது.
அதே நேரம் இது கோதார் பற்றிய படம் மட்டுமில்லை. மாற்றுசினிமாவை உருவாக்க முனைந்த பிரான்சின் இளம் இயக்குநர்கள் எப்படி உருவானார்கள். அவர்கள் நடத்திய Cahiers du Cinema சினிமா பத்திரிக்கை. அதில் வெளியான சினிமா விமர்சனங்கள். படம் எடுப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள். பிரான்ஸ்வா த்ருஃபோ, கோதார் இருவருக்குள் இருந்த நட்பு மற்றும் கருத்துவேறுபாடுகள் குறித்தும் படம் விரிவாகப் பேசுகிறது.
தான் நினைத்தவிஷயத்தை நினைத்த வடிவில் மட்டுமே படமாக்குவேன் என்பதில் கோதார் காட்டிய உறுதிதான் அவரை உலகின் சிறந்த இயக்குராக உருவாக்கியது. முதல்படம் என்பதற்காக அவர் சமரசங்களை மேற்கொள்ளவில்லை. ஒரு ஆவணப்படத்தின் சாயலில் உருவாக்கபட்டுள்ள முழுநீளத் திரைப்படம். Nouvelle Vague . ரிச்சர்ட் லிங்க்லேட்டர் இதனை இயக்கியுள்ளார்

பிரெஞ்சு புதிய அலை இயக்குநர்கள் ஸ்டுடியோவிற்குள் இருந்த சினிமாவை வீதிக்குக் கொண்டு வந்தார்கள். தொழில்முறை சாராத நடிகர்களை நடிக்க வைப்பது. மக்களுடன் மக்களாக நடிகர்களையும் வீதியில் உலவவிட்டு கேமிரா மூலம் ரகசியமாகப் படமெடுப்பது, வழக்கத்திற்கு மாறான முறையில் ஜம்ப் கட் எடிட் செய்வது. இசையில் புதுமை என அவர்கள் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகளையும் அதற்கு ஏற்பட்ட. பிரச்சனைகளையும் படம் உண்மையாக விவரிக்கிறது.
அந்த வகையில் நாம் 1960களின் திரைப்படஉலகிற்குள் மறுபிரவேசம் செய்கிறோம். காலத்தின் திரைக்குப் பின்னே மறைந்து போன காட்சிகளை நேரடியாகக் காணுகிறோம். கோதாரின் கூடவே விருந்திற்குச் செல்கிறோம். அவரது தயாரிப்பாளர் அவர்கள் எடுப்பது சினிமா தானா என்ற சந்தேகத்துடன் நடந்து கொள்கிறார். படப்பிடிப்பு நடப்பதும் கூடக் கோதாரின் மனநிலையைப் பொறுத்தே நடக்கிறது. நடிகர்களை அவர் கையாளும் விதம், காட்சியைப் படமாக்கும் விதம் எனத் தனித்துவமான அணுகுமுறையில் கோதார் திரைப்படத்தை உருவாக்குகிறார்.
பிரெத்லெஸின் கதை மிகச்சிறியது. மிஷெல் பாரிஸில் வசிக்கும் குற்றவாளி. அவன் ஒரு முறை காரைத் திருடி தப்பிப் போகையில் துரத்தும் காவலரைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான். ஒளிந்து வாழும் அவன் பாட்ரிசியா என்ற இளம் பெண் மீது காதல் வசப்படுகிறான். அவளுக்கு மிஷெல் ஒரு குற்றவாளி என நன்றாகவே தெரியும். ஆனாலும் நெருங்கிப் பழகுகிறாள்.
அவனைக் காட்டிக் கொடுப்பதா அல்லது அவனோடு இத்தாலிக்கு ஒடிவிடுவதா என முடிவு செய்ய முடியாமல் இருக்கிறாள். கடைசியாக அவள் ஒரு முடிவை எடுக்கிறாள். அது எதிர்பாராத நிகழ்வாக மாறுகிறது.
படத்தின் கதை என்பது ஒரு சரடு மட்டுமே. காதலர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள். அதில் வெளிப்படும் அபத்தம். வேகம். மகிழ்ச்சி, இவையே படத்தைச் சிறப்பானதாக்குகிறது.

Nouvelle Vague படத்தில் பல காட்சிகள் அசல் திரைப்படத்திலுள்ள காட்சிகளின் நூறு சதவீத மறுஉருவாக்கமாகச் செய்திருப்பது பாராட்டிற்குரியது.
குற்றவாளியை, குற்றவுணர்வு கொண்டவனை இலக்கியம் கையாளும் விதம் மாறுபட்டது. அந்த கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் உணர்வுகளையும் விவரிப்பதன் மூலம், அவனது அகவேதனைகளை, தவிப்பை இலக்கியம் வெளிப்படுத்துகிறது. துயரமே பிரதான உணர்ச்சி.
ஆனால் கோதார் குற்றவாளியின் மகிழ்ச்சியை, குற்றம் என்பதைத் தற்செயலாகக் கருதும் அவனது எண்ணத்தை, அவனை நேசிக்கும் பெண்ணின் உளவியலை, நகரம் என்பதைத் தங்களின் விளையாட்டு மைதானமாகக் கருதும் களியாட்ட மனநிலையை விவரிக்கிறார். அதில் சரி தவறுகளுக்கு இடமில்லை. சந்தர்ப்பமே எதையும் முடிவு செய்கிறது.
கோதாரின் மிஷேல் அவரது காலகட்டத்தின் பிரதிபலிப்பு. அப்படி ஒரு கொந்தளிப்பான இளைஞனாகவே கோதார் நிஜத்தில் இருந்தார். துப்பாக்கிக்கு பதிலாக அவரிடம் கேமிரா இருந்தது. ஆகவே திரைப்படத்தை எடுத்தார். அவர் தனது குழந்தைப் பருவத்தில் நிறைய அமெரிக்கச் சண்டைப் படங்களைப் பார்த்திருக்கிறார். அதன் பாதிப்பை பிரெத்லெஸ் படத்தில் நேரடியாகவே காண முடிகிறது.

கோதார் ஒருமுறை தனது ‘பிரத்லெஸ் ‘ திரைப்படத்தை பற்றி விவரிக்கும் போது, “மரணத்தைப் பற்றி சிந்திக்கும் ஒரு இளைஞனின் கதை, அதைப் பற்றி சிந்திக்காத ஒரு இளம் பெண்ணின் கதை” என்றார். அது தான் இப்படம் குறித்த சிறந்த விளக்கம்.
காலப்பயணம் ஒன்றை மேற்கொண்டு 1960களின் பிரெஞ்சு சினிமா உலகிற்குள் சென்று திரும்பியது போன்ற உணர்வை நமக்கு அளிப்பதே இப்படத்தின் தனிச்சிறப்பு.
••